-ஆசிரியர் குழு
திலகர் முதல் தாகூர் வரையிலான தேசத் தலைவர்கள் பலரின் சுவாமி விவேகானந்தர் குறித்த கருத்துகள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன...

பாலகங்காதர திலகர்:
‘சுவாமி விவேகானந்தரின் பெயரைத் தெரியாத இந்துவும் இருக்க முடியுமா?’ என்பது சந்தேகம்தான்.
19- ம் நூற்றாண்டில் நவீன விஞ்ஞானத்தின் முன்னேற்றம் அளவற்றதாக இருந்தது. இந்தச் சூழ்நிலையில் இந்திய ஆன்மிக விஞ்ஞானத்திற்கு – இந்தியாவில் பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாக இருந்து வரும் ஆன்மிக விஞ்ஞானத்திற்கு – அற்புதமான விளக்கம் அளித்து, மேலைநாட்டு அறிஞர்கள் வியப்புடன் ஏற்றுப் போற்றும்படி முன்வரச் செய்ததோடு, இந்தியாவிடம் பரிவு காட்டவும் தூண்டச் செய்வது என்பது, மனிதசக்திக்கு அப்பாற்பட்ட ஒரு சாதனையாகும். இந்த அரிய பெரிய சாதனைகளை சுவாமி விவேகானந்தர் நிகழ்த்திக் காட்டி, உலக நாடுகள் இந்து மதத்தின் பெருமையை உணரும்படிச் செய்தார்.
லாலா லஜபதிராய்:
ஜாதி – குடும்பம் முதலான பொறாமை உணர்ச்சிகளிலிருந்து இந்திய தேச பக்தர்கள் விடுபடவும், தேசிய புத்துணர்ச்சி பெறவும், சகிப்புத்தன்மை மலரவும் காரணகர்த்தாவாக விளங்கியவர் சுவாமி விவேகானந்தர்.
பிபின் சந்திரபால்:
சுவாமி விவேகானந்தர் தனி ஒருவராக நிற்கவில்லை. அவருடைய குரு மகராஜ் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரிடமிருந்து, பிரித்தெடுக்க முடியாத வகையில் அவருடன் ஒன்றி ஐக்கியமாகியிருக்கிறார்.
நம் காலத்தின் இந்திய மக்கள் மட்டுமல்ல – உலகத்தின் பெரும் பகுதியைச் சேந்த நவீன மனிதர்களைப் பொறுத்த வரையில், ஸ்ரீ ராமகிருஷ்ணரும் சுவாமி விவேகானந்தரும் ஒன்று தான்.
நவீன மனிதன் சுவாமி விவேகானந்தர் மூலமாகத் தான், ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரைப் புரிந்துகொள்ள முடியும். எனவே நாம், சுவாமி விவேகானந்தரை ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் என்ற பேரொளியின் மூலமாகத் தான் அறிந்துகொள்ள முடியும்.
ஆசார்ய வினோபா பாவே :
சுவாமி விவேகானந்தர், நம்முடைய வலிமையை நம்மை உணரும்படிச் செய்தார். மேலும் அவர், நம்முடைய குற்றங்களையும் குறைகளையும் எடுத்துக்காட்டினார்.
அப்போது இந்தியா தமோகுணத்தில் ஆழ்ந்திருந்தது. ஆதலால் இந்திய மக்கள் பலவீனத்தை பற்றின்மையாகவும், சாந்தியாகவும் தவறாக நினைத்தார்கள்.
சுவாமி விவேகானந்தர், மக்கள் தாங்கள் இருந்த தமோகுணத்தையும், அதிலிருந்து வெளியேறி நிமிர்ந்து நிற்க வேண்டிய அவசியத்தையும் உணரும்படிச் செய்தார்.
” நம் சகோதர மக்களோடு வாழும் அன்றாட வாழ்க்கையிலும், நம் முயற்சிகளிலும் இடம் பெறாத ஆன்மிகத் தத்துவஞானம் பயனற்றது” என்ற உண்மையை, சுவாமி விவேகானந்தர் நம்மை உணரும்படிச் செய்தார்.
பசியிலும் வறுமையிலும் வாடும் தரித்திர நாராயணர்களாகிய ஆயிரக் கணக்கான மக்களுக்குப் பணி செய்யும் பொருட்டும், அவர்கள் பண்பாடும் உயர்வும் பெறும் பொருட்டும், நாம் நமது வாழ்க்கையை அர்ப்பிக்க வேண்டும் என்று அவர் நமக்குப் போதித்தார்.
‘தரித்திர நாராயணர்’ என்ற சொல்லை உருவாக்கியவர் சுவாமி விவேகானந்தர். அதை மக்களுக்குப் பரப்பி வழங்கியவர் காந்தியடிகள்.
‘இந்து’ பத்திரிகை நிறுவனர் ஜி.சுப்ரமணிய ஐயர்:
ஐரோப்பாவில் சில காலம், அதிகாரபூர்வமான போப்பாண்டவரை எதிர்த்து இரண்டாம் போப்பாண்டவரை நியமித்தார்கள்.
அதுபோல், இந்தியாவிலும் சுவாமி விவேகானந்தர் அல்லது அவரைப் போன்ற ஓர் ஆன்மிக வீரரை ‘சீர்திருத்த சங்கராச்சாரியார்’ என்று நியமிப்பதற்கு சமூக சீர்திருத்தவாதிகள் முன்வருவார்களா?
மகரிஷி அரவிந்தர் :
- சுவாமி விவேகானந்தர் ஆற்றலின் மொத்த உருவமாக விளங்குகிறார். அவர் மனிதர்களில் சிங்கம் போன்றவர். ’அவர் இந்தியாவை வழிநடத்திக் கொண்டிருக்கிறார்’ என்பதை, இன்றும் நாட்டில் மிகவும் பெரிய அளவில் செயல்பட்டுக் கொண்டிருப்பதை நாம் பார்க்கிறோம்.
- அது எப்படி என்று நமக்குத் தெரியாது, எங்கே என்று நமக்குத் தெரியாது. இன்னும் உருவம் பெறாத ஒன்றில்…. வீரியம் மிகுந்ததாகவும், விசாலமானதாகவும், நுட்பமாகவும் பீறிட்டு வருவதாகவும், அது இந்திய ஆன்மாவுக்குள் பிரவேசித்துவிட்டது. அதனால் நாம் சொல்கிறோம். “பார், சுவாமி விவேகானந்தர் இந்தியாவின் ஆன்மாவிலும், அவள் குழந்தைகளின் ஆன்மாக்களிலும், இன்னும் உயிர் வாழ்ந்துகொண்டிருக்கிறார்”.
- உலகத்தைத் தன் இரண்டு கைகளில் எடுத்து மாற்றப் போகும் சக்தியாக, குரு ஸ்ரீ ராமகிருஷ்ணரால் அடையாளம் காட்டப்பட்டவர் சுவாமி விவேகானந்தர்.
- சுவாமி விவேகானந்தரின் திக்விஜயம், ‘ இந்தியா உயிர் வாழ்வதற்கு மட்டுமில்லாமல், இந்தியா வெற்றி பெறுவதற்காகவும் விழித்திருக்கிறது’ என்பதை உலகிற்கு உணர்த்தும் முதல் அடையாளமாகும்.
- “மகத்தான வலிமையுடையவர்” என்று ஒருவர் இருக்கிறார் என்றால், அவர் சுவாமி விவேகானந்தர் தான். அவர் நரசிம்மம் போன்றவர்.
‘விடுதலைவீரர் வ.வே.சு.ஐயர் :
“கடைசி ரிஷி மகா சமாதி அடையும் வரையில் உபநிஷத மந்திரங்கள் முடிவடைய மாட்டா. மேலும் புதிய புதிய மந்திரங்கள் தோன்றிக் கொண்டே இருக்கும்” என்று, சுவாமி விவேகானந்தர் மிகவும் அழகாகக் கூறியிருக்கிறார்.
அன்னிபெசன்ட் அம்மையார்:
கண்களைக் கவரும் வடிவம், மஞ்சளும் சிவப்பும் கொண்ட வண்ண உடை அணிந்தது, சிகாகோவில் இருண்ட ஆகாய மண்டலத்தின் நடுவில் இந்தியாவின் ஞானசூரியன் போலத் திகழ்வது, ஊடுருவி நோக்கும் கண்கள், வேகத்தோடு விரைந்தெழும் இயக்கங்கள் – இது சிகாகோ சர்வசமயப் பேரவையில் கலந்துகொள்ளும் பிரதிநிதிகள் உபயோகிப்பதற்கு என்று ஒதுக்கியிருந்த அறைகளில் ஒன்றில், நான் சுவாமி விவேகானந்தரைப் பார்த்தபோது என் உள்ளத்தில் தோன்றிய எண்ணமாகும். அவர் ஒரு வீரத்துறவி. ஆம், அவரிடம் நான் வீரர்களுக்கு உரிய பண்புகளையே முதலில் பார்த்தேன்.
அவர் சிகாகோ சர்வசமயப் பேரவையில், சொற்பொழிவு மேடையை விட்டுச் சற்றுத் தள்ளி உட்கார்ந்திருந்தார். அவரது உருவம், இந்தியாவின் பண்புகளையும் பெருமைகளையும் தாங்கியிருந்தது. இன்று இருக்கும் மதங்களில் மிகவும் பழமை வாய்ந்த இந்துமதத்தின் பிரதிநிதி அவர்; இந்திய மகனாகிய அவர், இந்தியாவின் தூதராக இந்தியத் தாயின் செய்தியை – சிகாகோ சர்வ சமயப் பேரவைக்குக் கொண்டு வந்திருந்தார்.
அங்கு அவர், அந்த இந்தியத் தாயின் பெயரால் சொற்பொழிவு நிகழ்த்தினார். அவரது இந்துமத விளக்கச் சொற்பொழிவுகளைக் கேட்டு, சிகாகோ சர்வசமயப் பேரவையில் கலந்துகொள்ள வந்திருந்த மக்கள் எல்லோரும் மிகவும் ஆச்சரியப்பட்டார்கள்.
அந்தப் பேரவையில் விவேகானந்தரின் சொற்பொழிவு முடிந்தபிறகு வெளியே வந்த ஒருவர், “இந்த மனிதரா கதியில்லாத இந்துமதத்தைச் சேர்ந்தவர்! இவரைச் சேர்ந்த இந்திய மக்களுக்கு நாம் போய்க் கிறிஸ்துவப் பாதிரிமார்களை அனுப்பி வைக்கிறோமே! அவர்கள் நமக்கு இந்துமதப் பிரசாரகர்களை இங்கு அனுப்பி வைப்பதுதான் மிகவும் பொருத்தமாக இருக்கும்” என்று கூறினார்.
தமிழ்த் தென்றல் திரு.வி.கல்யாண சுந்தரனார்:
பண்டை நாளில் வேதாந்த உலகம் வீரம் செறிந்ததாக இருந்தது. இடைக்காலத்தில் கோழைத்தனம் புகுந்த வேதாந்த உலகத்தில், பழைய வீரத்தை நுழைத்த பெருமைக்கு உரியவர் சுவாமி விவேகானந்தர்.
பலவித மூடப்பழக்க வழக்கங்களில் மதியிழந்து, சோம்பலால் மயங்கிக் கிடந்த இந்தியாவுக்கு – வேதாந்தத்தால் புத்துயிர் வழங்கிய ஞானசூரியன் சுவாமி விவேகானந்தர். லட்சம் பேர் சிறை சென்று எழுப்பும் தேசபக்தியை, விவேகானந்தரின் ஒரு பேச்சு எழுப்பிவிடும்.
நன்றி: மீனாட்சி மலர் – 2010
***
ரவீந்திரநாத் தாகூர்:
- நீங்கள் இந்தியாவை அறிந்துகொள்ள வேண்டுமா? விவேகானந்தரைப் படியுங்கள். அவரது கருத்துக்கள் அனைத்தும் ஆக்கப்பூர்வமானவை. எதிர்மறையான எதுவும் அவரிடம் கிடையாது.
- மனிதன் விழித்தெழ வேண்டும், முழுமையான வளர்ச்சி காண வேண்டும்- இது தான் விவேகானந்தரின் செய்தியாக இருந்தது. அதனால் தான் இளைஞர்கள் அவரிடம் மிகவும் கவரப்பட்டனர்; பல்வேறு வழிகளாலும் தியாகங்களாலும் முக்திப் பாதையை நாடினர்.
பேராசிரியர் மாக்ஸ்முல்லர்:
ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடர் விவேகானந்தரைச் சந்திப்பது என்பது, தினந்தோறும் ஒருவருக்குக் கிடைக்கக்கூடிய பாக்கியமில்லை.
பிரெஞ்சு அறிஞர் ரொமெய்ன் ரோலண்ட்:
சுவாமி விவேகானந்தரை இரண்டாவதாக வைத்து நினைத்துப் பார்க்க முடியாது. அவர் எங்கு சென்றாலும் அவருக்குத் தான் முதலிடம். அவரைப் பார்த்தவுடனே, ‘அவர் தான் தலைவர், அவர் தான் கடவுள் வடிவம். அவர் தான் ஆணையிடுவதற்குப் பிறந்தவர்’ என்று ஒவ்வொருவரும் உணர்கிறார்கள்.
ஏ.எல்.பாஷம்:
விவேகானந்தர் மறைந்து நூறு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டன. உலக வரலாற்றில் அவரது முக்கியத்துவத்தை அளவிடுவது இன்றும் சாத்தியம் என்று தோன்றவில்லை. அவர் மறைந்த காலத்தில் சில மேலை வரலாற்று அறிஞர்களும் இந்திய வரலாற்று அறிஞர்களும் கூறியதை விட மிக உயர்ந்த இடம் அவருக்கு உண்டு என்பது மட்டும் நிச்சயம். கடந்து செல்லும் காலமும், அவரது காலத்திற்குப் பிறகு நடைபெறுகின்ற, எதிர்பாராத, வியக்கத்தக்க திருப்பங்களும் ஒன்றை நமக்கு நினைவூட்டுகின்றன – நவீன உலகின் முக்கியச் சிற்பிகளுள் ஒருவர் அவர் என்று வரும் நூற்றாண்டுகளில் அவரை உலகம் நினைவு கூரும்.
ஸ்ரீ ஆர்தர் லெவ்லின் பாஷம் (சுருக்கமாக ஏ.எல்.பாஷம்), இங்கிலாந்தைச் சார்ந்த சமூக இயலாளர் மற்றும் இந்திய ஆய்வாளர் (1914 – 1986).
இ.பி.செலிஷேவ்:
விவேகானந்தரைப் படிக்கிறேன். மீண்டும் மீண்டும் படிக்கிறேன். ஒவ்வொரு முறை படிக்கும்போதும், புதிய பரிமாணங்கள் அதில் தென்படுகின்றன. இந்தியா, அதன் சிந்தனைப்போக்கு, இந்திய மக்களின் கடந்த கால, நிகழ்கால வாழ்க்கை முறை, அவர்களின் எதிர்காலக் கனவுகள் போன்றவற்றை மேலும் ஆழமாகப் புரிந்துகொள்ள விவேகானந்தரின் இலக்கியம் உதவுகிறது…
ஆண்டுகள் பல கடந்து போகும், பல சந்ததிகள் தோன்றி மறைவார்கள், விவேகானந்தரும் அவரது காலமும் கடந்த காலமாகி மறையும். ஆனால், மக்கள் மனங்களில் தீட்டப்பட்டுள்ள விவேகானந்தர் என்ற அந்த மாமனிதரின் சித்திரம் ஒருநாளும் மறையாது. அவர் தமது வாழ்நாள் முழுவதும் தமது மக்களின் சிறந்த எதிர்காலத்தைப் பற்றிச் சிந்தித்தார். தேசபக்தர்களைத் தட்டி எழுப்புவதற்கும் நாட்டை முன்னேற்றப் பாதையில் செலுத்துவதற்கும் அவர் செய்யாத முயற்சிகள் இல்லை. சமுதாய அநீதிகளிலிருந்தும், மிருகத்தனமான அடக்குமுறைகளிலிருந்தும் பாமர மக்களைக் காப்பதற்காக அவர் எவ்வளவோ பாடுபட்டார். கடும் சூறாவளியிலிருந்தும் கடற்கரை நிலங்களை செங்குத்தான மலைப்பாறைகள் பாதுகாப்பது போல், அவர் தமது தாய்நாட்டின் எதிரிகளுடன் சுயநலமின்றி, துணிவுடன் போராடினார்.
(ஸ்ரீ. இ.பி.செலிஷேவ், ரஷ்யாவைச் சார்ந்த சமூக இயலாளர்; இந்திய இலக்கியத்தில், குறிப்பாக இந்தி இலக்கியத்தில் மிகுந்த தேர்ச்சி பெற்றவர். முப்பது ஆண்டுகளாக விவேகானந்த இலக்கிய ஆராய்ச்சியிலும், அதனைப் பரப்புவதிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
லியோ டால்ஸ்டாய்:
அந்தப் பிராமணர் (விவேகானந்தர்) எழுதிய நூலை அனுப்புங்கள். அவரது நூலைப் படிப்பது ஓர் இன்ப அனுபவம் மட்டுமல்ல, அது ஆன்ம முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் ஓர் அனுபவமும் ஆகும்.
(உலகின் மிகச் சிறந்த இலக்கியவாதிகளில் ஒருவரான ஸ்ரீ லியோ டால்ஸ்டாய் (1828 – 1910) மகாத்மா காந்தியின் ஆதர்ஷ புருஷராக விளங்கியவர். ரஷ்ய ராணுவத்தில் மூன்று ஆண்டுகள் வீரராகப் பணிபுரிந்த இவரது ‘போரும் அமைதியும்’, ‘அன்னா கரீனா’ ஆகிய நாவல்கள் உலகப் புகழ் பெற்றவை. நவீன இலக்கியவாதிகளின் முன்னோடியாக மதிக்கப்படும் டால்ஸ்டாய் சுவாமி விவேகானந்தரை மிகவும் மதித்துப் போற்றியுள்ளார். அவர் தனது குறிப்பில் சுவாமிஜியை பிராமண இளைஞர் என்று (தெரியாமல்) குறிப்பிடுகிறார்)
சீன அறிஞர் ஹுவான் சின் சுவாங்:.
இந்தியாவின் மிகச் சிறந்த தத்துவ ஞானியும் சமுதாய சிந்தனையாளருமாக விவேகானந்தர் அறியப்படுகிறார். அவரது தத்துவக் கருத்துகளும் சமுதாய சிந்தனைகளும் இணையற்ற தேசபக்தியும் இந்தியாவில் தேசிய இயக்கங்கள் வளர்வதற்குக் காரணமாக அமைந்ததுடன் வெளிநாடுகளிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின….
கொடுங்கோல் மன்னர் ஆட்சியில் சிக்கித் தவித்த சீன மக்களிடமும் அவர் மிகுந்த இரக்கம் கொண்டிருந்தார். சீன மக்களிடம் அவர் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார்.
(சீனாவின் பீஜிங் பல்கலைக்கழக வரலாற்றுப் பேராசிரியராக இருந்தவர் ஹுவான் சின் சுவாங். சுவாமி விவேகானந்தரைப் பற்றி பல நூல்களை இவர் எழுதியுள்ளார்.
ஆதாரம்: எனது பாரதம் அமர பாரதம்
ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் வெளியீடு, சென்னை
$$$