சித்திரக் கவியும் கவிஞர்களும்

-பா.சு.ரமணன்

சென்னையில் வாழும் பா.சு.ரமணன், எழுத்தாளர். பல ஆன்மிக நூல்களை எழுதி இருக்கிறார். தமிழ் மொழியில் உள்ள சிறப்பு இலக்கிய வகையான ‘சித்திரக்கவி’ குறித்த அன்னாரது இனிய கட்டுரை இங்கே…

தமிழின் 96 வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று ‘சித்திரக் கவி’. கவி பாடத் தெரிந்த எல்லோராலும் பாடப்படக் கூடியதல்ல இது. கற்றறிந்த அறிஞருக்கே மிகக் கடினமான ஒன்று. அதனால் தான் “மிறைக்கவி” என்று இது போற்றப்படுகிறது.

ஞானசம்பந்தர், பகழிக் கூத்தர், பாம்பன் சுவாமிகள், பிச்சு ஐயங்கார் போன்ற பலரது பாடல்கள் ‘சித்திரக்கவி’ வடிவில் அமைந்துள்ளன. இவ்வகைச் சித்திரக்கவிகளை இயற்றுவதற்கு செய்யுள் பாடுமறிவு மட்டுமல்லாமல், துல்லியமான இலக்கண அறிவும், கணித அறிவும் இருக்க வேண்டும். 

ஒரே எழுத்து திரும்பத் திரும்ப எத்தனை முறை வர வேண்டும், அது எந்த வகையில் பொருள் கொள்ளப்பட வேண்டும், எத்தனை எழுத்துக்கள் ஒரு பாடலில் இருக்க வேண்டும், மாலை மாற்றாக அந்தச் செய்யுள் வரும்போது எழுத்துக்களை எந்தெந்த வகையில் அமைக்க வேண்டும் என்பதற்கெல்லாம் விதிமுறைகள் உள்ளன. 

சித்திரக்கவிகளை எப்படி அமைப்பது, அதனை எப்படிப் பாடுவது என்பதற்கான விளக்கங்கள்  ‘தண்டியலங்காரம், மாறனலங்காரம், குவலயானந்தம்’ போன்ற நூல்களில் காணப்படுகின்றன.

சித்திரக்கவியின் வகைகள் பற்றி,
மாலை மாற்றே சக்கரஞ் சுழிகுள
மேகமாத மெழுகூற் றிருக்கை
காதை கரப்பே கரந்துறைப் பாட்டே
தூசங் கௌலே வாவன் ஞாற்றே
பாத மயக்கே பாவின் புணர்ப்பே
கூட சதுக்கங் கோமூத் திரியே
யோரெழத் தினத்தா னுயர்ந்த பாட்டே
யொற்றுப் பெயர்த்த வொருபொருட் பாட்டே
சித்திரப் பாவே விசித்திரப் பாவே
விற்ப நடையே வினாவுத் தரமே
சருப்பதோ பத்திரஞ் சார்ந்த வெழுத்தே
வருக்கமு மற்றும் வடநூற் கடலு
ளொருக்குடன் வைத்த வுதாரண நோக்கி
விரித்து நிறைத்து மிறைக்கவிப் பாட்டுத்
தெரித்துப் பாடுவது சித்திர கவியே. 

– என்று மிக விரிவான விளக்கத்தைத் தருகிறது பிங்கல முனிவர் எழுதிய ‘பிங்கல நிகண்டு.’

இந்த வகைகளை அடிப்படையாக வைத்துப் பலர் பலவிதமான சித்திரக்கவிகளை அக்காலத்தில் இயற்றியுள்ளனர். சிலர் இதனை அடிப்படையாகக் கொண்டு புதுப் புது வகையிலும் சித்திரக்கவிகள் எழுதியுள்ளனர். சித்திரக் கவிஞர்கள் பற்றியும், அவர்கள் இயற்றிய சில சித்திரக்கவிகள் பற்றியும் சுருக்கமாக இங்கே காண்போம்.



1. கூடச்சதுர்த்த பந்தம்

படம்-1

கூடம் = மறைவு; சதுர்த்தம் = நான்கு. நான்காம் அடியை மறைவாகக் கொண்ட செய்யுள் என்பது இதன் பொருள். (காண்க: படம்- 1)

சான்றாக இந்தச் செய்யுளைப் பார்க்கலாம்.

நாதா மானதா தூய தாருளா
ணீதா நாவாசீ ராம னாமனா
போதா சீமானா தரவி ராமா
தாதா தாணீ வாமனா சீதரா

படத்தில் சித்திரத்தின் ஆரம்பத்தில்  ‘நாதா’ என்பதில் துவங்கி ‘ராமா’ என்பதோடு சித்திரம் முற்றுப்பெற்று விடுகிறது. நான்காமடி சித்திரத்தில் இல்லை. ஆனால், மறைந்திருக்கிறது. அதனாலேயே இது கூடச்சதுர்த்த பந்தம் எனப்படுகிறது.

அந்த நான்காம் அடி எங்கே இருக்கிறது? சித்திரத்தின் மையத்தில் உள்ளது. அதாவது நடுவில் உள்ள வரிகளான  ‘தா தா’ என்பதில் துவங்கி,  ‘சீ த ரா’ என்று முடிவதே நான்காம் வரியாகும். அதனையே நான்காம் வரியாகக் கொள்ள வேண்டும். இதுவே இச்சித்திரக்கவியின் இலக்கணம்.

இந்தப் பாடலை இப்படிப் பொருள் கொள்ள வேண்டும்:

நாதா – சுவாமியே; மானதா – என் மனதில் உள்ளவனே; தூய தாருளா ணீதா நாவா = தூய தார் உளாள் = தூய்மை பொருந்திய தாமரையில் உள்ளவளான இலக்குமி – நீதான் நாவா – அவளின் உடைமையான நீதான் என்னுடைய நாவில் வந்து வீற்றிருக்க வேண்டும். சீ ராம னாமனா – சீராமன் ஆம் மனா – சக்கரவத்தித் திருமகனாகிய மன்னனே; சீமான் – அழகுடையவனே; ஆதரவி ராமா = ஆதர இராமா = சகலரும் விரும்பும் இராமனே; வாமனா சீதரா போதா – வாமனனே; சீதரனே; ஞான மயமானவனே; தாதா தாணீ = தா தா தாள் நீ – உனது திருவடித் தாமரைகளை (எனக்கு) நீ தந்தருள்வாயாக.

இது கடவுள் வாழ்த்துச் செய்யுளாகும். இதனை இயற்றியவர், பரிதிமாற் கலைஞர் என்னும் வி.கோ. சூரிய நாராயண சாஸ்திரியார். இவர், ஜூலை 6, 1870ல், விளாச்சேரியில் கோவிந்த சிவனாருக்கு மகனாகப் பிறந்தவர். தமிழ் மீது கொண்ட பற்றின் காரணமாகப் பிற்காலத்தில் தனது பெயரை ‘பரிதிமாற் கலைஞர்’ என்று பெயர் மாற்றம் செய்து கொண்டார்.

‘செம்மொழி அறிஞர்’ என்று போற்றத்தகுந்தவர் இவரே! தமிழைச் செம்மொழியாக அறிவிக்க வேண்டும் என முதன்முதலில் வலியுறுத்திய தமிழறிஞர் இவர்தான்! ‘தமிழ் மொழி வரலாறு’ என்னும் நூலை எழுதி, தமிழின் தொன்மையை அயலார் அறியச் செய்தார்.  ‘சித்திரக் கவி விளக்கம், நாடகவியல், மானவிஜயம், தனிப்பாசுரத் திரட்டு, தமிழ் வியாசங்கள்’ என்று இயல், இசை, நாடகம் என மூன்றிலும் பல படைப்புகளைத் தந்த முத்தமிழ் அறிஞர் இவர். நவம்பர் 2, 1903இல் இவர் காலமானார்.


2. மாலை மாற்று

ஒரு செய்யுளின் ஆரம்பத்தில் துவங்கி, அது முடியும் இறுதி எழுத்திலிருந்து திரும்ப முதலெழுத்து வரை படித்தாலும் மாறாமல் அதே செய்யுள் திரும்ப வருமாறு பாடப்படுவதே ‘மாலை மாற்று’ எனப்படுகிறது. மாலையைப் போல் முதலிருந்து துவங்கி இறுதிவரை வலமிருந்து இடமாகவும், இடமிருந்து வலமாகவும் வரிசை மாறாமல் ஒன்று போன்றே இருப்பது மாலை மாற்றாகும். சான்றாகச் சொன்னால் ‘விகடகவி’ என்பதை வலமிருந்து இடமாகவும், இடமிருந்து வலமாகவும் படித்தால் எப்படி ஒரே சொல்லாக வருகிறதோ, அதைப் போன்றதுதான் ‘மாலை மாற்று’ என்பதும்.

“ஒரு செய்யுள் முதல், ஈறு உரைக்கினும், அஃதாய் வருவதை மாலை மாற்றென மொழிப” என்பது மாறனலங்காரம் கூறும் இலக்கணமாகும். பொதுவாக  ‘மாலை மாற்று’ குறள் வெண்பாவால் இரண்டு அடிகளிலேயே பாடப்படும். சான்றாக ஞானசம்பந்தர் எழுதிய இந்தப் பாடலைச் சுட்டலாம்.

யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா
காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா

இதை முதலிருந்து தொடங்கி வாசித்தாலும், இறுதியிலிருந்து தொடங்கி வாசித்தாலும் ஒன்றுபோலவே தொடங்கி முடியும்.

இதே மாலை மாற்றை மிகவும் அரிதாக நான்கடிகளிலும் சிலர் பாடியுள்ளனர். இதோ ஓர் உதாரணம்.

வாலகந மாநீயா மாவல வேநீத
நீலன நேசாயா நீயல - மாலய
நீயாசா நேநல நீதநி வேலவ
மாயாநீ மாநகல வா

இதன் விளக்கம்:

கால – நமனையொத்த; பாணி – கையுடைய; வேல – வேலாயுதனே!; கோ – அரசே; வால – தூயனே; மேவு – கோரும்; பால – பொருள்களை; தா – தந்தருள்(வாயாக); தால – நாவின் கண் பாவு(ம்) – செய்யுள்களும்; ஏல – பொருந்த; வா – வந்தருள்வாயாக; கோல – அழகிய; வேணி – சடையுடைய சிவன்; பால – குமரனே
கா – காத்தருள் (வாயாக)

மேற்கண்ட பாடலை எழுதியவர் சோழவந்தான் அரசஞ் சண்முகனார். இவர், மதுரையை அடுத்த சோழவந்தானில், அரசப்பபிள்ளை – பார்வதி அம்மாள் தம்பதியினருக்கு, செப்டம்பர் 15, 1868இல் மகனாகப் பிறந்தார். கிண்ணிமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகளிடம் தமிழ் இலக்கண, இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்தார். தமது பதினான்காம் வயதில் ‘சிதம்பர விநாயகர் மாலை’ என்ற நூலைப் பாடினார். தொடர்ந்து சிறுசிறு செய்யுள்களை இயற்றியும், சித்திரக்கவிகளை வரைந்தும் தமது அறிவை மேம்படுத்திக் கொண்டார்.  ‘மாலை மாற்று மாலை’ என்பது இவர் எழுதிய முதல் சித்திரக்கவி நூலாகும்.

தொடர்ந்து, ‘ஏகபாத நூற்றந்தாதி, நவமணிக்காரிகை நிகண்டு’ எனப் பல நூல்களை எழுதினார். மதுரையில் நான்காம் தமிழ்ச்சங்கம் அமைத்த வள்ளல் பாண்டித்துரைத் தேவர் தமிழ் வளர்ச்சிக்காக  ‘சேதுபதி செந்தமிழ்க் கலாசாலை’யை உருவாக்கினார். அதில் இவர் ஆசிரியராகச் சேர்ந்து பணியாற்றினார். பல தமிழறிஞர்களுடன் நட்புக் கொண்டிருந்த இவர், விவேகபாநு இதழில் இலக்கிய, இலக்கண ஆராய்ச்சிக் கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதிவந்தார்.  ‘இன்னிசை இருநூறு, திருக்குறளாராய்ச்சி, தொல்காப்பியப் பாயிர விருத்தி’ போன்றவை அவற்றில் முக்கியமானவையாகும். இவர், ஜனவரி 11, 1915ல், தனது 47ஆம் வயதில் காலமானார்.


3. சதுர் நாக பந்தம்

படம்-2

நான்கு நாகங்கள் ஒன்றையொன்று பின்னிக் கொண்டிருப்பது போல வரையும் சித்திரக்கவி ‘சதுர் நாக பந்தம்’ என்று அழைக்கப்படுகிறது. நாகங்களின் தலையில் துவங்கி வாலில் முடிவதாகப் பாடப்படும் இது, கடினமான செய்யுள் வகையினுள் ஒன்று என்று சொல்லலாம். காரணம், எங்கெங்கு நாகங்களின் சந்திப்பு அமைகிறது, எங்கு என்ன எழுத்தை இட்டால் அது எல்லா இடங்களுக்கும் பொருந்தி செய்யுளுக்குப் பொருத்தமாக அமையும் என்றெல்லாம் எழுத்தெண்ணிப் பாடப்படுவது.

சான்றாக கலிவிருதத்தில் அமைந்த கீழ்கண்ட பாடலைப் பார்க்கலாம். (காண்க: படம்-2)

மாதரி சேயமா வாகன வந்தருளா
தவ தேனிந காகுக நாதசூர்
மாதடி சேவக மானினி யாவளா
வேதவி யாவகா வேலவ கந்தனே!

இதன் சுருக்கமான பொருள்:

பெரிய மயில் வாகனத்தில் வந்து அருள் புரியும் உமையாள் மகனே, தவம் மிகுந்தவனே, தேன் போன்ற இனிமையுடையவனே, நாகத்தைக் கொண்ட குகனே, சூரனை வென்ற நாதனே, அவனை சேவலாக உன்னடி பணித்தவனே, வேதம் உரைக்கக் கேட்பவனே வடிவேலவா, என் கந்தனே!”

இதனை இயற்றியவர் ஆ.ப. சுவாமிநாத சர்மா.  ‘சந்தச் சரபச் சித்திரப் பாவல ஆசான், மதுரவரகவி’ என்றெல்லாம் போற்றப்பட்ட இவர், செப்டம்பர் 4, 1900 அன்று, புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோயிலை அடுத்த குடிக்காட்டில் பிறந்தவர். இளம் வயதிலேயே இவருக்கு ஆசுகவியாகத் தமிழ்ப் பாடல்களைப் பாடும் ஆற்றல் கை வந்தது. தமது 23ம் வயதில் சுவாமிமலை முருகன் மீது பாடல்கள் புனைந்து அதை  ‘சுவாமிநாதன் தோத்திரக் கொத்து’ என்னும் பெயரில் வெளியிட்டார்.

தொடர்ந்து  ‘சித்திரக் கவி’ இலக்கணத்தைத் தாமாகவே பயின்று தேர்ந்தார். முரசு பந்தம், மயூர பந்தம், நாக பந்தம், அட்ட நாக பந்தம், கூடச் சதுக்க பந்தம், ரத பந்தம் என்று பல நூற்றுக்கணக்கான சித்திரக்கவிகளை இவர் எழுதியிருக்கிறார்.  ‘குன்றை மும்மணிக்கோவை, மயூர கிரி உலா, திருவேரகன் பதிகம், மால் அரன் மாலை மாற்று மாலை, புதுக்கோட்டை புவனேஸ்வரி அம்மன் துதிப்பாசுரத் தொகை, கல்லம்பட்டி முத்து மாரியம்மன் துதிப்பாசுரத் தொகை, தேனிமலை முருகன் துதிப்பாசுரத் தொகை, வரத கணேசர் தோத்திரப் பாமாலை’ போன்றவை இவர் எழுதிய நூல்களாகும். 19/07/1973ல், தனது எழுபத்து மூன்றாம் வயதில் இவர் காலமானார்.

4. ரத பந்தம்

படம்- 3

‘ரதம்’ என அழைக்கப்படும் தேரின் சித்திரத்தில் கவியை அமைப்பதே ரத பந்தமாகும். (காண்க: படம்- 3)

ரதத்தின் கீழே இடப்பக்கம் உள்ள சக்கரத்தின் எழுத்தை முதலாகக் கொண்டு மேலேறி, பின் வலது சக்கரத்தில் இறங்கி, பின் அதிலிருந்து மேலேறி இடவலமாகச் சுற்றுச் சுற்றி மேலேறி உச்சியிலிருந்து நடுவில் இறக்கினால் பாடல் சரியாக வரும்.

சான்றாக இடச்சக்கரத்தில் உள்ள ‘க’ முதலாகி, மேலேறி, ‘ன்’னைத் தொடர்ந்து பின் கீழிறங்கி ‘ன’வைச் சேர்த்து பின் மீண்டும் மேலேறி ‘ன்’னைத் தொடர்ந்து இடவலமாக ‘குமண’ என்று தொடங்கி, ’பேணின்’ என்பதோடு முடிய, அங்கிருந்து மேலேறி ‘ம’வை முதலாகக் கொண்டு கீழிறங்க ’மணிராமச்சந்திரமன்’ எனச் செய்யுள் முடியும்

கன்னன் குமணனே காரணிகா வாமணிதிக்
குன்னுகொடை தந்தருள்கை யுற்றுமெச்சப்-பொன்போற்
பணிமிகச்செய் பண்புடன்மன் பாப்பெயரார்ப் பேணின்
மணிராமச் சந்திர மன்

இதன் பொருள்:

திக்கெல்லாம் நினைத்துப் போற்றும்படி, கன்னன், குமணன், மேகம், அழகான கற்பகம், காமதேனு, என்னும்படி கவிப் பெயர் பெற்று, பாவலரைக் காக்கக் கொடை கொடுக்கும் இனிய மணி போன்றவன், அனைவரும் பொன்னைப் போலப் போற்றப் பொதுப்பணி, கொடை மழையாலும் மொழி மழையாலும் மகிழச் செய்பவன் அரசனைப் போன்ற ராமச்சந்திர வள்ளல் என்பவனாம்.

இதனை இயற்றியவர் புலவர் பி.வி.அப்துல்கபூர். தன்னை ஆதரித்த சேக்கிழார் அடிப்பொடி டி.என்.ராமசந்திரன் மீது இவர் பாடிய பாடலே இது. அப்துல்கபூர் தனது பதினான்காம் வயது முதலே சித்திரக்கவிகள் எழுதத் துவங்கி விட்டார். ஆயிரக்கணக்கில் சித்திரக்கவிகள் பாடியவர் இவர். கீர்த்தனை அரசு, சித்திரக்கவிச் சரபம், ஆசுகவி என்பது உள்பட பல்வேறு பட்டங்கள் பெற்றவர். இவரைப் பாராட்டாத தமிழறிஞர்களே அக்காலத்தில் இல்லை என்னுமளவிற்கு தமிழ் இலக்கியத்தில் தேர்ந்தவர். பிறப்பால் இஸ்லாமியராக இருந்தாலும், சைவ சமயத்தில் தோய்ந்தவர். இலக்கணத்தில் ஆழங்காற்பட்டவர். ஜோதிடத்திலும் மிகத் தேர்ந்த விற்பன்னர். பல நூல்களை இவர் எழுதியிருக்கிறார்.

5. லிங்க பந்தம்

படம்- 4

சிவலிங்க வடிவத்தில் சித்திரம் வரைந்து இறைவனைத் தொழுவது சிவலிங்க பந்தமாகும். (காண்க: படம்- 4)

கார்கொண்ட புண்ணியத்தால் காமதிப்பால் மங்களஞ்செய்
தார்மதியே றப்புனைந்த சாத்துகணயன் சீர்வஞ்சி
யன்னவனைப் பாகார்த்தா னாங்கருள்வான் மாவிடையோன்
தென்காசி யத்தனையே செப்பு

இதனை வாசிக்கும் முறை:

சிவலிங்கத்தின் அடிப்புறத்திலிருந்து இடது பக்கத்தில் ஆரம்பித்துத் தொடர்ந்து வலம் இடம், இடம் வலம் என மாறி மாறிப் படித்து மேலேறி அங்கிருந்து நேர்கோட்டில் கீழிறங்கினால் செய்யுள் நிறைவடையும்.

எழுத்தெண்ணிப் பாடப்பட வேண்டிய செய்யுள் இது. சித்திரத்தில் அமைந்திருக்கும் எழுத்துக்கள் – 72. செய்யுளில் அமைந்திருப்பவை – 83.

இந்தச் செய்யுளை இயற்றியவர் யார் எனத் தெரியவில்லை. தென்காசி ஆலயத்தில் இது காணப்படுகிறது.

6. வேல் பந்தம்

படம்- 5

வேலின் உச்சியிலிருந்து பாடலின் முதல் எழுத்து துவங்கி உள்ளுக்குள் இரண்டு சுற்றுச் சுற்றி நடுத் தண்டின் வழியே கீழிறிங்கி முடிவது வேல் பந்தம் ஆகும்.

இதற்குச் சான்றாக வஞ்சி விருத்தத்தில் அமைந்த இந்தப் பாடலைப் பார்க்கலாம். (காண்க: படம்- 5)

வேலவா குக நாதனே
வாலவே தமு மோதியே
காலவே தயே நாசுற
நீலமா மயி லூர்வையே

இதன் விளக்கம்:

பா.சு.ரமணன்

வேதங்களை ஓதி உணர்த்திய வேலனே! அசுரர்களை வென்றவனே! நீல மாமயில் மீதேறி வந்து எம்மைக் காத்தருள்வாயாக.

பாடலில் உள்ள எழுத்துக்கள் – 33; சித்திரத்தில் 29 ஆக அமைந்துள்ளது.

இவை மட்டுமல்ல; இன்னும் மயில் பந்தம், தேள் பந்தம், சேவல் பந்தம், விளக்கு பந்தம், மலைப் பந்தம், சுழிகுளம், கோமூத்திரி, ஏக பாதம், முரச பந்தம், என்று பல நூற்றுக்கணக்கில் சித்திரக்கவிகள் உள்ளன.

கவிஞர் இலந்தை சு.ராமசாமி, கவிஞர் இராச.தியாகராசன், பேராசிரியர் முனைவர் எஸ்.பசுபதி, முனைவர் இரகமத் பீவி, முனைவர் அண்ணா கண்ணன், கவிஞர் விவேக் பாரதி எனப் பலர் மிகச் சிறப்பாகத் தற்காலத்திலும் சித்திரக்கவிகளை எழுதி வருகின்றனர்.

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s