சிவகளிப் பேரலை- 93

-பத்மன்

(ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய ‘சிவானந்த லஹரீ’யின்

தமிழ் வடிவமும் விளக்கமும்)

*

93. நீலகண்டம் நெஞ்சில் நிலைக்கட்டும்

.

ஸோம கலார மௌலௌ

கோமல கனகந்ரே மஹாமஹஸி/

ஸ்வாமினி கிரிஜாநாதே

மாமக ஹ்ருயம் நிரந்தரம் ரமதாம்//

.

சுருண்ட முடியில் இளம்பிறை அணிவோன்

இருண்ட மேகமாய் கருத்த கழுத்தன்

பெருவொளி தலைவன் மலையோள் கொழுநன்

இருதய மென்னுள் உறைக ரசித்தே!

.

     அனைத்து உயிரினங்களையும் அஞ்சி நடுங்கவைத்த ஆலகால விஷத்தைத் தாம் பருகி, அமிர்தம் கிடைப்பதற்கு வழிவகுத்த அண்ணல் அண்ணாமலைத் தெய்வமாகிய பரஞ்சோதிப் பெருமான். அவரை தியானிப்பதன் மூலமும் அவரது சரிதத்தை வாசிப்பதன் மூலமும் நமது கெடுதிகள் எல்லாம் விலகியோடி, அனைத்து ஐஸ்வர்யங்களும், இறுதியில் முக்திப்பேறும் கிடைக்கும் என்பதை முந்தைய இரு ஸ்லோகங்களில் விவரித்த ஸ்ரீஆதிசங்கரர், இந்த ஸ்லோகத்தில், பக்தர்களாகிய நமது இதயங்களில் அந்த நீலகண்டப் பெருமானே, நமக்குக் காப்பாக (ரட்சையாக) நீங்காது நிலைபெற்றிருக்க வேண்டும் என்று நமக்காக இறைஞ்சுகிறார்.

     சுருண்ட சடைமுடிகளையுடைய சிவபெருமான் அந்த சடைமுடிகளுக்கு மத்தியில் பிரகாசிக்கும் இளம்பிறையை அணிந்திருக்கிறான். ஆலகால விஷத்தை அருந்தியதால் அவரது கழுத்து கார்மேகம்போல் கருமையாக இருக்கின்றது. அனைத்து உலகங்களுக்கும் தலைவராகவும், மலைமகளின் நாதராகவும் (கிரிஜாபதி)  விளங்கும் அந்த இறைவன் கோடி சூரிய பிரகாசமாய் ஓளிவீசுகிறார். அப்பேர்பட்ட அந்தப் பரம்பொருள் எப்போதும் எனது இதயத்திலேயே வீற்றிருந்து ஒளிவீசட்டும்.                       

$$$

Leave a comment