பாஞ்சாலி சபதம் – 1.1.16

-மகாகவி பாரதி

பாண்டவர்கள் - கௌரவர்களின் பொதுவான உறவு என்று சொன்னால் அவர் சித்தப்பா விதுரன் தான். அவர் அஸ்தினாபுர அரசின் அமைச்சரும் கூட. அவரையே பாண்டவரை  அஸ்தினாபுரம் அழைத்து வருமாறு தூது விடுகிறார் மன்னர்; பாண்டவர்களிடம், துரியனின் தீய உள்நோக்கத்தைப் புலப்படுத்துமாறும் கூறி அனுப்புகிறார். அதன்பின் சோர்வடைந்து வீழ்கிறார். புத்திர பாசத்தால் மயங்கினாலும் நியாய உணர்வுடன் தவிக்கும் மன்னரை மகாகவி பாரதி தனது பாடலில் படம் பிடிக்கிறார். 

முதல் பாகம்

1.1. அழைப்புச் சருக்கம்

1.1. 16. விதுரனைத் தூதுவிடல்

தம்பி விதுரனை மன்னன் அழைத்தான்;
      ‘தக்க பரிசுகள் கொண்டினி தேகி,
எம்பியின் மக்கள் இருந்தர சாளும்
      இந்திர மாநகர் சார்ந்தவர் தம்பால்,
”கொம்பினை யத்த மடப்பிடி யோடும்
      கூடிஇங் கெய்தி விருந்து களிக்க
நம்பி அழைத்தனன்,கௌரவர் கோமான்
      நல்லதொர் நுந்தை”என உரை செய்வாய்.       111

‘நாடு முழுதும் புகழ்ச்சிகள் கூறும்
      நன்மணி மண்டபம் செய்ததும் சொல்வாய்
”நீடு புகழ்பெரு வேள்வியில் அந்நாள்
      நேயமொ டேகித் திரும்பிய பின்னர்
பீடுறு மக்களை ஓர்முறை இங்கே
      பேணி அழைத்து விருந்துக ளாற்றக்
கூடும் வயதிற் கிழவன் விரும்பிக்
      கூறினன் இஃதெ”னச் சொல்லுவை கண்டாய்.      112

‘பேச்சி னிடையிற் ”சகுனிசொற் கேட்டே
      பேயெனும் பிள்ளை கருத்தினிற் கொண்ட
தீச்செயல் இஃதெ”ன் றதையுங் குறிப்பாற்
      செப்பிடு வாய்’என மன்னவன் கூறப்
‘போச்சுது!போச்சுது பாரத நாடு!
      போச்சுது நல்லறம்!போச்சுது வேதம்!
ஆச்சரி யக்கொடுங் கோலங்கள் காண்போம்;
      ஐய,இதனைத் தடுத்தல் அரிதோ?’       113

என்று விதுரன் பெருந்துயர் கொண்டே
      ஏங்கிப் பலசொல் இயம்பிய பின்னர்,
‘சென்று வருகுதி,தம்பி இனிமேல்
      சிந்தனை ஏதும் இதிற்செய மாட்டேன்.
வென்று படுத்தனன் வெவ்விதி என்னை;
      மேலை விளைவுகள் நீஅறி யாயோ?
அன்று விதித்ததை இன்று தடுத்தல்
      யார்க்கெளி’தென்றுமெய் சோர்ந்து விழுந்தான்.       114

$$$

Leave a comment