-மகாகவி பாரதி

“விட்டு விடுதலையாகி நிற்பாய்- அந்த சிட்டுக்குருவியைப் போலே’’ என்று பாடிய மகாகவி பாரதியின் மனம் முழுவதும் ஏதவதொரு வகையில் விடுதலையுணர்ச்சி பொங்கிப் பிரவஹித்துக் கொண்டே இருந்தது. அவரது பக்திப் பாடல்களிலும் இங்கே அந்த விடுதலைப் பேருணர்வை தரிசிக்கலாம்…
பக்திப் பாடல்கள்
66. விடுதலை வெண்பா
சக்தி பதமே சரணென்று நாம்புகுந்து
பக்தியினாற் பாடிப் பலகாலும் – முக்திநிலை
காண்போம், அதனாற் கவலைப் பிணிதீர்ந்து
பூண்போம் அமரப் பொறி. 1
பொறிசிந்தும் வெங்கனல்போற் பொய்தீர்ந்து தெய்வ
வெறிகொண்டால் ஆங்கதுவே வீடாம் – நெறிகொண்ட
வையமெலாந் தெய்வ வலியன்றி வேறில்லை
ஐயமெலாந் தீர்ந்த தறிவு. 2
அறிவிலே தோன்றில் அவனியிலே தோன்றும்,
வறிஞராய்ப் பூமியிலே வாழ்வீர்! – குறிகண்டு
செல்வமெலாம் பெற்றுச் சிறப்புறவே சக்திதரும்
வெல்வயிரச் சீர்மிகுந்த வேல். 3
வேலைப் பணிந்தால் விடுதலையாம்! வேல்முருகன்
காலைப் பணிந்தால் கவலைபோம் – மேலறிவு
தன்னாலே தான்பெற்று சக்திசக்தி சக்தியென்று
சொன்னால் அதுவே சுகம். 4
சுகத்தினைநான் வேண்டித் தொழுதேன்; எப்போதும்
அகத்தினிலே துன்புற் றழுதேன் – யுகத்தினிலோர்
மாறுதலைக் காட்டி வலிமை நெறிகாட்டி
ஆறுதலைத் தந்தாள் அவள்.
$$$
67. ஜயம் உண்டு
ராகம் – காமாஸ்; தாளம் – ஆதி
அனுபல்லவி
ஜயமுண்டு பயமில்லை மனமே ! – இந்த
ஜன்மத்திலே விடுதலையுண்டு நிலையுண்டு (ஜய)
அனுபல்லவி
பயனுண்டு பக்தியினாலே – நெஞ்சிற்
பதிவுற்ற குலசக்தி சரணுண்டு பகையில்லை. (ஜய)
சரணங்கள்
புயமுண்டு குன்றத்தைப் போலே – சக்தி
பொற்பாத முண்டு அதன் மேலே;
நியம மெல்லாம்சக்தி நினைவன்றிப் பிறிதில்லை;
நெறியுண்டு, குறியுண்டு; வெறியுண்டு. (ஜய) 1
மதியுண்டு செல்வங்கள் சேர்க்கும் – தெய்வ
வலியுண்டு தீமையைப் பேர்க்கும்;
விதியுண்டு தொழிலுக்கு விளைவுண்டு; குறைவில்லை
விசனப்பொய்க் கடலுக்குக் குமரன்கைக் கணையுண்டு. (ஜய) 2
அலைபட்ட கடலுக்கு மேலே – சக்தி
அருளென்னுந் தோணியி னாலே,
தொலையொட்டிக் கரையுற்றுத் துயரற்று விடுபட்டுத்
துணிவுற்ற குலசக்தி சரணத்தில் முடிதொட்டு. (ஜய) 3
$$$
One thought on “இரு விடுதலைப் பாடல்கள்”