-திருநின்றவூர் ரவிகுமார்
நவராத்திரி, விஜயதசமியை முன்னிட்டு தேவி வழிபாடு இங்கே இடம்பெறுகிறது. இது மூன்றாம் நாள்…

3. சந்த்ரகண்டா
பிண்டஜப்ரவராரூடா சண்ட கோபாஸ்த்ரகைர்யுதா । ப்ரஸாதம் தநுதே மஹ்யம் சந்த்ரகண்டேதி விஶ்ருதா ॥ ..3..
பொருள்: சந்திரகண்டா என்று புகழ்பெற்ற தேவியே! சிறந்த வாகனமான சிங்கத்தின் மேல் வீற்றிருக்கும், கொடிய ஆயுதங்களால் அலங்கரிக்கப்பட்டவள், எனக்கு அருள் புரியட்டும்.
துர்கையின் மூன்றாவது வடிவு சந்திரகண்டா. நவராத்திரியின் மூன்றாவது நாளில் இவளது வடிவமே ஆராதிக்கப்படுகிறது. இந்த வடிவம் பக்தர்களுக்கு உன்னதமான அமைதியையும், மேலான நன்மையையும் அளிக்கிறது. அவளின் நெற்றியில் மணி வடிவில் அரைச்சந்திரன் விளங்குகிறது. அதனால் அவள் சந்திரகண்டா என அழைக்கப்படுகிறாள். அவளின் உடல் பொன் போன்ற பிரகாசத்துடன் உள்ளது.
அவளுக்கு பத்து கரங்கள். அந்தக் கரங்களில் வாள், அம்பு போன்ற பல்வேறு ஆயுதங்களையும் அஸ்திரங்களையும் ஏந்தியிருக்கிறாள். அவளின் வாகனம் சிங்கம்.
எப்போதும் போருக்குத் தயாராக நிற்கும் நிலையில் இருப்பவள். அவளின் சத்தம் மணி ஒலி போல முழங்குகிறது. அது அசுரர்களையும், தானவர்களையும், ராக்ஷஸர்களையும் நடுங்க வைக்கிறது.
நவராத்திரியின் மூன்றாம் நாள் பூஜைக்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு.
அந்நாளில் சாதகரின் மனம் மணிபூரகச் சக்ரத்தில் நிலை கொள்கிறது.
இந்த நிலையில், அம்மையின் அருளால், அவன் அற்புதமான, தெய்வீகமான காட்சிகளைப் பார்க்கிறான். தெய்வீக மணங்களை உணர்கிறான்; பரவலான தெய்வீக ஒலிகளையும் கேட்கிறான். இந்த நாளில், இந்நிலையில், சாதகர் மிகவும் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். அம்மையின் அருளால் பாவங்கள் அனைத்தும் எரிக்கப்படுகின்றன; தடைகள் அகற்றப்படுகின்றன. அவளது பூஜை உடனடியாக பலனைத் தரும். எப்போதும் போருக்குத் தயாராக இருக்கும் அவள், பக்தர்களின் கஷ்டங்களை உடனே நீக்குகிறாள். அவளின் வாகனம் சிங்கம் என்பதால், அவளை வணங்குபவரும் சிங்கத்தைப் போல் வீரத்துடனும் அஞ்சாத தன்மையுடனும் இருப்பார்.
அவளது மணி ஒலி எப்போதும் பக்தர்களைத் தீய ஆவிகளிடமிருந்து காக்கிறது.
சாதகர் அவளைத் தியானித்தவுடன், அவளது மணி ஒலிக்கத் தொடங்கி, பக்தரைப் பாதுகாக்கிறது.
அவள் எப்போதும் அசுரர்களை அழிப்பதில் உலைவின்றி இருந்தாலும், தன் பக்தர்களுக்கு மிகவும் சாந்தமானவளும், கருணையுள்ளவளும், அமைதியானவளும் தோன்றுகிறாள்.
அவளை வணங்குபவர்களிடம் வீரமும், அஞ்சாத தன்மையும், அதேசமயம் சாந்தமும் பணிவும் தோன்றுகின்றன. அவர்களின் முகமும், கண்களும், உடலும் பிரகாசமாக மிளிர்கின்றன. அவர்களின் குரல் தேனினும் இனிமையாக மாறும். அவர்கள் எங்கு சென்றாலும் அமைதியையும், அருளையும் பரப்புகிறார்கள். அவர்களின் உடலிலிருந்து புலப்படாத தெய்வீக ஒளி (தேஜஸ்) வீசும். இதை ஊனக்கண்களால் காண முடியாது; ஆனால் சாதகரும், அவருடன் இருப்பவர்களும் அனுபவிக்கிறார்கள்.
ஆகவே, மனம், சொல், செயல், உடல் ஆகியவற்றை பரிசுத்தப்படுத்தி, சந்திரகண்டா தேவியின் திருவடியில் சரணடைந்து பூஜை செய்ய வேண்டும். அவ்வாறு பூஜை செய்வதன் மூலம், உலகின் துன்பங்களிலிருந்து விடுபட்டு, பரம்பொருளை எளிதில் அடையலாம்.
தாயின் புனித உருவத்தை எப்போதும் தியானித்தால், ஆன்மிகப் பாதையில் முன்னேற்றம் அடையலாம். அவ்வாறு தியானித்தால், இம்மையிலும், மறுமையிலும் உயர்ந்த நன்மையை அடையலாம்.
(தொடர்கிறது)
$$$