சிவகளிப் பேரலை – 41

-பத்மன்

(ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய ‘சிவானந்த லஹரீ’யின்

தமிழ் வடிவமும் விளக்கமும்)

*

41. இறைவன் திருப்பணிக்கே இந்திரியங்கள்

.

பாபோத்பாத விமோசனாய ருசிரைச்’வர்யாய ம்ருத்யுஞ்ஜய

ஸ்தோத்ர-த்யான நதி-ப்ரக்ஷிண ஸபர்யாலோகனாகர்ணனே/

ஜிஹ்வா-சித்த சி’ரோங்க்ரி ஹஸ்த-நயன ச்’ரோத்ரைரஹம் ப்ரார்த்திதோ

மாமாஜ்ஞாபய தந்நிரூபய முஹுர்மாமேவ மா மேsவச://

.

பாவமொழிய பதமேகிட நாவகமும் சிரமும்

கால்கைகளும் கட்செவியும் கடனாற்ற வேண்டும்மே

அங்ஙனமே நானிருக்க அருள்வீரே உம்பொருட்டே

என்வாக்கும் பிறபுலனும் இருந்திடச் செய்வீரே.  

.  

     ஐம்புலன்களை அடக்குவதன் மூலம் நாம் ஆண்டவனுக்கு மிக அருகில் வருகிறோம்.   அவ்வாறு அடக்குதல் எளிதா? ஐம்புலன்களின் வேட்கையை அழிக்க முடியாது என்றபோதிலும், அதனை அடக்குவதற்கு இறைவன் கொடுத்த ஒழுக்க வழிமுறைகளிலே வழுவாது நிற்க வேண்டும் என்பதை திருக்குறள் உள்ளிட்ட அற நூல்கள் வலியுறுத்துகின்றன. அதுசரி, நினைத்தாலே கடினமாக இருக்கக்கூடிய இந்தச் செயலை நம்மால் கடைப்பிடித்து ஒழுக முடியுமா? முடியும்.  அதற்கு, ‘அவனருளாலே அவன் தாள் வணங்கி’ என அடியெடுத்துக் கொடுக்கிறது திருவாசகம்.

     இந்த நுட்பத்தைத்தான் இந்த ஸ்லோகத்தில் ஸ்ரீ ஆதிசங்கரர் எடுத்துரைக்கிறார். பாவமாகிய துன்ப வாதனை ஒழிந்து, விடுதலை என்னும் இனிய நிலையை எய்திட என்ன செய்ய வேண்டும்? நாவும், உள்ளமும், சிரமும் (அதற்குள்ளிருக்கும் மூளையும்), கால்கள், கைகள், கண்கள், செவிகள் ஆகிய உறுப்புகளும் சிவபெருமான் மீதான பக்தி, தியானம் ஆகிய கடமையை ஆற்ற வேண்டும். அவ்வாறு பக்தனாகிய நான் ஈடுபடுவதற்கு, பரம்பொருளாகிய சிவபெருமானே நீர்தான் அருள வேண்டும். எனது வாக்கும் மற்ற பிற புலன்களும் பரமசிவனே உன் நினைப்பாகவே இருக்கச் செய்து விடய்யா என்று நமக்காக வேண்டுகிறார் ஸ்ரீ ஆதிசங்கரர்.

$$$

Leave a comment