சிவகளிப் பேரலை – 32

-பத்மன்

(ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய ‘சிவானந்த லஹரீ’யின்

தமிழ் வடிவமும் விளக்கமும்)

*

32. நச்சாபரண நாயகன்

.

ஜ்வாலோக்ரஸ் ஸகலாமராதியத: க்ஷ்வேல: கதம் வா த்வயா

த்ருஷ்ட: கிஞ்ச கரே த்ருத: கரதலே கிம் பக்வஜம்பூபலம்/

ஜிஹ்வாயாம் நிஹிதச்’ச ஸித்தகுடிகா வா கண்டதேசே’ ப்ருத:

கிம் தே நீலமணிர் விபூஷண மயம் ச’ம்போ மஹாத்மன் வத//

.

கனன்றதீ வானோரஞ் சியநஞ்சை எப்படித்தான்

கண்டீரோ? கரத்தினிலே வைத்தீரோ? கனியோ?

நாவிலிடக் குளிகையோ? கழுத்திட்ட நகைதானோ?

நல்லோனே மகாத்மாவே என்னிடத்தில் சொல்வாயே!

.

     தீக்கொழுந்தைக் கக்கிக்கொண்டிருந்த, வானோர்களும் அஞ்சி நடுங்கிய தீயை, சிவபெருமானே நீர் எப்படித்தான் கண்களால் கண்டீரோ? தைரியமாக அதை எடுத்து கரத்தினிலும் எப்படி வைத்துக்கொண்டீரோ? அது என்ன நீங்கள் விரும்பி உண்ணும் பழமா? விஷம் அல்லவா! அப்படியே அந்த விஷத்தை உருட்டி வாயினுள் போட்டுக்கொண்டீரே? அது என்ன மருந்துக் குளிகையா? உமது கழுத்தினிலே அந்த நஞ்சு அப்படியே தரிக்கப்பட்டுள்ளதே? அது என்ன உங்களுக்கு நீலமணியாலாகிய நகையா? ஆத்மாக்களின் உறைவிடமாகிய மகாத்மாவே, நல்லோனே எனக்கு அந்த ரகசியத்தைச் சொல்லும் என்று கேட்கிறார் ஸ்ரீ ஆதிசங்கரர்.

     சிவபெருமான் நஞ்சுண்ட தியாக வரலாற்றை சுந்தரமூர்த்தி நாயனார், தனது தேவாரப் பாடல் ஒன்றில் இவ்விதம் புகழ்ந்துரைத்துள்ளார்: “கோல மால்வரை மத்தென நாட்டிக் கோளர வுசுற்றிக் கடைந்தெழுந்த, ஆல நஞ்சுண்டவர் மிக இரிய அமரர்கட் கருள்புரிவது கருதி, நீலம் ஆர்கடல் விடந்தனை உண்டு கண்டத்தே வைத்த பித்த நீசெய்த, சீலங் கண்டு நின்திருவடி அடைந்தேன் செழும் பொழில் திருப்புன்கூர் உளானே”.

$$$

Leave a comment