மகாவித்துவான் சரித்திரம் – 1 (2)

-உ.வே.சாமிநாதையர்

2. இளமைப் பருவமும் கல்வியும்


பிள்ளையவர்கள் ஜனனம்

சிதம்பரம்பிள்ளை இங்ஙனம் இருந்து வருகையில், தமிழ்நாடு செய்த பெருந்தவத்தால் பவ வருஷம் பங்குனி 26-ஆம் தேதி (6-4-1815) அபரபட்சம் துவாதசியும் பூரட்டாதி நட்சத்திரமும் குருவாரமும் கூடிய சுபதினத்தில் இரவு இருபதே முக்கால் நாழிகையளவில் மகர லக்கினத்தில் அவருக்கு ஒரு புண்ணிய குமாரர் அவதரித்தார். இக்குழந்தை பிறந்த வேளையிலிருந்த கிரக நிலைகளை அறிந்து ‘இந்தக் குமாரன் சிறந்த கல்விமானாக விளங்குவான்’ என்றும், ‘இவனால் தமிழ்நாட்டிற்குப் பெரும்பயன் விளையும்’ என்றும் சோதிட நூல் வல்லவர்கள் உணர்த்த, மகிழ்ந்து சிதம்பரம்பிள்ளை ‘நம் குலதெய்வமாகிய ஸ்ரீ மீனாட்சி சுந்தரேசருடைய திருவருளினாலேயே இந்தச் செல்வப்புதல்வனைப் பெற்றேம்’ என்றெண்ணி அக்கடவுளின் திருநாமத்தையே இவருக்கு இட்டனர்.

இவருடைய *1 ஜாதகம் வருமாறு:-

பவ வருஷம், பங்குனி மாதம் 26-ஆம் தேதி, குருவாரம், அபரபட்சம் துவாதசி, நாழிகை முப்பத்தெட்டரையே யரைக்கால், சதயம் நாற்பத்திரண்டரையே யரைக்காலுக்குமேல் பூரட்டாதி நக்ஷத்திரம், சுபநாம யோகம் ஐந்தரையேயரைக்கால், கவுலவகரணம் ஆறரையே அரைக்கால், சேஷத்யாச்சியம் அரையே அரைக்கால், அகஸ்முப்பதேகால்: இந்தச் சுபதினத்தில் இராத்திரி இருபதே முக்கால் நாழிகையளவில் மகரலக்கினத்தில் ஜனனம். குருமகா தசை ஜனன காலத்தில் நின்றது 13 வருஷம், 11 மாதம், 7 நாள்.

சிதம்பரம் பிள்ளை சோமரசம்பேட்டையில் இருந்தது

இப் புதல்வர் பிறந்த சில மாதங்களுக்குப்பின் அதவத்தூருக்கு அருகேயுள்ள சோமரசம்பேட்டை யென்னும் ஊரிலுள்ளவர்கள் சிதம்பரம் பிள்ளையால் அதவத்தூராரும் அவ்வூர்ப் பிள்ளைகளும் அடைந்துவந்த பெரிய நன்மையை அறிந்து எவ்வாறேனும் அவரைத் தங்களூருக்கு அழைத்துக்கொண்டு வரவேண்டுமென் றெண்ணினார்கள். அவருட் சிலர் அதவத்தூருக்கு வந்து அவரை மிகவும் வேண்டிக்கொண்டு அவ்வூரிலுள்ளார்க்கும் தக்க சமாதானம் கூறித் தங்களூருக்கு அழைத்துச் சென்று அவருக்கு வேண்டிய பொருள்களை உதவி வருவாராயினர். சிதம்பரம் பிள்ளை வழக்கம்போலவே விரும்புவோருக்குத் தமிழ்ப் பாடம் சொல்லியதுடன் அங்கே ஒரு பாடசாலையை அமைத்துப் பல பிள்ளைகளுக்குக் கல்வி கற்பித்துவந்தார். அப்பொழுது அவருக்கு வேறு ஓர் ஆண் குழந்தையும் அப்பால் ஒரு பெண் குழந்தையும் பிறந்தன. ஆண் குழந்தைக்குச் *2 சொக்கலிங்கமென்றும் பெண் குழந்தைக்கு மீனாட்சியென்றும் பெயர் இட்டார். இதனாலும் சிதம்பரம் பிள்ளைக்கு மதுரைச் சோமசுந்தரக் கடவுள்பாலும் மீனாட்சியம்மையின்பாலும் இருந்த அன்பு விளங்கும்.

கல்வி பயிலத் தொடங்கல்

*3 மீனாட்சிசுந்தரம் பிள்ளைக்கு ஐந்து பிராயமானவுடன் சிதம்பரம் பிள்ளை வித்தியாரம்பஞ் செய்வித்துத் தம் பள்ளிக்கூடத்திலேயே கல்வி பயிற்றத் தொடங்கினார். அங்கே மற்றப் பிள்ளைகளுடன் அக்கால வழக்கப்படி முறையே நெடுங்கணக்கு, ஆத்திசூடி முதலிய நீதி நூல்கள், எளிய நடையிலுள்ள அருணகிரி யந்தாதி முதலிய அந்தாதிகள், கலம்பகங்கள், மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் முதலிய பிள்ளைத் தமிழ்கள், நிகண்டு, கணிதம் முதலியவற்றைக் கற்றார். பழம்பிறப்பிற் செய்த புண்ணிய விசேடத்தாலும், பரம்பரையின் சிறப்பாலும் தந்தையாரின் பழக்கத்தாலும் இவருக்குக் கல்வியறிவு மேன்மேலும் எளிதிற் பெருகுதலுற்றது; “குலவித்தை கல்லாமற் பாகம்படும்” என்பது பெரியார் வாக்கன்றோ? பாடசாலையிலுள்ள ஏனைப் பிள்ளைகளைக் காட்டிலும் எல்லாவற்றிலும் இவரே சிறப்புற்று விளங்கினார். சில வருடங்கட்குப்பின்பு அந்தப் பள்ளிக்கூடத்தில் இவர் சட்டாம்பிள்ளையாக அமர்த்தி வைக்கப்பட்டார்.

கல்வி கற்ற முறை

யாவரும் பாராட்டும்படி ஞாபகசக்தி இவர்பால் நன்கு அமைந்திருந்தது. இவர் அப்பொழுதே செய்யுட்களின் கருத்துக்களைக் கூர்ந்து ஆராயும் அறிவைப் பெற்றிருந்தார். தம் தந்தையாரை அடிக்கடி வந்து வந்து பார்த்துப் பார்த்துச் செல்லும் கல்விமான்களும் அவரும் தமிழ் சம்பந்தமாகப் பேசிக் கொள்ளுவனவற்றை வலிந்து சென்று ஊன்றிக் கேட்கும் தன்மையும், படித்த செய்யுட்களின் கருத்துக்களை அமைத்து இனிமையாகப் பேசும் திறமையும் இவர்பாற் காணப்பட்டன. இவருடைய அறிவின் வளர்ச்சியை அறிந்த தந்தையார் மகிழ்ச்சியடைந்து மற்ற பிள்ளைகளோடு படிக்கும் பாடங்களையன்றிப் பிரபந்தங்களையும் எளிய நடையாகவுள்ள சதகங்கள், மாலைகள் முதலியவற்றையும் வீட்டில் மனப்பாடம் பண்ணுவித்துப் பொருளுங் கூறிவந்தார். அன்றியும் நன்னூல் முதலிய இலக்கண நூல்களின் மூலபாடங்களையும் மனப்பாடம் பண்ணும்படி செய்வித்து வந்தார்.

ஓய்வு நேரங்களில் இலக்கணக் கருத்துக்களைச் சுருக்கமாகவும் தெளிவாகவும் அறிவுறுத்தினர். இவர் அவ்வாறு கற்ற பின்பு படித்த பிரபந்தங்கள் முதலியவற்றிற்கும் நைடதம் முதலிய சிறு காப்பியங்களுக்கும் ஏனைய நூல்களுக்கும் மற்றவர்களோடு சேர்ந்து பொருள் கேட்பாராயினர்.

அக்காலத்தில் நூல்கள் பெரும்பாலும் அச்சிற் பதிப்பிக்கப்படாமையாற் படிப்பவர்கள் அவற்றைப் பிரதிசெய்து படித்தல் இன்றியமையாத வழக்கமாக இருந்தது; ஆதலால் இவர் தந்தையார் நன்றாக ஏட்டில் எழுதவும் இவரைப் பழக்குவித்தார். அதனால் இவர், தாம் படிக்கப் புகுந்த நூல்களை, எழுதி எழுதித் தனியே வைத்துக்கொள்வார். அன்றியும் தம் தந்தையார் கட்டளையின்படி தாம் படிக்கும் நூல்களிலுள்ள இனிய செய்யுட்களைச் சமயோசிதமாகப் பிறர்க்குச் சொல்லிக் காட்டுவதற்குத் தொகுத்துத் தனியே எழுதி வைத்துக்கொண்டு மனனம் செய்வதும், தமக்கு மனனமான பாடல்களின் அடிவரையறையைத் தனியே குறித்து வைத்துக்கொள்வதும் உண்டு. *4 இங்ஙனம் செய்வது அக்கால வழக்கம். தம் தந்தையார் கற்பித்தவற்றையெல்லாம் பேரவாவுடன் இவர் கற்று விரைவில் அந்நூல்களிற் சிறந்த பயிற்சியை அடைந்தார்.

செய்யுள் இயற்றப் பயிலுதல்

தந்தையாருடைய பழக்கத்தால் வருத்தமின்றிச் செய்யுள் செய்யும் திறமை இவர்பால் வளர்ச்சியுற்றது. இவர் தந்தையாரிடம் மேன்மேலும் இலக்கணங்களையும் பல காப்பியங்களையும் கற்று வந்தார். அன்றியும் இவருக்குள்ள செய்யுள் செய்யும் திறமையை அறிந்து சிதம்பரம் பிள்ளை அடிக்கடி சமுத்தி கொடுத்துச் செய்யுள் இயற்றச் சொல்லியும், திரிபு யமகம் சிலேடைகளை அமைத்துப் பாடல் செய்யும்படி சொல்லியும் வந்தார். அவற்றை இவர் விரைவில் முடித்து விடுவதையும் அச்செய்யுட்கள் எளிய நடையிற் செம்பாகமாக அமைந்திருத்தலையும் தேர்ந்து தந்தையார் மகிழ்ச்சியுற்றார்; கேட்ட ஏனையோரும் மகிழ்ந்து பாராட்டினர்.

பாடும் வழக்கம் தமக்கு இயல்பாகவே இருந்தமையின் தினந்தோறுமுள்ள ஓய்வு நேரங்களில் இவர் ஏதாவது பொருளையமைத்துப் புதியனவாகப் பாடல்கள் செய்துகொண்டேயிருப்பார். எந்த நூலையேனும் தனிப்பாடலையேனும் படிக்குங் காலத்தில் அவற்றைப் போலப் பாட வேண்டுமென்றும் அவற்றிலுள்ள சொற்றொடர்களையும் கருத்துக்களையும் அப்பாடல்களில் அமைக்க வேண்டுமென்றும் இவருக்கு விருப்பம் இருந்து வந்தமையால் அவ்வாறே பாடியும் வந்தார். இளமையில் விரைவாகப் பாடுந்திறமை இவருக்கு உண்டாயிருத்தலையறிந்து வியப்புறுவோர் பலரென்றும், அங்ஙனம் பாடிய பாடல்கள் மிகப் பலவென்றும் கேள்வி. அக்காலத்திற் புதியனவாகப் பாடல் செய்வோர் திரிசிரபுரத்திலும் உறையூரிலும் பிறவிடங்களிலும் சிலர் இருந்தார்கள். அவர்களோடு அடிக்கடி பழகிவந்ததும் அவர்கள் அளித்த ஊக்கமும் செய்யுளியற்றும் ஆற்றலை இவர்பால் மிகச் செய்தன.

கல்வி வளர்ச்சிக்குக் காரணம்

சிதம்பரம் பிள்ளையிடம் படித்த பிள்ளைகள் பிற ஊர்களிலிருந்து படிக்கும் பிள்ளைகளிலும் தமிழிற் சிறந்த அறிவுள்ளவர்களாகவும் அவர்களுள்ளே இவர் சிறந்தவராகவும் இருத்தலை அயலூரார் கேட்டு மகிழ்வாராயினர். இவருடைய தந்தையாரை திரிசிரபுரம் முதலிய ஊர்களிலுள்ள பிரபுக்கள் தங்களூருக்கு அழைத்துச்சென்று உபசரித்து அனுப்புவதுண்டு. அவரும் அவர்களுடைய வேண்டுகோளின்படி ஓய்வுநாட்களிற் சென்றிருந்து மகிழ்வித்து வருவார். சில சமயங்களில் சிதம்பரம்பிள்ளை இவரையும் உடனழைத்துக்கொண்டு சென்று தமக்குத் தெரிந்த செல்வர்களிடத்தில் இவரைப் பழைய பாடல்களைச் சொல்லுவித்தும் அவற்றிற்குப் பொருள் சொல்லச் செய்தும் வந்தார். அதனால் இவருடைய இயல்பை அவர்கள் அறிந்து வியந்தார்கள். இத்தகைய செயல்களும் இவரது கல்வி வளர்ச்சிக்குக் காரணமாக இருந்தன. இவ்வாறு இவருடைய கல்வி வளர்ச்சியைப் பற்றிய செய்தி இவர் தந்தையாருடைய புகழுடனே எங்கும் பரவியது.

ரங்கபிள்ளை யென்பவரின் முயற்சி

வீட்டுக்கு வேண்டிய பொருள்களை விலைக்கு வாங்குதற்கு *5 வாவு நாட்களில் தந்தையாரால் அனுப்பப்பட்டு உடன்  படிக்கும் பிள்ளைகளுடன் திரிசிரபுரம் கடைத்தெருவிற்கு இவர் போய் வாங்கி வருவதுண்டு. அப்படிச் செல்லுங்கால் அவர்கள் தாங்கள் மனப்பாடம் பண்ணிய பாடல்களைச் சொல்லிக்கொண்டும், ஒருவர் சொல்லிய பாடலின் இறுதிச்சொல்லை முதலாகவுடைய வேறு ஏதேனுமொரு பாடலை மற்றொருவர் சொல்ல இவ்வாறே தொடர்ந்து சொல்லிக்கொண்டும் செல்வார்கள். இங்ஙனம் சொல்லிப் பழகுவது பழையகாலத்தில் வடமொழி – தென்மொழியாளர்களின் வழக்கம். இவர்கள் போகும் வழியில் இருந்த சுங்கச் சாவடியில் *6 சவுக்கீதாராக ரங்கபிள்ளை யென்பவர் ஒருவர் இருந்தார். அவர் தமிழ் நூற் பயிற்சியும் படித்தவர்களை ஆதரிக்கும் தன்மையும் சிதம்பரம் பிள்ளையின்பால் மிக்க அன்பும் உடையவர். இவர் பல பிள்ளைகளுடன் அவ்வழியே செல்லும்பொழுது அவர்கள் சிதம்பரம் பிள்ளையிடம் படிக்கிறவர்களென்பதை யறிந்து அன்போடு அழைத்து “இப்பொழுது என்ன பாடம் நடக்கிறது?” என்று விசாரிப்பதும், அவர்கள் மனப்பாடம் பண்ணிய செய்யுட்களைச் சொல்லச்சொல்லிக் கேட்பதும், அவற்றிற்குப் பொருள் கேட்பதும் உண்டு. அவ்வாறு கேட்கையில் அவர்களுள் இவர் நயமாகவும் பொருள் விளங்கவும் பாடல் சொல்வதைக் கேட்டு மகிழ்வார்.

ஒருநாள் பிள்ளைகளை நோக்கி, “உங்கள் ஆசிரியர் உங்களுக்குச் செய்யுள் செய்யும் பழக்கம் உண்டாக்கி யிருப்பாரே. பிள்ளையார்மேல் ஒரு வெண்பாவைச் செய்யுங்கள்” என்று சொன்ன பொழுது மாணாக்கர்களெல்லாரும் பாடுதற்கு முயன்று கொண்டிருக்கையில் இவர்,

“பாரதத்தை மேருப் பருப்பதத்தி லேயெழுதி
மாரதத்தைத் தந்தையிவர் வண்ணஞ்செய் - சீருடையோய்
நற்றமிழை யாங்க ணயந்துகற்றுத் தேறமனத்
துற்றருளை யெங்கட் குதவு”

என்னும் வெண்பாவை விரைவிற் பாடிமுடித்தார். அதைக்கேட்ட ரங்கபிள்ளை மிக வியந்தனர். இவ்வாறே இவர் வருஞ் சமயங்கள்தோறும் சமுத்தி (ஸமஸ்யை) கொடுத்துப் பாடச் செய்து கேட்டு மகிழ்ந்து இவரை வியந்து பாடலொன்றுக்கு ஒரு பணம் (2 – அணா) விழுக்காடு கணக்குப் பண்ணிக் கொடுப்பது வழக்கம். கொடுத்ததை மகிழ்ந்து பெற்றுப் போய் வேண்டுவனவற்றைக் குறித்த அளவிற்கு மேற்பட மளிகைக்கடையில் வாங்கிக்கொண்டு சென்று கொடுத்துத் தந்தையாரை மகிழ்விப்பார். இவர் தமிழ் நூல்களைக் கவனித்துப் படிப்பதற்கும் பொருளைக் கேட்டுச் சிந்திப்பதற்கும் மேன்மேற் பாடிப் பழகுவதற்கும் ரங்கபிள்ளையின் இந்த முயற்சிகளும் காரணமாக இருந்தன. இவர் இளமையில் இங்ஙனம் பாடிய பாடல்கள் பலவென்பர்.

நெல்லைப் பற்றிப் பாடிய சிலேடை

இவரிடத்தில் அன்புடைய திரிசிரபுரம் மலையாண்டியா பிள்ளை யென்பவர் இவருடைய கவித்துவத்தை யறிந்து இவர் ஆற்றலை எல்லோரும் அறியச் செய்து ஏதாவது உதவி செய்விக்க நினைத்தார். ஒரு நாள் *7 முருங்கைப்பேட்டையென்னும் ஊரிலுள்ள ஒரு மிராசுதாரரிடம் அழைத்துச் சென்று இவருடைய திறமையை அவருக்குச் சொன்னார். பக்கத்திலிருந்த ஒருவர் இவரை நோக்கி ஒரு பாட்டைக் கூறி, “அப்பா, இப்பாட்டுக்கு அர்த்தஞ் சொல்” என்றார். அவ்வாறே அதற்கு இவர் பொருள் சொல்லியபின் அக் கனவான், ”இப்பாட்டுக் கருத்தஞ் சொல்’ என்பதையே ஈற்றடியாக வைத்து ஒரு வெண்பாப் பாடு” என்று கூறவே இவர், சொல் என்பதற்கு நெல் என்னும் பொருளை யமைக்க எண்ணி, வெண்பாவின் ஈற்றடியாக வைத்தற்கு அத்தொடர் பொருந்தாமையின் ‘தூய’ என்பதை முன்னே சேர்த்து, “தூயவிப்பாட்டுக் கருத்தஞ் சொல்” என்ற ஈற்றடியை அமைத்து நெல்லுக்கும், திரிமூர்த்திகளுக்கும் சிலேடையாக,

*8 “ஒண்கமலம் வாழ்ந்தன்ன மாகி யுரலணைந்து
தண்கயநீர்த் தூங்கித் தகுமேறூர்ந் - தெண்கதிரின்
மேயவிதத் தான்மூவ ராகும் விளம்பியதென்
தூயவிப்பாட்டுக்கருத்தஞ் சொல்”

என்னும் வெண்பாவைப் பாடி முடித்தார்.

அதனைக் கேட்ட அந்தக் கனவான் மிக மகிழ்ந்து ஒரு வண்டி நெல் கொடுத்தனுப்பினார். *9 இவ்வாறே பலரால் அழைக்கப்பட்டுச் சென்று விரைவிற் பாடிப்பாடி இவர் பெற்ற பரிசுகள் பல. இவைகளெல்லாம் தந்தையார்க்கு மகிழ்ச்சியை விளைவித்து இவரைப் படிப்பிக்கும் விஷயத்தில் ஊக்கமளித்து வந்தன.

தந்தையார் பிரிவு

இங்ஙனம் கல்வி கேள்விகளிலும் செய்யுள் செய்தலிலும், மேன்மேலும் வளர்ச்சியுற்றுப் பலராலும் மதிக்கப்பெற்று வருங் காலத்தில் இவருடைய 15 – ஆவது பிராயமாகிய விரோதி வருடத்திற் சோமரசம்பேட்டையில் இவர் தந்தையார் சிவபதமடைந்தார். அருமைத் தந்தையாருடைய பிரிவால் இவருக்கு மிகுந்த வருத்தமுண்டாயிற்று. அப்பொழுது வருந்தி இவர் செய்த பாடல்களுள்,

“முந்தை யறிஞர் மொழிநூல் பலநவிற்றும்
தந்தை யெனைப்பிரியத் தான்செய்த - நிந்தைமிகும்
ஆண்டே விரோதியெனு மப்பெயர்நிற் கேதகுமால்
ஈண்டேது செய்யா யினி”

என்னும் செய்யுள் மட்டும் கிடைத்தது. தந்தையார்க்கு அபரக் கிரியைகளைச் செய்து முடித்தபின்பு இவர் அங்குள்ளாருடைய ஆதரவால் அவ்வூரிலேயே இருந்து காலங்கழித்துவந்தார். அவ்வூரார் இவருக்கு வீட்டுக் கவலையில்லாதபடி வேண்டியவற்றைக் கொடுத்து உதவி வந்தார்கள்.

விவாகம்

இயல்பாகவே இவருக்கு வேண்டியவற்றையளித்து உதவி செய்துவந்த பல நண்பர்களும் வேறு பல கனவான்களும் பிறகு அதிக உதவிகளைச் செய்து இவருக்கு, காவேரியாச்சி யென்னும் பெண்ணை மிகவும் சிறப்பாக விவாகம் செய்வித்தனர்.

இவர் ஓய்வு நேரங்களில் அயலூர்களுக்குச் சென்று அங்கங்கேயுள்ள கல்விமான்களை அடைந்து விசாரித்துக் கிடைக்கும் நூல்களைப் பெற்றுக் கொணர்ந்து பிரதிசெய்து படித்துப் பொருள் தெரிந்து ஆராய்ந்து வருவார். இப்படிச் சிலவருடங்கள் சென்றன.

$$$

அடிக்குறிப்பு மேற்கோள்கள்:

1.  இந்த ஜாதகம் பிள்ளையவர்கள் தந்தையாராலேயே குறித்து வைக்கப்பட்டிருந்தது. அந்தப் பிரதி பிள்ளையவர்கள் குமாரராகிய சிதம்பரம் பிள்ளையிடமிருந்து கிடைத்தது.
2.  பிள்ளையவர்கள் சகோதரரை மட்டும் திருவாவடுதுறையில் ஒரு முறை பார்த்திருக்கிறேன்;  மற்றவரைப் பார்க்கவில்லை. இவர்களைப் பற்றிய வேறு வரலாறொன்றும் தெரிந்திலது.
3.  பிள்ளையவர்களை இவ்வாறு பெயர் குறித்தெழுதுவதற்கு அஞ்சுகின்றேன்.
4.  ஞாபகமுள்ள சிறந்த பாடல்களைக் குறித்து வைக்கும் சுவடிகளில் முதலிற் கையேடென்றேனும் அவசரப் பாடலென்றேனும் இன்ன நூலின் தெரிவென்றேனும் எழுதப்பட்டிருக்கும். இத்தகைய சுவடிகளைப் பல புலவர்கள் வீடுகளிற் கண்டிருக்கிறேன். அவற்றின் முதற் குறிப்பைத் தனியே எழுதி வைத்துக்கொண்டு அடிக்கடி ஞாபகப்படுத்திக் கொள்வதும் நூற்செய்யுள் முதற் குறிப்பைத் தொடர்பு பெறச் செய்யுளாக அமைத்து வைத்துக்கொள்வதும் பண்டைய வழக்கம். பின்னவை முதனினைப்புச் செய்யுளென்னும் பெயர் முதலியவற்றால் வழங்கும். பெரிய நூலாக இருப்பின் அகவலாகவும் சிறிய நூலாக இருப்பின் வேறு வகைச் செய்யுளாகவும், அம்முதற் குறிப்புச் செய்யுட்கள் பெரும்பாலும் இருக்கும். அதனை அடிவரவு, அடிவரையறை என்றும் கூறுவர். இத்தகைய செய்யுட்கள் யாப்பருங்கலக் காரிகை முதலியவற்றில் நூலின் பகுதியாகவே இருப்பதைக் காணலாம்.
5.  வாவு: உவா வென்பதன் சிதைவு; விடுமுறை நாட்களின் பெயராக வழங்கும்.
6.  சுங்கம் வாங்கும் உத்தியோகஸ்தர்.
7.  இவ்வூர் திரிசிரபுரத்துக்கு மேற்கே உள்ளது.
8.  ‘ஒண்கமலம்……. ஆகி’: இது பிரமனுக்கும் நெல்லுக்கும் சிலேடை. கமலம் – தாமரையில், நீரில்; அன்னம் – அன்னப்பறவை, சோறு. ‘ உரல் ……… தூங்கி’: திருமாலுக்கும் நெல்லுக்கும் சிலேடை. உரல் அணைந்து – உரலில் யசோதையாற் கட்டப்பட்டு, குற்றப்படுவதற்கு உரலை அடைந்து; கயம் நீர்த் தூங்கி – ஆழமாகிய கடலில் நித்திரை செய்து, ஆழமாகிய நீரில் தங்கி. ‘தகும் …….. விதத்தால்’: சிவபிரானுக்கும் நெல்லுக்கும் சிலேடை. ஏறு ஊர்ந்து – இடபவாகனத்தில் ஏறியருளி, மூட்டையாகக் கொண்டு போகப்படும் பொழுது எருத்தில் ஏறி. (கடாவிடும் பொழுது ஏற்றால் ஊரப்பெற்று என்பதும் பொருந்தும்); கதிரில் – சூரியனிடத்தே, தானியக் கொத்தில். மூவர் – பிரமன் முதலிய மூவர். சொல் – சொல்லென்னுமேவல், நெல்.
9.  இச்செய்தியையும் செய்யுளையும் சொன்னவர் இவர் மாணாக்கராகிய ஸ்ரீ சி. தியாகராச செட்டியாரவர்கள்.

$$$

Leave a comment