-வ.மு.முரளி
திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் உச்ச நீதிமன்ற மாண்பைக் குலைக்கும் வகையில் செயல்பட்டிருக்கும், தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் தவெக அரசு உடனடியாக டிஸ்மிஸ் செய்யப்பட வேண்டும். இது காலத்தின் தேவையாகும்.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், அதனை நிறைவேற்றுவதாக மதுரை மாவட்ட ஆட்சியர் உயர் நீதிமன்றத்தில் வாக்குறுதி அளித்திருந்த நிலையில், இந்த ஆண்டும் தீபத் தூணில் திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்படவில்லை. சென்ற ஆண்டைப் போலவே திருப்பரங்குன்றம் மலையில் உள்ள உச்சிப் பிள்ளையார் கோயிலின் மோட்சதீப மண்டபத்தில் மகாதீபம் ஏற்றப்பட்டுள்ளது.
இந்த விஷயம், சட்டத்தின் ஆட்சிக்கு தமிழக அரசே சவால் விடுவதாக அமைந்துள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவை ஒரு மாநில அரசே மீறினால், சாமானிய மக்கள் நீதித்துறை மீது எவ்வாறு நம்பிக்கை வைப்பார்கள்?
தமிழக மக்களின் உரிமைகளுக்காக மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் பல வழக்குகளை நடத்துகிறது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பை ஏற்காத தமிழக அரசுக்கு வரும் நாட்களில் இதே நீதிமன்றத்திடம் நீதியைக் கோரும் தார்மிக உரிமை இருக்கிறதா?
ஒரு மாநில முதல்வரே, நீதிமன்றத் தீர்ப்புகளைப் புறந்தள்ளி ஒரு தரப்பினருக்கு (ஹிந்துக்களுக்கு) எதிராக பாரபட்சமாக நடப்பாரானால், அனைவருக்கும் சமமான நிர்வாகம் என்ற பதவிப்பிரமாண உறுதிமொழி பொய்தானா?
நீதிக்குத் தலைவணங்கி அமைதியாக இருப்பதுதான் ஹிந்து பக்தர்கள் செய்யும் பிழையா? யாருக்கும் கட்டுப்படாத வன்முறையாளர்களுக்கு மட்டும் தான் அரசு நிர்வாகம் செவி சாய்க்குமா?
தொடரும் போராட்டம்:
திருப்பரங்குன்றம் மலையுச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏஏற்ற வேண்டும் என்று ஹிந்து பக்தர்கள் பல்லாண்டுகளாகப் போராடி வருகிறார்கள். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலேயே இந்தப் போராட்டம் நடந்திருக்கிறது. அண்மையில், 1990களில் இந்தப் போராட்டம் மீண்டும் உயிர்பெற்றது. கடந்த ஆண்டு மதுரையைச் சேர்ந்த ராம. ரவிகுமார் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்குத் தொடுத்தபோது, இந்த விவகாரம் திருப்பம் கண்டது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், மனுதாரரின் கோரிக்கையை கோயில் நிர்வாகம் நிறைவேற்ற வேண்டுமென கடந்த ஆண்டு டிச. 1-ஆம் தேதி உத்தரவிட்டார். ஆனால், அந்த உத்தரவை முந்தைய திமுக அரசு நிறைவேற்றாமல் நயவஞ்சகம் செய்தது.
மேலும் அந்தத் தீர்ப்பை எதிர்த்து, மாவட்ட நிர்வாகம், கோயில் நிர்வாகம் சார்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மேல்முறையீட்டு மனுக்கள் நீதிபதிகள் ஜி. ஜெயசந்திரன், கே.கே. ராமகிருஷ்ணன் அமர்வில் விசாரிக்கப்பட்டது. விசாரணையின் நிறைவில், தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து, இரு நீதிபதிகள் அமர்வு கடந்த ஜன. 6-ஆம் தேதி உத்தரவிட்டது.
இந்நிலையில், தேர்தலுக்குப் பிறகு ஆட்சி மாறியதால் காட்சிகள் மாறும் என்று முருக பக்தர்கள் நம்பிக்கையுடன் காத்திருந்தனர்; தவெக அரசு முந்தைய திமுக அரசு போல ஹிந்துக்களுக்கு பாரபட்சமோ ஓரவஞ்சனையோ காட்டாது என்றே நம்பி இருந்தனர். அந்த நம்பிக்கையில் ஜோசப் விஜய் அரசு மண்ணள்ளிப் போட்டிருக்கிறது.
கார்த்திகை தீபம் நெருங்கிய நிலையில், சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வின் உத்தரவை ரத்து செய்யக் கோரி, மதுரை மாவட்ட நிர்வாகம், திருப்பரங்குன்றம் கோயில் நிர்வாகம், திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்கா நிர்வாகம் உள்ளிட்டவை சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
அந்த மனுக்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அரவிந்த்குமார், விபுல் எம். பஞ்சோலி அமர்வில் விசாரிக்கப்படுகிறது. உயர் நீதிமன்றத் தீர்ப்பை முழுமையாக விசாரிக்க நேரமின்மையைக் கருதி, தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதித்தபோதும், “நிகழாண்டு கார்த்திகை தீப திருநாளன்று (நவ. 24) மட்டும் திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தூணில் கோயில் நிர்வாகம் சார்பில் தீபம் ஏற்ற வேண்டும்” என கடந்த வெள்ளிக்கிழமை (நவ. 20) நீதிபதிகள் இடைக்கால உத்தரவைப் பிறப்பித்தனர். தவிர, இந்த உத்தரவை நடைமுறைப்படுத்தியதற்கான அறிக்கையை மதுரை மாவட்ட ஆட்சியர் உச்ச நீதிமன்றத்தில் 27ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தனர்.
உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவை மறுபரிசீலனை செய்யக் கோரி, தமிழக அரசு சார்பில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அந்த மனு விசாரிக்கப்படவே இல்லை. எனவே உச்ச நீதிமன்ற உத்தரவு செயல்பாட்டு நிலுவையில் இருந்தது; மாநில அரசுக்கு உச்ச நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தியாக வேண்டிய கட்டாயம் இருந்தது. திருப்பரங்குன்றத்தில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட இடத்தில் தீபம் ஏற்றப்படும் என முருக பக்தர்களும் ஆர்வத்துடன் காத்திருந்தனர்.
அதேசமயம், மதுரை மாவட்டத்தில் 144 தடை உத்தரவை எதிர்த்து தாக்கலான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், எம்.டி.சுமதி கொண்ட அமர்வு, உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. மாவட்ட ஆட்சியரும் அதற்கு ஆவன செய்வதாக நீதிமன்றத்தில் உறுதி அளித்திருந்தார்.
இந்த நிலையில், தீபத்தூணில் தீபம் ஏற்றாமல், தவெக அரசு மோசடி செய்திருக்கிறது. சட்டம் ஒழுங்கை காரணம் காட்டியும், அறங்காவலர் குழுவின் முடிவைக் காட்டியும் இந்த வரலாற்றுத் தவறை ஜோசப் விஜய் அரசு செய்திருக்கிறது. இது வன்மையான கண்டனத்துக்கு உரியது மட்டுமல்ல, ஆட்சியையே இழப்பதற்கு உரிய குற்றமாகும்.
நமது மக்களாட்சி முறையில் உச்ச நீதிமன்றம் உயர்ந்த அதிகாரம் படைத்தது. இந்திய அரசியல் சாசனத்தின் உண்மையான காவலர் உச்ச நீதிமன்றம் தான். அந்த நீதிமன்றத்தின் உத்தரவையே தவெக அரசு தமிழகத்தில் காலடியில் போட்டு மிதித்திருக்கிறது. இது நமது நாட்டில் சட்டத்தின் ஆட்சிக்கு விடுக்கப்பட்ட வெளிப்படையான சவாலாகும். இதனை மத்திய அரசும் உச்ச நீதிமன்றமும் அனுமதிக்கக் கூடாது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பு அவமதிக்கப்படுவது, மக்களாட்சியை வலுவிழக்கச் செய்துவிடும்.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்துமாறு உயர்நீதிமன்றம் எச்சரித்த பிறகும் இறுமாப்புடன் அதனை நிராகரித்த ஜோசப் விஜய் அரசு உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும்; தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தி, சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை உச்ச நீதிமன்றமும் மத்திய அரசும் மேற்கொள்ள வேண்டும்.

அம்பலமான வேடங்கள்:
இந்தப் பிரச்சினை தவெக அரசின் மேலும் பல பொய்முகங்களைத் தோலுரித்திருக்கிறது:தவெக தலைவரும் நடிகருமான ஜோஜப் விஜய் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு மாற்றாக இருப்பார் என்ற நம்பிக்கையில் தான், சென்ற சட்டசபைத் தேர்தலில் தமிழக மக்கள் அவருக்கு வாக்களித்தனர். ஆனால், முந்தைய திமுக அரசின் பாதையிலேயே தவெகவும் செல்கிறது. குறிப்பாக ஹிந்துக்களைக் குறித்த இவ்விரு கட்சிகளின் பார்வையும் ஒன்றாகவே உள்ளது. இது வாக்களித்த மக்களுக்குச் செய்யும் மாபெரும் துரோகமாகும்.
- இந்த விஷயத்தில் உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தபோது, அதை அமல்படுத்த வேண்டிய அதிகாரியாக மதுரை மாவட்ட ஆட்சியரை நியமித்தது. ஆனால், ஆட்சியர் சுதந்திரமாகச் செயல்பட விடாமல், நிர்பந்தங்கள் மூலமாக அரசு நிர்வாகத்தை முடக்கியது தவெக அரசின் மாபெரும் குற்றமாகும். அரசு அதிகாரிகள் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையால் பாதிக்கப்படும்போது மாநில அரசு என்ன செய்யப் போகிறது?
- உச்ச நீதிமன்ற இடைக்கால உத்தரவை எதிர்த்து இஸ்லாமிய அமைப்புகள் எந்தக் கட்டுப்பாடுமின்றி மனம் போன போக்கில் பேசினார்கள். அவர்களில் சிலர் போராட்ட மேடையிலேயே பொதுஅமைதிக்கு சவால் விடும் வகையில் மிரட்டல் விடுத்தார்கள்; நீதித்துறையை அவமதித்தார்கள். அவர்களை தவெக அரசு கண்டும் காணாமல் ஆதரவளித்தது. அதே சமயம், திருப்பரங்குன்றத்தில் லட்சக் கணக்கான பக்தர்கள் கூடும் தீபத் திருநாளில் 144 தடை உத்தரவு பிரயோகிக்கப்பட்டது. இது மதரீதியான பாரபட்சத்தின் உச்சமாகும். ஜோசப் விஜய் அனைவருக்குமான முதல்வராகச் செயல்படவில்லை.
- உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த விரும்பி இருந்தால் தவெக அரசு இருதரப்பு சமரசக் கூட்டங்களை நடத்தியிருக்கும். அப்படி ஒரு முயற்சி செய்யப்படவே இல்லை. மாறாக கலவரச் சூழலையே மாநில அரசு உருவாக்கியது. திருப்பரங்குன்றம் கிரிவலப்பாதையை மறித்து காவல் துறை வாகனங்களை நிறுத்தியது திட்டமிட்ட உள்நோக்கம் கொண்டதாகும். மதுரை மாநகரத்தின் தெற்கு காவல் துணை ஆணையரான ஏ.ஜி. இனிகோ திவ்யன் கழுத்தைச் சீவுவது போல சைகை காட்டிச் சென்றார். ஆகவே இந்த அரசு, தெளிவான முன்முடிவுடன் தான், வேண்டுமென்றே நீதிமன்றத் தீர்ப்பை உதாசீனப்படுத்தி இருக்கிறது என்பது உறுதியாகிறது.
- தவெக அரசின் கூட்டணிக் கட்சிகளின் நிர்பந்தங்களால் முதல்வர் ஜோசப் விஜய் இந்த முடிவை எடுத்ததால், அவர் தமிழக வரலாற்றில் கரும்புள்ளியாக இடம் பிடித்திருக்கிறார். மக்களிடையே இணக்கத்தை உருவாக்க வேண்டிய முதல்வர் ஜோசப் விஜய்யும் அவரது அமைச்சரவை சகாக்களும், மக்களிடையே பிளவை ஏற்படுத்துவதில் தான் குறியாக இருந்தார்கள். இதில் முந்தைய திமுக அரசை விட தாங்கள் ஒரு படி மேல் என்று நிரூபிக்கவே அவர்கள் முயன்று கொண்டிருந்தார்கள்.
- மதுரை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பித்ததைக் காரணம் காட்டி, மாநிலம் முழுவதும் ஹிந்து இயக்க நிர்வாகிகளை வீட்டுக் காவலில் வைத்தது, திருப்பரங்குன்றம் நோக்கி வந்த பக்தர்களையும் ஹிந்து இயக்க நிர்வாகிகளையும் பாஜகவினரையும் நடுவழியில் கைது செய்தது போன்ற காவல் துறையின் செயல்பாடுகள், சற்றும் பொருளற்றவை; சட்ட விரோதமானவை. இது தனிமனித வழிபாட்டு உரிமையையும் வாழ்வுரிமையையும் பறிக்கும் செயலாகும். இதற்குக் காரணமான தவெக அரசு தண்டிக்கப்பட வேண்டும்.
- இந்த வழக்கு விசாரணைகளின் போது நீதிமன்றத்தில் தவெக அரசு முன்வைத்த வாதங்கள் அனைத்தும் சிறுபிள்ளைத்தனமானவை. தீபத் தூணை நில அளவைக்கல் என்று அரசு தொடர்ந்து சொல்லி வருவதும், இந்து அறநிலையத் துறை தனது முந்தைய நிலைப்பாடுகளுக்கு எதிராகச் செயல்படுவதும் அரசு நிர்வாகத்தை கேலிக்குரியதாக்கி இருக்கின்றன. சிறுபான்மையினரை தாஜா செய்ய எந்த எல்லைக்கும் செல்ல தவெக அரசு தயாராக இருக்கிறது. இந்த அரசிடம் பெரும்பான்மை மக்களுக்கு நியாயம் கிடைக்காது.
மொத்தத்தில், மாநிலத்தை ஆள்வதற்கான நம்பகத்தன்மையையும், நடுநிலையான பார்வையையும், சட்டத்தைக் காக்கும் கடமையையும் முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு இழந்துவிட்டது. எனவே, உச்ச நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாமல் அவமதித்த இந்த அரசு டிஸ்மிஸ் செய்யப்பட வேண்டும். இது ஒன்றே சட்டத்தின் ஆட்சிக்கு நாட்டு மக்களிடையே மரியாதையைப் பெற்றுத் தரும்.
முந்தைய திமுக அரசு உயர் நீதிமன்ற உத்தரவை 2025இல் காலில் போட்டு மிதித்தது. என்றபோதும், அதற்கு உச்ச நீதிமன்றம் செல்லும் வாய்ப்பு இருந்ததால் உச்சகட்ட சட்ட நடவடிக்கையில் பிழைத்தது. அதேசமயம் உயர் நீதிமன்ற அவமதிப்பிற்காக மாநில அரசு அதிகாரிகள் மதுரை அமர்வில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியதை மறக்க முடியாது. தற்போது தவெக அரசு 2026இல் செய்திருப்பது உச்ச நீதிமன்ற அவமதிப்பு. எனவே, இதனை உச்ச நீதிமன்றம் சாதாரணமாகக் கடந்துபோகாது என்று நம்புவோம்; தக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்துவோம்!
$$$
காண்க:
- திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றவில்லை: பக்தர்கள் ஏமாற்றம்
- திருப்பரங்குன்றம் தீபம்: கோயில் நிர்வாகம் அநியாய விளக்கம்
- திருப்பரங்குன்றம் தீபத்தை உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி ஏற்றுக!
- திருப்பரங்குன்றத்தில் இருப்பது சர்வே தூண் என்கிறது தமிழக அரசு!
- திருப்பரங்குன்றம் தீப வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சீராய்வு மனு
- திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்றலாம்!
$$$