-பத்மன்

(ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய ‘சிவானந்த லஹரீ’யின்
தமிழ் வடிவமும் விளக்கமும்)
*
20. மனத்தைக் கட்டும் மார்க்கம்
.
ஸதா மோஹாடவ்யாம் சரதி யுவதீனாம் குச-கிரௌ
நடத்யாஸா சா’காஸ்வடதி ஜடிதி ஸ்வைரமபித:/
கபாலின் பிக்ஷோ மே ஹ்ருதயகபி மத்யந்த சபலம்
த்ருடம் பக்த்யா பத்த்வா சிவ பவததீனம் குரு விபோ//
.
மோகவனம் ஓடியே மாதர்மடு நாடியே
ஆசைக்கிளை ஆடியே அலைகிறதென் மனமே
அங்கிங்கே அலைபாயும் அடங்காவென் மனக்குரங்கை
அன்பென்னும் கயிற்றாலே கட்டுவீர் கபாலியே.
.
“மனம் ஒரு குரங்கு” என்பது உண்மைதான். காட்டுக்குள்ளே குரங்கு தாவிக் குதிப்பதைப்போல, மதி மயக்கத்தை ஏற்படுத்தும் மோகமாகிய வனத்துக்குள்ளே மனம் அங்குமிங்கும் ஓடுகிறது. மலைகளில் குரங்கு கூத்தாடுவதைப்போல, இந்த மனமும் பெண்களின் களியாட்டமாகிய மலைகளை நாடுகிறது. மரங்களில் உள்ள கிளைகள் மீது குரங்கு மாறி மாறிக் குதித்துக் கும்மாளமிடுவதைப்போல், இந்த மனக் குரங்கும் பல்வேறு ஆசைகளாகிய கிளைகளில் மாறி மாறி ஏறி நின்று குதிக்கிறது.
ஆனால், குரங்கை வைத்து வித்தை காட்டிப் பிச்சையெடுப்பவனிடம், குரங்கின் ஜம்பம் பலிக்கிறதா? அவன், அங்குமிங்கும் அலைபாயும் இந்தக் குரங்கை, ஒரு கயிற்றில் கட்டிவைத்து, அவனது விருப்பம்போல ஆட்டிவைக்கிறான். இதுபோல, இந்த மனக்குரங்கையும் கட்டிவைக்க மார்க்கம் இருக்கிறதா? இருக்கிறதே. நாம் பல்வேறு வரங்களைக் கேட்டுக்கொண்டு சிவ பரம்பொருளிடம் பிச்சை கேட்கச் சென்றால், அவரே கையில் கபாலத் திருவோட்டை ஏந்திக்கொண்டு, எனக்கென்ன பிச்சையிடப் போகிறாய்? என்று நமட்டுச் சிரிப்புடன் நம் முன்னே நிற்கிறார். பேசாமல், நமது மனக்குரங்கை அவருக்குப் பிச்சையாக இட்டுவிட வேண்டியதுதான். சிவபக்தி என்னும் கயிற்றால் இந்த மனக்குரங்கைக் கட்டி, அவர் கையிலேயே கொடுத்துவிட்டால், பிறகு இந்த மனக் குரங்கு எப்படிக் கூத்தாடும்? கூத்தனிடம் அதன் கூத்து எடுபடுமா என்ன?
$$$