சிவகளிப் பேரலை- 76

-பத்மன்

(ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய ‘சிவானந்த லஹரீ’யின்

தமிழ் வடிவமும் விளக்கமும்)

*

76. பரமானந்த மழை பொழியும் பக்திமேகம்

.

க்திர்- மஹேச’ பபுஷ்கர மாவஸந்தீ

காம்பினீவ குருதே பரிதோஷவர்ஷம்/

ஸம்பூரிதோ வதி யஸ்ய மனஸ்தடாகஸ்-

தஜ்ஜன்ம ஸஸ்யமகிலம் ஸலஞ் ச நான்யத்//

.

இறையன்பு ஈசன்திரு வடிவானில் உறைந்திட்டு

நிறைசூழ் முகில்போலே இன்பமழை பொழிந்திடுதே

எவனுடை மனக்குளம் அதனாலே நிரம்பியதோ

அவனுடை பிறவிப்பயிர் முழுப்பயனும் ஆகிறதே!

.

     உரிய காலத்தில் மழை பெய்தால்தான் பயிர்கள் செழித்து வளர்ந்து அதற்குரிய பயன்களைத் தரும். அதுபோல்தான் இறைவன் மீதான பக்தியும் நமது வாழ்க்கைப் பயிருக்குத் தேவையான மழையாகப் பொழிகிறது. மகேசனாகிய இறைவன் மீது அன்பு கொண்டு, அவரது திருவடிகளாகிய வானத்திலேயே உறைந்து, நிறைவு தருகின்ற வகையிலே சூழ்ந்து நின்று கொண்டிருக்கும் பக்தியாகிய மேகம், பரமானந்தத்தை வாரி வழங்குகின்ற இன்ப மழையைப் பொழிகின்றது.

.பக்தி மேகம் பொழிகின்ற அந்த இன்ப மழையை, இறையனுபவத்தை, பக்திப் பரவசத்தை நமது மனமாகிய குளத்தினிலே எப்போதும் வற்றாமல் தேக்கி வைக்க வேண்டும். யாருடைய மனக்குளம், அந்த பக்திப் பெருக்கினால் நிரம்பியிருக்கிறதோ, அவனது பிறவி, அதற்குரிய இறுதிப் பயனாகிய முக்தியை, நிறைநிலையை, பூரணத்துவத்தை அடைந்துவிடுகிறது.

     “வானமாய் நின்றின்ப மழையா யிறங்கி வாழ்விப்ப துன்பரங் காண்”  என்று தாயுமானவர் பாடியிருப்பதை இங்கு ஒப்புநோக்க வேண்டும். மேகம் இல்லையேல் மழை இல்லை, மழை இல்லையேல் பயிர் இல்லை. அதேபோல் பக்தியாகிய மேகம் இல்லையேல் இறையருளாகிய மழை இல்லை, அந்த மழை இல்லையேல் முக்தியாகிய விளைச்சலும் இல்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.           

$$$  

Leave a comment