கரப்பான் பூச்சிகள்: தடம் மாறிய மாணவர் போராட்டம்

-ஆதிசைவன் இரா.இராம்குமார்

தனக்கு வேண்டாத ஒரு நாயை அடித்துக் கொல்வதற்கு முன் அது வெறிநாய் என்ற முத்திரையைக் குத்தி அப்புறம் அடித்துக் கொல்என்பார்கள். தற்போது இதேபோன்ற ஒரு முறையில் தான்  ‘நீட் தேர்வு ஒரு தேவையற்ற ஆணி’ என்று பரப்பப்பட்டு நீட் தேர்வு மற்றும் அதன் முறைகேடுகளுக்கு எதிராக எழுந்த கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் (CJP) மாணவர்கள் போராட்டமும் அமைந்தது.

“கள்ளா வா; புலியைக் குத்து”*  என்ற பழங்காலத்து  பழமொழிக்கேற்ப, தேர்தலுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகளே இருக்கும் நிலையில், பாஜகவை பலவீனப்படுத்தும் முயற்சியில் சில எதிர்கட்சிகள் மற்றும் பல மருத்துவக் கல்லூரி முதலீட்டாளர்கள் இணைந்து, இந்தியாவின் வளர்ச்சியைப் பொறுக்க முடியாத சில நாடுகளின் துணையோடு நீட் தேர்வு முறைகேடுக்கு எதிரான மனநிலையில் இருந்த மாணவர்களைக் கொண்டு இச்சூழ்ச்சி வலையை CJP மூலம் அழகாகப் பிண்ணியுள்ளார்கள். இதில் மாணவர்கள் அரசை வீழ்த்தினாலும் சரி அல்லது அரசு மாணவர்களை வீழ்த்தினாலும் சரி, இரண்டிலும் குளிர்காயப்போவது யாரென்றால் இதைத் தூண்டிவிட்டு பின்னிருந்து வேடிக்கைப் பார்க்கும் தேசவிரோத சக்திகளே. 

(* ‘கள்ளா வா: புலியைக் குத்து’என்ற பழமொழி வந்த கதையினை அடிக்குறிப்பில் காணலாம்).

CJP தோன்றிய வரலாறு நாம் அனைவரும் அறிந்ததே. ஆகையால் அதைப் பற்றி தற்போது விரிவாகப் பேசவில்லை. 

தொடர்ந்து 35 நாட்களாக நடந்த இப்போராட்டம் முழுமையான மாணவர் போராட்டமா என்றால் இல்லை. மாணவர்கள் பெயரில் பல சமூக விரோதிகள் கூடாரமிட்டு கும்மாளம் போட்டதற்கான ஆதாரம் அவர்களின் செயலே. தேசத்திற்கு எதிரான கோஷங்களும், எல்லைமீறி நடந்து கொண்ட விதமும், தடைகளைத் தாண்டி அத்துமீறி நாடாளுமன்றத்தை நோக்கிச் சென்ற செயலும், தடுக்க வந்த போலீஸ்காரர்களையே தாறுமாறாக தாக்கிய வெறிச் செயலும், நம்  தேசத்து சொத்துகளையே (வீதியில் காணப்படும் அனைத்தையும்) சேதப்படுத்தி அடித்து நொறுக்கி தீயிட்டு கொளுத்திச் செய்த நாசக்கார சம்பவங்களும்… என அவர்களின் அத்துமீறல்களை அடுக்கிக் கொண்டே போகலாம். 

‘மனமகிழ் மன்றங்கள்’ என்று மனதையும் மானத்தையும் இழக்கச் செய்யும் மதுபானக் கடைக்கு எவ்வாறு பெயர் வைக்கப்பட்டுள்ளதோ அப்படி, பயங்கரவாத சமூக விரோத மனப்பான்மையுள்ள இளைஞர்களின் ரகளைக்கு  ‘மாணவர்கள் போராட்டம்’ என்று பெயர் சூட்டியிருக்கின்றனர். 

உரிமைகளுக்காகப் போராட வந்த உண்மையான மாணவர்கள் எவரும், தங்கள் எதிர்காலத்தின் மேல் அக்கறையுள்ள மாணவர்கள் எவரும், மற்றவர்கள் உரிமையையும் உடைமையையும் ஒருபோதும் பறிக்க மாட்டார்கள். ஆகையால் நாடு முழுவதும் இதன் மோசமான அலை சென்றுவிடக் கூடாது என்றுணர்ந்த மத்திய அரசு, போராட்டக்காரர்களின் கோரிக்கைக்கு இணங்கி மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்களிடமிருந்து ராஜினாமா கடிதம் பெற்றுக் கொண்டது. இதன் காரணமாக சமூக விரோதிகளின் போராட்டம்  ‘புனிதப் போராட்டமாக’ தேச விரோத சக்திகளால் பரப்பப்படுகிறது. 

‘யாதேவி ஸர்வ  மாணவ ரூபேன ஸம்ஸ்திதா....
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை  நமஸ்தஸ்யை நமோ நம:’

-என்று ‘போராடும் அனைவரும் ஜென்ஸி (GenZ) மாணவர்களே. ஆகையால் அவர்களின் ஆதரவு தனது கட்சிக்கும் தனது சினிமா காட்சிகளுக்கும் தேவையெனக் கருதி, பல அரசியல்வாதிகளும் சினிமா நட்சத்திரங்களும் போட்டியிட்டுக் கொண்டு தங்கள் ஆதரவுத் துதிகளைப் பாடிய வண்ணமும் தங்கள் ஆதரவு நிலைப்பாட்டைத் தெரிவித்த வண்ணமும் இருந்தது வேதனைக்குரிய செயல். இப்படிப்பட்ட பலரின் ஆதரவுக்கரங்களை தங்களுக்குக் கிடைத்த புதிய ஆசிர்வாதமாக கருதினர் போராட்டக்காரர்கள்.

தர்மேந்திர பிரதான் பதவி விலகினார் என்பதால் மோடி அரசு கீழ்ப்படிந்து விட்டது என்று சிலர் கூடி கும்மி அடிக்கின்றனர். ஆங்கிலேய பழங்கதை ஒன்றிலே சொல்லப்பட்டது போல,  ‘கான்யூட் ராஜா சொல்லுக்கு கடல் கீழ்ப்படிந்து நடக்காது’  என்ற அடிப்படை புரிந்துணர்வு கொண்ட பிரதமர் மோடி அவர்கள் எதை கீழ்ப்படிய வைக்க முடியும் எதை கீழ்ப்படிய வைக்க முடியாது என்ற தெளிவு கொண்டவர். எனவே மாணவர்கள் பெயரில் சமுதாயக் குழப்பத்தை விளைவிக்கும் கூட்டத்தினை எப்படி கீழ்ப்படிய வைக்க வேண்டும் என்று அறியாதவர் அல்ல அவர். சில நேரங்களில் பதுங்குவதும் கூட பாய்வதற்கு தான் என்பதை சிலர் உணர வேண்டும்.  ‘தீ நாள் திருவுடையார்க்கு இல்’  என்பதை அநியாயக்காரர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது

  (திருக்குறள் -  481) 

அதாவது தன்னை விட வலிமையான கோட்டானை (ஆந்தையை) காக்கை பகல் பொழுதில் வென்றுவிடும். அதுபோல, பகைவரை வெல்ல நினைக்கும் அரசனுக்கும் அதற்கேற்ற தகுந்த காலம் (சரியான நேரம்) அமைய வேண்டும் என்பதை அறியாதவர் அல்ல பிரதமர் மோடி. 

தேர்வு முறைகேடு: ஒரு பண்டைய வரலாறு:

பொ.யு. 8,  9 ஆம் நூற்றாண்டுகளில், சீனாவை தாங் அரசமரபு (Tang Dynasty – பொ.யு. 618 – 907) ஆட்சி செய்து வந்தது. இந்தக் காலகட்டத்தில் அரசுப் பணிகளுக்கான ‘காசுகு’ (Keju – Imperial Examination) தேர்வு முறை உலகிலேயே மிகப் பெரிய தேர்வு முறையாக இருந்து வந்தது. சமூகத்தில் மிக உயரிய இடத்தையும், அளவற்ற செல்வத்தையும் பெற்றுத் தரும் இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற, மாணவர்கள் மற்றும் அதிகாரிகள் செய்த வியப்பூட்டும் முறைகேடுகள் மற்றும் அதற்கு எதிராக அரசு எடுத்த கடுமையான நடவடிக்கைகள் என்னவென்பதை சுருக்கமாகப் பார்க்கலாம்.

இந்தத் தேர்வில் அன்றைய காலத்தில் மூன்று முக்கிய முறைகேடுகள் நடந்தன. அவை…  

1. தேர்வில் ஆள்மாறாட்டம்.  அக்காலத்தில் புகைப்பட அடையாள அட்டைகள் இல்லாததால், ஏழையான புத்திசாலி அறிஞர்களுக்கு பணக்காரர்கள் லஞ்சம் கொடுத்து தங்களுக்குப் பதிலாகத் தேர்வு எழுத வைத்தனர். இவர்கள் ‘கியாங்ஷோவ்’ என்று அழைக்கப்பட்டனர். 9-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த வென் திங்ஜுன் (Wen Tingjun) என்ற பிரபல கவிஞர், ஒரே தேர்வு அறையில் தங்கி, தனக்குத் தெரிந்த 8 மாணவர்களுக்காக ரகசியமாகத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வைத்தார். 

2. நுண்ணிய துண்டுப் பிரசுரங்கள். கன்பூசியஸின் தத்துவ நூல்களான ‘நான்கு புத்தகங்கள் மற்றும் ஐந்து காவியங்களை’  மிக நுண்ணிய எழுத்துக்களில் (அரிசி அளவு எழுத்துக்கள்) பட்டுத் துணிகளிலோ அல்லது மெல்லிய காகிதங்களிலோ எழுதிச் சென்றனர். இவற்றைத் தங்களின் காலணிகளின் அடிப்பாகம், ஆடைகளின் உள்புறம், எழுதும் தூரிகைகள்,  சாப்பாட்டிற்குக் கொண்டு செல்லும் ரொட்டிகளுக்குள் கூட மறைத்து எடுத்துச் சென்றனர்.

3. அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பது மற்றும் வாரிசுரிமை  காரணமாக செல்வாக்கு மிக்க பிரபுக்கள் மற்றும் அதிகாரிகள், முதன்மைத் தேர்வு அதிகாரிகளுக்கு பெருமளவில் லஞ்சம் கொடுத்து வினாத்தாள்களை முன்கூட்டியே பெற்றனர். மேலும், அதிகாரிகளின் கையெழுத்தை அடையாளம் கண்டு, அவர்களின் பிள்ளைகளுக்கு அதிக மதிப்பெண் வழங்கும் பாரபட்சமும் நிலவியது.

இம்முறைகேட்டுக்கு எதிராக அரசு எடுத்த அதிரடி நடவடிக்கைகள்:

தேர்வு முறையினில் பல  கடுமையான கட்டுப்பாடுகளைக் கொண்டு வர இந்த முறைகேடுகள் காரணமாயின. 

அவை, தனிமைப்படுத்தப்பட்ட அறைகள். அதாவது மாணவர்கள் தேர்வு நடக்கும் 1 முதல் 3 நாட்களுக்கு ஒரு சிறிய அறையில் அடைக்கப்படுவார்கள். அங்கேயே சமைத்து, சாப்பிட்டு, தூங்கி, தேர்வு எழுத வேண்டும். வெளியாட்கள் எவருடனும் பேச அனுமதி இல்லை.

அடுத்ததாக ஆடைகளைச் சோதிக்கும் ராணுவம். தேர்வு மையங்களின் நுழைவாயிலில் ஆயுதம் ஏந்திய ராணுவ வீரர்கள் நிறுத்தப்பட்டு, மாணவர்களின் தலைமுடி, ஆடைகள், மற்றும் உடமைகள் அனைத்தும் அணுவணுவாகச் சோதிக்கப்பட்ட பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். அதேபோல, திருத்தும் அதிகாரிகளுக்கு யாருடைய தாள் என்று தெரியாமல் இருக்க  விடைத்தாள்களில் மறைக்கப்பட்ட பெயர்கள் என கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

தேர்வு முறைகேட்டை தேசத்துரோகமாகக் கருதிய சீன அரசு, முறைகேடு செய்தவர்களுக்கான தண்டனைகளையும் கடுமையாக்கியது. 

முறைகேட்டில் ஈடுபடும் மாணவர்கள் வாழ்நாள் முழுவதும் அரசுத் தேர்வு எழுதத் தடை விதிக்கப்பட்டு,  குடும்பத்தோடு மலேரியா போன்ற கொடிய நோய்கள் பரவியிருந்த எல்லைப் புறப் பகுதிகளுக்குக் நாடுகடத்தப்பட்டனர். அதேபோல லஞ்சம் வாங்கும் தேர்வு அதிகாரிகளுக்கு அரசக் கட்டளையின்படி உடனடியாக தலை துண்டிக்கப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

இவ்வாறு, தாங் வம்சத்தின் இறுதிக்காலத்தில்  வெடித்த பெரும் மாணவர் கிளர்ச்சிகளும் போராட்டங்களும் பிற்காலத்தில் சீனாவில் இந்த அளவுக்கு உலகத் தரம் வாய்ந்த, நேர்மையான மறைமுக மதிப்பெண் முறை உருவாகக் காரணமாக அமைந்தது. இது பல நாடுகளுக்கும் முன்மாதிரியாக அமைந்தது.

விளையாட்டுக்களில் நடந்த  முறைகேடுகள்:

மேலும் ஒரு வரலாற்றுச் சம்பவம்….

பண்டைய கிரேக்கத்தில் (பொ.யு.மு. 776 முதல் பொ.யு. 393 வரை) நடந்த ஒலிம்பிக் போட்டிகள் வெறும் விளையாட்டு மட்டுமல்ல, அவை கடவுள் ஜீயஸுக்காக (Zeus) நடத்தப்பட்ட மிக உயரிய மத வழிபாட்டுத் தேர்வாகக் கருதப்பட்டன. இதனால் அங்கு நேர்மைக்கு முதலிடம் தரப்பட்டது. இருப்பினும், ஒலிம்பிக்கில் வெற்றி பெறுபவர்களுக்குக் கிடைத்த மாபெரும் புகழும், பரிசுகளும் வீரர்களை பல ஆபத்தான முறைகேடுகளில் ஈடுபடத் தூண்டின. 

ஒன்று….. நடுவர்களை விலைபேசுதல். பொ.யு.மு. 396-இல் நடந்த 96-வது ஒலிம்பிக் போட்டியில், ‘எலிஸ்’ (Elis) நகரத்தைச் சேர்ந்த நடுவர்கள் இருவர், தங்களின் சொந்த ஊர் வீரரான யூபோலமஸ் (Eupolemus) வெற்றி பெற்றதாக அறிவித்தனர். ஆனால், அவர் இரண்டாவது இடத்தையே பிடித்தார் என அதில் கலந்து கொண்ட இளைஞர்கள் போராடினர். விசாரணையில் நடுவர்கள் லஞ்சம் வாங்கியது நிரூபிக்கப்பட்டு, அவர்களுக்குக் கடுமையான அபராதம் விதிக்கப்பட்டது.

இரண்டு…. எதிராளிகளுக்கு லஞ்சம் தருதல்.  பொ.யு.மு. 388-இல் நடந்த குத்துச்சண்டைப் போட்டியில், தெசலியைச் சேர்ந்த யூபோலஸ் (Eupolus) என்ற வீரர், தனக்கு எதிராகப் போட்டியிட்ட மூன்று வீரர்களுக்கு ரகசியமாக பணம் கொடுத்து தன்னை வெற்றி பெற வைத்தார். ஒலிம்பிக் வரலாற்றில் அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்ட முதல் லஞ்ச ஊழல் இதுவாகும்.

மூன்று……போலி குடியுரிமை.  பண்டைய ஒலிம்பிக்கில் கிரேக்கர்கள் மட்டுமே பங்கேற்க முடியும். இதனால், திறமையான வீரர்களை  பெரும் பணம் கொடுத்து தங்கள் நகரத்தின் குடிமக்களாக பிரபுக்கள் மாற்றிக் கொண்டனர். சிப்ராகுஸ் (Syracuse) நாட்டின் மன்னர், புகழ்பெற்ற ஓட்டப்பந்தய வீரரான அஸ்திலோஸை (Astylos) விலைக்கு வாங்கி தன் நாட்டின் பெயரில் போட்டியிட வைத்தார். 

இதன் காரணமாக ஒலிம்பிக் கமிட்டி முறைகேடு செய்யும் வீரர்களுக்குச் சாட்டையடி வழங்குவதோடு, மிகக் கடுமையான பண அபராதமும் விதித்தது. அந்த அபராதப் பணத்தைக் கொண்டு, ஒலிம்பிக் மைதானத்தின் நுழைவாயிலில் ‘சேன்ஸ்’ (Zanes) எனப்படும் வெண்கலத்திலான கடவுள் ஜீயஸின் சிலைகள் நிறுவப்பட்டன.

மேலும் விளையாட்டு மைதானத்தின் நுழைவாயிலில், ஏமாற்றிய வீரரின் பெயர், அவரது தந்தையின் பெயர், அவர் செய்த குற்றம் மற்றும் அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விவரங்கள் மிக ஆழமாகச் செதுக்கப்பட்டன.

எனவே போட்டி நடக்கும் மைதானத்திற்குள் நுழையும் ஒவ்வொரு வீரரும், பார்வையாளரும் இதைப் பார்வையிட்டு தான்  கடந்து செல்ல முடியும்.

“ஒலிம்பிக்கில் வெற்றி என்பது பணத்தால் வருவதல்ல, நேர்மையான திறமையால் மட்டுமே வர வேண்டும்” என்பதை நினைவூட்டவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டதாக ஒலிம்பிக் கமிட்டி அறிவித்தது.

புராதன இந்தியாவில் சில போராட்டங்கள்:

நமது புராணங்கள் மற்றும் பண்டைய இதிகாசங்களில் தற்கால அரசியல் பாணி  ‘மாணவப் போராட்டம்’ (Student Protest) என்ற வடிவம் நேரடியாக இல்லை. ஆனால், குருகுலக் கல்வியில் தர்மத்திற்கு மாறான செயல்கள் நடந்தபோது, மாணவர்கள் ஒன்றிணைந்து குரல் கொடுத்த அல்லது குருவின் தவறான கட்டளைகளை எதிர்த்த நிகழ்வுகள் உள்ளன. அவைகளில் சில….

  • முதல் வகுப்பறைப் புரட்சி: பிரகலாதனின் தத்துவப் போராட்டம்

அதிகார வர்க்கத்திற்கு எதிரான முதல் மாணவப் போராட்டத்தை பாகவத புராணம் பேசுகிறது. நாட்டின் அதிபரான இரணியகசிபு, கல்வி நிறுவனங்களைத் தன் கட்டுப்பாட்டில் வைத்து, ‘தானே கடவுள்’ என்ற தவறான பாடத்திட்டத்தைத் திணிக்கிறான். சண்டன், அமர்க்கன் என்ற பேராசிரியர்கள் அதை மாணவர்களிடம் கொண்டு சேர்க்கிறார்கள்.

ஆனால், மாணவன் பிரகலாதன் இந்த ‘அதிகாரப் பிரசாரத்தை’ (Propaganda) ஏற்க மறுக்கிறான். ஆசிரியர்கள் இல்லாத இடைவேளை நேரத்தில், சக மாணவர்களைத் திரட்டி, தர்மத்தின் உண்மைப் பக்கத்தை விவாதிக்கிறான். ஒரு சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக, கல்வி வளாகத்திற்குள் நடந்த முதல் ‘மறைமுக மாணவப் புரட்சி’ என்று இதனைச் சொல்லலாம்.

  • பாரபட்சத்திற்கு எதிரான போர்: அர்ஜுனனின் திறமைப் போராட்டம்

மகாபாரதத்தின் ஆதி பருவம், கல்வித்துறையில் நடக்கும் ‘வாரிசு அரசியல்’ மற்றும் ‘பாரபட்சப் பார்வைக்கு’ (Partiality) எதிரான போராட்டத்தைக் காட்டுகிறது. துரோணாச்சாரியார் தன் மகன் அஸ்வத்தாமனுக்கு மட்டும் ரகசியமாக அஸ்திர வித்தைகளை அதிகம் கற்றுக்கொடுக்க முயல்கிறார்.

இதற்காக மற்ற மாணவர்களின் தண்ணீர்ப் பாத்திரங்களை விட, தன் மகனுக்கு அகலமான பாத்திரத்தைக் கொடுத்து சதி செய்கிறார். கல்வி உரிமையில் சமத்துவம் மறுக்கப்படும் இச்செயலில், அர்ஜுனன் தலைமையிலான மாணவர்கள் இதைத் தங்களின் திறமையால் (வருண அஸ்திரத்தைப் பயன்படுத்தி) முறியடித்து, குருவின் பாரபட்சத்தை அமைதியான முறையில் அம்பலப்படுத்தினர்.

  • சதிக்கு எதிரான ஒன்றுபட்ட குரல்: கௌதமரின் சீடர்கள்

ஸ்கந்த புராணத்தில் வரும் கௌதம முனிவரின் சீடர்களின் கதை, குருவுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக மாணவர்கள் திரண்டதைக் கூறுகிறது. சக முனிவர்கள் பொறாமையால் ஒரு மாயப் பசுவை ஏவி, கௌதமர் மீது ‘கோஹத்தி’ (பசுவைக் கொன்ற பாவம்) பழி சுமத்தி அவரை ஆசிரமத்தை விட்டுத் துரத்த சதி செய்கிறார்கள்.

அப்போது, ஆசிரமத்தில் இருந்த ஒட்டுமொத்த மாணவர்களும் ஒன்றிணைந்து, இந்த பொய்ப் பிரசாரத்திற்கு எதிராகக் குரல் கொடுத்தனர். சதிகாரர்களின் முகத்திரையைக் கிழித்து, தங்கள் குருவின் தூய்மையை நிரூபிக்க அவர்கள் நடத்திய கூட்டுப் போராட்டம், இன்றைய மாணவர் கூட்டமைப்புகளின் (Student Unions) கூட்டுச் செயல்பாட்டிற்கு உதாரணம்.

புராணங்கள் மற்றும் வரலாறுகள் காட்டும் மாணவப் போராட்டங்கள் சுயநலவழியில் அல்லது வன்முறைப் பாதையில் நடக்கவில்லை. யாராலும் ஏவி விட்டு நடக்கவில்லை. அவை,  ‘கல்வி உரிமை, சமத்துவம், தார்மிக நீதி’ ஆகியவற்றின் அடிப்படையிலேயே அமைந்திருந்தன. தவறைச் சுட்டிக்காட்ட வேண்டும் அதே நேரத்தில் தார்மிக அடிப்படையிலும் செயல்பட வேண்டும் என்ற ‘பொதுநலச் சிந்தனை’ அன்றே ஆழமாக விதைக்கப்பட்டிருந்தது.

ஏன் இந்தக் குழப்பம்?

துரித உணவு (fast food) கலாச்சாரத்திற்கு மாறிவிட்ட தற்போதைய சமுதாயம், தன்னைச் சுற்றி நடக்கும் அனைத்தும் துரித கதியிலேயே நடக்க வேண்டும் என்ற மனநிலையில் உள்ளது. இதன் காரணமாக, காத்திருக்கும் திறமையற்ற, பொறுமையிழந்த சமுதாயமானது, பட்டம், பதவி, பணம், அந்தஸ்து, அதிகாரம் என அனைத்தும் தனக்கு எவ்வழியிலாவது வந்து சேர வேண்டுமென அவசரம் காட்டுகின்றது. 

எப்படியாயினும் எதைச் செய்தேனும் இலக்கைத் தொட்டுவிட வேண்டும் என்ற எண்ணம் கொண்ட இவர்கள்,  ‘மார்க்கங்கள் எப்படியிருந்தாலும் சரி; மார்க் வந்தால் போதும்’ என்ற முறையற்ற நோக்கங்களையே அடிப்படையாகக் கொண்டு செயல்படுகின்றனர்.

“படித்தவர்கள் அதிகமானால் பாவம் தொலையும்”* என்று பாரதி சொன்னான். ஆனால் இன்று படித்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்ட நம் நாட்டில், அநாகரிகத் தன்மையும், காட்டுமிராண்டித்தனமும், அவநம்பிக்கையும், பாவமும் சூழ்ச்சியுமே மேலோங்கி நிற்கிறது. இதன்மூலம் நம் சமுதாயம் சரியானதைப் படிக்கவில்லை என்பது மட்டும் தெளிவாகிறது. 

தேய்பிறை சந்திரன் போல நாளுக்கு நாள் நமது நாட்டில் தியாகமும், ஒழுக்க சிந்தனையும், நம்பிக்கையும், யோக்கிய அம்சங்களும் குறைந்து கொண்டே வருகின்றன.

சில பள்ளி,கல்லூரிகள் கல்வித் தரத்தை மாணவர்கள் மத்தியில் வளர்த்ததோ என்னவோ,  தெரியவில்லை, ஆனால் கலாச்சாரம், பண்பாட்டிற்கு எதிரான மனப்பான்மையையும், அந்நிய மோகத்திற்கு அடிமையாகும் குணத்தையும், வேறு வகையான சில தகராறுகளையும் தான்தோன்றித்தனத்தையும் நன்றாகவே வளர்த்தெடுத்திருக்கின்றன என்பது உண்மை.

தர்ம சிந்தனையற்ற தலைவர்கள் மிகுந்து காணப்படும் இந்நாட்டில், முதுகெலும்பற்ற அறிஞர்கள் மிகுதியாகி விட்ட இந்நாட்டில், சட்டத்தின் வாயிலாக சுரங்கப் பாதை போட்டு குற்றவாளிகளுக்குப் பாதுகாப்பளிக்கும் சட்ட வல்லுநர்கள் அதிகரித்து வரும் இந்நாட்டில்,  போக்கிரிகளுக்கு அடிபணிந்து செல்லும் தீரத் தன்மையற்ற மனிதர்கள் நிறைந்து காணப்படும் இந்நாட்டில், திறனற்ற பட்டதாரிகளே ஆசிரியர்களாய் பெருகிவிட்ட இந்நாட்டில், ஊரையடித்து உலையில் போட்டவனையெல்லாம் உத்தமர்களாக்கிக் கொண்டாடும் அயோக்கியர்கள் பெருகிவிட்ட  இந்நாட்டில்….. மாண்பற்ற மாணவ சமுதாயமும், இலக்கைத் தேர்ந்தெடுக்கத் தெரியாத இளைஞர் சமுதாயமும் உருவாவது  ஒன்றும் ஆச்சரியமில்லை. 

என்ன செய்ய வேண்டும்?

நடந்தது நடந்து விட்டது. உடைவதற்கு முன்னதாக அணையையும், அணைக்கு முன் உள்ள உயிர்களையும் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கில் கவலையோடும் கவனத்தோடும் இவ்விஷயத்தை அணுக வேண்டும். 

நியாயமான மார்க்கத்தில் முறையான வெற்றி பெறும் பொறுமையையும் நிதானத்தையும் சிறுவர் முதல் ஆரம்பித்து அனைவருக்கும் கற்றுத் தர வேண்டும்.  

கடந்த கால வரலாறுகள் மற்றும் அதன் உன்னதத் தலைவர்கள், போரஸ் முதல் சத்ரபதி சிவாஜி வரை; கரிகாலன், ராஜராஜசோழன் முதல் காமராஜர் வரை என, அவர்கள் கடந்து வந்த பாதை மற்றும் அவர்கள் கண்ட வெற்றி என அனைத்தையும் மாணவர்கள் ஐயம் திரிபற தெளிவாக அறிய வழிவகை செய்ய வேண்டும்.

அதேபோல ஆதிசங்கரர் முதல் விவேகானந்தர் வரை ஆரியபட்டர் முதல் கணித மேதை ராமானுஜன் மற்றும் அப்துல் கலாம் வரை அனைவருடைய வாழ்க்கைச் சம்பவங்களையும் இலக்கை அடைவதற்கான யோக்கிய அம்சங்களையும் பூரணமாக கற்றறியச் செய்ய வேண்டும்.

நமது தேசத்துக்காகப் பாடுபட்டு சுதந்திரத் தீயை மூட்டிவிட்ட பல உன்னதத் தலைவர்களின் தீரத் தன்மையையும் அவர்களின் தூய்மையான தியாகத்தையும் உணரச் செய்ய வேண்டும்.

நொடிப்பொழுதில் வெற்றியின் கனியைச் சுவைக்க முடியாது என்று அவர்களுக்குக் கற்றுத் தர வேண்டும். உழைப்பின் உன்னதத்தை உணரச் செய்ய வேண்டும். மதிவேக நுட்பத்தை எழச் செய்ய வேண்டும். அறிவின் ஆழத்தைக் காணச் செய்ய வேண்டும். தடைகளைத் தாண்ட கற்றுத் தர வேண்டும். முயற்சியில் தான் முன்னேற்றம் உண்டு என்பதை அறியச் செய்ய வேண்டும். வலிகளை தாங்கும் குணத்தை பழகச் செய்ய வேண்டும். மலர் மாலைகளைக் கண்டு மயங்காத மனவுறுதியில் நம்பிக்கை கொள்ள கற்றுத் தர வேண்டும். உயிரைத் துச்சமாக கருதி உன்னத லட்சியத்தை நோக்கி செல்லும் மாண்பினை வளர்த்தெடுக்க வேண்டும். பாரத தேசத்தை பாரினில் உயர்த்திட பாடுபடும் எண்ணத்தை விதைக்கச் செய்ய வேண்டும்.

மாற வேண்டும். ஒவ்வொருவரும் மாற வேண்டும். அரசியல்வாதிகள் முதல் அடிப்படை மக்கள் வரையிலும் இந்த மாற்றம் வரவேண்டும். இதை வளர்த்தெடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது நம்நாடு.

இது நடந்தால் சமுதாயத்தில்  Social Synchrony ஏற்படும். இதை அறிவியலில்  ‘கூட்டு இதயத்துடிப்பு ஒத்திசைவு’ என்று கூறுவார்கள். அதாவது சமுதாயத்தில் ஒத்த சிந்தனை உடையவர்கள் ஒற்றை மனப்பான்மையில் இருக்கும் போது அவர்களின் இதயத் துடிப்பும் செயலும் ஒரே திசையில் பயணம் செய்யும். (இதனை ஜெயகாந்தன் ‘சஹ்ருதயர்கள்’ என்பார்).

ஸம்கச்சத்வம் ஸம்வதத்வம் ஸம் வோ மனாம்ஸி ஜானதாம் |
தேவா பாகம் யதா பூர்வே ஸஞ்ஜானானா உபாஸதே ||

– எனும் ரிக்வேத ஐக்கிய மந்திரத்தில் கூறியுள்ளதன் படி,  நாம் அனைவரும் ஒன்றாக இருப்போம்! ஒரே குரலில் பேசுவோம்! ஒரே சீராகப் பயணிப்போம்! நமக்குள் சண்டையிடாமல் ஒருங்கிணைந்த சமுதாயமாக வாழுவோம்!

ஆகவே பெருகிவிட்ட பள்ளி, கல்லூரிகள் மென்மேலும் தங்களின் பொருளாதாரப் பெருக்கம் வேண்டி வீரியமற்ற  பட்டதாரி மாணவர்களை உற்பத்தி செய்து வெளியே தள்ளும் உற்பத்தி இயந்திரமாக இல்லாமல், கற்க வேண்டியதை கசடறக் கற்றுக் கொடுத்து சிறந்த மாணவ சமுதாயத்தை உருவாக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். 

அரசியல்வாதிகளுக்கும் அரசுக்கும் உள்ள பொறுப்பு:

அரசியல்வாதிகள்   ‘இளைஞர்கள் தான் இந்நாட்டின் எதிர்காலம்’ என்று மேடையில் மட்டும் முழங்காமல், முதலில் அவர்கள் (இளைஞர்கள்) தங்கள் சொந்த எதிர்காலத்தையாவது நிர்ணயம் செய்ய வழிவகை செய்ய வேண்டும்.

அதேபோன்று  ‘முப்பது கோடி ஜனங்களின் சங்கம் முழுமைக்கும் பொதுவுடைமை’  என்ற பாரதியின் கூற்றின்படி, நம் தேசத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் நம் தேசம் சொந்தம் என்றும், நம் தேசம் தான் முதன்மையானது என்ற தேசபக்தியையும் மிளிரச் செய்ய வேண்டும். தேசபக்தி என்பது ஏதோ ஒரு கட்சியே டெண்டர் எடுத்தது போல, அவர்களுக்கு மட்டுமே பாத்தியம் செய்யப்பட்டது போல வெளிப்புறத் தோற்றத்தில் மக்களால் பார்க்கப்பட்டு வந்ததன் விளைவாகத்தான், பாஜக வை எதிர்க்கும் நோக்கில் பலர் தங்கள் நாட்டையே எதிர்க்கத் துணிந்து விட்டதைக் காண முடிகிறது. 

ஆகவே தேசபக்தியை எல்லாத் தரப்பு மக்களிடமும் கொண்டுசென்று பரப்ப வேண்டியது அனைவரின் பொறுப்பு. 

நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய அரசு தேவையான நடவடிக்கையை உடனடியாக எடுக்கத் தவறியதால் வந்த விளைவே இந்த CJP போராட்டம். போராட்டம், கலவரம் போன்ற அழுத்தங்கள் வந்தால் தான் விரைவு நீதிமன்றங்கள் போன்ற நடவடிக்கைகளை விரைந்து எடுப்போம் என்பது மத்திய அரசின் மெத்தனப் போக்கையே காட்டுகிறது. என்ன நடந்துவிடும் என்ற அலட்சியமா? அல்லது யாருக்கோ துணை செய்ய வேண்டி தாமதமாகும் நடவடிக்கையா? என்ற எண்ணத்தை பொதுமக்கள் மத்தியில் விதைத்தது மத்திய அரசின் தோல்வியே ஆகும். 

பல லட்சம் மாணவர்களின் நம்பிக்கைக்கையையும் எதிர்காலத்தையும் அரசு கேள்விக்குள்ளாக்க கூடாது. ஆகையால்,

தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால் 
ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து.

  (திருக்குறள் எண் - 561) 

-என்ற குறளுக்கிணங்க ஒருவன் செய்த குற்றத்தை தக்கவாறு ஆராய்ந்து மீண்டும் அக் குற்றம் செய்யாதபடி, குற்றத்திற்குப் பொருந்துமாறு தண்டிப்பவனே அரசன் ஆவான் என்பதை, மத்திய அரசு எண்ணித் துணிய வேண்டும். 

இளைஞர்களின் நம்பிக்கையையும் வாழ்க்கையையும் தனது சுயலாபத்திற்காக கெடுக்கத் துணித்தவர்கள் எவராயினும் தவறு என்று நிரூபிக்கப்படும் பட்சத்தில் அவர்கள் தேச துரோகிகள் என முத்திரை குத்தப்பட்டு,  அவர்கள் மற்றும் அவர்களுக்குத் துணை நின்றவர்கள் என அனைவரின் பெயரும் புகைப்படமும் பொதுவிடத்தில் ஒட்டப்பட வேண்டும். மேலும் தக்க தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட வேண்டும்.

இறுதியாக….  உண்மையான மாணவர்கள் போராட்டம் என்பது நளபாகம் விருந்து போன்றது. அதனால் மட்டுமே சமுதாயத்தில் ஆரோக்கியமும் மறுமலர்ச்சியும் புத்துணர்ச்சியும் உண்டாக்க முடியும். மாறாக துரித உணவு போன்று துரிதப் போக்கில் சில மாணவர்களைத் திரட்டி நடைபெறும் போராட்டத்தால், தேசத்தில் கூச்சலும் குழப்பமுமே விளையும். இது தேசத்தின் நாடித்துடிப்பையே சீர்குலைக்கும்.

###

* அடிக்குறிப்பு:

(தமிழ்த் தாத்தா உ.வே.சா.வின்  ‘நினைவு மஞ்சரி’ எனும் நூலில் உள்ள தகவல்)

 சீவகசிந்தாமணியில் வரும்  ‘கள்ளராற் புலியை வேறு காணிய காவல் மன்னன்’ என்ற வரிக்கான அர்த்தத்தைப் புரிந்துகொள்ள இப்பழமொழி உதவினதாகக் குறிப்பிடுகிறார்.

காந்தருவதத்தையை வீணையில் வெல்வோரே அவளை மணக்க முடியும் என்பது அறிந்து பலர் முன்வந்து தோற்றனர். இப்படி ஆறு நாட்கள் கழிந்தன. இச்செய்தியை அறிந்த சீவகன் தனது இசைத் திறனைக் காட்ட எண்ணி தனது யாழிசையை வெளிப்படுத்தி காந்தருவதத்தையை வென்றான். 

இதைக் கண்டு பொறாமைத் தீயால் வெம்பிய கட்டியங்காரன் சீவகனை கொலை செய்ய உத்தேசித்து அங்கு வந்திருந்த மற்ற அரசர்களிடம் கோபம் மூள பல வார்த்தைகளைக் கூறி, “உங்களுள் யார் இந்த சீவகனை வெல்கிறானோ அவனுக்கே காந்தருவதத்தை உரிமையாவாள்” என்று சொல்லி மற்ற அரசர்கள் சீவகனோடு போரிட ஏவினான். இச் செயலானது,  ‘கள்ளராற் புலியை வேறு காணிய காவல் மன்னன்’ என்பது போன்றிருப்பதாக திருத்தக்க தேவர் கூறியிருக்கிறார். இதன் பொருள் விளங்காமல் உவேசா அவர்கள் தத்தளித்தார். 

ஒருநாள் கும்பகோணத்தில் அவர் வசித்து வந்த வீட்டிற்கு அடுத்த வீட்டில் உள்ள ஒரு முதியவர் வழக்கம் போல அவர் வீட்டிற்கு வந்து அவருடைய ஆற்றாமையை பற்றி பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு வேண்டாத ஒருவர் மற்றொருவரிடம் இம்முதியவரைப் பற்றி குறை கூறி சண்டை மூட்டி விட்டாராம். ‘கள்ளா வா; புலியைக் குத்து’ என்பது போல அவன் தன் காரியத்தை சாதித்துக் கொள்ள பார்க்கிறான். “எப்படியாவது நாங்கள் இருவரும் முட்டி மோதிக் கொண்டு சாகட்டும் என்பது அவன் எண்ணம். நாங்கள் இரண்டு பேரும் அவனுக்கு வேண்டாதவர்களே. நானா ஏமாந்து போவேன்?” என்று அவர் சொன்னார்.

அப்போது அந்த பழமொழிக்கு விளக்கம் கேட்டார் உவேசா அவர்கள்.

அப்பழமொழிக்கான விளக்கத்தைச் சொல்லலானார் அம்முதியவர்.

“ஒரு நாள் ஒரு மனிதன் பண மூட்டையோடு ஒரு காட்டு வழியாகப் போய் கொண்டிருந்தான். அப்போது ஒரு திருடன் அவனைக் கண்டு துரத்தினான். எதிரில் ஒரு புலி உறுமிக் கொண்டு வந்தது. இந்த இரண்டு அபாயங்களிலிருந்தும் தப்புவதற்கு அந்த வழிப்போக்கன் ஒரு தந்திரம் பண்ணினான். திருடனைப் பார்த்து ‘அதோ பார் அந்தப் புலியைக் குத்தி கொன்று விடு; நான் உனக்கே பண மூட்டையை தந்து விடுகிறேன்’ என்றான். திருடன் புலியை எதிர்த்தான். புலி அவனை அடித்துத் தின்று பசி தீர்த்தது. அதற்குள் வழிப்போக்கன் தப்பிப் பிழைத்து ஓடிப் போய் விட்டான். அவன் தன் பகைவனாகிய கள்ளனையும் புலியையும் மோதவிட்டு, தான் தப்பித்துக் கொண்டான். இதைத் தான் அந்த பழமொழி கூறுகிறது” என்று சொல்லி முடித்தார் அம்முதியவர். 

இதன்மூலம்  ‘சீவக சிந்தாமணி’ நூலில் உள்ள செய்யுளுக்கு பொருள் தெரிந்த உவேசா அவர்கள் சந்தோஷ வெள்ளத்தில் குதிக்கலானார். அதாவது கட்டியங்காரன் தனக்கு ஒரு சிரமமும் இல்லாமல் சீவகனையும் பிற அரசர்களையும் தம்முள்ளே போர் செய்ய விட்டு தன் காரியத்தை சாதிக்க எண்ணினான் என்பதே அச்செய்யுளின் பொருள்.

$$$

Leave a comment