ஸ்வதந்திர கர்ஜனை – 2(5)

-தஞ்சை வெ.கோபாலன்

பாகம்- 2: பகுதி- 5

ஒற்றுமை காங்கிரஸ்

சூரத் காங்கிரசில் நடந்த கலவரத்தைத் தொடர்ந்து காங்கிரஸ் இரு தனிக் கட்சிகளாகப் பிரிந்தது. தீவிரவாத காங்கிரசார் கட்சியிலிருந்து ஒட்டுமொத்தமாக வெளியேற்றப்பட்டனர்.

பால கங்காதர திலகர் கைது செய்யப்பட்டார். அரவிந்தரும் சதி வழக்கொன்றில் (அலிப்பூர் சதி வழக்கு) கைதானார். வ.உ.சி. மீதும் நெல்லை சதி வழக்கொன்று போடப்பட்டு கடும் தண்டனை பெற்று சிறை சென்றார். சுப்பிரமணிய சிவா 6 ஆண்டுகள் தண்டனை பெற்று சிறை சென்றார். இப்படி தீவிரவாத காங்கிரசார் சிறைக் கொட்டடியில் வீழ்ந்து கிடந்த காலத்தில், மிதவாத காங்கிரசார் கட்சியைத் தங்களுடைய உடைமையாக்கிக் கொண்டு எதிர்ப்பின்றி நடத்தி வந்தனர்.

இப்படி இவர்கள் பிரிந்து நின்ற நேரத்தில் இந்திய சுதந்திரமே தங்கள் குறிக்கோளாகக் கொண்ட தேசபக்த இளைஞர்கள் செய்வதறியாமல் திகைத்தனர். அடுத்துத் தாங்கள் என்ன செய்ய வேண்டும், எப்படி இயங்க வேண்டுமென்று வழிகாட்ட யாருமில்லாத நிலையில், அவரவர் மனத்துக்குத் தோன்றியபடி தங்கள் மனக்குமுறலை வெளிப்படுத்தலாயினர்.

இரக்கமே இல்லாமல் அரக்கர்களாக இருந்த ஆங்கில அதிகாரிகளுக்கு புத்தி வரச் செய்ய இவர்கள் துப்பாக்கியை ஏந்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது. தமிழகத்தில் கலெக்டர் ஆஷ் கொலை செய்யப்பட்டார். அவரைக் கொலை செய்தவன் ஒரு தேசபக்தன், ஆம்! வாஞ்சிநாதன் தன்னையே மாய்த்துக் கொண்டான். நீலகண்ட பிரம்மச்சாரி நீண்டகால சிறைவாசம் செய்ய நேர்ந்தது. மாடசாமி பிள்ளை நாட்டை விட்டே தலைமறைவானார்.



வடக்கே பகத் சிங், சந்திரசேகர ஆசாத் போன்ற இளைஞர்களின் சாகசங்கள் நடத்த வேண்டிய நிலை. கடல் கடந்தும் லண்டனில் இந்திய இளைஞர்கள் தங்கள் உயிரை ஆஹுதியாக்கிக் கொண்டனர். மேடம் காமா அம்மையார் அன்னிய மண்ணில் இருந்துகொண்டு உதவிகள் புரிய, வீர சாவர்க்கர் போன்றோர் எண்ணற்ற கொடுமைகளுக்கு ஆளாயினர்.

என்ன கொடுமை இது? வீர சாகசம் புரிந்த தேசபக்தர்கள் சிறையிலோ அல்லது தூக்கு மேடைக்கோ செல்ல வேண்டிய சூழ்நிலை.

1906 முதல் 1915 வரையிலான காலகட்டம் இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையில் பயணம் செய்தது. காங்கிரஸ் முழுக்க முழுக்க மிதவாத காங்கிரசார் கரங்களில் தவழ்ந்து விளையாடியது.

தீவிர தேசபக்தர்கள் சிறைக் கம்பிகளுக்குப் பின்னால், கல் உடைக்கவும், செக்கு இழுக்கவும் நேர்ந்தது. வீரம் நிறைந்த சுப்பிரமணிய சிவாவுக்குச் சிறை தந்த சீதனமாக தொழுநோய் பற்றிக் கொண்டது. பல தலைவர்கள் அந்தமான் சிறைக்கு, கண் காணாத இடத்துக்கு அனுப்பப்பட்டு விட்டனர்.

அப்போது இந்தியர்களுக்கு என்ன மாதிரியான சீர்திருத்தங்களைக் கொண்டு வரலாம் என்று மிண்டோ- மார்லி கொடுத்த சிபாரிசுகளின்படி சீர்திருத்தங்கள் அறிவிக்கப்பட்டன. இப்படிப்பட்ட சீர்திருத்தங்களால் படித்த மேல்தட்டு மக்கள் மிதவாதிகளாக இருந்தவர்கள் பலர் கவர்னர்களாக, வைசிராய், கவர்னர் சபைகளில் உறுப்பினர்களாக அமரத் தான் உதவியதே தவிர இந்திய சுதந்திரம் என்பதை எண்ணிக்கூட பார்க்க முடியாத சூழ்நிலை உருவாகி இருந்தது.

சிறையிலிருந்து தியாகிகள் ஒவ்வொருவராக வெளிவரத் தொடங்கினர். அரவிந்தர் அரசியல் வேண்டாம்-  ஆன்மிகமே போதுமென ஒதுங்கிவிட்டார். அந்தக் காலகட்டத்தில் அயர்லாந்து நாட்டுப் பெண்மணியான அன்னிபெசன்ட்  இந்திய அரசியலில் நுழைந்தார்.  ‘ஹோம்ரூல் இயக்கம்’ என்ற ஒன்றை உருவாக்கி ஹோம்ரூல் கிளர்ச்சியைத் தொடங்கினார்.

1915-இல் பம்பாயில் எஸ்.பி.சின்ஹா என்பார் தலைமையில் காங்கிரஸ் நடந்தது. அதில் இவ்விரு பிரிவினரையும் ஒற்றுமைப்படுத்த வேண்டியதன் அவசியம் விவாதிக்கப்பட்டது. இதனால் இந்த காங்கிரசுக்கு ‘ஒற்றுமை காங்கிரஸ்’ எனும் பெயரிடப்பட்டது.

1916-இல் உத்தரப் பிரதேசம் லக்னோவில் காங்கிரஸ் மகாசபைக் கூட்டம் தொடங்கியது. அம்பிகா சரண் மஜூம்தார் என்பார் தலைமை வகித்தார். காங்கிரசை வழிநடத்திச் செல்லத் தகுதியானவர் இவர், தேசபக்தி நிறைந்தவர். இதற்கு முந்தைய ஆண்டில் கோபாலகிருஷ்ண கோகலேயும், ஃபெரோஸ் ஷா மேத்தாவும் காலமாகிவிட்டார்கள். பூனாவின் இரட்டையர்களாக இருந்த கோகலே, திலகர் ஆகிய இருவரில் ஒருவரின் இழப்பு பேரிழப்பாக உணரப்பட்டது.

லக்னோ காங்கிரசிற்கு பூனாவிலிருந்தும் பம்பாயிலிருந்தும் ஏராளமான காங்கிரசார் வந்திருந்தனர். தீவிரவாத காங்கிரசிலிருந்து பால கங்காதர திலகர், கோபர்தேயும், மிதவாதத் தலைவர்கள் ராஷ் பிஹாரி கோஷ், சுரேந்திரநாத் பானர்ஜி ஆகியோரும் ஒற்றுமையோடு உட்கார்ந்திருந்த காட்சியை இந்த காங்கிரசில் பார்க்க முடிந்தது.

ஐரிஷ் பெண்மணியான அன்னிபெசன்ட் ஹோம்ரூல் இயக்கச் சின்னங்கள் அணிந்துகொண்டு தன்னுடைய தோழர்களான அருண்டேல், வாடியா ஆகியோருடன் வந்து அமர்ந்திருந்தார். முஸ்லிம்கள் சார்பில் அலஹாபாத் மன்னர், ஜின்னாவும் இருந்தார்கள். இந்த காங்கிரஸுக்கு மோகன் தாஸ் கரம்சந்த் காந்தியும் வந்திருந்தார்.

இந்த காங்கிரசில் காரியக் கமிட்டிக்கு நடந்த தேர்தலில் தோற்ற பின்னர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட அதிசயம் நடந்தது. காரியக் கமிட்டிக்கு அந்தந்த மாகாணப் பிரதிநிதிகள் கூடித் தங்கள் பிரதிநிதியைத் தேர்ந்தெடுப்பார்கள். பம்பாய் மாகாண உறுப்பினர்கள் கூடித் தங்களுடைய இரண்டு பிரதிநிதியைத் தேர்ந்தெடுப்பதற்காக மிதவாதி ஒருவரையும் தீவிர காங்கிரஸ்காரர் ஒருவரையும் முன்மொழிந்தனர். திலகர் ஆதரவு பெற்ற ஒரு பிரதிநிதியும் காந்திஜியின் பெயரும் முன்மொழியப்பட, அதில் காந்தி தோற்றுவிட்டதாகத் தெரிந்த நிலையில், திலகர் உடனடியாக காந்தி வெற்றி பெற்றார் என்று அறிவித்து விட்டார்.

காந்திஜி இந்திய அரசியல் வானில் தோன்றி பிரகாசமாகத் திகழ இந்த வெற்றி அறிவிப்பு ஒரு தொடக்கமாக அமைந்துவிட்டது. பின்னாளில் மகாத்மாவாக பிரகாசித்த காந்தியடிகளுக்கு இது ஒரு புதிய அனுபவமாக இருந்திருக்கும்.

திலகரின் வழிகாட்டுதலோடும், துடிப்பும், வேகமும் நிறைந்த தீவிர காங்கிரஸ் தொண்டர்களுடைய ஆர்ப்பரிப்புடன் இந்த லக்னோ காங்கிரஸ் தொடங்கி பின்னால் 1946 வரை காங்கிரஸ் இயக்கம் இந்தியாவின் உயிர்த்துடிப்புள்ள சுதந்திரப் போராளிகளின் கூடாரமாக விளங்கியது என்பதைப் பார்க்கப் போகிறோம்.

1885 தொடங்கி 1906 வரையிலும் வெள்ளைக்காரர்களின் ஆதரவுக்குக் கரம் நீட்டி வாழ்த்துத் தெரிவித்த காங்கிரசில், 1916 வரை பால கங்காதர திலகர் சகாப்தமாக இருந்தது.

காங்கிரஸ் 1917-க்குப் பிறகு பால கங்காதர திலகர் சகாப்தத்தில் உயிர்த்துடிப்புள்ள சுதந்திரப் போராளிகளின் கையில் வந்தது. அதில் தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்திய சுதந்திரப் போரில் கலந்துகொள்ள வந்த மோகன் தாஸ் கரம்சந்த் காந்தி பங்கேற்றார். 1919 முதல் காந்திஜியின் சகாப்தம் காங்கிரசில் முழுமையாகக் கோலோச்சத் தொடங்கிய வரலாற்றையும் பார்க்கப் போகிறோம்.

காங்கிரஸ் தோன்றிய காலம் தொட்டு, மகாத்மா காந்தி இந்திய அரசியல் விடுதலைக்காகப் போராடத் தொடங்கிய காலம் வரை இந்த இயக்கத்தில் முன்னணியில் இருந்து போராடிய சில தலைவர்களைப் பற்றிய வாழ்க்கைக் குறிப்பினை இந்தக் கட்டத்தில் தெரிந்து கொள்வது அவசியம்.

1. தாதாபாய் நெளரோஜி

இந்திய தேசிய காங்கிரசை உருவாக்கிய பெருமக்களுள் தாதாபாய் நெளரோஜியும் ஒருவர். காங்கிரஸ் உருவான காலகட்டத்தில் பல சோதனைகளைக் கடந்து சாதனை புரிந்த பெருந்தகை அவர். இந்திய மக்களால் மட்டுமல்ல பிரிட்டிஷாராலும் மதிக்கப்பட்டவர் இவர். குறைகளை எடுத்துச் சொல்லி அவற்றுக்கு தீர்வு காணும் அமைப்பாக விளங்கிய காங்கிரசை  ‘சுதந்திரம்’ பெற்று இந்தியா தன்னைத் தானே ஆண்டு கொள்ளும் காலத்தைத் தேடி போராடும் ஒரு விடுதலை இயக்கமாக மாற்றிய பெருமை இவருக்கு உண்டு. கல்கத்தா காங்கிரசில் இவர்தான் முதன்முதலாக  ‘சுயராஜ்யம்’ எனும் சொல்லையே முழங்கியவர். காங்கிரசின் தலைவராக இவர் 1886, 1893, 1906 ஆகிய ஆண்டுகளில் மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர். இங்கிலாந்து நாடாளுமன்றத்திலும் இவர் ஒரு தொகுதியின் உறுப்பினராக இருந்து சிறப்பித்தவர். இவருக்குப் பின்னர் இவருடைய பேத்திகள் காந்திஜி காலத்தில் சுதந்திரப் போரில் தீவிரப் பங்காற்றினர்.

2. அனந்தாச்சார்லு

1885-இல் காங்கிரசை உருவாக்கியவர்களுள் அனந்தாச்சார்லுவும் ஒருவர். பம்பாயில் உருவான காங்கிரசில் இவரோடு ஜி.சுப்பிரமணிய ஐயர், தாதாபாய் நெளரோஜி, நரேந்திரநாத் சென், டபிள்யூ சி.பானர்ஜி, எஸ்.சுப்பிரமணிய ஐயர், ரங்கைய நாயுடு, ஃபெரோஸ்ஷா மேத்தா ஆகியோர் குறிப்பிடத் தக்கவர்கள். அன்றைய காங்கிரஸ் நோக்கில் இவர்கள் மிதவாதத் தலைவர்களாக அறியப்பட்டாலும், உணர்வால், செயலால், பேச்சு வன்மையால் இவர்கள் தீவிரமாகத் தான் இருந்திருக்கிறார்கள். 1891-இல் நடந்த ஏழாவது காங்கிரசுக்கு இவர் தலைமை தாங்கினார்.

3.  டி.இ.வாச்சா

1901-இல் நடைபெற்ற பம்பாய் காங்கிரசுக்குத் தலைமை வகித்தவர் இவர். நல்ல கலா ரசிகர், கலைகளில் வல்லவர். ‘பம்பாயின் ஜோதி’ என்று பெருமையாக அழைக்கப்பட்டவர். 1896 முதல் 1913 வரையிலான காலகட்டத்தில் காங்கிரசின் இணைச் செயலாளராகப் பணிபுரிந்தவர். 1915-இல் பம்பாய் காங்கிரஸ் மாநாட்டுக்கு வரவேற்புக் குழு தலைவராக இருந்தார். இவர்காலத்தில்தான் மிதவாத காங்கிரசாரும், தீவிர காங்கிரசாரும் ஒன்றுபட்டு ஒரே மேடையில் தோன்றினார்கள்.

4. கோபாலகிருஷ்ண கோகலே

பூனா தந்த தேசபக்தர்களில் ஒருவர். புகழ்பெற்ற மற்றொருவர் திலகர். கோகலே காங்கிரசில் மிதவாதி. திலகரோ தீவிர காங்கிரசைச் சேர்ந்தவர். காங்கிரசின் தலைவிதிப்படி பூனாவில் அந்தக் காலத்தில் காங்கிரஸ் இரு பிரிவுகளாக கோஷ்டிகளுடன் இயங்கி வந்தது. கோகலே சமூக ஆர்வலர். ஏழை எளியவர்களுக்கு உதவும் பல திட்டங்களை நிறுவிச் செயல்படுத்தி வந்தவர். இவருடைய நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் தியாகச் சிந்தையோடு குறைந்த ஊதியத்தில் மனப்பூர்வமாக சம்மதித்துப் பணிபுரிய வேண்டும்.

காந்திஜி இந்திய அரசியலில் நுழைந்த காலத்தில் இவரைத்தான் தன் குருவாக ஏற்றுக் கொண்டார். 1915-இல் காந்திஜி தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா வந்தபோது, அவரை இந்தியா முழுவதும் சுற்றிப் பார்த்து இந்திய மக்களின் வாழ்க்கை, அவர்களுடைய தேவைகள் இவைகளை நன்கு அறிந்து கொண்ட பிறகு அரசியல் பிரவேசம் செய்யத் தூண்டியவர் கோபாலகிருஷ்ண கோகலே. இதன் பின் கோகலே அதிக நாட்கள் உயிரோடு இல்லை. தனக்குப் பின் ஒரு தலைவரை உருவாக்கிவிட்டு அவர் மறைந்துவிட்டார்.

5. ஜி.சுப்பிரமணிய ஐயர்

தமிழகத்தில் தஞ்சாவூர் மாவட்டம், திருவையாற்றில் பிறந்து, திருவையாற்றில் பள்ளிப் படிப்பையும், பின்னர் தஞ்சாவூரில் பீட்டர்ஸ் கல்லூரியில் இண்டரும் படித்தவர் இவர். சென்னையில் ஆங்கிலேயர்களின் ‘மெட்ராஸ் மெயில்’  எனும் பத்திரிகை,  முதல் இந்திய உயர் நீதிமன்ற நீதிபதி நியமனத்தைக் கடுமையாக எதிர்த்து எழுதியபோது இந்தியர்களுக்கென்று ஒரு பத்திரிகை தேவை என்பதை உணர்ந்து அவரும் அவருடைய சில நண்பர்களுமாகச் சேர்ந்து  ‘தி இந்து’ எனும் பத்திரிகையை வெளிக் கொணர்ந்தவர்.

பம்பாயில் நடந்த முதல் காங்கிரஸ் மாநாட்டில் முதல் தீர்மானத்தைக் கொண்டு வந்த பெருமை இவருக்கு உண்டு. இவர் சமூக சீர்திருத்தத்தில் தீவிரமாக இருந்ததோடு, தன்னுடைய மகள் விதவையானபோது அவருக்கு மறுமணம் செய்வித்துப் புரட்சி செய்தவர்.

மகாகவி பாரதியை பத்திரிகை உலகுக்கு அறிமுகம் செய்தவர் இந்த ஜி.சுப்பிரமணிய ஐயர் தான். இறுதியில் தீராத தோல் வியாதியால் அவதிப்பட்டு மரணமடைந்தவர். இவர் உடலில் தோல் வியாதி முற்றியிருந்த நேரம் மகாத்மா காந்தி இவரைச் சந்தித்து ஆறுதல் கூறிச் சென்றிருக்கிறார்.

(கர்ஜனை தொடர்கிறது…)

$$$

2 thoughts on “ஸ்வதந்திர கர்ஜனை – 2(5)

Leave a comment