இந்துக்கள் வெல்கிறார்களா, தோற்கிறார்களா?

-பி.ஆர்.மகாதேவன்

இந்துக்களின் எதிர்காலம் எப்படி இருக்கும்? சில கேள்விகளை எழுப்பி, தானே பதில் அளித்து, நமது சிந்தனையத் தூண்டுகிறார் எழுத்தாளர் திரு.பி.ஆர்.மகாதேவன்...

இந்துக்கள் வெல்கிறார்களா, தோற்கிறார்களா?

இந்தக் கேள்விக்கு பதில் தெரியவேண்டுமென்றால், எது இந்துக்களின் வெற்றி என்ற கேள்விக்கு பதில் கிடைக்க வேண்டும்.

இந்துக்களின் தெய்வங்கள் கும்பிடப்படுகிறார்களா?

ஆமாம். ஆகமக் கோயில்கள் தொடங்கி குல தெய்வங்கள் வரை முப்பத்து முக்கோடி தெய்வங்களும் கும்பிடப்படுகிறார்கள்.

இந்துக்களின் பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றனவா?

ஆமாம். இந்தியாவின் உற்பத்திப் பொருட்கள், சேவைகள், தொழில்கள் ஆகியவற்றின் நலனைப் பாதுகாப்பதில் இந்துப் பண்டிகைகளே முன்னணியில் இருக்கின்றன. சமூக நல்லிணக்கம், கூட்டுறவு, பணச் சுழற்சி ஆகியவற்றுக்கு இந்தப் பண்டிகைகளே ஆதாரமாகத் திகழ்கின்றன.

இந்துக்களின் புனிதத் தலங்கள் போற்றப்படுகின்றவா?

ஆமாம். இந்துக்களின் வாழ்வில் புனிதத் தல யாத்திரை என்பது தவிர்க்க முடியாத அம்சமாகத் திகழ்கிறது. நான்கு நாள் சேர்ந்தாற்போல விடுமுறை கிடைத்தால், கோயில்களே மக்களின் முதல் யாத்திரைத் தலமாக இருக்கிறது.

இந்துக்களின் புனித நூல்கள் போற்றப்படுகின்றனவா?

ஆமாம்.

இந்துக்களின் குரு பரம்பரையினர் மதிக்கப்படுகிறார்களா?

ஆமாம்.

இந்துக்களின் அர்ச்சகர் மரபினர் மதிக்கப்படுகிறார்களா?

ஆமாம். எல்லா ஜாதி ஆலயங்களிலும் அவர்களுடைய மரபான அர்ச்சகர் குலமே இறைவனுக்கான திருப்பணியைச் செய்கிறார்கள்.

இந்துக்களின் சடங்கு சம்பிரதாயங்கள் பின்பற்றப்படுகின்றனவா?

ஆமாம்.

இந்துக்களின் ஜாதிய வாழ்க்கை பின்பற்றப்படுகிறதா?

ஆமாம். நல்லிணக்கத்தின் ஆதார அம்சமான அதுவே வாழ்வின் பெரும்பாலான அம்சங்களைத் தீர்மானிக்கிறது. கல்வியில், பதவிகளில், நலத்திட்டங்களில் இடப்பங்கீடு, சலுகைகள், ஜாதியின் அடிப்படையிலேயே நடக்கிறது.

இந்துக்களின் திருமணம் இந்து முறைப்படி நடக்கிறதா?

ஆமாம். சொந்த ஜாதிக்குள் தான் 98 % பேர் திருமணம் செய்துகொள்கிறார்கள். எஞ்சிய இரண்டு சதவிகிதத்தினரிலும் 95 % பேர் நிம்மதியாக இரு ஜாதி உறவினர்களின் தனிப்பட்ட நட்புறவுடனே வாழ்கிறார்கள்.  விதிவிலக்காக நடக்கும் மோதல்கள் எல்லாம், ஒரு மனிதரின் ஒட்டு மொத்த வாழ்க்கையில் அரிதாக வரும் காய்ச்சல் போலவே வந்து போகின்றன. நோய் தாக்காத உடம்பு உலகில் எங்குமே இல்லை. நோய் எதிர்ப்பு சக்தியைப் பெருக்கிக் கொள்ளும் உடம்புகளே உண்டு. இந்து ஜாதி வாழ்வியல் நல்லிணக்க நெறியில் இருந்து அரிதாகவே பிறழ்கிறது. சீக்கிரமே குணமடைந்தும் விடுகிறது.

இந்துக்களைக் காக்கும் சக்திகள் எப்படிச் செயல்படுகின்றன?

மிக மிகச் சிறப்பாக.

இந்துக்களின் அரசியல் சக்திகள் எப்படிச் செயல்படுகின்றன?

மென் அதிகாரமே இந்து தர்மத்தின் ஆதார அம்சம். குறுகிய கால அளவில் தோற்பது போலவே தென்பட்டாலும் தொலைநோக்கு மற்றும் நீண்ட கால அளவில் வெற்றிகரமாகவே இருக்கிறார்கள்.

இந்துக்கள் அந்நியத் தாக்குதல்களை எப்படிச் சமாளிக்கிறார்கள்?

குளத்தில் விழும் கல் சிறிது நேரம் அலைகளை ஏற்படுத்துவதுபோல அவை அதிர்வுகளை ஏற்படுத்துகின்றன. மெள்ள அந்தக் கல்லை அடி ஆழத்துக்குள் புதைத்துவிட்டு தன் இயல்பு நிலைக்குத் திரும்பிவிடுகிறது குளம். அதுபோல இந்து தர்மம் தன் இயல்பு நிலையை எளிதில் காலப்போக்கில் மீட்டுக்கொண்டு விடுகிறது.

போர் வெறி மதங்களான இஸ்லாமும் கிறிஸ்தவமும் இந்தியாவுக்கு வந்த பின்னர் இங்கிருக்கும் வளமான சூழலினாலும் மிதமான தட்பவெப்பத்தாலும் இதமான வாழ்க்கை முறையாலும் தமது வெறியில் இருந்து விலகி வந்திருக்கின்றன. இன்றும் பாலைவன நாடுகளில் நடக்கும் வன்முறைகள் இந்தியாவில் இல்லை. இத்தனைக்கும் இஸ்லாமியரின் எண்ணிக்கை உலகிலேயே இந்தியாவில் மிக அதிகம் என்றாலும், இந்திய இஸ்லாமியர் ஒரிஜினல் இஸ்லாமியரைவிட மேலானவர்கள். ஏனெனில் அவர்கள் உடம்பில் ஓடுவது சமாதானத்தை விரும்பும் சநாதன இந்து ரத்தம்.

கிறிஸ்தவத்தின் வரலாறும் இதுவே. ஆஃப்ரிக்கா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா என பூர்வகுடிகளை அழித்த கிறிஸ்து வேறு; இந்திய கிறிஸ்து வேறு. இவர் இந்து ரத்தம் ஓடும் கிறிஸ்து. இங்கு மரியாள் கன்னி அல்ல; தாய் தெய்வம். கள்ளப் பாதிரிகள் எங்கிருந்தாலும் ஒரே மாதிரியே இருப்பார்கள். ஆனால் எளிய விசுவாசிகள் இந்துத்தன்மை மிகுந்தவர்கள். நல்லிணக்க ஜாதி உணர்வு மிகுந்தவர்கள். ஒற்றைப் படைக்கு முற்றிலும் எதிரானவர்கள்.

பாகிஸ்தான் என்ற தனி நாட்டையே பிளந்துகொண்டு சென்றிருக்கிறார்கள். வடகிழக்கு முழுவதுமாக கிறிஸ்தவப் பிடியில் இருக்கிறது இவையெல்லாம் மதமாற்றத்தின் அபாயங்களை எடுத்துக்காட்டவில்லையா?

உண்மையில் பாகிஸ்தான் 1947-இல் உருவாகவில்லை. 13-ஆம் நூற்றாண்டிலேயே பெளத்தம் ஓரங்கட்டப்பட்டு இஸ்லாம் அங்கு வேரூன்றிவிட்டது. அம்பேத்கர் தனது  ‘பாகிஸ்தான்’ நூலில் இதையே சொல்லிக் காட்டுகிறார். காந்தார தேசம் போன்ற புராணக் கதைகளை அவர் லேசாகச் சொல்லிவிட்டு  “ஆஃப்கானிஸ்தான், பாகிஸ்தான் என்றழைக்கப்படும் பகுதிகள் எல்லாம் எப்போதோ இஸ்லாமியமயமாகிவிட்டன. ஒருவகையில் அவை இஸ்லாமிய தேசம் என்றுதான் சொல்லப்படவே வேண்டும்” என்கிறார்.

வடகிழக்கு விஷயத்திலும் மங்கலாய்ட் இனத் தாக்கம் மிகுந்த அவர்களின் இந்து வேர்கள் மிகவும் மங்கலானவை. அவர்கள் ஒருவகையில் உலகில் ஆஃப்ரிக்கா, அமெரிக்காவில் இருந்த பூர்வகுடிகளைப் போன்றவர்களே. பசுவைப் புனிதமாக மதித்த, வர்ணாஸ்ரமத்தைப் பின்பற்றிய இந்துக்கள் அல்ல.

அதாவது, பாகிஸ்தான் ஆஃப்கானிஸ்தான் 13-ஆம் நூற்றாண்டிலேயே இந்துக்களிடம் இருந்திருக்கவில்லை. அதற்கு முன்பும் இருந்திருக்கவில்லை. வட கிழக்கும் அதுபோலத் தான். பிரிட்டிஷார் இந்தியா என்ற பெயரில் இவை அனைத்தையும் ஒன்று சேர்த்து ஆட்சி செய்தனர். அவர்கள் போகும்போது பாகிஸ்தானைப் பிரிக்க முடிந்தது. வட கிழக்கைப் பிரிக்க முடியவில்லை. மற்றபடி இந்தியா என்பது பசுவைப் புனிதமாக மதிக்கும் வர்ணாஸ்ரமமும் ஜாதிக் கட்டமைப்பும் கொண்ட பகுதி மட்டுமே.

வேதங்களில் சொல்லப்படும் சப்த சிந்து பகுதியான ஆர்யவர்த்தம் என்பது அதன் மூலாதார மையம். அதன் பின் அது இந்து மகா சமுத்திரம் வரை பரவியது. அல்லது இமயம் முதல் இந்து மஹா சமுத்திரம் வரை அது ஒன்றாகவே முகிழ்த்தது. ஒன்றாகவே வளர்ந்தது. அந்த இந்தியா இன்றும் அப்படியே இருக்கிறது. என்றும் அப்படியே இருக்கவும் செய்யும்.

நவீனத்துவம் இந்துக்களில் என்ன மாற்றத்தைக் கொண்டுவந்திருக்கிறது?

குல வழி வாழ்க்கை, கூட்டுக் குடும்பம், குறுகிய எல்லைக்குள்ளான வாழ்க்கை, ஒரே ஊரில் தலைமுறை தலைமுறையாக வாழ்வது, ஒரே தொழிலில் நீண்ட காலம் நீடிப்பது போன்றவையெல்லாம் மாறிவிட்டன. இஸ்லாமியப் படையெடுப்பு, கிறிஸ்தவ ஆக்கிரமிப்பு ஆகியவற்றால் அடைந்த மாற்றத்தைவிட நவீனத்துவத்தால் இந்துவில் ஏற்பட்டிருக்கும் மாற்றமே அதிகம். ஆனால், அவை இயல்பான வளர்சிதை மாற்றமாகவே இருக்கின்றன. பழையன கழிதலும் புதியன புகுதலும் இயல்பு தானே? இந்து சமூகம், தேவையானதை நிச்சயம் தக்கவைத்துக் கொள்ளும்.

மதமாற்றம் என்ன தாக்கத்தை உருவாக்குகிறது?

சாபமும் சில நேரங்களில் வரமாகக்கூடும். இஸ்லாமிய ஆக்கிரமிப்பு மட்டுமே தொடர்ந்திருந்தாலோ கிறிஸ்தவ அராஜகம் மட்டுமே நடந்திருந்தாலோ, இந்தியா நிச்சயம் என்றோ ஏதேனும் ஒன்றால் விழுங்கப்பட்டிருக்கும். ஏற்கெனவே இருந்த பல மைய ஜாதியக் கட்டமைப்பும் வீரப் போர் மரபும் இந்து மறு மலர்ச்சியைச் சாதித்துக் காட்டியிருக்கும் நிலையில், இஸ்லாமிய அதிகார மையமும் கிறிஸ்தவ அதிகார மையமும் தமக்குள் மோதிக் கொள்வதென்பதும் இந்து மீட்சிக்கு வழி வகுத்திருக்கிறது.

கேரளம் இதற்கான நல்ல உதாரணம். இந்தியாவிலேயே மரபான இந்துத்தன்மை மிளிரும் ஆலயங்களும் சடங்காசாரங்களும் வலுவுடன் நீடிக்கும் மாநிலங்களில் முதலிடம், இஸ்லாமிய, கிறிஸ்தவ, கம்யூனிஸ வல்லாதிக்கம் நிறைந்த கேரளத்துக்குத்தான்.

‘டைனசோர்’ திரைப்படங்களில் ஒரு டைனசோர் எளிய மனிதர்களைத் துரத்தும். அவர்கள் தம்மாலான அனைத்து வழிகளிலும் போராடித் தப்பிக்கப் பார்ப்பார்கள். இனி உயிர் பிழைக்க வழியில்லை என்ற அதி நெருக்கடியான கட்டத்தில் இன்னொரு பெரிய டைனசோர் வந்து அந்த முதல் டைனசோரை அடிக்கும். அவை இரண்டும் சண்டை போட்டுக்கொள்ள ஆரம்பிக்கும். எளிய மனிதர்கள் தப்பிவிடுவார்கள். இந்துக்களின் வரலாறும் அப்படியானதாக ஆகிவருகிறது.

ஒருவர் மதம் மாறினால் ஒரு எதிரி உருவாகிறார் என்று ஆரம்பத்தில் இருந்தது. இன்று ஒருவர் மதம் மாறினால் ஒன்பது பேர் இந்து உணர்வு கொள்கிறார்கள் என்பதாக ஆகிவருகிறது.

இஸ்லாமும் கிறிஸ்தவமும் உலகில் இதுவரை பின்பற்றி வந்த ஜிஹாதி போர் மற்றும் சிலுவைப் போர் வெறிகளை விட்டுவிட்டு இந்தியாவில் ‘சாந்தமடைந்திருக்கிறார்கள்’. இது ஒப்பீட்டளவிலான கூற்றே. இங்கும் வன்முறை உண்டு. ஓநாய் ஒருபோதும் சாகபட்சிணியாகாது. என்றாலும் மற்ற நாடுகளில் 100 பேரைக் கொன்றால் இங்கு 10 பேரை மட்டுமே கொல்ல முடிந்திருக்கிறது.

இந்துக்களில் இருந்து இந்த இரு வல்லாதிக்க மதங்களுக்கு மாறியிருப்பவர்கள் மத மாற்றத்தில் இருக்கும் வன்முறை மற்றும் வெறித்தனத்தை வெகுவாக மட்டுப்படுத்திவிட்டிருக்கிறார்கள்.

ஆலயங்கள் தொடங்கி இந்து வணிகங்கள், தொழில்கள், அரசு நலத்திட்டங்கள் என எல்லாவற்றிலும் அந்நிய மதங்களுக்கு மாறிய முன்னாள் இந்துக்களுக்கு கூடுதல் பங்கைத் தந்து இந்து தர்மம் தனக்கான இழப்பை மட்டுப்படுத்திக் கொண்டுவருகிறது. இலையைக் கிழியக் கொடுத்து மரத்தை (கனியை) காத்துக் கொள்ளும் வாழையின் தந்திரம்.

இந்து அடிப்படைவாதம் எப்படியாக இருக்கிறது?

இந்து சேவை சக்தியாக அது ஆழமாகவும் அகலமாகவும் வேர் செலுத்தி கிளை விரித்து வளர்கிறது. தேவைப்படும் இடங்களில் மட்டுமே வன்முறையை முன்னெடுக்கிறது. எதிரியே நட்புக்கான கை குலுக்கலா, புலிநகக் கை குலுக்கலா என்பதைத் தீர்மானிக்கிறான். இரண்டுக்கும் இந்துத்துவம் தயாராகவே இருக்கிறது.

இந்துக்கள் கவலைப்படத் தேவையே இல்லையா?

எந்த இந்துத்தன்மையினால் இதுவரை இந்துக்கள் தம்மைக் காத்துக்கொண்டிருக்கிறார்களோ அது வலிமையுடன் இருக்கும் வரை இந்துக்கள் கவலைப்படத் தேவையே இல்லை. ஞானவான்கள் தமது கடமையையும், க்ஷத்ரியர்கள் தமது கடமையையும் வைஸ்யர்கள் தமது கடமையையும், நாலாம் வர்ணத்தினர் தமது கடமையையும் சிறப்பாகச் செய்துவரும் வரை சநாதன இந்து தர்மத்துக்கு எந்தக் கெடுதலும் வராது.

ஒருவேளை இவர்கள் தர்மத்தைக் காக்கத் தவறினாலும், தர்மம் தானே அவதாரம் எடுத்துவந்து, வழி தவறிய இவர்களைக் காப்பதோடு தன்னையும் காத்துக்கொள்ளும்.

வலிமையான உடம்பு, நோய் எதிர்ப்பு சக்தியைப் பெருகச் செய்யும். வலிமையான நோய் எதிர்ப்பு சக்தி, உடம்பை பலப்படுத்தும்.

உடம்பின் வலிமை குறைந்தால், நோய் எதிர்ப்பு சக்தி, இழந்த வலிமையை மீட்டுக் கொடுக்கும். வலிமையை மீட்ட உடம்பு, நோய் எதிர்ப்பு சக்தியைப் பெருக்கிக் கொள்ளும்.

அதுபோல தர்மம் தன்னைக் காப்பவர்களை மட்டுமல்ல; காக்கத் தவறுபவர்களையும் காத்துத் தன்னையும் காத்துக்கொள்ளும்.

ஆனால், அரசியல் பிழைத்தோருக்கு அறமே கூற்றாகும்.

$$$

Leave a comment