சிவகளிப் பேரலை- 23

-பத்மன்

(ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய ‘சிவானந்த லஹரீ’யின்

தமிழ் வடிவமும் விளக்கமும்)

*

23. பக்தியே முக்தி

.

கரோமி த்வத்பூஜாம் ஸபதி ஸுகதோ மே வ விபோ

விதித்வம் விஷ்ணுத்வம் திச’ஸி கலு தஸ்யா: லமிதி/

புனச்’ச த்வாம் த்ரஷ்டும் திவி புவி வஹன் பக்ஷிம்ருதா

த்ருஷ்ட்வா தத்கேம் கமிஹ ஸஹே ச’ங்கர விபோ//

.

விழைகின்றேன் நின்பூசை விரைபேறு தரவேணும்

விருமனோ நாரணனோ தரும்பலன் அதுவென்னில்

பறவையாய் பன்றியாய் மீட்டுழல மாட்டேனோ?

படுதுன்பம் பொறுப்பேனோ? பரமனே இறையே.

.

     ஒரு முறை விஷ்ணுவுக்கும், பிரம்மனுக்கும் தம்முள் யார் பெரியவர் என்ற போட்டி எழுந்தபோது, அடிமுடி காண இயலாத அருட்பெருஞ் சோதி லிங்கம் அவர்கள் முன்னே தோன்றியது. மகாவிஷ்ணு பன்றி ரூபம் எடுத்து பூமியைத் துளைத்துக்கொண்டு அந்தச் சோதி லிங்கத்தின் அடியைக் காணவும், பிரம்மன் அன்னப் பறவை வடிவெடுத்து ஆகாய மார்க்கமாய் சோதி லிங்கத்தின் முடியைக் காணவும் முயன்று தோற்றுப் போனார்கள்.  கல்விக் கடவுள் சரஸ்வதியின் நாதன் பிரும்மா, செல்வக் கடவுள் திருமகளின் நாயகன் விஷ்ணு. கல்விச் செருக்கால் தலை ஆகாயத்தில் மிதக்கும். செல்வச் செருக்கால் பணம் பாதாளம் வரை பாயும். ஆயினும் செல்வச் செருக்காலோ, கல்விச் செருக்காலோ பரம்பொருளைப் பார்த்தறிய இயலாது, எளிமையான பக்தியே அதனைச் சாதிக்கும் என்பதே இப் புராணக் கதையின் மையக்கருத்து.

     சரி, இந்த பக்தி மூலம் ஆண்டவனிடம் எதனை நாடுவது? பிரம்மனைப் போன்ற, நாராயணனைப் போன்ற உயர் தேவப் பதவியா வேண்டும்? அவ்வாறு உயர் பதவி கிடைத்தாலும், பரம்பொருளை முழுமையாகக் காண இயலாமல் பன்றியாகவோ, பறவையாகவோ மாறி உழல்கின்ற நிலையும் ஏற்பட்டு விடுமே? யுகங்கள்தோறும் இவ்வாறு பிரம்மனும், நாராயணனும் மீண்டும் மீண்டும் அலைகிறார்களே? இந்தத் துன்பத்தை என்னால் பொறுத்துக் கொள்ள முடியாதே? வேறு என்னதான் வேண்டும்? பரமனே, இறைவனே, என்னை உன்னோடு ஐக்கியப்படுத்திவிடு. அதுதானே நான் வேண்டுவது என்கிறார் ஸ்ரீ ஆதிசங்கரர்.

$$$

Leave a comment