-அரவிந்தன் நீலகண்டன்

பாரதத்தின் ஞானமரபின் ஊற்றுக்கண்களாக விளங்குபவை எவை?
பாரதத்தின் ஞான உச்சங்களாக கருதப்படுபவை உபநிடதங்களே. அவற்றின் மகா வாக்கியங்களே பாரதப் பண்பாட்டின் முக்கிய அடித்தள மதிப்பீடுகளாக அமைந்தன. அவை நம்பிக்கை சார்ந்த வெளிப்பாடுகள் அல்ல; வழிவழியாக வந்த ஞானத்தேடல்களின் உச்சங்கள். அனுபவங்கள் சார்ந்த தரிசனங்கள். எனவே நம்பிக்கையைக் கோராமல் அவை சிரத்தையுடனான ஞானத்தேடலையே மானுடத்தின் கடமையாக முன்வைத்தன. மானுடத்தின் சமத்துவத்தை மட்டுமல்லாது, சகல சிருஷ்டியின் ஒற்றுமையை அவை வலியுறுத்தின. அத்துடன் இந்த ஆன்மநேய ஒற்றுமையையும் சமத்துவத்தையும் தன் சுயத்தில் உணர்வதையே மானுட சமுதாயத்தின் மிகப் பெரிய அறமாக பாரதம் தலைமுறைகள் தோறும் முன்வைத்து வருகிறது.
ஆனால் மானுட வரலாற்றிலோ ஏற்றதாழ்வுகளும் சாதி உணர்வும் அதிகார அந்தஸ்து பேதங்களும் இந்த ஆன்மநேய சமத்துவத்தை தனிமனிதன் உணராதவாறு செய்கிறது. ஒவ்வொரு சமுதாயத்திலும் ஒவ்வொரு காலகட்டத்திலும் இந்த ஏற்றத் தாழ்வு இருந்திருக்கிறது. அதனுடன் அந்த ஏற்றத் தாழ்வை மீறியும் எதிர்த்தும், அனைத்து மக்களும் பரமாத்மாவின் பகுதியே எனும் அத்வைத சமத்துவ குரலும் தொடர்ந்து ஒலித்த படியே இருந்துள்ளது.
அத்வைதத்தின் ஆன்மநேய சமத்துவ ஒளிக்கு சத்தியகாமனும் ரைக்வரும் வேதகால எடுத்துக்காட்டுக்கள். சமுதாயம் ஒதுக்கிய தொழுநோயுற்ற பெண்கள் வேதத்தில் மந்திர த்ருஷ்டாக்களாக போற்றப்படுகின்றனர்.
வரலாற்றுக் காலங்களில் அந்த சமத்துவ ஞானக்குரல் புத்தர் மூலமாக ஒலித்தது. சங்கரர் ‘மனீஷா பஞ்சகம்’ மூலம் காசியில் அதே வேதாந்த மானுட நேயத்தை பிரகடனம் செய்தார். ராமானுஜர் வைணவத்தை அனைத்து மக்களையும் அணைக்கும் ஆன்மிக மக்கள் இயக்கமாகக் கண்டார். ராகவேந்திரர் தாழ்த்தப்பட்டவர் கொண்டு வந்ததால் எள்ளை சுவாமியின் நைவேத்யத்திலேயே சேர்த்தார்.
இந்த பாரத ஞான மரபின் தொடர்ச்சியை நாம் ராமகிருஷ்ண- விவேகானந்த மரபில் பரிபூரணமாகக் காணலாம். ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் சாதியுணர்வை முழுமையாக தாண்டிய நிலையில் தனது தலையால் தாழ்த்தப்பட்டவரின் கழிவறையை சுத்தம் செய்தார். விவேகானந்தர் தாழ்த்தப்பட்டவரிடம் புகையிலையைக் கேட்டு வாங்கினார். சிறு வயதிலேயே விவேகானந்தர் சாதிவாரியாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஹூக்காக்களை சாதி வித்தியாசமில்லாமல் பயன்படுத்தி மனிதர்கள்- மனிதர்களிடையே ஏற்படுத்திய கட்டுப்பாடுகளை உடைத்தார்.
பாரத சரித்திரத்தில் மற்றொரு மாபெரும் ஆளுமையாக திகழ்பவர் நவீன பாரதத்தின் போதிசத்வரும் அரசியல் நிர்ணய சட்டத்தின் முதன்மைச் சிற்பியுமான பாபா சாகேப் அம்பேத்கர் ஆவார். சாதிக் கொடுமைகளை தாமே அனுபவித்து, வாழ்க்கையில் போராடி முன்னுக்கு வந்தவர் பாபா சாகேப். அவரது குடும்பம் ராமானந்த- கபீர் பக்தி மார்க்கத்தில் வந்ததாகும். டாக்டர் அம்பேத்கார் திறந்த மனமும் சிறந்த சிந்தனைத் திறனும் கொண்டவராக இருந்தார்.
அவரது ஒவ்வொரு போராட்டத்தையும் அவர் முழுக்க முழுக்க அஹிம்சை முறையிலேயே நடத்தினார். காலாராம் எனும் ராமர் கோவில் நுழைவு போராட்டத்தில் மேல்சாதியினரால் கடுமையாகத்தாக்கப்பட்ட போதும் அம்பேத்கர் தமது மக்களை அமைதி காக்கச் சொன்னார். இறுதியில் ஆச்சாரவாதிகளிடம் மிக மோசமாக ஹிந்து தர்மம் சிக்கியிருப்பதை உணர்ந்த அம்பேத்கர் தமது மக்களை பௌத்தராக மாறும்படி கூறினார். ஆனால் அவர் இயற்றிய அரசியல் சட்டத்தில் அவர் பௌத்தர்களை ஹிந்து தர்மத்தின் ஒரு பிரிவாகவே அங்கீகரித்திருந்தார்.
இக்கட்டுரையில் சாதியம், தேசியம் ஆகியவை குறித்த பார்வையில், அண்ணல் அம்பேத்கருக்கும் சுவாமி விவேகானந்தருக்கும் இருக்கும் வியக்கத்தகு ஒற்றுமைகள் சிலவற்றைக் காணலாம்.
பாரத தேசிய ஒற்றுமையின் இயற்கை:
பாரதத்தின் ஒருமைப்பாட்டின் அடிப்படைத்தன்மையின் இயற்கை என்ன? சுவாமி விவேகானந்தர் பாரதத்தின் ஒருமைப்பாடு குறித்து பின்வருமாறு கூறுகிறார்:
‘பாரத தேசிய ஒருமை என்பது அதன் சிதறி கிடக்கும் ஆன்மிக சக்திகளை ஒருங்கிணைப்பதே ஆகும். தம் இருதயத் துடிப்பினை பாரதத்தின் ஆன்மிக இசையுடன் லயப்படுத்திக் கொள்வதே பாரதத்தின் தேசிய ஒருமைப்பாடாகும்.’ *1
டாக்டர் அம்பேத்கரும் தேசிய ஒருமைப்பாடு அமைவதென்பது அரசதிகாரம், பூகோள அமைப்பு போன்ற காரணிகளால் மட்டுமே அமையப்பட முடிந்த ஒன்றா எனும் கேள்விக்கு பின்வருமாறு பதிலுரைக்கிறார்:
‘புவியமைப்பு ரீதியிலான ஒற்றுமை என்பது இயற்கையால் உருவாக்கப்பட்ட ஒன்று. ஒரு தேசியம் உருவாக்கப்படுகையில் பல சமயங்களில் இயற்கையின் உருவாக்கம் மனிதரால் மறுதலிக்கப்படுகிறது. புற காரணிகளால் ஏற்படுத்தப்படும் ஒற்றுமை குறுகிய ஒன்று. அது ஒருமைப்பாடே அல்ல. அரசதிகார அமைப்பினால் தேசிய ஒருமை உருவாக்கப்படலாமென்றால் அதுவும் மேலோட்டமான ஒன்றே. என்றென்றும் மாறாத தேசிய ஒருமைப்பாடு என்பது ஆன்மிக ஒருமைப்பாடே.’ *2
சமுதாய பிரச்னைகளுக்கு இன ரீதியிலான கண்ணோட்டம் அபத்தமானது:
ஆனால் இன்றைய அறிவுஜீவி என தங்களைக் கருதிக்கொள்பவர்கள் இவ்வாறு கேட்கலாம்: “இந்தியர்கள் என்பவர்கள் உண்மையில் ஆரியரென்றும் திராவிடரென்றும் இரு வேறு இனத்தவர்கள் அல்லவா? அவர்கள் எப்படி ஒரே இனத்தவர்கள் ஆக முடியும்? ஆரியர்கள் திராவிடர்கள் மீது திணித்த இனவெறிக் கொள்கையான வர்ணாசிரம அமைப்பின் அடிப்படையில்தானே இன்றைய சாதிய வக்கிரங்கள் உருவாகியுள்ளன? ‘இந்தியா ‘ என்பதே ஒரு ஆரிய மேலாதிக்க மேல்சாதி கட்டமைப்பல்லவா? பல தேசிய இனங்களின் தொகுப்பு தானே இந்தியா?”
இத்தகைய கருத்துகளை அறிந்தோ அறியாமலோ பரப்புகிற பலர், டாக்டர் அம்பேத்கரின் பெயரையும் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் டாக்டர் அம்பேத்கர் பாரதத்தின் சமுதாய அவலங்களுக்கு இனரீதியிலான வெறுப்பு வியாக்கியானங்களை எவ்வாறு எதிர்கொண்டார் ?
இவ்விஷயங்களில் அதிசயப்படத்தக்க வகையில் அவரது கண்ணோட்டம் சுவாமி விவேகானந்தரை ஒத்திருந்தது.
ஆரிய இனவாதம் குறித்து விவேகானந்தர் கடுமையான ஏளனத்துடன் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:
”நமது ஐரோப்பிய ஆய்வாளரின் கனவில் இந்தியா முழுக்க முழுக்க அடர்ந்த கருமை விழிகளுடனான பூர்விகவாசிகளால் நிரம்பப்பட்டிருக்கிறது. பின்னர் வெண்ணிற ஆரியர்கள் வருகின்றனர். எங்கிருந்து என்பது கடவுளுக்குதான் வெளிச்சம். சிலர் அவர்கள் மத்திய திபெத்திலிருந்து வந்ததாகக் கருதுகின்றனர். தேசப்பற்றுடைய ஆங்கிலேயர்கள், ஆரியர்கள் சிவப்பு தலைமுடி கொண்டதாகக் கருதுகின்றனர். நமது ஐரோப்பிய ஆய்வாளரின் முடி கருமையானதாக இருந்தால் ஆரியர்களின் முடி நிறமும் கருப்பாகி விடும். சமீபகாலமாக சுவிஸ் தேச ஏரி ஓரங்கள் ஆரிய இனத்தின் தாயகமென அறிவிக்கப்படுகிறது. அவர்கள் அந்த ஏரியிலேயே இந்த ஆராய்ச்சி வினோதங்களுடன் மூழ்கிவிட்டாலும் பாதகமில்லை எனக் கருதுகிறேன். ஆண்டவர், ஆரியர்களையும் அவர்களது பிறப்பிடங்களையும் ஆசிர்வதிப்பாராக.ஆனால் இந்த ‘ஆராய்ச்சி’களைப் பொறுத்த மட்டில் ஒரு உண்மை என்னவென்றால், நம் வேத புராணங்களில் ஒரு வார்த்தை, ஒன்று கூட, ஆரியர்கள் இத்தேசத்திற்கு வெளியே இருந்து வந்தார்கள் என்று கூற சான்றாக இல்லை…அதைப் போல சூத்திரர்கள் ஆரியர்களல்ல என்பதும் (ஆரிய இனவாதம் போன்றே) பகுத்தறிவற்ற மடத்தனம். பாரதியர் அனைவருமே ஆரியர், ஆரியரன்றி வேறல்ல.” *3
டாக்டர் அம்பேத்கர் மிகுந்த தடைகளுக்கு எதிராக, வேதங்களை தாமே கற்றறிந்தவர். அவருக்கு மாக்ஸ்முல்லர் போன்றவர்கள் செய்த தவறான இனரீதியான வியாக்கியானங்கள் பெரும் ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் தந்தன. அனாஸா என்பதை மாக்ஸ்முல்லர் அ-நாஸா என பதம் பிரிப்பதை அம்பேத்கர் கடுமையாக எதிர்த்தார். சாயனரின் பதப்பிரிப்பே சரியானது என அவர் கருதினார். டாக்டர் அம்பேத்கர் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:
‘ஆரிய படையெடுப்பு ஒரு புனை கதை. இக்கோட்பாடு சிலரை மனமகிழ்விக்க உருவாக்கப்பட்ட நம்பிக்கைகள். அந்நம்பிக்கைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட சித்தாந்தங்கள் ஆகியவற்றின் மூலம் கட்டப்பட்டது. அறிவியல் ஆய்வின் வக்கிரத்தின் விளைவே அது. உண்மைகளின் அடிப்படையில் பரிணமித்ததல்ல இக்கோட்பாடு. மாறாக கோட்பாட்டின் அடிப்படையில் அதனை நிரூபிக்க பொறுக்கியெடுக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது இது. ஒவ்வொரு புள்ளியிலும் தகர்ந்து விழும் கோட்பாடு இது.’
‘(வேத இலக்கியத்தில் ஆரிய இனம் குறித்து சான்று உள்ளதா என்பது குறித்து) என் முடிவுகள் பின்வருமாறு:
1. வேதங்கள் ஆரியர் எனும் ஓர் இனத்தை அறியவில்லை.
2. ஆரிய இனம் என்ற ஒன்று படையெடுத்ததற்கோ அது இங்கிருந்த தஸ்யுக்கள் எனும் பூர்விக குடிகளை அடிமைப்படுத்தியதற்கோ எவ்வித சான்றுகளும் வேதத்தில் இல்லை.
3. ஆரிய/ தஸ்யு வித்தியாசங்கள் இன ரீதியிலானவை என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை.
4.வேதங்கள் ஆரியரும் தஸ்யுகளும் வெவ்வேறு தோல் நிறம் கொண்டவர்கள் எனக் கருத இடம் தரவில்லை. பிராமணர்கள் ஆரியரெனில் தலித்துகளும் ஆரியரே. பிராமணர்கள் திராவிடர்களெனில் தலித்துகளும் அவ்வாறே.’ *4
நாம் வாழ வேண்டுமென்றால்:
ஹிந்து சமுதாயம் வாழ வேண்டுமெனில் அது தன் சமுதாயத்தின் உயிர்சக்தியை அரித்துக் கொண்டிருக்கும் அனைத்து மூடப் பழக்க வழக்கங்களையும் களைய வேண்டியதன் அவசியத்தை சுவாமி விவேகானந்தரும் டாக்டர் அம்பேத்கரும் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வந்துள்ளனர்.
சுவாமி விவேகானந்தர் கூறினார்:
‘எத்தகைய ஒரு கீழ்த்தர வாழ்க்கையை நாம் வாழ்கிறோம். ஒரு பாங்கி (தலித்) ஒரு நம்மிடம் வருகையில் ஏதோ பிளேக் நோய் கண்டது போல அவரை ஒதுக்குகிறோம். ஆனால் ஒரு பாதிரி சில கோப்பை தண்ணீரை அவர் தலையில் விட்டுவிட்டால் ஒரு கோட்டும் போட வைத்துவிட்டால், நமது வைதீகர் அவரை தன் உள்ளறைக்கே அழைத்துச் சென்றுவிடுவார்…நம் மதமே ‘என்னைத் தொடாதே ‘ என்பதில்தான் உள்ளது…. இந்த திருக்கூத்துகள் மேலும் தொடர்ந்தால் நாம் அழிந்து படுவோம்.’ *5
இதே கருத்தை பாபா சாகேப் அம்பேத்கரும் கூறியுள்ளார். மகாத்மா காந்தி தன் ‘ஹரிஜன் ‘ பத்திரிகையின் தொடக்க மலருக்கு செய்தி அனுப்ப பாபாசாகேப் அம்பேத்கரிடம் கேட்டுக்கொண்ட போது, அம்பேத்கர் பின்வரும் செய்தியினை கொடுத்தார்:
‘சாதியத்தின் விளைவே தீண்டத்தகாதோர் எனும் பிரிவு. இனி வரும் கடுமையான காலகட்டத்தில் ஹிந்து சமுதாயம் உயிர்வாழ, இக்கொடுமை ஹிந்து தர்மத்திலிருந்து முழுமையாக அகற்றப்பட வேண்டும்.’ *6
சமுதாய ஒருமை ஏற்பட சமஸ்கிருதம் தேசிய மொழியாவதன் அவசியம்:
சமஸ்கிருத மொழியை விவேகானந்தர் தேசம் முழுமைக்கும் சொந்தமான பாரம்பரிய பொக்கிஷமாக மட்டும் கருதவில்லை. அதற்கும் மேலாக அது அனைத்து வகுப்பினராலும் கற்கப்படுவதன் மூலம் சமுதாய வேறுபாடுகள் சாதியக் கொடுமைகள் அகற்றப்பட முடியும் என்பதில் தெளிவாக இருந்தார். சாதியத்தை ஒழிக்க பின்வரும் திட்டத்தை சுவாமி முன் வைக்கிறார்:
‘நம் பாரதத்தின் மிக உயர்ந்த ஆன்மிகக் கருத்துகள் மடங்களிலும் சம்ஸ்கிருத மொழியிலும் அடைபட்டு உள்ளன. நம் மக்கள் வெள்ளத்திற்கு அவை அடையப்பட முடியாமல் உள்ளன. எனவே முதலில் அவை மக்களை வந்தடையச் செய்ய வேண்டும். சமஸ்கிருதம் அனைத்து மக்களுக்கும் கற்றுக் கொடுக்கப்பட வேண்டும்….எனவே நம் பாரத சமுதாயம் உயர்வடைய நம் ஆன்மிக பாரம்பரியம் தாய்மொழிகளில் மக்களை சென்றடைவதும் அனைத்து மக்களும் சமஸ்கிருதம் பயில்வதும் அவசியமாகும்.’ *7
தி சண்டே ஹிந்துஸ்தான் ஸ்டாண்டர்ட் எனும் பத்திரிகைக்கு செப்டம்பர் 11, 1949 அன்று அளித்த பேட்டியில் பாபா சாகேப் அம்பேத்கர் பின்வருமாறு கூறினார்:
‘சட்ட அமைச்சர் எனும் முறையில் அதிகாரப்பூர்வமாக பாரத தேசத்தின் ஆட்சி மொழியாக சமஸ்கிருதம் இருக்க வேண்டும் என நான் பாராளுமன்றத்தில் வலியுறுத்தினேன்’.
இதனைத் தொடர்ந்து அகில இந்திய ஷெட்யூல்ட் வகுப்பினர் பெடரேஷனிலும் டாக்டர் அம்பேத்கர் இதே கருத்தை வலியுறுத்தினார். அப்போது சில உறுப்பினர்கள் எதிர்த்தனர். இது டாக்டர் அம்பேத்கருக்கு மிகவும் மன வருத்தத்தை ஏற்படுத்தியது. பத்திரிகையாளர் கூட்டத்தில் மீண்டும் டாக்டர் அம்பேத்கர் ‘பாரதத்தின் ஆட்சிமொழியாக தகுந்தது. சமஸ்கிருதம் மட்டுமே எனவும் அது சமுதாய ஏற்றத் தாழ்வுகளை அகற்றிட சிறந்த வழி எனவும்’ அவர் கூறினார். *8
நூற்றாண்டுகளாக தாழ்த்தப்பட்ட மக்கள் பட்ட கஷ்டங்களும், அவரே அனுபவித்த துயரமும், அவை இன்றும் தொடரும் அவலமும் அவரது வார்த்தைகளில் கடினத்தை ஏற்றியிருந்தது. அன்று மதத்தின் பெயரில் நிலவிய மானுடமற்ற நடத்தைகளால் முழுமையாக அந்த அமைப்பில் அவர் நம்பிக்கை இழந்த போதும், இந்த மண்ணின் ஆன்மிக ஊற்றிலிருந்தே இத்துயரத்தை துடைக்கும் அமுதம் கிடைக்கும் என்பதில் அவர் தெளிவாக இருந்தார். எனவே தான் அவர் இந்த மண்ணின் மைந்தரான புத்த பகவானின் காருண்ய வழியை தேர்ந்தெடுத்தார்.அதற்கு முன்னால் அவர் குரு கோவிந்த சிங்கின் கால்ஸா பாதையை பாபா சாகேப் தேர்ந்தெடுத்தார்.
சுவாமி விவேகானந்தரையும் மிகவும் ஆகர்ஷித்த ஒரு ஆன்மிக வடிவமாவார் குரு கோவிந்தர்.
“நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு குரு கோவிந்த சிங்காகத் திகழ வேண்டும். நீங்கள் உங்கள் தேசத்தவரிடம் ஆயிரம் குறைகளைக் காணலாம். ஆனால் அவர்கள் நம்மவர் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவர்களே உங்கள் தெய்வங்கள். அவர்கள் உங்களை பழித்தாலும் என்ன இழிசொற்களை வீசினாலும் அவர்களை அன்பு செய்வதே உங்கள் கடமை. அவர்கள் உங்களை துரத்தினால் கூட மெளனத்தில் மரணத்தை எதிர் கொள்ளுங்கள். குரு கோவிந்த சிம்மனை போல வாழுங்கள், மடியுங்கள். அத்தகைய மனிதனே உங்களில் ஹிந்து எனும் பெயருக்கு தகுதியானவன்.”
என்று விவேகானந்தர் முழங்கினார். *9
பகவான் புத்தரிடம் விவேகானந்தரின் மனம் இயல்பாகவே லயித்தது, புத்தமே ஹிந்து சமயத்தின் பரிபூரணம் என கருதினார் ஸ்வாமி விவேகானந்தர்.
‘’புத்த சமயம் பாரதத்தில் இருந்து மறைந்ததால், அதனுடன் எழுந்த காருண்ய சமுதாய சீரமைப்பு அலையும் மறைந்தது…இந்தியாவின் சரிதலுக்கும் அதுவே காரணமாயிற்று.” என அவர் கூறினார். *10
பாரதம் குறித்த அடிப்படையான பார்வையும் பாரதத்தின் மேன்மைக்கான செயல்திட்டம் குறித்தும் சுவாமி விவேகானந்தரும் சரி, அண்ணல் அம்பேத்கரும் சரி, எத்தனை ஒற்றுமையான கருத்துக்களைக் கொண்டிருந்தனர் என்பது மேலே கூறியுள்ளவற்றால் தெரியும்.
இந்த இருதய ஒற்றுமை எப்படி வந்தது? ஜவஹர்லால் நேருவின் அந்தரங்க காரியதரிசி ஒருமுறை அம்பேத்கரைப் பார்த்தபோது இந்த நூற்றாண்டின் சிறந்த இந்தியராக அம்பேத்கர் சுவாமி விவேகானந்தரை கருதியதாக பதிவு செய்கிறார். *11
பிரம்மத்துவம்: விவேகானந்த அம்பேத்கர் சங்கமம்…
பாபா சாகேப் அம்பேத்கர். ஹிந்து சமுதாயத்தை குறித்து மிகக் கடுமையான விமர்சனத்தை முன்வைத்த நூல் ஒன்று உண்டு. அதுதான் ’இந்து மதத்தின் புதிர்கள்’ எனும் பெயரில் அவர் எழுதிய நூல். இது ஒவ்வொரு ஹிந்து எதிர்ப்பாளரும் பயன்படுத்தும் நூலாகும். ஆனால் பாபா சாகேப் அம்பேத்கரின் உண்மையான எண்ணம், ஹிந்து சமுதாயத்தை மேம்படுத்த வேண்டும் என்பதே. ஹிந்து சமுதாய அமைப்புக்கு எதிராக அவர் கடுமையாக ஒரு குற்றச்சாட்டை அதில் அவர் முன்வைக்கிறார்:
ஹிந்து சமூக அமைப்பு ஜனநாயகத் தன்மையற்றிருப்பது விபத்தல்ல; அவ்விதத்திலேயே அது வடிவமைக்கப்பட்டுள்ளது. வர்ணமாகவும், சாதிகளாகவும், சாதிகளுக்கு புறம்பே உள்ளவர்களாகவும் அது உருவாக்கியிருப்பது கோட்பாடுகளல்ல, கட்டளைகள். அவை அனைத்துமே ஜனநாயகத்துக்கு எதிரான தடை அரண்கள்.
அடுத்ததாக அதிலிருந்து அவர் முக்கியமான ஒரு அவதானிப்பைத் தருகிறார்:
இதிலிருந்து சகோதரத்துவம் எனும் கோட்பாடு ஹிந்து சமயத்துக்கும் ஞானமரபுக்கும் தெரியவே தெரியாத ஒன்று எனத் தோன்றலாம். ஆனால் அத்தகைய ஒரு முடிவு, வரலாற்றின் தரவுகளால் ஏற்றுக் கொள்ளப்பட முடிந்ததல்ல. ஹிந்து சமயமும் ஞானமரபும் சகோதரத்துவத்தைக் காட்டிலும் சமூக ஜனநாயகத்துக்கு பெரும் சாத்தியம் அளிக்கக் கூடிய ஒரு கோட்பாட்டை உருவாக்கின – அதுவே பிரம்மத்துவம்.
சாதிகளற்ற ஹிந்து சமுதாயம் எனும் கோட்பாட்டுக்கான கருத்தியல் தேடலில் பாபா சாகேப் அம்பேத்கர் நவ்யான பௌத்தத்தைத் தன் மெய்ஞான கருத்தியலாகத் தேர்ந்தெடுத்தாலும், அதன் வேர்களை அவர் உபநிடதங்களில் கண்டடைந்தார். பிரம்மத்துவம் என்பதன் அடிப்படையை அவர் பின்வருமாறு விளக்குகிறார்:
பிரம்மத்துவத்தின் சாரம் மூன்று வடிவங்களில் சொல்லப்படுகிறது. அவையாவன: (i) சர்வம் கல்விதம் பிரம்மம் – அனைத்தும் பிரம்மம் (ii) அகம் பிரம்மாஸ்மி – ஆத்மனே -சுயமே- பிரம்மம் எனவே நான் பிரம்மம் (iii) தத்வமஸி – ஆத்மனே சுயமே பிரம்மம் எனவே நீயும் பிரம்மம். மகா வாக்கியங்கள் என அறியப்படும் இவையே பிரம்மத்துவத்தினை வரையறை செய்கின்றன.
பின்னர் பிரம்மத்துவக் கோட்பாட்டிலிருந்து பாபா சாகேப் அம்பேத்கர் ஜனநாயகத்தை ஒரு வாழ்க்கை முறையாக வடித்தெடுக்கிறார்:
அனைவரும் இறைவனின் மக்கள் என்பது ஜனநாயகத்துக்கான ஒரு பலவீனமான அடித்தளமாகும். அத்தகைய அடித்தளத்தினால் தான் பல தேசங்களில் ஜனநாயகம் வலிமையற்று உள்ளது. ஆனால் நீங்களும் நானும் ஒரே பிரபஞ்ச தத்துவத்தின் பகுதிகள் என்பதில் ஜனநாயகத்தைத் தவிர வேறெந்த சமூக கோட்பாட்டுக்கும் இடமில்லாது போகிறது. அத்தகைய கோட்பாடு ஜனநாயகத்தை வெறுமனே போதிக்கவில்லை. மாறாக ஒவ்வொருவருக்கும் கட்டாயமான வாழ்வியல் விதியாக்குகிறது. ஜனநாயகம் குறித்து ஆராய்ச்சி செய்யும் மேற்கத்திய ஆராய்ச்சியாளர்கள், ஜனநாயகம், கிறிஸ்தவம் அல்லது பிளேட்டானிய கருத்தியலிலிருந்து உருவானதாகவும், அதற்கு வேறேது ஊற்றுக்கண்ணும் இருந்திருக்க முடியாது என்றும் கருதுகிறார்கள். ஆனால் அவர்களுக்கு பிரம்மத்துவம் எனும் கோட்பாடு குறித்தும், அது ஜனநாயகத்துக்கு (கிறிஸ்தவ, கிரேக்க சிந்தனையைக் காட்டிலும்) சிறந்த அடிப்படையை ஜனநாயகத்துக்கு அளிக்கிறது என்பதும் தெரிந்திருந்தால், அத்தனை பிடிவாதமாக (மேற்கை மட்டுமே உயர்த்திப் பிடித்தபடி) இருந்திருக்க மாட்டார்கள்.
இதற்குப் பிறகு பாபா சாகேப் கூறுவது மிகவும் முக்கியமான ஒரு விஷயமாகும்:
ஒரு பக்கம் நம்மிடம் ஆகச் சிறந்த ஜனநாயகத்தத்துவமான பிரம்மத்துவம் எனும் கோட்பாடு உள்ளது. மறுபுறமோ நம் சமுதாயம் சாதிகள், உபசாதிகள், ஒடுக்கப்பட்ட சாதிகள், ஒடுக்கப்பட்ட பூர்விகக் குடிகள், குற்றப் பரம்பரையினர் எனப் பிரிந்து கிடக்கும் நிலை உள்ளது. இதைவிட மிகப் பெரிய தவிப்பு வேறெதுவாக இருக்க முடியும்? *12
சுவாமி விவேகானந்தரும் இதே வார்த்தைகளில் இந்து தருமத்தின் மகோன்னதத்தையும் இந்து சமுதாயத்தின் வீழ்ச்சியையும் கூறுவதை நாம் காண முடியும்:
இறைவன் உங்களிடம் மறுபடியும் புத்தராக வந்தார். ஏழைகள், துன்பப் படுகிறவர்கள், பாவிகள் ஆகியோரிடம் எப்படி அனுதாபம் காட்டுவது, எப்படி இதயப்பூர்வமாக அன்பு பாராட்டுவது என்று கற்பித்தார். ஆனால் நீங்கள் அவருக்குச் செவி சாய்க்கவில்லை. ஹிந்து சமயத்தைப் போல மிக உயர்ந்த முறையில் மனிதகுலத்தின் மேன்மைச் சிறப்பைப் பற்றி வேறெந்தச் சமயமும் இந்த உலகத்தில் போதிக்கவில்லை. அத்துடன் ஏழை, எளியவர்களின் கழுத்தின் மீது ஏறி மிதிக்கிற சமயமாக இவ்வுலகில் ஹிந்து சமயத்தைப் போல வேறெதுவும் இல்லை. இக்குற்றத்திற்கு சமயம் பொறுப்பு அல்ல; ஹிந்து சமயத்திலுள்ள வெளி வேஷக்காரர்கள், வறட்டு ஆசாரவாதிகள் ஆகியோரே காரணம். அவர்கள், இறை தத்துவம் வேறு, நடைமுறை விவகாரம் வேறு என்பது போன்ற கொள்கைகளின் வடிவத்தில் பலவிதமான கொடுஞ்செயல்கள் புரியும் பொறிகளைக் கண்டுபிடித்தார்கள். *13
உபநிடதங்கள் சமூக விடுதலைக்கான ஆயுதம்:
டாக்டர் அம்பேத்கர் ஹிந்து சமுதாயத்தில் சாதியத்தை ஒட்டுமொத்தமாக அழிப்பது குறித்து ஒரு நூல் எழுதினார். சாதியின் நிர்மூலம் (Annihilation of caste) என்பது அந்த நூலின் பெயர். அந்த நூலில் கடுமையாக சாதியத்தை அவர் சாடியதுடன், எவ்வித இரக்கமும் இன்றி ஹிந்து சமுதாயம் தங்கள் சாஸ்திரங்களை கேள்விக்குள்ளாக்கி சமத்துவம் சகோதரத்துவம் விடுதலை எனும் மதிப்பீடுகளின் அடிப்படையில் தம்மை சமுதாய புனர்நிர்மாணம் செய்ய வேண்டுமென்று கூறினார். அதற்கான நூல்களாக உபநிடதங்கள் அமையும் என அவர் அதில் சொல்லியிருந்தார். இது 1930-களில்.
இதன் தொடர்ச்சியாகத் தான், இருபது ஆண்டுகளுக்கு பிறகு உபநிடத மகா வாக்கியங்களில் தெரியும் பிரம்மத்துவத்தில் ஆகச் சிறந்த சமுதாய ஜனநாயக தத்துவத்துக்கான ஆன்மிக அடிப்படை இருப்பதை அவர் எழுதினார். இதே கருத்தை சுவாமி விவேகானந்தரும் கூறுகிறார்:
உபநிடதங்கள் சக்திக்கு பெரும் சுரங்கமாகும்… எல்லா இனத்தவரிடையேயும் எல்லா மதத்தினரிடையேயும் எல்லா சமயப் பிரிவினரிடையேயும் உள்ள பலவீனர்களான துன்பத்தால் நலிந்த ஒடுக்கப்பட்ட மக்களை இது போர்முரசு கொட்டி அழைத்து உங்களை நம்பி நின்று விடுதலை பெறுங்கள் என்று முழங்கும். விடுதலை உடலுக்கு, விடுதலை மனதுக்கு, விடுதலை ஆன்மாவுக்கு இவையே உபநிடதங்களின் மூல மந்திரமாகும். *14
இந்த வியக்கத்தகு ஒற்றுமை எப்படி இந்த இரு மகான்களின் எண்ணங்களில் ஏற்பட்டது? இதற்கான விடை மிகவும் சுலபமானதாகும்.
சுவாமி விவேகானந்தரும் அண்ணல் அம்பேத்கரும் மானுடத் துன்பத்தைக் கண்டு ரத்தம் சிந்தும் இதயம் உடையவர்களாக இருந்தனர். மானுடத் துன்பத்தைத் துடைக்க பாரத மரபிலிருந்து தீர்வுகளை நாடினர். அதற்காகவே தமது வாழ்க்கைகளை அர்ப்பணித்தனர். தங்கள் சுய விடுதலையைத் துறந்து அதற்காக உழைத்தனர்.
அத்தகைய இரு பேரான்மாக்களின் பார்வைகளின் தேசத்துக்கான நல்வழிப்பார்வை ஒன்றானது அதிசயமல்லவே.
$$$
அடிக்குறிப்பு- பயன்படுத்தப்பட்ட நூல்கள்:
1. லாகூர் பேருரை சுவாமி விவேகானந்தர் உரைகளும் எழுத்துகளும் பாகம்- III
2. டாக்டர் அம்பேத்கர் ‘Thoughts on Pakistan ‘ Part-II Chapter- IV
3. சுவாமி விவேகானந்தர், கொழும்பு முதல் அல்மோரா வரையான பேருரைகள்
4. டாக்டர் அம்பேத்கர், உரைகளும் எழுத்துகளும் பாகம்-VII,
5. சுவாமி விவேகானந்தர், உரைகளும் எழுத்துகளும், பாகம்- VII
6. டாக்டர் அம்பேத்கரின் செய்தி ஹரிஜன், பிப்ரவரி 11, 1933
7. சுவாமி விவேகானந்தர், சென்னை பேருரை (பாகம்-III)
8. டாக்டர் அம்பேத்கரின் சக கட்சித் தோழர் திரு.மவுரியா NCERT க்கு எழுதிய கடிதம்/ தேதி: 14/2/2001 மற்றும் The Sunday Hindustan Standard 11. செப்டம்பர், 1949.
9. சுவாமி விவேகானந்தர், உரைகளும் எழுத்துகளும், பாகம்- III
10. சுவாமி விவேகானந்தர் சிகாகோ பேருரை- 26 செப்டம்பர் 1893
11. http://jeyamohan.in/?p=4715
12. பாபா சாகேப் அம்பேத்கர், ஹிந்து மதத்தின் புதிர்கள்: பின்னிணைப்பு: அரசியல், 1956
13. சுவாமி விவேகானந்தர், எழுமின் விழிமின், உபதேச தொகுப்பு, விவேகானந்த கேந்திரம்,
14. அதே.
$$$