நூல்வெளி

1. அந்தமான் சிறை அனுபவங்கள்

விடுதலைப் போராட்ட வீரர்களுள் பிற எல்லோரையும் விட கொடிய தண்டனைகளையும் கடும் சித்ரவதைகளையும் பெற்றவர் வீர சாவர்க்கர் என்று அழைக்கப்படும் விநாயக தாமோதர சாவர்க்கர் (1883- 1966).

…பூனாவில் சாவர்க்கர் துவங்கியிருந்த அபிநவ பாரத இயக்கம் நடத்திய பல வன்முறை நிகழ்வுகளையும், லண்டனில் நிகழ்ந்த ஆங்கிலேய அதிகாரி கொலையையும் விசாரித்த ஆங்கிலேய அரசின் நீதிமன்றம், சாவர்க்கருக்கு இரட்டை ஆயுள் தண்டனையை (50 ஆண்டுகள்- 1910- 1960) அளித்து, தீவாந்திர (நாடுகடத்தல்) தண்டனையாக அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

…தனது தண்டனைக் காலத்தை, சிறைவாச அனுபவங்களை அவரே பின்னாளில் ’கேசரி’ வார இதழிலும், ’ஷ்ரத்தானந்த்’ என்ற பத்திரிகையிலும் தொடராக எழுதினார். அவை பின்னர் தொகுக்கப்பட்டு 1927இல் எனது அந்தமான் சிறை அனுபவங்கள்’ என்ற நூலாக வெளிவந்தது. இந்த நூலின் பல பகுதிகள் ஆங்கிலேய அரசுக்கு எதிராக இருந்ததால் தடை செய்யப்பட்டது. 1946இல் இந்தத் தடை விலகியது…

அந்த நூல் தற்போது வழக்குரைஞர் எஸ்.ஜி.சூர்யாவால்  தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு அழகிய நூலாக கிழக்குப் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது. நூலின் பல பக்கங்களைப் படிக்கும்போது கண்களில் நீர்திரண்டு படிக்க முடியாமல் செய்து விடுகிறது. எத்தனை வேதனைகள்! எவ்வளவு அவமானங்கள்! கொடுமைகளின் கூடாரமான அந்தமான் சிறையில் சாவர்க்கர் அடைந்த கஷ்டங்களை அவருள் இருக்கும் எழுத்தாளனும் தத்துவ அறிஞரும், கவிஞரும், அற்புதமான மனிதரும் பல கண்ணோட்டங்களில் காண்பதை அவரது எழுத்தே புலப்படுத்துகிறது.


2. அழகிய இந்தியா

பேரறிஞர் தரம்பால் தாம் எழுதிய – அழகிய மரம், அழகிய நதி, அழகிய போராட்டம், அழகிய கிராமம் ஆகிய 4 நூல்களின் சாராம்சத்தை எளிய நடையில் அந்தந்தப் புத்தகங்களுக்கான முன்னுரையாக எழுதி இருக்கிறார். ’அழகிய இந்தியா’ என்ற இந்தப் புத்தகம் அப்படியான முன்னுரைகளின் தொகுப்புதான்.

தரம்பால் தொகுத்த ஆவணங்களை வேறு யாரேனும் ஒருவர் சுருக்கி எழுதுவதைவிட அவர் எழுதிய முன்னுரைகளின் தொகுப்பான இந்த நூல் அதிகாரபூர்வ ஆவணத்துக்கான முழு மதிப்புடனே உருவாகியிருக்கிறது.

அனைத்துத் துறைகளிலும் பிரிட்டிஷார் வருவதற்கு முந்தைய பாரதம் எப்படி உயரிய நிலையில் இருந்தது என்பதை பிரிட்டிஷாரின் ஆவணங்களைக் கொண்டே நிரூபித்த மகத்தான சாதனையின் கையடக்க அறிமுகம் இது.


3. சைவ சமயத்தில் மொழிப்போர்

.

சித்தாந்த பண்டித பூஷணம் ஈசுரமூர்த்தி பிள்ளை (1897 – 1971) அவர்கள், தனது காலத்தில் ஆரிய- திராவிடப் புரட்டுக்கு எதிராகவும், நாத்திக இயக்கங்களின் பொய்ப் பிரசாரங்களுக்கு எதிராகவும் களமாடிய சைவ சித்தாந்தப் பேரறிஞர்.

அவரது ஐம்பதாவது நினைவு ஆண்டில், நண்பர் நெல்லை சொக்கலிங்கம், அவரது படைப்புகளைத் திரட்டித் தொகுத்து அற்புத நூலாக்கி இருக்கிறார். அந்த நூல் குறித்த, எழுத்தாளர் திருநின்றவூர் ரவிகுமாரின் மதிப்புரை இது.


4. மகான்களின் பொன்மொழிகள் 1000 பாகம்1

இந்நூலில் மகான்கள் சொன்ன பொன்மொழிகள் 11  பகுதிகளில் 147 தலைப்புகளில் தொகுக்கப்பட்டிருக்கின்றன. இத்தனை மகான்கள், இத்தனை நூல்களிலிருந்து தொகுக்கப்பட்டிருக்கிறது என்பதைப் பார்க்கும்போதே மலைப்பு ஏற்படுகிறது. 

இதனைத் தொகுத்தவர், மதுரை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி கமலாத்மானந்த மஹராஜ் அவர்கள். சென்னை ராமகிருஷ்ன மடத்தின் நேர்த்தியான வெளியீடு. எழுத்தாளர் திருநின்றவூர் ரவிகுமாரின் நூல் அறிமுகப் பதிவு இது.


5. பத்மாவதி சரித்திரம்

‘நாவல்‘ எனப்படும் புதினம் தமிழ் இலக்கிய உலகிற்கு அறிமுகமாகி நூறாண்டு ஆகிறது; ஆங்கில இலக்கியத்தின் தாக்கத்தால் புதிய உரைநடையில் நெடுங்கதைகளை வடிப்பது தமிழிலும் துவங்கியது. அந்த வகையில் தமிழின் முன்னோடி நாவலாக, அ.மாதவையாவின் பத்மாவதி சரித்திரம் விளங்குகிறது. தமிழ் நாவல்கள் பட்டியலில் மூன்றாவது நாவலான இந்நூல், தரத்தில் நூறாண்டு கடந்தும் முதன்மை வகிப்பது, மாதவையாவின் சமகால நோக்கிற்கு உதாரணம். தமிழ் இலக்கிய உலகில் பெரும் மாற்றங்களுக்கு வித்திட்ட அ.மாதவையாவின் முதல் நாவலான பத்மாவதி சரித்திரம், மூன்று காலகட்டங்களில் மூன்று பாகங்களாக எழுதப்பட்டது. இதில் முதல் இரு பாகங்களே பெரும்பாலான பதிப்பாளர்களால் வெளியிடப்பட்டுள்ளன. காவ்யா பதிப்பகம், இதுவரை வெளியாகாமல் இருந்த, முற்றுப்பெறாத மூன்றாவது பாகத்தையும் இணைத்து செம்மையான பதிப்பாக வெளியிட்டுள்ளது. மாதவையாவின் சமுதாய நோக்கு, இலக்கிய பரிச்சயம், சீர்திருத்தச் சிந்தனை, மெல்லிய நகைச்சுவை உணர்வு ஆகியவை நாவல் முழுவதும் விரவிக் கிடப்பதைக் காண முடிகிறது. பழமையின் பிடியில் சமுதாயம் தத்தளித்த காலத்தில், விமர்சனங்களைப் பொருட்படுத்தாமல், பெண்ணுரிமைகளை வலியுறுத்தி துணிவுடன் நாவல் எழுதிய அ.மாதவையா இன்றைய எழுத்தாளர்களுக்கு ஆதர்சமாக விளங்குகிறார்…


6. நெருக்கடி நிலையை எதிர்த்துப் போராட்டம்

அரசே அராஜகத்தில் ஈடுபடும்போது பெரும்பாலோர் ஊமையாகி விடுகின்றனர். ஆனால், விதிவிலக்குகளாக அமைந்த தளகர்த்தர்கள் ஆட்சிக்கு எதிராக சத்தியாகிரகம் நடத்தியதுடன், தேசிய அளவிலும் உலக அளவிலும் நெருக்கடி நிலைக்கு எதிரான கருத்தை உருவாக்குவதில் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டனர். அவர்களில் ஒருவரான, இந்து முன்னணியின் நிறுவனர், அமரர் இராம.கோபாலன், மிகுந்த பொறுப்புணர்வுடனும்,  அனுபவ அறிவுடனும் தொகுத்து வழங்கியுள்ள நூல் இது….


7. தீராத விளையாட்டு விட்டலன்

பாரதம் அருளாளர்களின் ஜென்மபூமி. இமயம் முதல் குமரி வரை எங்கு சென்றாலும், ஏதாவது ஒரு அருளாளரின் புனிதத்தலத்தை தரிசிக்க முடியும். இந்த அருளாளர்கள் அனைத்து வகுப்பினரிலும் அவதரித்திருப்பதையும் காண முடியும்; சமுதாயத்தை ஒருங்கிணைக்க இறைவனே நடத்திய திருவிளையாடல்களின் பல கதைகளை நாம் கேட்க முடியும். அதற்கு மிகச் சிறந்த உதாரணம் மராட்டிய மண்ணில் உதித்து பக்திப்பயிர் வளர்த்த பக்தப் பரம்பரை தான். மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பண்டரிபுரம் தான் இந்த மகாபக்தர்களை உலகிற்கு அடையாளம் காட்டியது. 

பண்டரிபுரத்தில் விட்டலனை எழுந்தருளச் செய்த புண்டலீகன் கதை முதல், பூனைக்குட்டிக்காக குலத்தொழிலை தியாகம் செய்த ராகாகும்பர் வரை, அருண் சரண்யாவின் ‘தீராத விளையாட்டு விட்டலன்’ நூலின் ஒவ்வொரு பக்கமும் பக்திப் பிரவாகமாகப் பெருக்கெடுத்தோடுகிறது. இத்தகைய மகான்கள் பிறந்த மகத்தான பூமியிலா நாம் வாழ்கிறோம்? பல இடங்களில், படிக்கப் படிக்க நெஞ்சு விம்முகிறது.


8. வால்காவிலிருந்து கங்கை வரை

பன்மொழிப் புலவரும், புத்தத் துறவியும், ஹிந்தி பயண இலக்கியத்தின் தந்தையுமான ராகுல சாங்கிருத்தியாயன், மார்க்சியத் தத்துவம் இந்திய இலக்கியங்களில் ஆதிக்கம் செலுத்தக் காரணமான முன்னோடிகளுள் ஒருவர். இவர் சிறையிலிருந்தபடி எழுதிய  ‘வால்காவிலிருந்து கங்கை வரை’ புதினம் 1944ல் வெளியானது. அப்போதே பலத்த எதிர்ப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்திய இந்நாவல், இதன் உள்ளடக்கத்தாலும், இடதுசாரிப் பார்வையாலும் பிரபலம் அடைந்தது.

எனினும், அடிப்படையில் இப்புதினம், பல்வேறு காலகட்ட நிகழ்வுகளின் அறுந்த கண்ணிகளின் தொடராகவே உள்ளது. மானிட வளர்ச்சியின் பல்வேறு நிலைகளை தனது கற்பனை வளத்தால் தீட்டிக் காட்டும் ராகுல், ஆரிய- திராவிட இனவாதம் என்ற வழக்கொழிந்த வரலாற்றுவாதத்தின் மீது இப்புதினத்தைக் கட்டமைத்திருக்கிறார். தற்காலத்தில் கிடைத்துள்ள பல ஆதாரங்கள் இந்த சிந்தனைப்போக்கைக் கேள்விக்குள்ளாக்குகின்றன.


9. அழகிய மரம்

18-ஆம் நூற்றாண்டில் பாரதத்தின் பாரம்பரியக் கல்வி முறை எப்படி இருந்தது என்பதை ஆராயும் இந்நூல், மேற்கண்ட வினாக்களுக்கு தக்க ஆதாரங்களுடனும், குறிப்புகளுடனும் விரிவான விடைகளை அளிக்கின்றது.

காந்திய சிந்தனையாளரான தரம்பால் அவர்கள்,  ஆங்கிலத்தில்  ‘The Beautiful Tree’ என்று எழுதிய நூலை தமிழில் பி.ஆர்.மஹாதேவன் அவர்கள் ‘அழகிய மரம்’ என்ற பெயரில் மொழியாக்கம் செய்து வழங்கியுள்ளார். இந்நூலிற்கான தலைப்பை காந்தியடிகள் எழுதிய குறிப்பிலிருந்து தேர்வு செய்துள்ளனர்.

“பிரிட்டிஷார் பாரதம் வருவதற்கு முன்பு இங்கு இயல்பாயிருந்த நிலையிலிருந்து கல்வியை வளர்க்காமல், மண்ணைத் தோண்டி வேருடன் பிடுங்கி ஆராய்ச்சி செய்து பார்த்தார்கள். அதன்பிறகு அந்த வேரை அப்படியே விட்டுவிட்டார்கள். அந்த அழகிய மரம் அழிந்து விட்டது”  என்பது, பண்டைய பாரதத்தில் இருந்த கல்வி முறையை அழித்த பிரிட்டிஷார் பற்றி காந்தியடிகள் கூறிய கருத்து….


10. லஜ்ஜா

பங்களாதேஷ் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் 1993-இல் வங்கமொழியில் எழுதிய ‘லஜ்ஜா’ புதினம், அவரை தனது தாய்நாட்டிலிருந்தே விரட்டியடித்தது. 1994-இல் நாடுகடத்தப்பட்ட அவர், இந்தியாவில் விருந்தினராகவும் அரசின் பாதுகாப்பிலும் இருப்பதால்தான் இன்னமும் உயிருடன் உள்ளார். அப்படி என்ன அந்தப் புதினத்தில் எழுதி விட்டார்? அவருக்கு பத்வா விதித்து, கொலை செய்யத் தேடி அலையும் மதத் தீவிரவாதிகள், எதற்காக அவ்வாறு செய்கின்றனர்? அவரை அந்நாட்டு அரசு ஏன் பாதுகாக்க முற்படவில்லை? இக்கேள்விகளுக்கு பதில் தெரிய வேண்டுமானால், இந்த நூலைப் படிக்க வேண்டும்.

“மதச்சார்பு இல்லாமல் மனித நேயத்துடன் சிந்திக்கும் அனைவரும் ஒன்றுசேர்ந்து தீயசக்திகளுக்கு (இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு) எதிராகத் தீவிரமாகப் போராடினால்தான் அவற்றைத் தடுத்து நிறுத்த முடியும். அதுவரையிலும் எனது எதிர்ப்பை என்றும் நிறுத்திக்கொள்ள மாட்டேன்” என்று நூலின் முன்னுரையில் பிரகடனம் செய்கிறார் தஸ்லிமா. ஆனால், இந்தியாவில் மதச்சார்பின்மை பேசுவோர்தான் தஸ்லிமாவை வேப்பங்காயாக ஒதுக்குகிறார்கள்….


11. நவகவிதை

அரவிந்த மகரிஷியின் 150 ஜெயந்தி ஆண்டு இது.  அவர் பாரதம் எழுச்சி பெற வேண்டும் என்றார். காரணம், பாரதம் உயர்வது என்றால் உலகில் நற்பண்புகள் அதிகரிக்கிறது என்பதே அர்த்தம் என்றார். கவிஞர் வ.மு.முரளியும் இதை எதிரொலிக்கிறார் ‘ஜய ஜய பவானி’ என்ற கவிதையில். நவகவிதை என்றால் புதிய கவிதை என்பது மட்டுமல்ல, ஒன்பது கவிதைகள் என்றும் பொருள். நவராத்திரியை முன்னிட்டு நாளுக்கு ஒன்றென ஒன்பது நாளும் புனைந்த கவிதைகளின் தொகுப்பு  இச்சிறு நூல். 

நவராத்திரியில் தலா மூன்று நாட்கள் என மூன்று பெரும் தேவியர்கள் சமமாக வழிபடப் பட்டாலும் கவிஞர் திருமகளுக்கு அதிகம் (வரிகள்) இடம்  கொடுப்பது இவரை நடைமுறைக் கவிஞராக்குகிறது….


12. திராவிட இயக்கம் – புனைவும் உண்மையும்

தமிழகத்தின் போக்கை மாற்றி அமைத்ததில் திராவிட அரசியலின் பங்கு மிகப் பெரிது. இன்று விமர்சனத்துக்கு அப்பாற்பட்டதாக திராவிட இயக்கம் முன்வைக்கப்படுகிறது. ஆனால் நாம் அனைவரும் நம்பும் திராவிட இயக்கம் என்ற ஒன்று என்றாவது இருந்ததுண்டா? இந்தக் கேள்வியே திடுக்கிடலை ஏற்படுத்தக் கூடியது.

இந்தக் கேள்வியுடன், ‘அப்படி எந்த ஒரு இயக்கமும் இருந்ததில்லை’ என்ற தெளிவான பதிலுடன் தான் இந்த நூலையே ஆரம்பிக்கிறார், மலர்மன்னன். தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளராக இருந்த, அண்மையில் மறைந்த மலர்மன்னன், திமுக நிறுவனர் அண்ணாதுரையின் நெருங்கிய நண்பராக இருந்தவர். கடந்த நூற்றாண்டின் முக்கிய அரசியல் தருணங்களில் நேரடி சாட்சியாக நிகழ்வுகளைக் காணும் வாய்ப்பு பெற்றவர்.

…ஜஸ்டிஸ் கட்சித் தலைவராக ஈ.வெ.ராமசாமி எப்போது உருவானார்? ஜஸ்டிஸ் கட்சியை திராவிடர் கழகம் எவ்வாறு விழுங்கியது? உண்மையிலேயே திராவிட இயக்கம் உள்ளதா? இருந்தால் அதன் வயது 100 தானா? இவ்வாறு பல கேள்விகளை எழுப்பி இந்நூலில் சரித்திரச் சான்றுகளுடன் பதில் அளித்திருக்கிறார் மலர்மன்னன். திராவிட இயக்கம் என்ற சொல்லாட்சியே ஒரு மோசடியான புனைவு, தமிழகத்தில் இருப்பது திராவிட அரசியல் மட்டுமே என்று முடிக்கிறார். சுள்ளெனச் சுடும் உண்மைகள் நிறைந்த நூல் இது.


13. ஸ்ரீ. B.பாச்கர் ராவ் – சங்கமென்னும் நந்தவனத்தில் பூத்த ஒரு குறிஞ்சி மலர்

பம்மிடிபாடி என்ற குடும்பப் பெயரைக் கொண்ட பாஸ்கர் ராவ், இன்றைய ஆந்திராவில் 1939-இல் ஒரு பிராமணக் குடும்பத்தில் பிறந்து 1994-இல் தனது 55 வயதில் தமிழ்நாட்டில் மதுரையில் காலமானார். ஒப்பீட்டளவில், இந்தக் குறுகிய கால வாழ்வில் தேசப்பணியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு, செறிவான வாழ்க்கையை வாழ்ந்துள்ளார்.

சிறு வயதிலேயே அவருக்கு ஆர்எஸ்எஸ் தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. பட்டப் படிப்புக்குப் பின் விசாகப்பட்டினத்தில் உள்ள ஆந்திர பல்கலைக்கழகத்தில் குமஸ்தாவாகப் பணிபுரியும் போது ஆர்எஸ்எஸ் ஈடுபாடு தீவிரமானது. அதனால் அரசுப் பணியை ராஜினாமா செய்துவிட்டு ஆர்எஸ்எஸ் ஸின் முழுநேர ஊழியராக – பிரசாரக்காக – ஆனார். குடும்பச் சூழ்நிலை அவரை பிரசாரக்காக நீடிக்க விடவில்லை.

குடும்பத்தின் பொருளாதார நிலையைச் சீராக்க அவர் 1968இல் தமிழ்நாட்டில் மயிலாடுதுறையில் உள்ள ஏவிசி கல்லூரியில் ஆசிரியராகச் சேர்ந்தார். இங்கே வரும்போது அவருக்கு தமிழ் தெரியாது. ஆனால் தமிழ்நாடு அவரது செயல்களமாக ஆனதுதான் வினோதம். குடும்பச் சூழ்நிலை சீரானதும் அவர் மீண்டும் (1973) பிரசாரக் ஆனார். இது ஒரு அரிதான நிகழ்வு.

வீர சாவர்க்கர் இயற்றிய பாடல் ஒன்றில் பாரதத் தாயை  ‘பஹூ ரத்ன பிரசவி’ என்று குறிப்பிட்டுள்ளார். ரத்னம் போன்று ஒளிரும் பல மாமனிதர்களைப் பெற்றெடுத்தவள் பாரதத்தாய் என்று புகழ்கிறார். அப்படிப் பட்ட ரத்தினங்களில் ஒருவர் பாஸ்கர் ராவ். இந்த ரத்தினத்தை நன்றாகப் பதித்து நம் கையில் தந்திருப்பவர் மதுரையைச் சேர்ந்த ஆடிட்டர் வைகுண்டம். 


14. பாரத வரலாற்றின் ஆறு பொற்காலங்கள்

சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கர் எழுதிய வரலாற்று நூல் இது. இந்த நூல் அவரது கடைசிக் காலத்தில் வெளியானது என்பதனால், ஆங்காங்கே பொருத்தமான தனது இதர நூல்களையும் பற்றி அவர் குறிப்பிடுகிறார். இதனால் சாவர்க்கரின் பிற படைப்புகள், அவற்றின் குறிக்கோள் ஆகியவை பற்றி அவர் வாயிலாகவே அறிய இந்த நூலைப் படிப்பது உதவுகிறது. உதாரணமாக – அவரது சுயசரிதை, 1857ஆம் ஆண்டின் இந்திய விடுதலைப் போர், ஹிந்து பத பாதஷாஹி ஆகிய நூல்களைக் கூறலாம்….

மேற்கத்திய, மார்க்சீய தாக்கத்துடன் சரித்திரத்தைப் பார்க்கும் வரலாற்றாசிரியர்கள் திரிக்கும், மறைக்கும் வரலாற்றுப் பகுதிகளுக்கு வெளிச்சம் போட்டுக்காட்டுவது இந்த நூலின் தலையாய குறிக்கோள். முக்கியமாக – பாரதத்தின் /ஹிந்துக்களின் வரலாறு தோல்வியின் வரலாறு, பல நூற்றாண்டு அடிமைத்தனத்தின் வரலாறு என்ற தவறான கண்ணோட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுகிறது. பாரத/ஹிந்து வரலாறு இடைவிடாத போராட்டத்தின் வரலாறு. நம் நாட்டின் அரசர்கள், மக்கள், வீரர்கள், தலைவர்கள், போராடி இன்றும் வெற்றி பெற்ற நாகரீகமாக வேத, ஹிந்து, பாரத நாகரீகத்தையும், கலாச்சாரத்தையும் திகழச்செய்துள்ளார்கள் எனும் கருத்தை நூலாசிரியர் ஒவ்வொரு கட்டத்திலும் ஆழமாக பதியவைக்கிறார்….


15. இந்துத்துவ அம்பேத்கர்

இன்று அம்பேத்கரை உரிமை கொண்டாடாதவர்கள் இல்லை. அம்பேத்கரை அவரது வாழ்நாளில் எதிர்த்த காங்கிரஸாரும், கம்யூனிஸ்டுகளும் இன்று அவரது பெயரை உச்சரிப்பதுதான் அம்பேத்கரின் வெற்றி. அதேசமயம், இந்து மதத்தை கடுமையாக நிராகரித்த அம்பேத்கரை இந்துத்துவர்கள் மிகவும் போற்றுவது எப்படி?

அம்பேத்கரியலில் தீவிர ஆராய்ச்சியாளரான ம.வெங்கடேசனின் இந்நூல் இக்கேள்விக்கு விளக்கமளிக்கிறது. புரட்சியாளர் அம்பேத்கர் புத்தமதம் மாறியது ஏன்? என்ற நூலை எழுதி ஏற்கெனவே தமிழுலகில் புதிய சிந்தனை அலைகளை உருவாக்கியவர் இவர்.

22 அத்தியாயங்களில் அம்பேத்கரின் கருத்துகளைக் கொண்டே கட்டி எழுப்பப்பட்ட ஆராய்ச்சி நூலாக இந்நூல் விளங்குகிறது. எழுத்தாளர் அரவிந்தன் நீலகண்டனின் அறிமுக உரையும் சிறப்பாக உள்ளது. நூலாசிரியரின் கடின உழைப்பு வியக்க வைக்கிறது. இந்துத்துவர்களின் சிந்தனைப் போருக்கு ஒரு கருவியாக இந்நூல் வெளியாகி இருக்கிறது.


16. கருணைமிகு திருக்கருவையம்பதி

தென் தமிழக பஞ்சபூதத் தலங்களில் அக்னித்தலமான கரிவலம்வந்தநல்லூரில் பால்வண்ணநாதர் என்ற பெயரில் ஈசன் அருள்பாலிக்கிறார். ஒப்பனையம்பாள் உடனுறைந்து ஆட்சி புரிகிறார். தென்காசிப் பாண்டியர்களில் ஒருவரான வரதுங்கராமப் பாண்டிய மன்னனால் திருப்பணி செய்யப்பட்ட ஆலயம் இது.

நைடதத்தை தமிழில் வழங்கியவரும் வெற்றிவேற்கை என்ற நீதிநூலை அளித்தவருமான சடையவர்மன் அதிவீரராம பாண்டியனின் இளவலான இவரும் ஒரு தமிழ்ப் புலவர். நல்லூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட இவரது ஆட்சிக்காலம்: பொ.யு. 1588 – 1612.  

இந்த ஆலயம் குறித்தும், கரிவலம்வந்தநல்லூரின் தலப்பெருமைகள், இத்தலம் குறித்து எழுதப்பட்ட இலக்கியங்கள் குறித்துத் தொகுக்கப்பட்டுள்ள இனிய நூல், ‘கருணைமிகு திருக்கருவையம்பதி’. திருக்கருவையம்பதி என்பது கரிவலம்வந்தநல்லூரின் இலக்கியப் பெயர்.

இந்நூலை அரிதின் முயன்று தொகுத்திருப்பவர் திரு. பா.ஸ்ரீராமகிருஷ்ணன். இந்நூலின் பதிப்பாசிரியர்: திரு. சிவ.மணிகண்டன். தாங்கள் வாழும் ஊரின் தொன்மைச் சிறப்பையும் ஆன்மிகப் பெருமையையும் நூலாகப் பதிவு செய்துள்ள இவர்களின் பக்திப் பேருணர்வு பாராட்டிற்குரியது. 72 பக்கங்களிலான சிறிய நூல் எனினும், இந்நூலின் கருப்பொருள் மிகவும் பெரிது.


17. பாரதியின் கருத்துப்படங்கள்

மகாகவி பாரதியின் இதழியல் மேதைமையை வெளிப்படுத்தும் அற்புதமான ஆவணம் இந்த நூல். பேராசிசிரியர் ஆ.இரா.வேங்கடாசலபதி தனது இளமைப்பருவத்தில், 27 வயதில் நடத்திய சீரிய ஆராய்ச்சியும் தேடுதலும் விளைவித்த அரிய ஆபரணம் இந்த நூல்.  

பாரதியின் இதழியல் பணிகளை ஆராய்வது தமிழில் தனியொரு ஆராய்ச்சித் துறையாகவே வளர்ந்துள்ளது. அவற்றில் மிகவும் முக்கியமான தொகுப்பு, பாரதியின் கருத்துப் படங்கள் என்ற இந்த அற்புதமான தொகுப்பாகும். ‘இந்தியா’ பத்திரிகையில் மகாகவி பாரதி அறிமுகம் செய்த கருத்துப்படங்கள் குறித்த விவரங்களுடன், அரிதின் முயன்று சேகரித்த கருத்துப்படங்களைத் தொகுத்து நூலாக்கி இருக்கிறார் ஆ.இரா.வேங்கடாசலபதி.

இந்த கருத்துப்படங்களின் பின்னணி, வெளியான இதழின் தேதி, அதன் அருகில் பாரதி அளித்த சித்திர விளக்கம், தலைப்பு, விரிவான செய்தி விளக்கம் ஆகியவை இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. பாரதியின் கருத்துப்பட இதழியலை அறிவதற்கான முதல் நூல் இதுவே.

‘தமிழ் இதழியலில் கருத்துப் படங்கள், பாரதியின் கருத்துப் படங்கள்: வரலாற்றுப் பின்னணி’ ஆகிய முன்னுரைக்கும் அத்தியாயங்களில் ஆராய்ச்சியாளர் சலபதியின் கடின உழைப்பும் நுண்மாண் நுழைபுலமும் புலப்படுகின்றன. இந்நூலில் 87 கருத்துப்படங்கள் இடம்பெற்றுள்ளன.


18. பழனி ஸ்ரீ ஈசான சிவாசாரியார் சுவாமிகள் வாழ்வும் வாக்கும்

இளமையிலேயே சென்னிமலையில் அர்ச்சகப் பணிக்குரிய அனைத்து நூல்களும் கற்றுத் தேர்ந்த ஈசான சிவாசாரியார், தனது இயல்பான தலைமைப் பண்பால், மிக விரைவில் அர்ச்சகர்களுக்கு வழிகாட்டுபவராக உயர்ந்தார். இவர் நடத்திய சரவண முனிவர் வேதாகமப் பாடசாலை பல இளம் அர்ச்சகர்களுக்கு துணை புரிந்தது.

ஆலயத்தில் தேவைப்படும் வைதிக அர்ச்சகப் பணியை ஆற்றியதுடன், வேதாகமங்களில் கரைகண்ட பண்டிதராக அவர் விளங்கியதால், இவரை நாடி பலரும் வந்து சென்றனர். இனிய இல்லற வாழ்வில் ஈடுபட்டவாறே ஆன்மிகப் பணிகளையும் தடையின்றி செய்து வந்தார். இவரது விடாமுயற்சியால் சென்னிமலை தலபுராணம் 1923இல் அச்சேறி, 1966இல் மீள்பதிப்பானது. அதேபோல, கூனம்பட்டி ஆதீன வரலாற்றையும் எழுதி வெளியிட்டார்.

திருவாவினன்குடி என்றழைக்கப்படும் பழனியில் இவரது சிவப்பணி தொடர்ந்தது. அங்கு 1941இல் பழனியில் இவர் தொடங்கிய வேதாகமப் பாடசாலை பல திறமையான அர்ச்சகர்களை உருவாக்கியது. அங்கு ‘பழனி ஆண்டவர்’ என்ற திங்கள் இதழையும் இவர் நடத்தினார். அதன் காரணமாகவே, அவரது பெயருடன் பழனி சேர்ந்துகொண்டது.


19. பாகிஸ்தான்: இந்தியப் பிரிவினை

டாக்டர் அம்பேத்கர் 1945-ல், பிரிவினைக்கு முன்பாக எழுதிய புத்தகம் THOUGHTS ON PAKISTAN. இதனை எழுத்தாளர் பி.ஆர்.மகாதேவன் தமிழில் மொழிபெயர்த்து வழங்கி இருக்கிறார்.

இந்தப் புத்தகத்தில் பாகிஸ்தான் என்ற தனி நாடு தேவையா என்பது தொடர்பாக இந்துத் தரப்பு, முஸ்லிம் தரப்பு என இரண்டுக்குமான வாதங்களை மிக விரிவாக, மிக அழுத்தமாக முன்வைத்திருக்கிறார். பிரிவினை தொடர்பான விவாதங்களில் இந்தப் புத்தகத்தை காந்தியும் மேற்கோள் காட்டிப் பேசியிருக்கிறார். ஜின்னாவும் மேற்கோள் காட்டிப் பேசியிருக்கிறார். இதிலிருந்தே இந்த நூல் எந்த அளவுக்கு ஆழமாக எழுதப்பட்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

இந்திய வரலாற்றில் மட்டுமல்ல, உலக வரலாற்றிலும், தேசப் பிரிவினை ஒரு மாறாத ரணம். அன்று நடந்து முடிந்த இப்பேரழிவை எப்படித் தடுத்திருக்கலாம் என்பதைச் சொல்லும் புத்தகம் மட்டுமல்ல, இனி அப்படி ஒன்று நடக்காமல் தற்காத்துக் கொள்வது எப்படி என்பதையும் சொல்லித் தருகிறது இந்நூல்.


20. பாரதியின் தராசு கட்டுரைகள்

சூரியனின் கிரணங்கள் தன்னியல்பால் யாவற்றுள்ளும் ஊடுருவி ஒளிசேர்ப்பதுபோல், மகாகவி பாரதியின் எழுத்தாளுமை, படிக்கும் எவரது மனத்திலும் ஊடுருவி ஒளியூட்டுகிறது. பாரதியின் எழுத்தென்னும் அக்கினிக் குஞ்சு, வாசகனின் மனத்துக்குள் வியாபித்திருக்கும் அறியாமை என்ற காட்டைப் பொசுக்கி விடுகிறது. அத்தகைய ஞானசூரியனாம் மகாகவி பாரதியிடம் தோன்றிய ஒளிப்பிழம்புகளில் ஒன்றுதான் ‘தராசு’ கட்டுரைத் தொடர்.  நூறாண்டுகளுக்கு முந்தைய இந்தப் பொக்கிஷத்தைத் தேடிப் பிடித்துச் சேகரித்துத் தொகுப்பது என்பது சூரிய மண்டலத்துக்குச் சென்று ஆய்வு செய்துவிட்டு, வெற்றிகரமாகத் திரும்புவதற்கு ஒப்பானது. அத்தகைய சிறப்பான பணியை தராசு கட்டுரைகளைத் தொகுத்துள்ள சேக்கிழான் செய்து முடித்துள்ளார்.

மகாகவி பாரதியின் எழுத்துகள் பேசும். பத்திரிகையாளன் பாரதிக்கு அது போதவில்லை. ஆகையால் வாசகரோடு நேரடியாகப் பேசும் அனுபவத்தைக் கொணர, தான் துணையாசிரியராகப் பணியாற்றிய சுதேசமித்திரன் பத்திரிகையில் ‘தராசு’ என்ற தலைப்பிலான பத்தியை உருவாக்கினார். இந்தத் தலைப்பு என்பதற்குப் பாரதி பயன்படுத்தியுள்ள ‘மகுடம்’ என்ற சொல், உண்மையில் அவரது எழுத்துகளுக்கு மட்டுமே பொருந்தும். பாரதி எவ்விதம் தூண்டுதல் பெற்று ‘தராசு’ பத்தியை எழுதத் தொடங்கினார், அவற்றுள் என்னென்ன விஷயங்கள் இடம்பெற்றுள்ளன என்பதைத் தொகுப்பாளர் சேக்கிழான் மிக அருமையாக எடுத்துரைத்துள்ளார். அத்துடன் பத்திக்கு ‘தராசு’ என்ற தலைப்பிருந்தாலும் ஒவ்வொரு கட்டுரைக்கும் பாரதி தலைப்பிடவில்லை. அந்தத் ‘தலையாய’ பணியைத் தொகுப்பாளர் சிறப்பாகச் செய்திருக்கிறார், சபாஷ்!

கட்டுரையைச் சுவாரஸ்யமான கதை சொல்வதுபோல் எழுதிச் செல்வது பாரதிக்கே கைவந்த கலை. அதேநேரத்தில் நாட்டு நடப்புகளே இதன் மையக்கரு என்பதால் அதில் உள்ள நிஜம் நம்மைச் சுடும். அன்றைய தலைமுறையைப் பற்றிய மகாகவி பாரதியின் ‘தராசு கட்டுரைகள்’, இன்றைய தலைமுறைக்கு மட்டுமல்ல, இனிவரும் தலைமுறைகளுக்கும் சிறந்ததோர் வழிகாட்டி.


21. Phiosopher Saint 

நடராஜ குருவின் மூலமாக தான் ஜான் ஸ்பியர்ஸுக்கு நாராயண குரு பற்றித் தெரியவந்தது. அவர் இந்தியா வருவதற்கு இரண்டு ஆண்டுகள் முன்னமே நாராயண குரு சித்தி அடைந்து விட்டார். ஆனால் மிகச் சரியாக நாராயண குருவைப் புரிந்துகொண்டார். பலரும் சொல்வது போல நாராயண குருவை ஆன்மிக  மறுமலர்ச்சிக்கு வித்திட்டவராகவோ சமூக சீர்திருத்தவாதியாகவோ கருதாமல், அத்வைத நெறியில் வாழ்ந்து, வழிகாட்டிய குரு மகான்களின் வரிசையில் ஒருவராகக் கண்டார். 1952இல் நடராஜ குருவினால் துறவறம் அளிக்கப்பட்டு ஜான் ஸ்பியர்ஸ் காவி உடை தரித்த ‘சுவாமி ஜான் ஸ்பியர்ஸ்’ ஆனார். 1955 இல் நாராயண குருகுலம் சார்பில் ‘வேல்யூஸ்’ என்ற மாத இதழ் தொடங்கப்பட்டது. சுவாமி ஜான் ஸ்பியர்ஸ் அதன் ஆசிரியரானார். அதில் சுவாமி ஜான் ஸ்பியர்ஸ் எழுதிய பத்து கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். கட்டுரைகளைத் தொகுத்தவர் பி.ஆர்.ஸ்ரீகுமார். 

பலர் நாராயண குருவை சமூக சீர்திருத்தவாதி என்கிறார்கள்; அதுவும் சரியல்ல என்கிறார் சுவாமி ஜான் ஸ்பியர்ஸ். குரு ஒருபோதும் தலைவர் அல்ல. தலைவர் என்பவர் கூட்டத்தைச் சேர்த்தாக வேண்டும். குரு கூட்டத்தைச் சேர்க்க மாட்டார் என்பது மட்டுமல்ல, அவர் கூட்டத்தை விரட்டுபவர். பறக்கத் தெரிந்தவுடன் பறவைக்குஞ்சு கூட்டில் இருந்து வெளியேற்றப்படுவதைப் போல போதுமான ஞானம் பெற்றவர்களை குரு தன்னிடமிருந்து விலக்கி விடுவார்….

நாராயண குருவின் வாழ்க்கையையும் தத்துவத்தையும் சொல்வதென்பது, சுவாமி ஜான் ஸ்பியர்ஸ் வார்த்தையில் சொல்வதென்றால், கடலைக் குவளையால் அளப்பது போலத் தான்.


22. எனக்கு நிலா வேண்டும்

குறிப்பிட்ட ஒரு துறையை மையமாகக் கொண்ட புதினம் எழுதுவது புதிய விஷயமல்ல. ஆனால் அந்தத் துறையில் மூழ்கி முத்தெடுப்பது என்பது ஒரு கலை. இதை மிக அற்புதமாகச் சாதித்திருக்கிறார் ஹிந்தி எழுத்தாளர் சுரேந்திர வர்மா.

வாழ்க்கையின் எதிர்பாராத சிக்கல்களையும், தான் சார்ந்த நாடகத் துறையின் பலம்- பலவீனங்கள், உள்ளரசியலையும், தனிமனித குணாதிசயங்களையும் ஒன்றாகக் கலக்கி, தெளிவான நீரோடை போன்ற கதையுடன் அவர் 1993-இல் படைத்த  ‘முஜே சாந்த் சாஹியே’ புதினம், ஹிந்தி எழுத்துலகில் பெரும் பரபரப்பை உருவாக்கியதுடன் முன்னுதாரணமான புதினமாகவும் மாறியது. 1996-இல் இதற்கு சாஹித்ய அகாதெமி விருது கிடைத்தது.

இப்புதினத்தை தடையற்ற தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் எம்.சுசீலா.

முத்ரா ராட்சஸஸும், மேகதூதமும், சாகுந்தலமும் இந்தியக் கலையுலகின் அடிப்படை என்பதை இப்புதினத்தில் உணர்கிறோம். இதேபோல, தமிழின் காப்பிய வர்ணனைகளுடன் இயல்பான ஒரு தமிழ்ப் புதினம் உருவாக முடியுமா என்ற ஏக்கம் எழுவதையும் தவிர்க்க முடியவில்லை.


23. ஸ்ரீ அரவிந்தரின் எரிக்கன்

விடுதலைப் போராட்ட வீரரும், புரட்சியாளராக இருந்து ஆன்மிகவாதியாக மலர்ந்தவருமான மகரிஷி அரவிந்தகோஷ், மிகச் சிறந்த இலக்கியவாதி என்பது பலரும் அறியாத தகவல். வங்கம், ஹிந்தி. சமஸ்கிருதம் மட்டுமின்றி, ஆங்கிலம், பிரெஞ்சு, லத்தீன், ஜெர்மன் ஆகிய வெளிநாட்டு மொழிகளிலும் மிகுந்த தேர்ச்சி பெற்றவர் அவர். புதுவையில் வசித்தபோது அவரது எழுத்தாற்றல் வடிவம் பெற்றது. அவர் எழுதிய கவிதைகள், நாடகங்கள், உரைநடை நூல்கள், காவியங்கள், தத்துவ விளக்கங்கள், கடிதங்கள் போன்றவை அவரது மேதைமையை வெளிப்படுத்துகின்றன.

அரவிந்தர் எழுதிய ‘எரிக்’ என்ற கவிதை நாடகம், ஸ்காண்டிநேவிய நாட்டுக் கதையின் செம்மை வடிவம். அவரது ஆங்கில நடை, ஆங்கிலேயர்களே வியந்த தனித்தன்மை கொண்டதாகப் போற்றப்படுகிறது.  இதன் மூலம் எதுவென்று அவர் குறிப்பிடவில்லை. எனினும், நார்வே தேச மன்னன் எரிக் பற்றிய சித்திரம் இதுவென்பது நாடகத்திலிருந்து தெரிய வருகிறது.

இதனை, அழகுத் தமிழில், இனிய யாப்புச் செய்யுள்களில் அரவிந்தரின் மூலத்துக்கு தகுந்த வகையில்,  ‘எரிக்கன்’ என்ற கவிதை நாடகம் ஆக்கி இருக்கிறார் வங்கி மேலாளராகப் பணிபுரிந்த சிவ.சூரியநாராயணன். அரவிந்தரின் ஆங்கில நடையில் தனது மனதைப் பறிகொடுத்த எழுத்தாளர், அதனை உள்வாங்கி தமிழுக்கேற்ற செம்மாந்த நடையிலும், நமது பண்பாட்டுக்கேற்ற இன்சொற்களிலும், மூலமா, மொழிபெயர்ப்பா என்று  புலப்படாதவாறு தமிழாக்கி இருக்கிறார்.


24. மோடியின் தமிழகம்: உண்மை பேசுகிறது…

முன்னாள் பத்திரிகையாளரும் திரைப்பட இணை இயக்குநருமான திரு. சின்னப்பா கணேசன் எழுதியுள்ள இந்தப் புத்தகம், தமிழகத்தில் கட்டமைக்கப்பட்டிருக்கும் மோடி எதிர்ப்பு மாய பிம்பத்தை சுக்குநூறாக உடைக்கிறது. தமிழகத்திற்கு மோடி அளிக்கும் முக்கியத்துவத்தையும், தமிழின்பால் அவருக்குள்ள அன்பையும் பிரமாதமாகப் பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர்.

கவியரசு கண்ணதாசனின் எழுத்துநடையை ஒட்டிய சின்ன வாக்கியங்கள், சிறிய பத்திகள்; சுற்றி வளைக்காத சாதாரணமான எளிய உரையாடல் விளக்கங்கள்; பலரும் அறியாத முக்கியமான அடிப்படைத் தரவுகள்; படிக்கத் தூண்டும் சரித்திர நிகழ்வுகள்; நரேந்திர மோடியின் தமிழ் தொடர்பான மேற்கோள்கள் – இவை அனைத்தையும் பக்குவமாக இணைத்திருக்கும் பாங்கு என நல்ல அறுசுவை உணவு போலப் படைக்கப்பட்டிருகிறது இந்நூல்.

பாஜக மாநிலத் தலைவர் திரு. கே.அண்ணாமலை ஐ.பி.எஸ்.  இந்நூலுக்கு அணிந்துரை வழங்கி இருக்கிறார். பாஜகவினர் இந்நூலைப் படித்தால் போதும், பொதுக்கூட்டங்களில் எளிதாகப் பேச முடியும். அந்த அளவுக்கு பல புள்ளிவிவரங்களை இந்த நூலில் 27 கட்டுரைகளாகத் தொகுத்திருக்கிறார் நூலாசிரியர்……

இந்நூல், பாஜக ஆதரவாளர்கள் கண்டிப்பாகப் படிக்க வேண்டிய நூல். அதுமட்டுமல்ல, பாஜகவின் எதிரிகளும் படிக்க வேண்டிய வகையில்,  தகவல் சுரங்கமாக அமைந்திருப்பது இந்நூலின் சிறப்பு.


25. அக்கினிக் குஞ்சுகள் ( 3 தொகுதிகள்)

அறிவியல் துறைக்கு அடித்தளமாக இருப்பது கணிதம். கணிதவியலில் முன்னோடியான ஆரிய பட்டர், பூஜ்ஜியத்தை வடிவமைத்த அவரது சீடர் பாஸ்கரர் என தொடங்கும் இந்நூலில், ‘ விஞ்ஞான மூதாதையர், நோபல் விருதாளர்கள், நவீன அறிவியல் முன்னோடிகள், கணித மேதைகள், இஸ்ரோ விஞ்ஞானிகள், அணுவியல் அற்புதர்கள், கணிப்பொறியியல் வித்தகர்கள். புதிய கண்டுபிடிப்பாளர்கள், தாவரவியல் நிபுணர்கள், மருத்துவயியல் வல்லுநர்கள், சிறப்புத்துறை நிபுணர்கள், இயற்பியலாளர்கள்’ என பன்னிரண்டு வகைப்பாட்டில் சுமார் 120 இந்திய விஞ்ஞானிகளைப் பற்றியும் அவர்களது பங்களிப்பு பற்றியும் கூறப்பட்டுள்ளது.

பத்திரிகையாளர் வ.மு.முரளி, தினமணியின் இணைப்பிதழான  ‘இளைஞர் மணி’யில் 2015 அக்டோபர் 27 இல் தொடங்கி 2018 டிசம்பர் 20 வரை 120 வாரங்கள் தொடர்ந்து எழுதிய கட்டுரைத் தொடரின் தொகுப்பு இது.  “வாரந்தோறும் படித்தாலும் அப்பொழுது ஏற்படாத மலைப்பு நூல் வடிவில் தொகுப்பாக படிக்கும்போது பிரமிப்பாக இருக்கிறது”  என்று தினமணி ஆசிரியர் வைத்தியநாதன் குறிப்பிட்டுள்ளார். அது பொருத்தமான பாராட்டுத் தான்.

தகுதியும் திறமையும் நிரூபிக்கப்பட வேண்டிய அறிவியல் துறையில் ரிசல்ட் (பயன்/ கண்டுபிடிப்புகள்) மட்டுமே கணக்கில் கொள்ளப்படுகிறது. அப்படிப் பார்க்கும்போது பிராமணர்கள் மட்டுமல்ல, அவர்களுக்கு இணையான அல்லது மேம்பட்ட ஜாதியை (பிள்ளை /முதலியார், வடநாட்டில் வெவ்வேறு பெயரில்) சேர்ந்தவர்களும், பிற்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களும் (டாக்டர் சிவன்), பட்டியல் இனத்திலேயே மிகவும் கீழானவர்கள் என்று கருதப்படும் தீயா ஜாதியினரும்  (மனாலி கல்லட் வைணு பாப்பு) அறிவியல் துறையில் சிறப்பாகப் பங்களித்து உள்ளனர். அது இந்நூல்களைப் படிக்கும்போது இது தெளிவாகத் தெரிகிறது.

அறிவியலை கோட்பாட்டு அறிவியல் – பயன்பாட்டு அறிவியல் என்று பிரிக்க முடியும். மின்சார சக்தியைக் கண்டுபிடித்தது கோட்பாட்டு அறிவியல். மின்சாரத்தைக் கொண்டு விசிறியைச் சுழற்றுவது பயன்பாட்டு அறிவியல். பயன்பாட்டு அறிவியலாளர்களை இந்நூல் ஆசிரியர் கண்டுபிடிப்பாளர்கள் என்று குறிப்பிடுகிறார். 

மூன்று நூல்களும் நன்றாக வடிவமைக்கப்பட்டு, நேர்த்தியாக பிரசுரிக்கப் பட்டுள்ளன. அதற்காகவும் (மற்றும் நூல் தேர்வுக்காகவும்) வெளியீட்டாளர்களைப் பாராட்டலாம்.

பருந்துப் பார்வையில் இந்திய அறிவியலாளர்களைப் பற்றித் தெரிந்துகொள்ள விரும்புபவர்கள் இந்த நூல்களைப் படிக்கலாம். மாணவர்கள் படிக்க வேண்டிய நூல்கள் இவை. குறைந்தபட்சம் ஒவ்வொரு பள்ளி நூலகத்திலும் இருக்க வேண்டியவை.


26. மறைக்கப்பட்ட ஈவெரா

This image has an empty alt attribute; its file name is evr-forbidden.jpg

தமிழகம் எவ்வாறு விரசாய்ப் போனது என்பதை உணர்ந்தால் தான், இதற்கு மாற்றுக் கண்டறிய முடியும். அந்த வகையில் நமது வீழ்ச்சிக்கு வித்திட்ட ‘சிறியார்’ ஒருவரை நாம் அனைவரும் அறிந்திருப்பது அவசியம். அந்த வகையில் நாம் அனைவரும் கண்டிப்பாகப் படிக்க வேண்டிய நூல் இது. அம்பேத்கரிய ஆய்வாளர் திரு.ம.வெங்கடேசனால் ‘துக்ளக்’ வார இதழில் எழுதப்பட்ட கட்டுரைத் தொடர், இப்போது சுவாசம் பதிப்பகத்தால் ‘மறைக்கப்படும் ஈ.வெ.ரா’ என்ற நூலாக வெளியாகி இருக்கிறது.

இந்தியப் பாரம்பரியத்துக்கு எதிராகப் பேசுவோரையும், நாட்டின் பெருமைகளை இழிவுபடுத்துபவர்களையும் ஆதரிக்க இன்று உலக அளவில் பெரும் அமைப்புகளுண்டு. இப்படிப் பேசுவோர் எதைப் பற்றியும் கவலையின்றி, எந்தவொரு ஆதாரமும் இன்றி, அல்லது தாங்களே புனைந்துகொண்ட மலினமான ஆதாரங்களின் அடிப்படையில்,  ‘சநாதனத்தை வேரறுப்போம்’ என்றெல்லாம் முழங்குவதை இப்போது நாம் காண்கிறோம். இவர்களுக்கெல்லாம் முன்னோடியாக நூறாண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தில் கிளம்பியவர் தான் ஈ.வெ.ரா.

ஈ.வெ.ரா.வின் உளப் பிரச்னை, எல்லாவற்றையும் பார்ப்பன ஆதிக்கமாகவே கண்டு வெருண்டது தான். அது மட்டுமல்ல, சமுதாயத் தீமைகள் அனைத்திற்கும் பிராமணர்களையும், ஹிந்து சமயத்தையும் குற்றவாளியாகச் சித்தரிப்பது, ஆரிய இன வெறுப்பு அரசியலுக்கு உகந்ததாக இருந்தது. ஈ.வெ.ராவின் பார்ப்பன வெறுப்பு, அவரை கடவுள் மறுப்பாளராக மாற்றியது; பிற்பாடு ஹிந்து விரோதி ஆக்கியது; இறுதியில் இந்திய விரோதி ஆக்கியது. இந்திய சுதந்திர நாளை துக்க நாளாக அனுசரிக்க வேண்டும் என்று சொல்லும் அளவுக்கு அவரது மனநோய் முற்றி இருந்தது. நமது துரதிர்ஷ்டம், அவரது மனநோய்ப் பிதற்றல்களை பெரும் ஞானியின் அவதூத வார்த்தைகளாக முன்வைத்தவர்களான பிராமண வெறுப்பாளர்களிடம் தமிழகம் சிக்கிக் கொண்டதுதான்.


27. இலக்கை எட்டும் வரை இடைவிடாது இயங்கு

This image has an empty alt attribute; its file name is maha-chinnathambi-book-1.webp

சுவாமி விவேகானந்தரின் கொள்கைகளை வாழ்வில் செயல்படுத்தும்போது  அவை வெற்றியைத் தேடித் தந்து ஒருவரைப் பெரும் சிகரங்களுக்கு இட்டுச் செல்லும் என்பதற்கு மஹா சின்னத்தம்பி ஓர் உதாரணம். மஹா சின்னத்தம்பியின் வெற்றிக்கதை Stop Not Till The Goal is Reached என்ற ஆங்கில நூலாக கேரன் மெக்ரடி என்பவரால் எழுதப்பட்டுள்ளது.

இலங்கை இந்திய வம்சாவளியில் வந்தவர், மலேசியாவில் பிறந்து பின் ஆஸ்திரேலியாவுக்குக் குடிபெயர்ந்து அங்கே வெற்றித் தடம் பதித்தவர் மஹா சின்னத்தம்பி. மஹா தனது வாழ்வில் பின்பற்றிவரும் சுவாமி விவேகானந்தரின் பத்துக் கொள்கைகளே இதற்குக் காரணம். அதன் விளைவாக ஆஸ்திரேலியாவின் க்வீன்ஸ் லாண்ட் பகுதியில் மதிப்பாரற்றுக் கிடந்த புதர் நிலத்தை ஸ்பிரிங் ஃபீல்டு என்ற வளர்ந்து வரும் நகரமாக மாற்றிய பெருமையைப் பெறுகிறார் மஹா. அசாதாரணமான தொலைநோக்கு, மாறாத இலக்கு, தளராத உறுதி இவற்றால் படைக்கப்படும், காலத்தால் அழியாத சாதனைகளுக்கு இந்த நகரம் சிறந்த ஓர் எடுத்துக்காட்டு.

மஹாவிடம் வலுவான தாக்கத்தை ஏற்படுத்திய சுவாமி விவேகானந்தரின் வாழ்விற்கு உயிரூட்டும் உபதேசங்கள் ஒருவரை வெற்றியின் உச்சிக்கு இட்டுச் செல்லும் என்பதை இப்புத்தகம் தெளிவாக நமக்கு விளக்குகிறது.


28. மகாபாரதம் – மாபெரும் உரையாடல்

This image has an empty alt attribute; its file name is mahabharatham-harikrishnan.jpg

மஹாபாரதத்தில் இல்லாததே இல்லை என்று பொதுவாய்ச் சொன்னாலும், அதன் மையக் கருத்து எதுவென்று பார்த்தால், தர்மம் என்றால் என்ன, மாறிவரும் காலத்தில், தர்மத்தை மனிதன் எவ்விதம் கடைபிடிக்க வேண்டும் என்பதை விரித்தும், அக்கறையோடும் சொல்வதைப் போலத்தான் தெரிகிறது.

இந்த மாபெரும் கதையைப் பற்றி எல்லா மொழிகளிலும் நிறைய நூல்கள் வெளிவந்து விட்டன. இன்னும் நிறைய வரும். அந்த நூல்களில், ஹரி கிருஷ்ணன் எழுதியுள்ள ‘மகாபாரதம் – மாபெரும் உரையாடல்’ என்னும் நூல் தொடர்ந்து மின்னும்.

மஹாபாரதத்தை எப்படிப் படிக்க வேண்டும் என்று ஹரி கற்றுத் தருகிறார், நமக்கு அவர் கற்பிக்கிறார் என்னும் சுமை தெரியாமல். அரைகுறையாகப் படித்துவிட்டு, அரைவேக்காடான கருத்துத் தெரிவிப்பதே இயல்பாகிவிட்ட இந்தக் காலகட்டத்தில், ஆர்வமுள்ள ஒரு மாணவன் இந்த இதிஹாசத்தை நேர்மையாகப் படித்துப் பயிலும் வழியை விரிக்கிறார்.


29. பாரதீயப் பெண்மணிகள்: ஒரு முழுமையான பார்வை

This image has an empty alt attribute; its file name is bharathiya-penmanikal.jpg

ஒரு பருப்பு தானியத்தைப்  பிரித்தால் எப்படி அது இரு பக்கமும் சரிசமமாக இருக்குமோ அதுபோல, வேத காலத்தில் ஆண்களும் பெண்களும் சரிசமமாகக் கருதப்பட்டனர். ஆண்களுக்கு நிகராக பெண்களும் கல்வி கற்றவர்களாக இருந்தனர். யக்ஞோபவீதம் எனப்படும் பூணூல் அணியப் பெற்றிருந்தனர். வேள்விகளில் பங்கேற்கவும் வேள்விகளை தலைமை ஏற்று நடத்தவும் செய்தனர்;  தானங்களை அளித்தனர். அவ்வாறு அளிக்க அவர்களுக்கு செல்வம் இருந்தது மட்டுமன்றி, உரிமையும் இருந்தது. மணவிலக்கு செய்யவும், மறு விவாகம் செய்யவும் அவர்களுக்கு உரிமை இருந்தது. துறவு வாழ்க்கையை மேற்கொள்ளவும் அவர்களால் முடிந்தது. நாடு முழுவதும் சுற்றித் திரியவும் அவர்களுக்கு சுதந்திரம் இருந்தது….

வேதங்களில் இருபத்து ஐந்து ரிஷிகாகளின் பெயர்கள் உள்ளன. அவர்களின் பெயர்களை பட்டியலிட்டுள்ளார் நூலாசிரியர். அவர்கள் கண்டு எழுதியது 266  மந்திரங்கள். அவை இன்றும் நடைமுறையில் உள்ளன. இன்றும் வைதீகத் திருமணங்களில் ஓதப்படும் மந்திரங்கள், சூரியா என்ற ரிஷிகா எழுதியதே….

உலகின் தொன்மையான மொழியான தமிழில் ஔவையார், கண்ணகி, மணிமேகலை, ஆண்டாள் என வேதகாலப் பண்பாடு தொடர்வதை – பெண்கள் கல்வி கற்றவர்களாக, சுதந்திரமானவர்களாக, துறவு மேற்கொள்ள உரிமை பெற்றவர்களாக இருப்பதைக் காணமுடிகிறது. திருவள்ளுவ நாயனாரும் ‘மனைமாட்சி’ என்ற அதிகாரத்தில் பெண்ணின் சிறப்பை வலியுறுத்துகிறார். தேசியப் பண்பாட்டை தமிழகம் காத்து நின்றது இதன்மூலம் புரிகிறது….


30. வேதாந்தம் தந்த வீரத்துறவி சுவாமி சித்பவானந்தர்

This image has an empty alt attribute; its file name is chitbhavananda-book1.jpg

தமிழகத்தை வாழ்விக்க வந்த  தவச்செல்வர்களில் முக்கியமானவர்; சுவாமி விவேகானந்தரின் அடியொற்றி, தமிழகத்தில் ஆன்மிகப் புரட்சி நிகழ்த்தியவர், பெரிய சுவாமிஜி என்றழைக்கப்பட்ட சுவாமி சித்பவானந்தர் (1898 மார்ச் 11 – 1985 நவ. 16).

This image has an empty alt attribute; its file name is chitbhavananda-book2.jpg

இவரைப் பற்றிய விரிவான வாழ்க்கை வரலாற்று நூலை ‘வேதாந்தம் தந்த வீரத்துறவி சுவாமி சித்பவானந்தர்’  என்ற பெயரில், 3 பாகங்கள் கொண்ட தொகுப்பாக, திருவண்ணாமலை ஸ்ரீ சாரதா ஆஸ்ரமத்தின் நூல் வெளியீட்டுப் பிரிவாகிய ‘ஸ்வாத்யாயா’ வெளியிட்டுள்ளது.

சுவாமி சித்பவானந்த மகராஜிடம் சன்யாச தீட்சை பெற்ற, திருவண்ணாமலை ஸ்ரீ சாரதா ஆஸ்ரமத்தின் தலைவர் யதீஸ்வரி ஸ்ரீ கிருஷ்ணப்ரியா அம்பா அவர்கள் இந்நூலை எழுதியுள்ளார். 55 அத்தியாயங்களில், 1,728 பக்கங்களில், 300க்கும் மேற்பட்ட அரிய புகைப்படங்களுடன் இந்நூல் வெளியாகியுள்ளது. சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்று நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றையும்  விரிவாக இந்த நூல் விளக்குகிறது.

This image has an empty alt attribute; its file name is chitbhavananda-book3.jpg

நூலாசிரியர்   யதீஸ்வரி கிருஷ்ணப்ரியா அம்பா சுவாமி சித்பவானந்தரிடம், 1984-இல் தீட்சை பெற்று துறவியானவர்.  திருநெல்வேலி ஸ்ரீ சாரதா மகளிர் கல்லுாரியில் முதல்வராகப் பணியாற்றினார்.  அதைத் தொடர்ந்து, 2007-இல் திருவண்ணாமலையில் ஸ்ரீ சாரதா ஆசிரமத்தை நிறுவினார்.

பேராசிரியராகவும் சிறந்த கல்வியாளராகவும் விளங்கும் யதீஸ்வரி அம்பா அவர்கள் சகோதரி நிவேதிதை பற்றி நான்கு நுால்களும், ஹிந்து மதம் கூறும் இறை வழிபாடு தொடர்பான ஒரு நூலும் எழுதியுள்ளார்.

தற்போது, தமிழகத்தில், சுவாமி சித்பவானந்தரின் போதனைகளைப் பின்பற்றி, 60 பள்ளிகளும், ஏழு கல்லுாரிகளும் செயல்பட்டு வருகின்றன.  இத்தகு பெருமைகள் கொண்ட சுவாமிகளின் வாழ்க்கை வரலாறு தமிழக மக்களிடத்தில் பரவலாகச் சென்றடைய வேண்டியதாகும். 


31. பசும்பொன் தேவர் போற்றிய ஆர்எஸ்எஸ்

ஆர்.எஸ்.எஸ். மீதும் வீர சாவர்க்கர் மீதும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், தி.க, தி.மு.க.வினருக்கு தீராத வன்மம் உள்ளது. பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு வீர சாவர்க்கர் மீதும் ஆர்.எஸ்.எஸ். மீதும் பெரும் மதிப்பும் மரியாதையும் இருந்தது. 

முத்துராமலிங்க தேவர் தமிழக அரசியலில் புறந்தள்ள முடியாத சக்தி. எனவே, தேவரை மதிக்கிறோம். ஆனால் அவர் ஆர்.எஸ்.எஸ். தலைவர் குருஜி கோல்வல்கரை மதித்தார், வரவேற்றார் என்பதை மறுக்கிறோம் – என்று பொய் பிரசாரம் செய்கின்றனர் தி.க., தி.மு.க.வினர். 

சட்டமன்ற ஆவணங்கள், செய்தித்தாள்களில் வந்தவை, புகைப்படங்கள், அவரது எழுத்துக்கள், உரைகள், நூல்கள் என ஆதாரங்களுடன், அவர்களது பொய்களை அடித்து நொறுக்குகிறது இந்த நூல்.


32. ஸ்ரீ ராமாநுஜரும் சமத்துவமும் 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் எழுதியுள்ள ஸ்ரீராமாநுஜரும் சமத்துவமும் (2023) பல விதங்களில் ஒரு முக்கியமான நூல். நூலாசிரியர் சிறந்த கவிஞர், சிந்தனையாளர். தத்துவம், கலை, இலக்கியம் எனப் பல துறைகளில் ஆழ்ந்து சஞ்சரிப்பவர்.  

மூன்று பகுதிகளாக இந்த நூல் அமைந்துள்ளது. முதல் பகுதியில் உள்ள எட்டு கட்டுரைகளில் “இதுவரையில் யாரும் தொடாத சில விஷயங்களைத் தொட்டிருக்கிறேன்” என்று ஆசிரியரே கூறுகிறார். திருக்கோட்டியூர் நம்பிகளிடமிருந்து அரும்பாடு பட்டுத் தாம் அடைந்த பிரபத்தி என்ற நெறியை, நாம் பொதுவாக அறிந்திருப்பது போல “கோபுரத்தின் மேல்நின்று அனைவரும் கேட்குமாறு” ராமானுஜர் கூறவில்லை, தேர்ந்தெடுத்த சில வைஷ்ணவர்களுக்கு மட்டுமே கூறினார் என்ற ரீதியில் சில சம்பிரதாயவாதிகள் விவரிப்பதை ஆசிரியர் கடுமையாக மறுக்கிறார். 

நூலின் இரண்டாம் பகுதி “ஸ்ரீராமானுஜரின் பெருமை”. இதில் ஸ்ரீவைஷ்ணவ மரபில் ராமானுஜருக்கு உள்ள மையமான, தனிச்சிறப்பு வாய்ந்த இடம் என்பது பல்வேறு நூல்கள் வழியாக நிறுவப்படுகிறது. 

மூன்றாம் பகுதி, திருவரங்கத்தமுதனார் இயற்றிய ஸ்ரீராமானுஜ நூற்றந்தாதியின் 108 பாடல்களுக்குமான முழுமையான விரிவுரை. அமுதனாரின் பெரும்புலமையையும் அவர் இயற்றிய இந்த அருள்நூலை ராமானுஜரே கேட்டு உகந்து அருள் செய்ததையும் உணர்ச்சிகரமாக விவரிக்கிறார் ஆசிரியர்.


33. லோகமாதா ஸ்ரீ அஹில்யாபாய் ஹோல்கர்

இந்திய வரலாற்றில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் அரசாட்சி புரிந்திருக்கின்றனர். இதற்கான அண்மைக்கால உதாரணம் தான், முன்னூறு ஆண்டுகளுக்கு முன் பிறந்து, ஹோல்கர் சமஸ்தானத்தை ஆண்ட ராணி அஹில்யாபாய் ஹோல்கர்.

மராட்டியப் பேரசின் பேஷ்வா இரண்டாவது பாஜிராவ் ஆட்சிக்கு உள்பட்ட சமஸ்தானமான  இந்தூரின் சுபேதார் மல்ஹர்ராவ் ஹோல்கரின் மருமகளாக வந்த ஒரு கிராமத்துச் சிறுமி, அந்த சமஸ்தானத்தின் ராணியாக மாறியதும் அவர் நிகழ்த்திய சாதனைகளும் வியக்கச் செய்பவை. கட்டிய கணவனும் பெற்ற பிள்ளையும் செய்திருக்க வேண்டிய அரசாட்சியை, அவர்களது இழப்பைத் தாங்கிக்கொண்டு அற்புதமாக நிறைவேற்றியவர் அஹில்யாபாய்.

அரசு நிர்வாகம், நீதி பரிபாலனம், போர்ப்பயிற்சி, ராஜதந்திரம், மக்களை நேசித்த தன்மை என பல அம்சங்களிலும் ராணி அஹில்யாபாயின் ஆட்சி  தனித்தன்மை வாய்ந்ததாக விளங்கியது. படிக்க மிகவும் சுவாரசியமான நடையில் எழுதப்பட்டுள்ள அவரது வாழ்க்கை வரலாற்று நூல் இது.


34. விடுதலைப்போரில் அரவிந்தர்

அரவிந்தரின் இளமைப்பருவம், சுதந்திரப் போரில் பங்களிப்பு, சிறைவாசம், குடும்பச்சூழல், ஆன்மிகவாதியாக மாற்றம் ஆகியவற்றை இந்நூலில் திருநின்றவூர் ரவிகுமார் நிரல்பட எழுதி இருக்கிறார். ‘பொருள் புதிது’ இணையதளத்தில் அவர் எழுதிய தொடரின் நூல் வடிவம் இது.

அரவிந்தர் தனது பிரிய மனைவி மிருணாளினி தேவிக்கு எழுதிய கடிதம், அரவிந்தரின் உத்தர்பாரா பேருரை, மகாகவி பாரதி நடத்திய ‘விஜயா’ இதழில் வெளியான அரவிந்தரின் நேர்காணல், அவரது சுதந்திர தின உரை ஆகியனவும், தேவை கருதி இந்நூலில் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்த தேசம் உயர்ந்தோங்குவதற்காக தனது இளமையையும் வாழ்வையும் அர்ப்பணித்த மகத்தான இறைத்தூதர் மகரிஷி அரவிந்தர். அவரது வாக்கு பலிக்க வேண்டுமானால், இந்த தேசம் அவர் கனவு கண்டதுபோல உயர்வடைய வேண்டுமானால், அவரது வரலாறை முதலில் நமது இளைஞர்களும் யுவதிகளும் படிக்க வேண்டும். அதற்கான சிறப்பான முயற்சியே இந்நூல்.


35. வ.வே.சு. ஐயர்

வ.வே.சு.ஐயர் எனப்படும் வரகனேரி வேங்கடேச சுப்பிரமணிய ஐயர் இந்திய விடுதலை வரலாற்றில் நிகழ்த்திய சாகசங்கள் பலரும் அறியாதவை. பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் தலைநகரான லண்டனில் இருந்துகொண்டே, இந்தியாவில் நடந்த  ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்தவர் அவர். புரட்சியாளர்கள் ஷியாம்ஜி கிருஷ்ண வர்மா, மேடம்  காமா, வீர சாவர்க்கர், டி.எஸ்.எஸ்.ராஜன், எம்.பி.டி.ஆச்சார்யா ஆகியோருடன் லண்டனில் இந்தியா ஹவுஸில் தங்கி விடுதலைப் போரில் ஈடுபட்டவர் ஐயர்.

ஐயரின் தேசிய சிந்தனை, சமயப் பற்று, பன்மொழிப்புலமை, ஜாதி பேதமற்ற கொள்கை, சீர்திருத்தக் கருத்துகள் ஆகியவை  நம்மை வியக்கச் செய்பவை. அவரது தமிழ்,  ஆங்கில இலக்கியப் பணிகள் தமிழ்மொழிக்கு வளம் கூட்டுபவை.  அவரது அகால மரணத்தால் தமிழக அரசியல் களம் தீவிர தேசியவாதியை இழந்தது.

தான் வாழ்ந்த 44 ஆண்டுக் காலத்தில், புரட்சியாளர், பத்திரிகையாளர், எழுத்தாளர், அரசியல்வாதி, கல்வியாளர் எனப் பல அவதாரங்களை எடுத்த இந்த மாமனிதரின் வீர வாழ்க்கையை நூலாசிரியர் அனந்தசாய்ராம் ரங்கராஜன் மிகவும் சுவாரசியமாகவும் எளிய நடையிலும் எழுதி இருக்கிறார். பள்ளி மாணவர்கள் படிக்க வேண்டிய அற்புதமான வாழ்க்கை வரலாற்று நூல் இது.


36. பண்டைய இந்திய நாணயங்கள் – ஓர் அறிமுகம் 

இந்தியாவில் பழமையான நூலான அஷ்டாதாயீ (பொ யு மு 5 முதல் 1) மற்றும் அர்த்த சாஸ்திரம் (பொ யு மு 1 முதல் பொ யு பி 1) ஆகியவற்றில் நாணயங்கள் பற்றிய குறிப்புகள் உள்ளன.

மௌரியப் பேரரசு காலத்து நாணயங்கள் கிடைத்துள்ளன. அதன் பிறகு வந்த குப்தர்கள் ஆட்சி காலத்து நாணயங்களில் வீணை வாசிப்பது, வேட்டையாடுவது போன்ற உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. 

தங்கம், வெள்ளி, ஈயம் , செப்பு , போன்ற உலோகங்கள் நாணயத் தயாரிப்பில் பயன்படுத்தப் பட்டுள்ளன. தமிழக நாணயங்கள் சீனா, கிரேக்கப் பகுதிகளிலும் சீன, கிரேக்க நாணயங்கள் இந்தியா, இலங்கையிலும் கிடைத்துள்ளதைக் கொண்டு வர்த்தகப் பரிமாற்றம் இந்தப் பகுதிகளில் நடந்துள்ளதை அறிய முடிகிறது.

பொது யுகத்திற்கு முன்பு தொடங்கி பிரிட்டிஷ் காலம் வரையில் இந்தியாவில் புழங்கிய நாணயங்களைப் பற்றி – ஆங்கிலேயர்கள், பிரஞ்சு , டச்சுக்காரர்கள் வெளியிட்டு இந்தியாவில் புழங்கிய நாணயங்களைத் தவிர – ஒரு எளிய அறிமுகத்தைத் தருகிறது இந்த நூல்.


37. விவேகானந்தம் (மூன்று தொகுதிகள்)

உண்மையில் இன்றைய இந்தியாவின் உருவாக்கத்தில் சுவாமி விவேகானந்தரின் சிந்தனைகளுக்கு பேரிடம் உண்டு. எனவேதான் அவரது 150வது பிறந்த தின ஆண்டு 2012-13 இல் நாடுமுழுவதும் மிகுந்த உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. அச்சமயத்தில் சுவாமி விவேகானந்தரின் சிந்தனைகளை இளைஞர்களிடையே பரப்புவதற்காக தேசிய சிந்தனைக் கழகம் சார்பில்  ‘விவேகானந்தம்150 டாட் காம்’ என்ற இணையதளம் சிறப்பாக நடத்தப்பட்டது. அந்த இணையதளத்தில் தினந்தோறும் சமூகத்தின் பல்வேறு தரப்பில் உள்ள பெரியோர்கள், ஆளுமைகள், சான்றோர்களின் கட்டுரைகள், கவிதைகள் வெளியாகி வந்தன.

சுவாமிஜியின் 150வது ஜெயந்தி கொண்டாட்டங்கள் முடிவடைந்த பிறகு, அந்த இணையதளத்தில் இடம்பெற்ற படைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட சுமார் 190 கட்டுரைகள், கவிதைகளைத் தொகுத்து நூல் வடிவமாக்கும் முயற்சி நடைபெற்றது. அதன்படி, 1,208 பக்கங்கள் கொண்ட 3 தொகுப்புகளாக 2017-இல் வெளியானது. பதிப்பகத் துறையில் நூற்றாண்டு பழமை வாய்ந்த அல்லயன்ஸ் நிறுவனம் இந்தத் தொகுப்பை ‘விவேகானந்தம்’ என்ற பெயரில் பதிப்பித்தது. இந்நூல் தற்போது இரண்டாம் பதிப்பாக அல்லயன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

சுவாமி விவேகானந்தரின் பன்முக ஆளுமையை விளக்குவதாக, சமுதாயத்தின் பன்முக ஆளுமைகள் எழுதிய கட்டுரைகள், கவிதைகள், புகழ்மாலைகள் இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. இந்த நூல் ஒவ்வொரு கல்வி நிலையத்திலும், நூலகத்திலும் இருக்க வேண்டியதாகும். நம் ஒவ்வொருவர் இல்லத்திலும் இருக்க வேண்டிய அரிய கருத்துக் களஞ்சியம் இந்த நூல் ஆகும்.


38. பரமபூஜனீய டாக்டர் ஹெட்கேவாரின் கடிதங்கள்

ஆர்எஸ்எஸ் இயக்கத்தை ஆரம்பித்த டாக்டர் ஹெட்கேவாரின்  72 கடிதங்கள்  இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. அவர் எழுதிய சுமார் 1000 கடிதங்கள் கிடைத்துள்ளன. அவற்றில் தேர்ந்தெடுத்த கடிதங்களின் தொகுப்பானது 1964 இல் தமிழில் வெளியாகியுள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஆர்எஸ்எஸ்  நூற்றாண்டுக் காலத்தில் மறுபதிப்பு கண்டுள்ளது.

டாக்டர் ஹெட்கேவாரின் நகைச்சுவை உணர்வு, எல்லோரிடமும் அன்பு பாராட்டி அரவணைத்துச் செல்வது, பெரியோர்கள் மீது, குறிப்பாக சுதந்திர வீர சாவர்க்கர் மீது, அவருக்கு இருந்த மதிப்பும் மரியாதையும் பல கடிதங்கள் காட்டுகின்றன.

சங்கத்தை வளர்ப்பது தொடர்பான சில நுட்பமான விஷயங்கள், சங்க வளர்ச்சியைப் பற்றி மற்றவர்களுக்கு எடுத்துரைப்பது, அதேவேளையில் போதிய வேகத்தில் வளரவில்லையே என்ற மனக்கிலேசம், சங்கத்தின் தேவை, அதன் மீது செய்யப்படும் அவதூறுகள் பற்றி என்று, சங்கத்தைப் பற்றி மட்டுமின்றி அதை ஆரம்பித்தவரின் ஆளுமையையும் அருமையாக வெளிப்படுத்துகிறது இந்த நூல்.


அடுத்த பக்கம்…