-திருநின்றவூர் ரவிகுமார்

"எரிசக்தி பாதுகாப்பின் மிகப் பெரியதொரு பாதை அணுசக்தி ஆற்றல். நாம் புதிய இலக்கை நோக்கிச் செல்லும் வழியைத் தேர்ந்தெடுத்துள்ளோம். 2047க்குள் நாம் 100 கிகா வாட் அணுசக்தி ஆற்றல் என்ற இலக்கை நோக்கிp பயணிக்கிறோம். வரும் பத்தாண்டுகளில் ஐந்து புதிய அணுசக்தி ஆலைகளைth தொடங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் நாம் துரித ஈணுலை தொழில்நுட்பத்தில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளோம். இதனால் அணு சக்தி ஆற்றலில் தற்சார்பை நோக்கி பெரிய காலடியை வைத்திருக்கிறோம்."
-15 ஆகஸ்டு '26 தில்லி செங்கோட்டையில் இருந்து பிரதமர் மோடி ஆற்றிய சுதந்திர தின உரையில்.
அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானுக்கு எதிரான போரைத் தொடங்கி ஆறு மாதங்களுக்கு மேலாகிறது. ஆரம்பத்தில் அவர்கள் வெற்றி பெற்றது போலத் தெரிந்தாலும், ஈரான் தோல்வி அடையவில்லை; இன்னமும் சவால் விட்டு கொண்டுதான் இருக்கிறது. ஹார்முஸ் நீரிணையை வர்த்தகப் போக்குவரத்திற்குத் திறந்து விட வேண்டும் என்ற முக்கிய நோக்கத்தை அமெரிக்கா இன்னும் அடையவில்லை. ஆனால் பாரசீக வளைகுடா பகுதி முழுக்கவும் போரினால் நிலை தடுமாறி இருக்கிறது. உலகப் பொருளாதாரமும் சிக்கலில் உள்ளது.
டிரம்ப் செய்த பிழை, குறிக்கோளை தெளிவு படுத்தாமல் ராணுவ நடவடிக்கையைத் தொடங்கியது. அதனால் போர் உத்திகளில் தடுமாற்றம். பகையாளியின் எதிர்வினை எப்படி இருக்கும் என்று கணிக்கத் தவறியது. ராணுவ நடவடிக்கையிலிருந்து பின்வாங்க குறைந்தபட்ச வெற்றி இலக்கைக் கூட நிர்ணயிக்க அவரால் முடியவில்லை. ஜோ கென்ட் என்ற ஓய்வு பெற்ற அமெரிக்க ராணுவ அதிகாரி ‘இலக்கைத் தேடி அலையும் படையெடுப்பு’ என்று இதை கிண்டல் செய்கிறார்.
இருதரப்புச் சண்டை என்பது விரிவடைந்து ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பு, ஈராக்கை மையமாகக் கொண்டு செயல்படும் பயங்கரவாதிகள், ஹூதி பயங்கரவாதப் படை என பலரும் உள்ளே நுழைந்து தாறுமாறாக குண்டு வீசிக்கொண்டு இருக்கிறார்கள். அமெரிக்கப் படைகளின் இயலாமை வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஈரான் இன்னமும் குண்டுகளையும் அறிக்கைகளையும் வெளியிட்டுக் கொண்டிருக்கிறது. அமெரிக்க ராணுவத்தின் வெற்றி அதன் ராஜதந்திர சொதப்பல்களால் தோல்வி அடையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் அமெரிக்கா, ஈரானுடன் நட்புறவு கொண்டிருந்த இந்தியாவில் நிலை எப்படி இருக்கிறது?
அமெரிக்கா, இஸ்ரேலுடன் நெருங்கிய உறவு வைத்துக் கொண்டுள்ள இந்தியா அதேவேளையில் ஐக்கிய அரபு நாடுகள், சவுதி அரேபியா, ஈரான் போன்ற நாடுகளுடனும் நட்புறவு கொண்டுள்ளது. இதனால் இந்தியாவுக்கு எண்ணெய் தொடர்ந்து கிடைத்தது மட்டுமின்றி, இதர வர்த்தகங்களும் செழிப்படைந்தன. வளைகுடா நாடுகளில் பணியில் இருக்கும் இந்தியர்கள் தங்கள் வீட்டுக்கு அனுப்பும் சம்பளமும் முக்கிய காரணம். அதே வேளையில் அவர்கள் நலனையும் நட்புறவினால் பாதுகாக்க முடிந்தது. அமெரிக்கா – ஈரான் மோதல் இந்தச் சமநிலையைக் குலைத்து விட்டது.
இந்தியாவில் எண்ணெய் உற்பத்தி மிகவும் குறைவு. 80 சதவீதம் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்கிறோம். அதில் பாதியளவு வளைகுடா நாடுகளில் இருந்து வருகிறது. ஹார்முஸ் நீரிணை வழியாகத்தான் அவை வருகின்றன. போரினால் எண்ணெய்க்கு தட்டுப்பாடும் விலை ஏற்றமும் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்தும் தடைபட்டுள்ளது. ஹார்முஸ் நீரிணையைத் தவிர்த்து விட்டு சுற்றி வளைத்து வந்தால், நேரமும் செலவும் அதிகமாகி விடுகிறது. இது வீடுகளில் அடுப்பு எரிக்கப் பயன்படுத்தும் எரிவாயு, சாலையில் ஓடும் வாகனங்கள், விவசாய உரங்களில் எதிரொலிக்கிறது. அது மட்டுமன்றி ஐரோப்பா, வட அமெரிக்கா நாடுகளுடனான நம்முடைய வர்த்தகமும் வளைகுடா, செங்கடல் வழியாகத் தான் நடைபெறுகிறது. அதுவும் பாதிக்கப்பட்டுள்ளது. வளைகுடா நாடுகளில் பணியில் இருக்கும் 90 லட்சம் இந்தியர்களின் வாழ்வும் ஊசலாட்டத்தில் உள்ளது. இதுவரை அங்கிருந்து பெரிய அளவில் வெளியேற்றம் நடக்கவில்லை என்பது ஆறுதலான விஷயம்.
ஈரானில் உள்ள சபஹார் துறைமுகம் திட்டத்தில் இந்தியா முதலீடு செய்துள்ளது. இதன் மூலம் பாகிஸ்தானைத் தவிர்த்து விட்டு ஆப்கானிஸ்தான், மத்திய ஆசிய நாடுகளுக்கு தொடர்பு கொள்ள முடிந்தது. அடிப்படையில் இது மும்பையையும் மாஸ்கோவையும் இணைக்கும் திட்டம். இப்போது அதுவும் சிக்கலாகி உள்ளது.
சீனாவின் ‘பெல்ட் அண்ட் ரோடு’ என்ற மிகப்பெரிய சாலை திட்டத்திற்கு மாற்றாக இந்தியா முன்னெடுத்த ‘இந்தியா – மத்திய கிழக்கு – ஐரோப்பா பொருளாதார தாழ்வாரம்’ என்ற (கப்பல், ரயில்) இணைப்புத் திட்டமும் இப்போது முடங்கியுள்ளது. இந்தியா கடுமையான முயற்சி செய்து பல லட்சம் கோடிகள் முதலீடு செய்துள்ள திட்டங்களை எல்லாம் ட்ரம்ப் இந்தப் போர் மூலம் மறைமுகமாக நாசம் செய்துள்ளார்.
கச்சா எண்ணெய்க் கிடங்குகளின் கொள்ளளவுத் திறன் வெறும் மூன்று நாட்களுக்கு தாங்கும் அளவில்தான் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. மோடி அரசு அதனை அதிகரித்துள்ளது. ஆனால் கச்சா எண்ணெய்யைப் போல பெட்ரோலிய, இயற்கை எரிவாயுவை நீண்ட காலம் சேமிக்க முடியாது. ரஷ்யா – உக்ரைன் போரினால் இந்தியா ரஷ்யாவிலிருந்து குறைந்த விலைக்கு கச்சா எண்ணெய்யை வாங்கி சேமித்தது. அதை நிறுத்த, குறைக்க அமெரிக்கா நிர்பந்தம் கொடுத்தது. அதனால் வெவ்வேறு இடங்களில் இருந்து வாங்க இந்தியா முயற்சித்தது. வழக்கமான வளைகுடா நாடுகளுடன் பிரேசில், கயானா, நைஜீரியா, அங்கோலா, வெனிசுலா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதியை விரிவு படுத்தியது. ஆனால் அதற்கு வழியான ஹார்முஸ் நீரிணை, செங்கடல், பாப் எல் மண்டேப் நீரிணை. அந்த வழிகள் போரினால் முடங்கியுள்ளன.
அமெரிக்கா, அரேபியா, ஈரான், வளைகுடா நாடுகள் இவற்றுடன் ராணுவக் கூட்டணி வைத்துக் கொள்ளாமல் இந்தியா சுதந்திரமான நிலைப்பாட்டை நீண்ட காலமாக கடைபிடித்து வருகிறது. ‘ஆபரேஷன் சங்கல்ப்’ என்ற பெயரில் வளைகுடா பகுதியில் இந்திய கடற்படை தனது வர்த்தகக் கப்பல்களைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருந்தது. அது ஓரளவுக்கு உதவியது என்றாலும், அது ஒரு குறிப்பிட்ட நோக்கம் கொண்டது. ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ள நிலையில், பக்கச் சாய்வு கொண்டு போரில் ஈடுபட முடியாது.
ரஷ்யாவில் இருந்து குழாய் மூலம் ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று கொண்டிருந்த கச்சா எண்ணெய் அமெரிக்க நிர்பந்தத்தால் குறைக்கப்பட்டுள்ளது. ரஷ்ய எண்ணெய்க்கு மிகப்பெரிய வாடிக்கையாளர் சீனாதான். என்றாலும் அமெரிக்கா இந்தியா மீது தான் அதிக அழுத்தத்தைக் கொடுத்தது. அதனால் இப்போது எண்ணெய் இறக்குமதியில் 50 சதவீதம், அமெரிக்காவைச் சார்ந்ததாக மாறியுள்ளது. இதன்மூலம் அமெரிக்கா லாபம் அடைந்துள்ளது மட்டுமின்றி, உலக வர்த்தக ஊடகமாக/ நாணயமாக டாலரைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. இந்தியா இதிலும் மாற்று வழியைத் தேடி அடைந்த போதிலும், எண்ணெய் இறக்குமதியில் சிக்கல் நீடிக்கிறது.
1990 களில் இந்தியாவின் அந்நியச் செலவாணி கையிருப்பு குறைந்ததால் தங்கத்தை இங்கிலாந்தில் அடமானம் வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அது ‘லைசென்ஸ் – பர்மிட் – கோட்டா’ என்றிருந்த சோசலிசக் கொள்கையைக் கைவிடச் செய்தது; சந்தைப் பொருளாதாரம் அமைப்பை நோக்கித் தள்ளியது. இப்போது அமெரிக்கா – ஈரான் போர் வேறொரு சிக்கலையும் அதற்கான தீர்வையும் நோக்கி நகர்த்துகிறது. ரஷ்யா – உக்ரைன் போரினால் எண்ணெய் இறக்குமதியில் ஒரு நாட்டைச் சார்ந்து இருக்க முடியாது என்று பல இடங்களில் எண்ணெய் வாங்கும் உத்தியை இந்தியா மேற்கொண்டது. இப்போது பிரச்சினை மேலும் சிக்கலாகி உள்ளது.
எல்லாவற்றிற்கும் மேலாக எண்ணெய், நிலக்கரி போன்ற இயற்கை வளங்கள் உலகில் தொடர்ந்து கிடைத்துக் கொண்டே இருக்காது. எண்ணெய்க் கிணறுகள் வற்றிப் போகும். அதற்கும் காலகெடு உள்ளது. 21 ஆம் நூற்றாண்டில் எண்ணெய்யை மட்டுமே பொருளாதார ப்பாதுகாப்புக்கு, வளர்ச்சிக்கு சார்ந்திருக்க முடியாது என்ற நிலையை இந்தியா உணர்ந்துள்ளது. அதனால் மின்கலம் (பேட்டரி ), எத்தனால் கலப்பு, ஹைட்ரஜன் தொழில்நுட்பம், அணு மின்சக்தி, சூரிய மின்சக்தி, காற்றாலைகள், புனல் மின்சாரம் என்று தனது தற்சார்பை வலுவாக்க வழி கண்டு வருகிறது.
உலகில் மிகப்பெரிய பொருளாதார நாடுகள் அணு சக்தியை பெருமளவு சார்ந்துள்ளன. காங்கிரஸ் அரசு ரஷ்யா உதவியுடன் கூடங்குளத்தில் அணுசக்தி நிலையத்தை நிறுவ முனைந்தது. ஆனால் (இப்போது அந்நிய நிதியுதவி திருத்த சட்டத்தை எதிர்க்கும்) அமெரிக்கா மற்றும் அதன் அடிவருடிகள் அப்போது ரஷ்ய கூடங்குளம் திட்டத்தை எதிர்த்தனர். பல கோடி முதலீடு பயனற்றுப் போகும் நிலை மட்டுமின்றி, ரஷ்யா உடனான உறவிலும் நெருடல் ஏற்பட்டது. வாஜ்பாய் பிரதமரான போது முதல் அணு உலை உற்பத்தி முழுமையும் தமிழகத்திற்கே தருவதாகக் கூறி முதல்வர் ஜெயலலிதாவை ஒப்புக்கொள்ள வைத்து ஆலையை செயல்பாட்டுக்குக் கொண்டு வந்தார்.
அணு சக்தியை ஆயுதத் தயாரிப்புக்குப் பயன்படுத்த மாட்டோம்; ஆக்கபூர்வமான வழியில் மட்டுமே பயன்படுத்துவோம் என்று இந்தியா அறிவித்துள்ள போதிலும், நாம் அணு ஆயுதப் பரவல் தடை சட்டத்தில் கையெழுத்திடவில்லை. வல்லரசு நாடுகளில் மேலாதிக்கத்தை ஏற்பதில்லை, சுதந்திரமான நிலைப்பாட்டைக் கடைபிடிப்பது என்பது எப்போதும் இந்தியாவின் நிலைப்பாடு. அதனால் ரஷ்யாவைத் தவிர வேறு எந்த நாடும் இந்தியாவுக்கு அணுசக்தி தொழில்நுட்பத்தை தரவில்லை;அதற்குத் தேவையான யுரேனியத்தையும் தரவில்லை.
ஜி5 என்ற வல்லரசு நாடுகளின் அமைப்பு ஜி7 ஆக மாறிய போது அதில் இந்தியாவுக்குக் கிடைத்த இடத்தை ஜவஹர்லால் நேரு சீனாவுக்குக் கொடுத்ததால் பிரச்சினை சிக்கலானது. அதுமட்டுமன்றி உலக நாடுகளின் பார்வையில் இந்தியாவின் மதிப்பு சரிந்தது. ஆனால், மோடியின் தலைமையில் இந்தியா வலிமை பெற்று வருகிறது. அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு, ஆஸ்திரேலிய யுரேனியத்தை இந்தியாவுக்கு விற்க முன்வந்துள்ளதாகும். நிலைமை மாறி வருகிறது. உலக நாடுகளிடையே இந்தியாவின் மதிப்பும் செல்வாக்கும் வளர்ந்து வருகிறது.
எண்ணெய் இறக்குமதியுடன் யுரேனியம் இறக்குமதி செய்வதால் என்ன பெரிய மாற்றம் வந்துவிட்டது என்று சிலர் முணுமுணுக்கலாம். அணுசக்தியின் உற்பத்திச் செலவு குறைவு. இது மட்டுமே பதில் இல்லை. இந்தியாவில் தோரியம் ஏராளமாகக் கிடைக்கிறது. யுரேனியத்திற்கு மாற்றாக அதைப் பயன்படுத்த முடியும் என்று சொல்லப்பட்டாலும், அதற்கான தொழில்நுட்பம் இல்லை. இந்த ஆண்டு அந்தத் தொழில்நுட்பத்தை இந்திய அறிவியலாளர்களும் தொழில்நுட்ப வல்லுநர்களும் இணைந்து உருவாக்கி உள்ளனர். இனி யுரேனியத்திற்காக ஏங்க வேண்டாம். தோரியமும் அதற்கான தொழில் நுட்பமும் இப்போது இந்தியாவிலேயே உள்ளது. இதைத்தான் செங்கோட்டையிலிருந்து பிரதமர் மோடி தனது சுதந்திர தினஉரையில் “துரித ஈணுலை தொழில்நுட்பத்தில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளோம்” என்று குறிப்பிட்டிருந்தார்.
அரசும் தனியார் துறையும் இணைந்த கூட்டுப் பொருளாதாரத்தை ஜனசங்கத்தின் தலைவரான பண்டித தீனதயாள் உபாத்யாயா முன்வைத்தார். ஆனால் பண்டித நேருவும், இந்திரா காந்தியும் சோசலிசக் கொள்கைகளை தொடர்ந்து நடைமுறைப்படுத்தியதால் 1990களில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு இந்தியா சந்தை பொருளாதாரத்தை ஏற்கும்படி கட்டாயத்துக்கு உள்ளானது. இப்போது கொள்கைத் தவறுகளினால் அல்லாமல், உலகச் சூழலால் இந்தியா தாமாகவே சிந்தித்து தற்சார்பு பொருளாதாரத்தை நோக்கி மாறி வருகிறது.
$$$