அகமும் புறமும் -4

பேரா. அ.ச.ஞானசம்பந்தன்

‘பழங்கதைகள் பேசுவதிற் பயனில்லை’ எனச் சிலர் கூறக் கேட்கிறோம். அதுவுண்மையே. ஆனால், பழமை பேசுவதால், ஓர் ஊக்கம் பிறக்குமேல், சோம்பர் ஒழியுமேல், ஆண்மை விளங்குமேல் புதிய வாழ்வு தோன்றுமேல், பழமை பேசுவதால் இழுக்கொன்றுமில்லை. நாம் இருக்கும் நாடு நமதென்று அறியவும், இது நமக்கே உரிமையாம் என்பதுணரவும், பழங்கதைகள் வேண்டத்தான் வேண்டும். அதுவும் தமிழரைப் பொறுத்த வரை மிகுதியாக வேண்டும்.

புறம்

4. இலக்கியத்தில் வரலாறு

‘இன்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னர்த் தமிழ் நாட்டில் வாழ்ந்த மக்களைப் பற்றி அறிவது அவசியமா?’ எனச் சிலர் கருதலாம். சரிதம் மீண்டும் மீண்டும் திரும்புகிறதென ஓர் ஆங்கிலப் பழமொழியுண்டு. உலகின் பல்வேறு இடங்களிலும் வாழும் மக்கள், எவ்வளவு சிறிய நாட்டினராயினும், தங்களது பழமையைப் போற்றிக் கலையையும் பண்பையும் வளர்க்க வேண்டுமென்று விரும்புகின்றனர். அங்ஙனம் விரும்புகிற நாட்டினர் பலருக்குப் பழமையான கலைச் செல்வமோ, பண்பாடோ இல்லை. எனினும், என்ன? அவர்கள் ஏதானும் ஒன்றைக் கற்பித்துக் கொண்டு அதனைப் போற்றுகின்றனர். தமிழ்நாட்டில் வாழும் நமக்கு ஒரு சிறந்த பழமை உண்டு. அதை எண்ணுந்தோறும் மனத்தில் ஒரு பெருமிதம் உண்டாகிறது; நாமும் தமிழரெனத் தருக்கித் திரியலாம் எனத் தோன்றுகிறது.

‘பழங்கதைகள் பேசுவதிற் பயனில்லை’ எனச் சிலர் கூறக் கேட்கிறோம். அதுவுண்மையே. ஆனால், பழமை பேசுவதால், ஓர் ஊக்கம் பிறக்குமேல், சோம்பர் ஒழியுமேல், ஆண்மை விளங்குமேல் புதிய வாழ்வு தோன்றுமேல், பழமை பேசுவதால் இழுக்கொன்றுமில்லை. நாம் இருக்கும் நாடு நமதென்று அறியவும், இது நமக்கே உரிமையாம் என்பதுணரவும், பழங்கதைகள் வேண்டத்தான் வேண்டும். அதுவும் தமிழரைப் பொறுத்த வரை மிகுதியாக வேண்டும்.

தமிழ் இலக்கியப் பழமை

கிறிஸ்து தோன்றுவதற்கு முன்னரும், தோன்றி ஒரு நூற்றாண்டுக்குப் பின்னரும் தமிழ்நாட்டில் தோன்றிய நூல்களை பத்துப்பாட்டு, எட்டுத்தொகை எனப் பகுத்தனர். பதினெண் கீழக்கணக்கு என்னும் தொகுதியுள் குறள் நீங்கலாக ஏனைய அனைத்தும் கிறிஸ்துவுக்குப் பல நூற் றாண்டுகட்குப் பின்னர்த் தோன்றியவையே. இம்மூன்று தொகுப்புள்ளும் சில புறப்பொருள் பற்றியன; பல அகப் பொருள் பற்றியன. அகம் என்பது ஒத்த பண்பினராகிய தலைவனும் தலைவியும் தம்முள் மனமொத்து இல்லறம் நடத்தும் இயல்பினை இயம்புவது. இதனையொழிந்த வாழ்க்கையெல்லாம் புறத்தின் கண் இடம் பெறும். மனித வாழ்க்கையை முற்றுங்கண்ட தமிழன், வீட்டினுள் வாழும் வாழ்க்கை, வெளியே வாழும் வாழ்க்கை என இரண்டு பெரும் பிரிவுகளை வகுத்தான். வாழ்வு முழுதும் இவற்றில் அடங்கிவிடுதல் காண்க.

முதலாவதாக உள்ள வீட்டு வாழ்க்கை என்று கூறப்படும் ‘அகத்திணை’யை ஏழு சிறுபிரிவுகளாகப் பிரித்தான் தமிழன். இனி, அவனது புற வாழ்க்கையில் அவன் எங்ஙனம் வாழ்ந்தான் என்பதை இப்பொழுது காண்போம்.

புறவாழ்வின் அடிப்படை

மனிதனின் புற வாழ்வுக்கு இன்றியமையாது வேண்டப்படுபவை, நாடு, ஊர், அரசன், சமுதாயம் என்பவையேயாம். பல ஊர்கள் சேர்ந்த ஒரு பெருநாட்டை அரசியல் பிழையாது ஓர் அரசன் ஆட்சி செய்வானேயாகில், அங்குச் செம்மையான ஒரு சமுதாயம் ஏற்பட வழியுண்டு. நாடு, ஊர் என்ற இரண்டும் மனிதன் உடல் உரம் பெற்று வாழவும், அரசன் சமுதாயம் என்ற இரண்டும் அவன் மனம் உரம் பிற்று வாழவும் பயன்படுகின்றன. இவை நான்கும் செம்மையாயிருப்பின், தனி மனிதன் வாழ்க்கை செம்மைப்படும். செம்மை தனித் தனியே ஏற்படின், சமுதாயம் செம்மையடையும். எனவே, இவை ஒன்றைப் பற்றி நிற்பவை என்பது தெள்ளிதின் விளங்கும்.

கவிஞன் தோன்றும் நாடு

நாடு சிறந்ததென்று சொல்லும்பொழுது நாம் அதில் வாழும் மக்களையே குறிக்கிறோம். இக் கருத்தை ஔவையார் புறநானூற்றுப் பாட்டு ஒன்றில் பின்வருமாறு அழகாகக் குறி்க்கிறார்:

நாடா கொன்றோ, காடா கொன்றோ,
அவலா கொன்றோ, மிசையா கொன்றோ,
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை, வாழிய நிலனே!" 

    (புறம்-187)

(நிலமே, நீ நாடாக இருப்பினும், காடாக இருப்பினும் சரி; பள்ளமாக இருப்பினும், மேடாக இருப்பினும் சரியே; எங்கே நல்லவர்கள் உண்டோ, அங்கேதான் நீயும் நல்லை.)

எனவே தமிழன் வாழ்க்கை அன்று நன்றாயிருந்த தென்றால், அதற்குப் பல காரணங்கள் இருந்தன. தமிழ் நாட்டில் தமிழ் மொழி அரசு வீற்றிருந்தது. நாட்டில் வேளாளரும், வணிகரும் செல்வங்கொழிக்கச் செய்தனர்.

வறுமை என்பதே தலை காட்டாத நாட்டில் அறிவு வளமும், ஏனைய வளங்களும் கொழித்தல் இயல்பு. எலிசபெத்து மகாராணியார் காலத்தில் இங்கிலாந்து செழிப்புற்றிருந்தமையின், பற்பல கவிஞர் தோன்றி வாழ்ந்தனர் எனச் சரிதங் கூறுகிறது. அதேபோலத் தமிழ்நாட்டில் அற்றை நாளில் பல புலவர் தோன்றி வாழ்ந்தனர். காரணமென்ன? புலவனுடைய உயிரும் மனமும் மிக நுண்மையானவை. அவை அடிமை நாட்டில் தோன்றுவதில்லை. ஒரோ வழித் தோன்றினாலும்,நிலைத்து வாழ்வதில்லை. கலைஞன் மனம் பரந்தும் விரிந்தும் இருப்ப தாகும். அத்தகைய மனநிலையை அடிமையாக வாழ்பவர்கள் போற்றுவதில்லை. குறுகிய மனப்பான்மையும், பிளவுபட்ட மனமுமே அடிமை நாட்டின் அடிப்படை இதில் எவ்வாறு கவிஞன் தோன்ற முடியும்? இன்றைய நிலையில் தமிழனுடைய உயர்ந்த மனப்பான்மையும் குறிக்கோளும் காணப்படவில்லை. தமிழன் பழைய நிலைக்கு வரவேண்டுமானால் நாட்டில் அறிவு வறுமையும் பொருள் வறுமையும் ஒருங்கே தொலைய வேண்டும்.

தமிழ் நாகரிகத் தொன்மை

உலகின் பிற பகுதிகளில் வாழ்ந்த மக்கள், கூடிவாழும் நாகரிகத்தைக்கூட அடையாத அந்தப் பழைய காலத்திலேயே இத்தமிழர் நாகரிகத்தில் முதிர்ந்திருந்தனர். அப் பகுதிகளில் உள்ளவர்கள் தனித்து வாழ்ந்து வேட்டையாடி உயிர் வாழும் சமுதாய வாழ்வின் அடிப்படையான மருத நாகரிகத்தை அடைந்துவிட்டனர். குறிஞ்சி நாகரிகத் திலிருந்து மருத நாகரிகத்திற்கு வர எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆகியிருக்குமோ, நாம் அறியோம். அவ்வளவு பழைய காலத்திலேயே இத்தமிழினம் நாடாளும் நாகரிகம் பெற்றுவிட்டது என்பதை உறுதியாகக் கூறலாம்.

பிற நாடுகளைப்போல எழுதி வைக்கப்பட்ட சரித்திரம் தமிழர்க்கு இல்லை என்பது மெய்ம்மையே. ஆனால், எத்தகைய சரித்திரம் தமிழரிடம் இல்லை? தேதிவாரியாக எழுதப்பட்ட அரசர்கள் கதைகள்தாமே இன்று சரித்திரம் என்ற பெயரால் வழங்கப்படுகின்றன. இக்கதைகளே சரித்திரம் என்று கூறினால், தமிழர் சரித்திரம் இல்லைதான். “சரித்திரம் என்பதற்குத் தேதிகளே கண்கள், என்று கூறினால், தென்னாட்டுச் சரித்திரம் என்றுமே குருடாக இருக்க வேண்டுவதுதான். ஆனால், ‘சரித்திரம் என்பது மக்கள் வாழ்க்கை, நாகரிகம், குறிக்கோள் என்பவைபற்றிக் கூறுவதுதான்’ என்று கூறினால், தென்னாட்டின் பழங்கால வரலாற்றை ஆயப் பல குறிப்புகள் பழந்தமிழ்ப் பாடல்களில் நிரம்ப உண்டு” என எழுதினார் சரித்திரப் பேராசிரியர் பி.டி. சீனிவாச ஐயங்கார். இவை எவ்வளவு உண்மையான சொற்கள்!

எது சரித்திரம்?

இன்று நாம் சரித்திரம் என்ற பெயரில் எதனைப் படிக்கிறோம்? எலிசபெத்துக் காலத்து இங்கிலாந்து தேச சரித்திரத்தை அறிய விரும்பி ஒருவன் சரித்திரத்தைக் கையிலெடுத்தால், அவன் அங்குக் காண்பது யாது? அந்த நாளைய ஆங்கிலர்கள் எவ்வாறு வாழ்ந்தார்கள், எவற்றை உண்டார்கள், எவற்றை நினைத்தார்கள், எவற்றைக் குறிக்கோள்கள் என மதித்தார்கள், ஸ்பானியர்களைத் தோற்கடித்தமையின் அவர்கள் வாழ்வில் என்ன மாறுதல் கள் ஏற்பட்டன என்பவை பற்றி அறிய முடியுமா? இவை பற்றி அறிய வேண்டும் என்ற கருத்துடன் ஒருவன் இங்கிலாந்து தேச சரித்திரத்தைத் திறந்து பார்த்தால் என்ன இருக்கும்? மேற்கண்ட வினா ஒன்றுக்காவது விடை கிடைக்குமா? உறுதியாகக் கிடையாது. அதன் மறுதலையாக எலிசபெத்தின் வாழ்நாளில் அவள் எத்தனை கையெழுத்துக்களிட்டாள், எத்தனை சூழ்ச்சிகள் நடைபெற்றன என்பன பற்றியே எழுதப்பட்டிருக்கும். இவற்றைப் படித்துவிட்டு இங்கிலாந்து சரித்திரத்தைக் கற்று விட்டதாக நாமும் இறுமாந்து நிற்கின்றோம்! என்னே அறியாமை!

ஸ்பானியரை வெற்றி கொண்டதற்கு எலிசபெத்து அடைந்த மகிழ்ச்சி பற்றி நமக்குக் கவலையில்லை. ஆனால், இலண்டன் போன்ற நகரத்தில் வாழ்ந்த மனிதனும் கிராமத்தில் வாழ்ந்த மனிதனும், ஏழையும் பணக்காரனும், நிலச்சுவான்தாரும் அவன் பண்ணை யாளும் இவ்வெற்றி பற்றி யாது நினைத்தனர் என்பதை அறிய விரும்பினால், இச்சரித்திரப் புத்தகம் அதுபற்றி யாதொன்றும் கூறாது. இப்படி ‘ராஜா மந்திரி’ கதையைத் தேதிவாரி கூறும் சரித்திரம் தமிழர்கட்கு இல்லை என்பது மெய்ம்மைதான். ஆனால், தமிழ் மக்களுடைய வாழ்வைப் படம் பிடிக்கும் சரித்திரம் நிரம்ப உண்டு. இச்சரித்திரம் ஏனைய சரித்திரங்கள்போல உரைநடையில் இல்லாமல், கவிதையில் இருப்பது ஒரு வேறுபாடு. அதிகமாக மன்னர்களைப்பற்றி மட்டும் கூறாமல், பொதுமக்களைப் பற்றியும் பேசுவது இரண்டாவது வேறுபாடு. யாரும் பிறந்த தேதியையோ இறந்த தேதியையோ பற்றி ஒரு சிறிதும் கவலைப்படாமல் இருந்தது மூன்றாவது வேறுபாடு.

தனிப்பட்டவர் வரலாறு இல்லை

வருடம், மாதம், தேதி என்ற இம்மெய்ம்மை பற்றித் தமிழர் அதிகம் கவலைப்பட்டதாகவே தெரியவில்லை. தமிழர் தம்முடைய நாகரிகமும் பண்பாடும் ஒரு சங்கிலித் தொடர் போன்றவை என்று நினைத்தார்கள் போலும்! தனிப்பட்ட மனிதர் எத்துணைச் சிறப்புடையவராயினும், அவரைப்பற்றிக் கவலைப்பட்டதாகவும் தெரியவில்லை.

அவர்கள் செய்த நற்செயல்களைக்கொண்டே அவர்கள் பெருமையைக் கணக்கிட்டனர். திருக்குறள் என்ற நூல் தமிழன் வாழ்வு, நாகரிகம், பண்பாடு, சமுதாயம் என்பவற் றோடு தனி மனிதனும் சிறப்படைய உதவிற்று என்ற உண்மையை அவர்கள் மறக்கவுமில்லை; மறுக்கவும் இல்லை. ஆனால் திருக்குறளை இயற்றிய ஆசிரியர் இந்நூலை இயற்றியருளியது தவிர வேறு சமுதாயத்திற்கு என்ன உதவியைச் செய்திருத்தல் கூடும்? எனவே திருவள்ளுவருடைய பிறப்பு வளர்ப்பு முதலியன பற்றி அப் பழந்தமிழன் ஒன்றுமே குறித்து வைக்கவில்லை. திருக்குறள் செய்த உதவிக்கு நன்றி பாராட்டிய தமிழர்கள் அதற்காக அதனைப் பெருமைப்படுத்திப் பேசிய தமிழர்கள், அதன் ஆசிரியருடைய இயற்பெயரைக்கூட அறிந்துகொள்ளா மலும், குறித்து வைக்காமலும் இருந்ததற்கு இதுவே காரணம் போலும்! நெடுஞ்செழியன் போன்ற வெற்றி வீரர்களையும், கரிகாலன் போன்ற பேரரசர்களையும் பற்றிப் பாடிய பாடல்களிற்கூட அவர்கள் வெற்றியைப் பாராட்டினார்கள். ஆனால், இக்காலச் சரித்திரம் போன்றவை அல்ல இப்பாடல்கள்.

உண்மைச் சரித்திரம்

இன்ன நாளில் இன்ன இடத்தில் இவ்விருவரின் இடையே போர் நடைபெற்றது என்று கவிஞர் குறிப்பதில்லை. அதன் மறுதலையாக, இப்போரினால் இப்பயன் ஏற்பட்டது என்பதை மறைமுகமாகவும், குறிப்பாகவும் வெளியிட்டனர். எனவே, தனிப்பட்ட வருடையவும், சமுதாயத்தினுடையவுமான வாழ்வு, தாழ்வு, போராட்டம், எண்ணம், குறிக்கோள் முதலியவை பற்றி அறியவேண்டுமானால், எண்ணற்ற சரித்திரக் குறிப்புகள் உண்டு. தமிழ்ப் பாடல்களில் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை போன்ற நூல்களில் இத்தகைய குறிப்புக்களைப் பரக்கக் காணலாம். இவற்றை அடிப்படையாகக் கொண்டு தமிழருடைய சரித்திரத்தை எழுதுவது பெரிதும் பயனுடைய செயலாக இருக்கும்.

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s