மகாபாரதம் – மாபெரும் உரையாடல்: நூல் அறிமுகம்

-இசைக்கவி ரமணன்

மஹாபாரதத்தில் இல்லாததே இல்லை என்று பொதுவாய்ச் சொன்னாலும், அதன் மையக் கருத்து எதுவென்று பார்த்தால், தர்மம் என்றால் என்ன, மாறிவரும் காலத்தில், தர்மத்தை மனிதன் எவ்விதம் கடைபிடிக்க வேண்டும் என்பதை விரித்தும், அக்கறையோடும் சொல்வதைப் போலத்தான் தெரிகிறது. இந்த மாபெரும் கதையைப் பற்றி எல்லா மொழிகளிலும் நிறைய நூல்கள் வெளிவந்து விட்டன. இன்னும் நிறைய வரும். அந்த நூல்களில், ஹரி கிருஷ்ணன் எழுதியுள்ள ‘மகாபாரதம் - மாபெரும் உரையாடல்’ என்னும் நூல் தொடர்ந்து மின்னும்....

இது ஒரு பொக்கிஷம்!

நம்புவோர்க்கு மஹாபாரதம் நடந்த கதை. இரண்டுதான் இதிஹாசங்கள் எனப்படுகின்றன – இராமாயணம், மஹாபாரதம். இதிஹாசம் என்றால் இது நடந்தது என்று பொருள். எனவே, இது படைப்பைப் பற்றியும், வெட்ட வெளியில் உள்ள பல உணர்வு நிலையங்களில் நடந்த நிகழ்வுகள் பற்றிய குறியீடுகளே முதன்மையாக உள்ள கதைகளும் அடங்கிய புராணம் இல்லை. நன்றாக இதில் திளைத்து இதை எல்லா விதங்களிலும் ஆய்ந்தவர்கள், இதை நமது நாட்டின் நடப்பு வரலாறு (current history) என்றே கொள்கிறார்கள்.

அப்படியானால், மஹாபாரதத்தில் புனைவே இல்லையா? இடைச்செருகல் இல்லையா? யார் சொன்னார்கள் இல்லையென்று! மிகவும் விரிவான ஒரு வரலாற்றுப் பதிவில் இவையெல்லாம் இயல்பானவைதான். ஆனால், இதில் மையமாய்த் தொடரும் கதையின் நிகழ்வுகளைத்தான் நாம் வரலாறு என்கிறோம். அவற்றில் இடம்பெறும் கதாபாத்திரங்கள் பலவிதமானவர்கள். குறைகளும், நிறைகளும் நிறைந்த மனிதர்கள்! வாழ்க்கை என்பது ஓயாமல் மாறிக்கொண்டே இருக்கும் சூழ்நிலைகள்தான். ஒவ்வொரு சூழ்நிலையும் மனநிலையை எப்படி பாதிக்கிறது, மனிதன் எப்படி நடந்து கொள்கிறான் என்பதைப் பொறுத்தே அவனுடைய தரமும், அவனைச் சுற்றிய வாழ்க்கையும் அமைகின்றன. இன்றைக்கும் இதுதான் வாழ்க்கையின் கதை என்பதை மறந்துவிட வேண்டாம்!

மஹாபாரதத்தின் காலகட்டம் பற்றியும் பல்வேறு ஆய்வுகள் உள்ளன. நூலில் இருக்கும் அகச்சான்றுகளின் அடிப்படையில் வானியல், கோளியல் தெரிந்த சில அறிஞர்கள் மஹாபாரதப் போர்க்காலத்தை கி.மு. 3212 என்றும் சிலர் கி.மு. 2568 என்றும் சொல்வார்கள். இவையெல்லாம் ஒருபுறம் இருக்க, பாரத நாட்டில் நூற்றாண்டுகளாக, இன்று வரை, மஹாபாரதம் கேட்கப்படுகிறது, படிக்கப்படுகிறது, ஆராயப் படுகிறது, விமர்சிக்கப் படுகிறது. அதில் வரும் நிகழ்வுகள், மனிதர்கள் இவற்றை வைத்துப் பல புனைவுகள் தொடர்ந்து எழுதப்படுகின்றன. வியாச பாரதமே மூலம். வியாசர் என்றால் தொகுப்பாளி (Editor, compiler) எனலாம். நாம் அவரைப் பற்றியோ, ஒரு கதாபாத்திரத்தைப் பற்றியோ என்ன அபிப்பிராயம் கொள்ளப் போகிறோம் என்பது பற்றிய சஞ்சலமோ (insecurity) அக்கறையோ துளிக்கூட அவருக்கு இருந்ததாகத் தெரியவில்லை! தானறிந்த நடப்புகளை நடந்தவண்ணம் பதிவு செய்வதில் மட்டுமே அவர் இயல்பாக இருந்ததாகத் தெரிகிறது.

மஹாபாரதத்தில் இல்லாததே இல்லை என்று பொதுவாய்ச் சொன்னாலும், அதன் மையக் கருத்து எதுவென்று பார்த்தால், தர்மம் என்றால் என்ன, மாறிவரும் காலத்தில், தர்மத்தை மனிதன் எவ்விதம் கடைபிடிக்க வேண்டும் என்பதை விரித்தும், அக்கறையோடும் சொல்வதைப் போலத்தான் தெரிகிறது.

இந்த மாபெரும் கதையைப் பற்றி எல்லா மொழிகளிலும் நிறைய நூல்கள் வெளிவந்து விட்டன. இன்னும் நிறைய வரும். அந்த நூல்களில், ஹரி கிருஷ்ணன் எழுதியுள்ள ‘மகாபாரதம் – மாபெரும் உரையாடல்’ என்னும் நூல் தொடர்ந்து மின்னும்.

ஹரியின் பார்வை என்ன? இந்த நூல் மூலம் அவர் மஹாபாரதம் பற்றி நாம் என்ன தெரிந்துகொள்ள வேண்டும் என்று விழைகிறார்?

மஹாபாரதத்தை எப்படிப் படிக்க வேண்டும் என்று கற்றுத் தருகிறார், நமக்கு அவர் கற்பிக்கிறார் என்னும் சுமை தெரியாமல். அரைகுறையாகப் படித்துவிட்டு, அரைவேக்காடான கருத்துத் தெரிவிப்பதே இயல்பாகிவிட்ட இந்தக் காலகட்டத்தில், ஆர்வமுள்ள ஒரு மாணவன் இந்த இதிஹாசத்தை நேர்மையாகப் படித்துப் பயிலும் வழியை விரிக்கிறார்.

யாப்பிலக்கணத்தைக் கூட மிகவும் சுவாரசியமாகச் சொல்லக்கூடிய தெளிவும், ஆற்றலும் உள்ள ஹரி, இந்த நெடிய நூலை ஒரு துளியும் அலுப்புத் தட்டாமல் கொண்டு போயிருப்பதில் எனக்கு வியப்பில்லை; மகிழ்ச்சியும், பெருமையும் உண்டு.

ஹரிக்கு இரண்டு முகங்கள் உண்டு. ஒன்று, நம்புவதே வழி என்றிருக்கும் ஆன்மிக முகம். இன்னொன்று, எதையும் ஆழமாகப் படித்து, ஆய்ந்து ஏற்புடையனவற்றை ஏற்று, ஏற்க இயலாததை தயவு தாட்சண்யமின்றிப் புறந்தள்ளும் ஆய்வு முகம். இவையிரண்டும் சேர்ந்து அமைந்தவர்கள் குறைவுதான். இந்த ஒரு காரணத்தினாலேயே ஹரியின் இந்த நூல் அரியநூல் வரிசையில் அதுவாக அமர்கிறது.

பெளராணிகர்கள், நாத்திகர்கள், அரைவேக்காட்டு ஆய்வாளர்கள் இவர்களுடைய பலவிதமான கூற்றுகள், பழிகள், குற்றச்சாட்டுகள் இவற்றுக்கு இந்த நூல் பதில் சொல்கிறது. ஒவ்வொரு வாதமும் ஆதாரங்களுடன் மின்னுவது ஒரு சிறப்பு என்றால், அந்த ஆதாரத்தைத் தான் எங்கிருந்து எடுத்தேன் என்றும் சுட்டிக் காட்டியிருப்பது பெரும்சிறப்பு.

ஹரி, பாரதியின் பாஞ்சாலி சபதத்திற்கு எழுதிய விளக்கவுரை நூலே அவருடைய ஆழ்ந்த புலமையையும், சமரசம் செய்துகொள்ளாத உழைப்பையும், ஆங்கிலத்திலும் அவருக்கிருக்கும் ஆழ்ந்த அறிவையும் அடையாளம் காட்டியது. இந்த நூலும் அதைப்போலவே மிகச் சிறப்பாக இருக்கிறது.

எதையும் விமர்சித்துத் தள்ளிவிடுபவர்களுக்காக ஒன்று சொல்கிறேன். நீங்கள் இந்த நூலை அப்படிப் புறக்கணித்து விட முடியாது. ஹரியைப் போலவே உடனே சுட்டிக்காட்டக் கூடிய ஆதாரங்களைத் துணைக்கு வைத்துக்கொண்டு உங்கள் வாதங்களுடன் வரலாம். அதையெல்லாம் விட்டுவிட்டு, திறந்த மனத்துடன், இந்த நாட்டின் மீது நேசத்துடன் இந்த நூலைப் படியுங்கள் என்றே கேட்டுக் கொள்கிறேன்.

இதிலுள்ள உண்மையின் ஒளி, ஆசிரியனின் நேர்மை, உண்மையைப் பேசவேண்டும் என்கின்ற ஒரே அக்கறை, மிகவும் தெளிவான நடை இவையடங்கிய இந்த நூலை, நான் கீழே வைத்துவிட முடியாத (unputdownable) நூல்களின் வரிசையில்தான் காண்கிறேன்.

இப்படி ஒரு நூலை வெளியிட்டதற்கும், இத்தனை நேர்த்தியாக இதைக் கொணர்ந்ததற்கும் சுவாசம் பதிப்பகத்தாருக்கு என் மனமார்ந்த நன்றி.

பாரதத்தைப் படிக்காமல் பாரதத்தைப் புரிந்துகொள்ள முடியாது என்பார்கள். மஹாபாரதத்தின் சிறப்பு அதில் கண்ணன் மொழிந்த கீதை இடம்பெறுவதால் என்பதைக் காட்டிலும், கீதையைத் தாங்கக் கூடிய சிறப்பு வியாசரின் இந்த நூலுக்குத்தான் உண்டு என்பதே சிறப்பு. எத்தனையோ கீதைகள் தனித்தனி நூல்களாக இருக்கும் நிலையில், பகவத் கீதை மட்டும் தானிருக்கும் இடமாக மஹாபாரதத்தைத் தேர்ந்தெடுத்துக் கொண்டது எதேச்சையான ஒரு நிகழ்வல்ல.

ஹரி இன்னும் பல நூல்கள் எழுதவேண்டும். உண்மையில் விழைவும், இந்த நாட்டின் மீதும் அதன் பண்பாட்டின் மீதும் மரியாதையும், நேசமுமுள்ள மாணவர்கள் பயின்று பலவிதங்களில் பக்குவப்படவும் அவை பெரிதும் உதவும் – இந்த நூலைப் போல்.

நீண்ட ஆயுள், நீடித்த உடல்நலம், நிறைந்த நலங்கள், மனநிறைவு இவையனைத்தையும் பராசக்தி நான் மதிப்புடனும், நேசத்துடனும், நன்றியுடனும் போற்றுகின்ற ஹரிக்கு வழங்குவாளாக.

மகாபாரதம்: மாபெரும் உரையாடல்
ஆசிரியர்: ஹரிகிருஷ்ணன்
வெளியீடு: சுவாசம் பதிப்பகம், சென்னை.
விலை: ரூ. 550-
ஆன்லைனில் இங்கு ஆர்டர் செய்யலாம்.
தொலைபேசி மூலம் ஆர்டர் செய்ய: +91-8148066645

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s