-ராம் மாதவ்

“அனேகமாக எல்லா மனிதர்களும் கஷ்டமான சூழ்நிலையை எதிர்கொண்டிருப்பார்கள். ஆனால் ஒரு மனிதனின் உண்மையான இயல்பைத் தெரிந்துகொள்ள வேண்டுமானால் அவனிடம் அதிகாரத்தைக் கொடுத்துப் பாருங்கள்” என்று ஆபிரகாம் லிங்கன் கூறியுள்ளார். பலரும் அதிகாரத்துக்கு வந்தவுடன் திணறி விடுவார்கள். ஆனால் நரேந்திர மோடி அதில் விதிவிலக்கானவர்.
மோடி சார்ந்துள்ள கருத்தியல் பள்ளியில் ஒரு பாடல் சொல்லி கொடுக்கப்படுகிறது. ” பதகா அந்திம் லக்க்ஷசை நஹி ஹை சிம்மாசன் சடுதேஜானா ” (அதிகாரத்தைக் கைப்பற்றுவது நமது பயணத்தின் இறுதி இலட்சியமல்ல).
அந்தப் பாடலின் அடுத்த வரிகள், நம் பயணத்தின் நோக்கத்தைப் பற்றி விவரிக்கிறது: “சப் சமாஜூகோ லியே சாத்துமே ஆகே ஹை படுதேஜானா ” (ஒட்டுமொத்த சமுதாயத்தையும் உன்னுடன் இணைத்துக்கொண்டு முன்னேறு).
மேலும் அந்தப் பாடல், “சபல் ராஷ்ட்ரகா அனுபவ் வைபாவ் சபீ பாந்தி சே ஹைலானா ” (எல்லாம் வகையிலும் வெற்றி பெற்று இந்த தேசத்தின் புகழை ஓங்கச் செய்வாய்), என்கிறது .
இந்தக் கொள்கையும் அதை நோக்கிய செயல்பாடுகளுமே மோடியின் 25 ஆண்டு கால பொது சேவையை, ஆரம்பத்தில் காந்தி நகரில் தொடங்கி பிறகு தில்லி வரை ,வழி நடத்தி வந்திருக்கிறது.
மோடி அரசு அமைந்த பிறகு கட்சியின் தேசிய செயற்குழுவில் நாங்கள் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினோம். ‘நாம் சீர்திருத்தங்களைச் செய்வதற்காக மட்டும் இங்கு வரவில்லை. சீர்திருத்தங்கள் நல்ல விஷயம்தான். ஆனால் அது இப்போது உள்ள அமைப்பில் சில பூச்சுவேலைகளைச் செய்வதாகும். பிரதமர் மோடியின் நோக்கம் முழுமையான மாற்றத்தை ஏற்படுத்துவதாகும்’ என்று அந்தத் தீர்மானத்தில் கூறப்பட்டிருந்தது.
மேற்கத்திய நாடுகளில் “சமுதாயத்தின் தகுதிக்கு ஏற்பவே அரசு அமையும்” என்று சொல்வார்கள். ஆனால் மகாபாரதம், சாந்தி பர்வத்தில் பீஷ்மர் யுதிஷ்டிரனிடம் சொல்கிறார் , “ராஜா காலேஷ்ய காரணம் ” (அரசன் காலத்தின் நாயகன்).
முழுமையான மாற்றத்தைக் கோரிய தீர்மானத்தை மோடி நடைமுறைப்படுத்தினார்.அதைச் செய்வதற்கு இரண்டு வழிகள் இருந்தன. ஒன்று 15- 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இத்தாலிய அறிஞர் மாக்கியவெல்லி கூறியது. மற்றது பொ.யு.மு. 3 - 4 நூற்றாண்டில் இந்தியாவிலிருந்த அறிஞரும் அமைச்சருமான கௌடில்யர் சொன்னது.
‘இளவரசன்’ என்ற நூலில் மாக்கியவெல்லி , “ஓர் இளவரசன் தன் அதிகாரத்தைத் தக்க வைத்து கொள்ள வேண்டும் என்றால் நல்லவனாக இல்லாமல் இருப்பது எப்படி என்பதை கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும்” என்கிறார். இதற்கு மாறாக கௌடில்யர் , “அரசனின் மகிழ்ச்சி குடிமக்களின் மகிழ்ச்சியில் அடங்கி இருக்கிறது ” என்கிறார். அரசன் பரிவுள்ளவனாக, நன்னெறிகளைப் பின்பற்றுபவனாக இருக்க வேண்டுமென வலியுறுத்துகிறார்.
ஒரு மாத கால ‘சேவா சங்கல்ப்’ – சேவை செய்வதில் உறுதி – இயக்கத்தை தனது பதவிக்கால வெள்ளி விழாவைக் கொண்டாடும் விதமாக அறிவித்ததன் மூலம், மோடி தாம் கௌடில்யரின் வழியைப் பின்பற்றுவதைத் தெளிவுபடுத்தியுள்ளார்.
சேவை என்பது இந்தியாவுக்கே உரிய சீரிய கருத்து. ஆங்கிலத்தில் சர்வீஸ் என்று சொல்வது அந்தக் கருத்தை முழுமையாக விளக்கக் கூடியதல்ல. எனவேதான் 2024 இல் ஆக்ஸ்போர்ட் ஆங்கில அகராதி சேவை என்ற சொல்லை தனியாகப் பதிந்து , ‘தன்னலமற்றுப் பணிபுரிதல்; மற்றவர்களுக்கு நன்மை புரியக்கூடிய செயல், பழக்கம்’ என்று வரையறுத்துள்ளது. சர்வீஸ் என்ற சொல் பிறருக்கு சுயநலமற்று குடிமை கடமைகளை செய்பவர் என்று பொதுவான பொருளில் கூறப்பட்டிருந்தாலும், சேவை என்பது ஆன்மிகக் கருத்து.
அது தன்னை தூய்மைப்படுத்திக் கொள்ளவும், தன்னகங்காரத்தை அகற்றவும் உதவுகிறது. இங்கு கொடுப்பவர் எளிய மனிதர், பெறுபவர் தெய்வீகமானவராகக் கருதப்படுகின்றார். ‘நரசேவா’ என்பது நாராயண சேவா தான் (மக்கள் சேவையே மகேசன் சேவை) என்பதே இந்திய சிந்தனையின் சிறப்பு.
மோடி அரசு சமுதாயத்திற்கு பக்தியுடன் சேவை செய்வது என்ற ஆன்மிகக் கருத்தின் அடிப்படையில் செயல்படுவது. ராஜ தர்மம் பற்றிப் பேசும்போது பீஷ்மர் மூன்று முக்கிய பண்புகள் – சாகஸ் (தைரியம்), சம்வேதனா (பரிவு), சமதிருஷ்டி (சமநோக்கு) – அரசனை மாற்றி அமைக்கும் என்கிறார். மோடி இந்தப் பண்புகளை தன் ஆட்சியின் மூலம் வெளிப்படுத்தி உள்ளார். தேசம் அவரது தைரியத்தையும் பல்வேறு சமயங்களில், குறிப்பாக தீநுண்மீ (கொரோனா) காலத்தில், அவரது பரிவையும் பார்த்துள்ளது. மிக மோசமான அவதூறுகளும் கடுமையான விமர்சனங்களும் அரசின் மீது வைக்கப்பட்ட போது அவை அவரது மனச்சமநிலைக்கு சான்றாகின.
சீன அறிஞரான கன்பூசியஸிடம் ஒரு முறை, ‘சிலர் சொல்வது போல ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காண்பிப்பீர்களா, அல்லது ஒரு பல்லுக்கு பதிலாக தாடையையே தகர்த்து விடுவீர்களா? தீமை செய்தவனுக்கு பதிலடியாக அவனுக்கு நன்மை செய்வீர்களா அல்லது அவனுக்கு கேடு விளைவிப்பீர்களா ?’, என்று குயுத்தியாக கேட்கப்பட்டது. அதற்கு அவரொரு பதில் கேள்வி எழுப்பினார். தீமை செய்தவனுக்கு நீங்கள் நன்மை செய்தால் நன்மை செய்தவனுக்கு என்ன செய்வீர்கள்? என்று கேட்டார். பிறகு அவர், ‘உங்களுக்கு நன்மை செய்தவர்களுக்கு நீங்கள் எப்போதும் நன்மையே செய்ய வேண்டும். ஆனால் உங்களுக்கு தீமை செய்தவர்களுக்கு நீங்கள் தீமை செய்யக் கூடாது. நியாயத்தை செய்யுங்கள்’ என்று பதிலளித்தார். கண்ணியமான நடத்தை, வேறுபாடற்ற சாந்தமான மனநிலையே நியாயம் என்பதன் உயரிய கருத்து. மோடியின் அரசு நீதியின், நியாயத்தின் அடையாளமாக இருக்கிறது.
சில காலம் முன்பு ‘போர்ப்ஸ்’ பத்திரிகையில் ஒரு கட்டுரை வெளியானது. அதில் வெற்றிகரமான தலைவருக்குரிய எட்டு பண்புகளை பட்டியலிட்டு இருந்தது. நேர்மை, கருத்தை தெளிவாக எடுத்துரைக்கும் திறமை, தன்னம்பிக்கை, கடமை உணர்வு, நேர்மறையான அணுகுமுறை, உள்ளுணர்வு (அகத்தூண்டல்) , வழமையிலிருந்து மாறுபட்டிருத்தல், பிறருக்கு ஊக்கம் அளிப்பதாக இருத்தல் என்றது அந்தப் பட்டியல். இவற்றில் சில இருந்தாலுமே ஒருவர் நல்ல தலைவராகலாம். ஆனால் இவை அனைத்தையும் பெற்றிருப்பவர் நரேந்திர மோடி.
- நன்றி: தி இந்தியன் எக்ஸ்பிரஸ் (18.09.2026) Making power a vehicle of seva
- தமிழில்: திருநின்றவூர் ரவிகுமார்
- கட்டுரையாளர், தில்லியில் உள்ள இந்தியா ஃபவுண்டேஷனின் தலைவர். தமிழக பாஜகவின் மத்திய பார்வையாளராக அண்மையில் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
$$$