தீவிரவாதம் ஒழிய விவேகானந்தர் உரைத்த வழி

-சுவாமி கௌதமானந்தர்

பேரன்பிற்குரிய சகோதர சகோதரிகளே!

சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் 11- இல் நியூயார்க்கில் நடந்த துயரமான நிகழ்ச்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நமது பதிவைத் தெரிவிக்கவே நாம் இங்கு கூடியுள்ளோம். லட்சக் கணக்கான கற்றறிந்த இந்தியர்களின் மனதில் இந்த நிகழ்ச்சி எப்படிப்பட்ட பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை உங்களிடம் பகிர்ந்துகொள்ள நான் விரும்புகிறேன்.

இதே தேதியில் (செப்டம்பர் 11) அமெரிக்காவில் 1893-ஆம் ஆண்டு நடைபெற்ற சர்வ சமய மகா சபைக் கூட்டத்தின் மேடையில் சுவாமி விவேகானந்தர் தோன்றினார். ஆச்சரியம் என்னவென்றால், அன்று சகிப்புத் தன்மை, சர்வ சமய ஏற்பு என்பவை பற்றியே பெரும்பாலும் சுவாமிஜி பேசினார்.

“நாங்கள் (இந்தியர்கள்) எதையும் வெறுக்காமல் மதிக்க வேண்டும் என்னும் கொள்கையை நம்புவதோடு, அனைத்து மதங்களும் உண்மை என்று ஒப்புக் கொள்ளவும் செய்கிறோம்” 

-என்று சுவாமிஜி அன்று கூறினார்.

ஆறுகள் எவ்வேறு இடங்களில் தோன்றினாலும், அவை அனைத்தும் கடலில் கலப்பது போல அவரவர்  மன இயல்புக்கேற்ப, குறுக்குப் பாதையையோ, நேரான பாதையையோ எதை ஏற்றுக் கொண்டாலும் அவை அனைத்தும் இறைவா, உன்னையே அடைகின்றன என்ற கருத்துள்ள, பல நூற்றாண்டுகளுக்கு முன், புஷ்பதந்தரால் எழுதப்பட்ட சிவ மமின ஸ்தோத்திரத்தை மேற்கோள் காட்டி அன்று சுவாமிஜி பேசினார்.

சுவாமிஜி தமது சொற்பொழிவைச் சிறப்பான கருத்தாழம் நிறைந்த வார்த்தைகளோடு முடித்தார். அவற்றை இங்கே குறிப்பிடுவது மிகவும் பொருத்தமானதாகும்:

“பிரிவினைவாதம், அளவுக்கு மீறிய மதப் பற்று, அவற்றால் உண்டாகும் மதவெறி ஆகியவை இந்த அழகிய உலகத்தை நெடு நாளாக இறுகப் பற்றியுள்ளன. அவை இந்தப் பூமியை நிரப்பி, ரத்த வெள்ளத்தில் மீண்டும் மீண்டும் மூழ்கடித்து, நாகரிகத்தையும் கலாச்சாரத்தையும் அழித்து, எத்தனையோ நாடுகளை நிலைகுலையச் செய்துவிட்டன….

“இன்று காலை இந்தப் பேரவையின் துவக்கத்தைக் குறிப்பிட முழங்கிய மணி, மதவெறிகளுக்கு, வாளாலும் பேளாவாலும் நடைபெறுகின்ற கொடுமைகளுக்கும், ஒரே குறிக்கோளை அடையப் பல்வேறு வழிகளிலே சென்று கொண்டிருக்கும் மக்களிடையே நிலவும் இரக்கமற்ற உணர்ச்சிகளுக்கும் சாவு மணியாகும் என நான் திடமாக நம்புகிறேன்”

சென்ற ஆண்டு (2001) நியூயார்க்கில் நடந்த துயர நிகழ்ச்சியின் பின்னால் எந்தெந்த சிந்தனைகள் வேலை செய்தன என்பதை நாம் இனிமேல் தான் முழுமையாகக் கண்டறிய வேண்டும். தீவிர மதவெறியும், மற்ற தத்துவங்களையெல்லாம் அற்பமாக நினைத்து, தனது கருத்து ஒன்றே உலகில் இருக்க வேண்டும் என்ற வெறித்தனமான எண்ணமுமே இந்தக் கோழைத்தனத்துக்குப் பின்னணி.

எளிதில் எதுவும் பதியக்கூடிய இளைஞர்களிடம் இத் தீவிரவாதம் வளர்க்கப்பட்டு,  நியூயார்க்,  உலக வர்த்தக மையத்தைக் தகர்க்கும் அளவுக்கு அவர்களைக் கருவியாகப் பயன்படுத்தியுள்ளது என்பதை,  தொடர்ந்து நடந்த நிகழ்ச்சிகள் மூலம் அறிந்தோம். இந்த மதவெறி, காரண காரியங்களை அறியும் தன்மையை விரட்டியடித்து, இளைஞர்களை மிருகங்களைப் போல மட்டுமல்லாமல் இயந்திர மனிதர்களாகவே வேலை செய்ய வைத்துவிடுகிறது.

பயங்கரவாதம் என்ற இயந்திரத்தின் எரிபொருள் மதவெறியே. மக்களுக்கு வாழ்க்கையில் ஆன்மிக உணர்வு கிடைக்காதபோது மதவெறி ஏற்படுகிறது.

ஆன்மிக உணர்வு என்பது என்ன?

மனிதனை, அவன் பிரம்மாண்டத்திலும் இறைவனிடத்திலும் ஒன்றி இருப்பவன் என்பதை உணர வைக்கவும், மனித குலத்தையும் இறைவனையும் நேசிக்கவும் வழிகாட்டும் மார்க்கம் தான்,  ஆன்மிக உணர்வு என்பது.

மனித சமுதாயத்தின் புராதனமான புனித நூல்களான வேதங்களில் ரிஷிகள் ‘படைப்பு முழுவதும் இறைவனே’ – ஸர்வம் கல்விதம் ப்ரஹ்ம என்று கூறுகிறார்கள். ஒவ்வோர் உயிரிலும் தெய்வீகம் அடிப்படையானதாகவும், பிரிக்க முடியாததாகவும் இருக்கிறது என்பது இதன் பொருள்.

அதனாலேயே சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவில் பல சொற்பொழிவுகளிலே மனிதனின் தெய்விகத்தை மீண்டும் மீண்டும் உறுதிபடக் கூறினார்.

பூமியில் படைக்கப்பட்ட தெய்வீகம் நிறைந்தவர்களை பாவிகள்என்பதா? ஒரு மனிதனைப் பாவியென அழைப்பதுதான் மாபெரும் பாவம் என்று அவர் முழங்கினார்.

மனிதனின் தெய்வீகத் தன்மை என்ற கருத்து நமது பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் மட்டுமல்ல. கள்ளம் கபடமற்ற மனங்கள் ஆயிரக் கணக்கில் கூடும் சர்ச்சுகள், மசூதிகள் மற்றும் பௌத்த விஹாரங்களிலும் போதிக்கப்பட வேண்டும்.

அப்போது தான் பெண்களும் ஆண்களும், இனம், அறிவு, சக்தி, செல்வம் இவற்றிக்கு அப்பாற்பட்ட நன்மதிப்பும் பெருமையும் பெறுவார்கள். மற்றவர்களைத் துன்புறுத்துவது என்பது, அது எந்தக் காரணத்திற்காக இருந்தாலும் எவ்வளவு கொடுமையானது என்ற எண்ணம் அப்போது தான் அவர்களுக்குத் தோன்றும்.

அதன் பிறகே வன்முறை ஒட்டுமொத்தமாகச் சமுதாயத்திலிருந்த வேரோடு களைந்து எறியப்படும்.

மிகச் சிறந்த தொழில் மற்றும் அறிவியல் கல்வி பெற்றுவரும் இந்நாளிலும் நம் மக்களிடம் சக மனிதர்களிடமோ, இறைவனிடமோ அன்பு, மரியாதை போன்றவை காணப்படவில்லை. இதுவே நம்மடைய அரசியல்வாதிகளையும், அறிவியல் வல்லுநர்களையும் அணு ஆயுதங்கள், உயிரியல் ஆயுதங்கள் ஆகியவற்றை உற்பத்தி செய்யத் தூண்டுகிறது; ஹிட்லர் செய்தது போலவும், செப்டம்பர் 11-ல் செய்யப்பட்டது போலவும் சக மனிதர்களை அழிக்கும் திட்டங்களில் ஈடுபட வைக்கிறது. இதுவே என் கருத்து. என் சக சிந்தனையாளர்களின் கருத்தும் இதுவாகத் தான் இருக்கும்.

மக்களை மூளைச்சலவை செய்யும் ஜிஹாத் (சமயப் போர்) போன்ற பல்வேறு முகமூடிகளுடன் வரும் விரும்பத் தகாத சிந்தனைகளுக்கு இரையாகி விடாமல் நம் சகோதரர்களைப் பாதுகாக்க,  நல்ல அறிவுரைகளைப் போதிக்க வேண்டிய ஓர் அவசரம் தோன்றியுள்ளது. இந்த விழிப்புணர்ச்சியே, என்னிடமும் மற்றும் எல்லா நாட்டு மக்களிடையேயும் இந்த நிகழ்ச்சி ஏற்படுத்தியுள்ள தாக்கமாகும்.

ஏழைகளும் புறக்கணிக்கப்பட்டவர்களுமே பெரும்பாலும் தீவிரவாதப் பயிற்சி முகாம்களில் சேர்கிறார்கள். தன் இனத்தைச் சாராதவர்களைக் கொல்வதன் மூலம் சொர்க்கம், மற்றும் அதன் முடிவல்லாத இன்பம் அவர்களுக்கு வெகுமதியாக இறைவன் அளிப்பார் என அவர்கள் மூளைச்சலவை செய்யப்படுகிறார்கள்.

பொதுவாக, மக்களுக்கு அடிப்படையான சுதந்திரம், ஜனநாயகம் இல்லாத இடங்களிலேயே இவை சாத்தியம். ஜனநாயக விரோதிகளுக்கும், போலி ஜனநாயகவாதிகளுக்கும் உதவுவதை நாம் நிறுத்த வேண்டும்.

சுவாமி கௌதமானந்தர்

நமது பெண்களையும், ஆண்களையும் வல்லவர்களாக மட்டுமின்றி, நல்லவர்களாகவும் ஆக்கக்கூடிய அர்த்தமுள்ள கல்வியை வழங்க உறுதியாக முயல வேண்டும். அத்தகைய கல்வி அறிவியல் திறமைகளுடன் ஆன்மிக விழிப்புணர்ச்சியையும் ஏற்படுத்த வேண்டும்.

நல்லவை என்பதன் இலக்கணமாக, உண்மை, உலகளாவிய சகோதரத்துவம், உதவும் பண்பு, மொத்த மனித சமுதாயம் ஒரே குடும்பம் என்ற உறுதி, பிறரைத் துன்புறுத்துவது தமக்கே செய்து கொள்ளும் தீங்கு என்ற மனப்பான்மை போன்றவற்றைக் கூறலாம்.

“எங்களுடைய எல்லா சகோதரர்கள் எங்கிருந்தாலும் அன்பையும் சகோதரத்துவத்தையும் அவர்களிடையே பரப்பும் உறுதியையும் சக்தியையும் எங்களுக்கு அருள்வாயாக!”  என்பதுதான் நமது பிரார்த்தனை.

குறிப்பு: 

பூஜ்யஸ்ரீ சுவாமி கௌதமானந்தர், ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் துறவி; சென்னை ராமகிருஷ்ண மடத்தின் தலைவர். 

2002, செப்டம்பர் 11-இல் சென்னையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தில் பல்வேறு மத போதகர்கள் கலந்துகொண்ட சர்வ சமயப் பேரவையில் சுவாமி கௌதமானந்த மகராஜ் ஆற்றிய உரை இது. 

நன்றி: விவேகானந்தரைக்  கற்போம்! – ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் வெளியீடு.

Leave a comment