தமிழ் வசன நடை

-மகாகவி பாரதி

நூறாண்டுகளுக்கு முன்னர், தமிழில் உரைநடை உருவாகிவந்த காலத்தில் அதற்கு இலக்கணம் இயற்றுகிறார் மகாகவி பாரதி. ” “கூடியவரை பேசுவதுபோலவே எழுதுவதுதான் உத்தமமென்பது என்னுடைய கக்ஷி” என்று கூறும் அவர், ”வசன நடை, கம்பர் கவிதைக்குச் சொல்லியது போலவே, தெளிவு, ஒளி, தண்மை, ஒழுக்கம் இவை நான்குமுடையதாக யிருக்க வேண்டும்” என்கிறார். “உள்ளத்திலே தமிழ்ச் சக்தியை நிலைநிறுத்திக் கொண்டால் கை நேரான தமிழ் நடை எழுதும்” என்று நமக்கு வழிகாட்டுகிறார்....

தமிழ் வசன நடை இப்போதுதான் பிறந்தது. பல வருஷமாகவில்லை. தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும். ஆதலால், இப்போதே நமது வசனம் உலகத்தில் எந்த பாஷையைக் காட்டிலும் தெளிவாக இருக்கும்படி முயற்சி செய்ய வேண்டும். 

கூடியவரை பேசுவதுபோலவே எழுதுவதுதான் உத்தமமென்பது என்னுடைய கக்ஷி. எந்த ஒரு விஷயம் எழுதினாலும் சரி, ஒரு கதை அல்லது ஒரு தர்க்கம், ஒரு சாஸ்திரம், ஒரு பத்திரிகை விஷயம் எதை எழுதினாலும் வார்த்தை சொல்லுகிற மாதிரியாகவே அமைந்துவிட்டால் நல்லது.

பழக்கமில்லாத ஒரு விஷயத்தைக் குறித்து, அதாவது ஜனங்களுக்குச் சற்றேனும் பழக்கமில்லாமல், தனக்கும் அதிக பழக்கமில்லாத ஒரு விஷயத்தைக் குறித்து எழுத ஆரம்பித்தால் வாக்கியம் தத்தளிக்கத்தான் செய்யும். சந்தேகமில்லை. ஆனாலும் ஒரு வழியாக முடிக்கும்போது வாய்க்கு வழங்குகிறதா என்று வாசித்துப் பார்த்துக் கொள்ளுதல் நல்லது. அல்லது ஒரு நண்பனிடம் படித்துக் காட்டும் வழக்கம் வைத்துக் கொள்ள வேண்டும்.

சொல்ல வந்த விஷயத்தை மனதிலே சரியாகக் கட்டி வைத்துக் கொள்ளவேண்டும். பிறகு கோணல், திருகல் ஒன்றுமில்லாமல், நடை நேராகச் செல்ல வேண்டும். முன் யோசனை இல்லாமலே நேராக எழுதும் திறமையை வாணி கொடுத்துவிட்டால் பின்பு ஸங்கடமில்லை. 

ஆரம்பத்திலே, மனதிலே கட்டி முடிந்த வசனங்களையே எழுதுவது நன்று. உள்ளத்திலே நேர்மையும் தைர்யமுமிருந்தால், கை பிறகு தானாகவே எழுத்து எழுதும். தைர்யம் இல்லாவிட்டால் வசனம் தள்ளாடும். சண்டிமாடு போல ஓரிடத்தில் வந்து படுத்துக்கொள்ளும். வாலைப் பிடித்து எவ்வளவு திருகினாலும் எழுந்திருக்காது. 

வசன நடை, கம்பர் கவிதைக்குச் சொல்லியது போலவே, தெளிவு, ஒளி, தண்மை, ஒழுக்கம் இவை நான்குமுடையதாக யிருக்க வேண்டும். இவற்றுள், ஒழுக்கமாவது தட்டுத்தடையில்லாமல் நேரே பாய்ந்து செல்லும் தன்மை. நமது தற்கால வசனநடையில் சரியான ஓட்டமில்லை. தள்ளாட்டம் அதிகமாகக் காணப்படுகிறது. உள்ளத்திலே தமிழ்ச் சக்தியை நிலைநிறுத்திக் கொண்டால் கை நேரான தமிழ் நடை எழுதும்.

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s