-சாண்டில்யன்
அமரர் திரு. சாண்டில்யன் (1930- 1957), பிரபலமான தமிழ் எழுத்தாளர்; சரித்திரப் புதினங்கள் எழுதுவதில் புகழ் பெற்றவர். இயற்பெயர் பாஷ்யம் ஐயங்கார். பத்திரிகயாளர், விடுதலைப் போராட்ட வீரர், திரைப்பட வசனகர்த்தா எனப் பல பரிமாணங்களை உடையவர்; 50-க்கு மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். சுவாமி விவேகானந்தர் குறித்த அவரது சிறு கட்டுரை இங்கே...

கங்கைக் கரைமீதிருந்த காளிகோயிலை அடுத்த வளர்ந்த ஒரு பெரிய அரச மரம். அதன் நீண்ட கிளையொன்று நன்றாக வளைந்து கங்கைப் பிரவாகத்தைத் தொட்டுவிடுவது போல் ஆடிக் கொண்டிருந்தது. அந்த இடத்துக்கு நேர் கீழேயிருந்த துறையில் ஒரு துறவி நீராடிக் கொண்டிருந்தார்.
அவர் கங்கையின் புனித நீரில் மூழ்கி எழுந்திருந்த சமயத்தில் மேலிருந்த அரச மரக் கிளை காற்றில் அசைய, அதிலிருந்து பெரிய கருந்தேள் ஒன்று அவர் கை மேல் விழுந்தது. துறவி அந்தத் தேளை எடுத்து மரக்கிளை மீது விட்டார். மருபடியும் ஒருமுறை மரக்கிளை காற்றில் அசைய அந்தக் கருந்தேள் மீண்டும் அவரது வலது கைமேல் விழுந்தது. மறுபடியும் அதை எடுத்து துறவி மரக்கிளை மேல் விட்டார்.
இந்த நிகழ்ச்சியை கங்கைக்கரை மீது உட்கார்ந்து ஒருவன் பார்த்துக் கொண்டிருந்தான். துறவி இரண்டாம் முறை தேளைக் காப்பாற்றி கிளை மேல் விட்டதும், அவன் அவரை அழைத்தான் “ஐயா” என்று.
துறவி திரும்பிப் பார்த்து, “ஏனப்பா?” என்று கேட்டார்.
“உமது கைமேல் முதல் தடவை தேள் விழுந்ததல்லவா?” என்று வினவினான் அவன்.
“ஆம், விழுந்தது” என்றார் துறவி.
“கொட்டிற்றா?”
“கொட்டிற்று”
“இரண்டாந் தடவையும் தேள் அதே இடத்தில் தானே விழுந்தது?”
“ஆம்”
“அப்பொழுதும் கொட்டிற்றா?”
”கொட்டிற்று”
இப்படி தனது காட்சியை உறுதிப்படுத்திக்கொண்ட அவன், “ஏனய்யா” உமக்கு புத்தி இருக்கிறதா? ஒரு தடவை கொட்டின பிறகு இரண்டாந்தடவையும் தேளை எதற்காகக் காப்பாற்றி கிளை மேல் விட்டீர்?” என்று கேட்டான்.
துறவியின் அருட்கண்கள் நோக்கின. “அப்பா! கொட்டுவது தேளின் குணம். காப்பாற்றுவது என் குணம். பிறவி குணங்களை யாரும் மாற்றிக்கொள்ள முடியாது. முற்றும் துறந்தவர்கள் ஸத்வ குணமுள்ளவர்கள் உயிர்களைக் காப்பாற்றக் கடமைப்பட்டவர்கள்’ என்று கூறினார்.
பிறவியிலேயே மகான்கள் ஸத்வ குணத்துடனும், தயையுடனும் பிறக்கிறார்கள். சமூகத்தில் அவர்களும் இருக்கிறார்கள், தேளைப் போல விஷமுள்ளவர்களும் இருக்கிறார்கள். ஆனால் மகான்கள் அவர்களை வெறுப்பதில்லை. ஸகல ஜீவராசிகளிடமும் அவர்களுக்குள்ள தயை விஷமுள்ளவர்களிடமும் இருக்கிறது. தயை என்பது பகவானுடைய குணம்.
அந்தக் குணத்தைப் பெற்றுள்ள மகான்களையும் நாம் பகவானாகவே மதிக்கிறோம். ஆகவே வால்மீகியை வால்மீகி பகவான் என்றும், வியாஸரை வியாஸ பகவான் என்றும் அழைக்கிறோம். அந்த முனிவர்களைப் போலவே ஸ்ரீராமகிருஷ்ணரும் பகவான் என அழைக்கப்படுகிறார்.
அத்தகைய மகான்கள் இருக்குமிடத்தில் ஞானிகள் தாமாகவே வந்து சேருகிறார்கள். ஸ்ரீராமகிருஷ்ணர் இருந்த இடத்திற்கு ஸ்வாமி விவேகானந்தர் வந்தார். ஆண்டவர் கீர்த்தி அடியார்களால் பரவுவது போல ஸ்ரீராமகிருஷ்ணரின் கீர்த்தி ஸ்வாமி விவேகானந்தரால் உலகெங்கும் பரவியது. வைஷ்ணவ சமய கிரந்தங்களில் பகவானை விட பாகவதர்களுக்கு அதிக பெருமை அளிக்கப்படுகிறது. ஸ்ரீ விவேகானந்தர் பெருமையும் அத்தகையது.
நன்றி: தமிழர் கண்ட விவேகானந்தர். தொ.ஆ: பெ.சு.மணி, வானதி பதிப்பகம், சென்னை வெளியீடு, 1974, பக்: 212
$$$