-வானமாமலை
திரு. வானமாமலை, சுதேசி விழிப்புணர்வு இயக்கம் சார்பில் வெளிவந்த ‘சுதேசி செய்தி’ மாத இதழின் பொறுப்பாசிரியராகப் பணியாற்றியவர். சுவாமி விவேகானந்தர் குறித்த அன்ன்னாரது கட்டுரை இங்கே…

தனக்குத் தானே பெயர் சூட்டிக் கொண்ட சுயம்புச் சித்தர் அவர். ராமகிருஷ்ண துறவிகளின் கட்டளை முறையை (Ramakrishna Order) 1886-ஆம் வருடம் நிறுவிய போது தனக்கு ‘சுவாமி விவேகானந்தர்’ என்று பெயரிட்டுக் கொண்டார் நரேந்திரநாத்.
பாரத தேசத்தைப் புனரமைக்கும் பணியில் பெரும் பங்காற்றியவர் சுவாமி விவேகானந்தர். சுவாமிஜி ஒரு ஆன்மிகவாதி என்று அறியப்பட்டாலும், அவரின் பலதரப்பட்ட நோக்கு இருந்தது. தேசத்தின் அரசியல், பொருளாதார நலன் ஆகிவற்றிற்கு அவர் கூறிய தீர்வுகள் ஆச்சரியத்தை அளிக்கின்றன.
வேதாந்த சமயத்தின் உயரிய கோட்பாடுகளும் ‘சோஷலிசம்’ என்று அழைக்கப்படும் சமதர்மமும் ஒத்திசைவதன் மூலம் மனித ஜீவர்களின் ஆன்மிக மற்றும் பொருளாதார இலக்குகளை எட்டமுடியும் என்று நினைத்த உலகின் முதல் சிந்தனையாளராக சுவாமி விவேகானந்தர் இருக்கலாம்.
நவீன பொருளாதார வல்லுநர்கள், குறிப்பாக மேற்கத்தியர்கள் முன்னிலைப்படுத்தியது ‘பொருளாதார மனிதனையே’ (Economiocal Man). ஒரு வேதாந்தியாக சுவாமிஜி தனிப்பட்ட மனிதன், அவன் தனித்தன்மை என்ற குறுகிய விஷயங்களைத் தாண்டி மேலே எழ வேண்டும் என்று நினைத்தது இயற்கையே.
நவீன பொருளாதாரத்தின் பயனெறிமுறை கோட்பாடு (Utilitarian values), அதாவது மிகுதியான மக்களின் மிகுந்த இன்பமே சிறந்தது என்ற கொள்கைக்கு எதிராக உயரிய பண்புகளான சுயகட்டுப்பாடும் சுய எல்லை வகுத்தலும் ஒரு ஆதர்ஸ ஜனநாயக சமுதாயம் உருவாக உதவும் என்ற கருத்தியலுக்கு வேதாந்தத்தின் அடிப்படையில் பொருள் விளக்கம் தந்திருக்கிறார் சுவாமி விவேகானந்தர்.
சுதந்திரத்திற்கு முன் நம் நாட்டின் அறிஞர்கள் பலரின் மேற்கத்திய அனுபவங்கள் பிரிட்டனின் பின்னணியில் இருந்து வந்தது என்றால், சுவாமி விவேகானந்தரின் அனுபவங்கள் மற்றும் லௌகீக நோக்கு யாவற்றிலும் அமெரிக்க அனுபவங்களின் தாக்கம் இழையோடி இருப்பதைக் காணலாம். ஆயினும் எந்த வகையானாலும் அவர் வெளிப்படுத்திய கருத்துக்களுக்கு அடிப்படை ஆதாரம் அத்வைத வேதாந்தமே.
சுவாமி விவேகானந்தர் உலகம் முழுவதும் சுற்றி இந்தியாவைப் பற்றிப் பேசியவர். இந்தியாவின் ஜாதி வேறுபாடுகள், மதம், சிறுபான்மை சார்பு, நவீனத்துவம், பொருளாதாரம் மற்றும் இந்திய அரசியல் என்று எண்ணற்ற பொருள்களைப் பற்றி சிந்தித்து, பேசி, கேள்வி எழுப்பி அவற்றைச் சந்தித்தவர்களில் முதன்மையானவர் சுவாமி விவேகானந்தர் என்று கொள்ளலாம்.
சுவாமிஜியின் காலத்தின் அளவுகோலின்படி அவர் ஒரு புரட்சியாளர் என்று சொல்லலாம். அவர் சமயக் கோட்பாடுகளையும் சித்தாந்தங்களையும் விளக்கிக் கூறும்போதும் கூட அரசியல் அல்லது பொருளாதார – சமூக நோக்கு இழையோடி இருப்பதைக் காணலாம். இது சுவாமிஜி தன் நாட்டு மக்கள், சமயத்தார் மீது கொண்டுள்ள அக்கறையின் காரணமாக எழுந்த பண்பு.
இது சுவாமி விவேகானந்தரை இரண்டு புனைவுகோள்களை நோக்கி இட்டுச் செல்கிறது. ஒன்று, வயிறு காலியாக உள்ளபோது சமயம் பயன்படாது. இரண்டாவது, இந்தியாவின் ஏழைகள் விழிப்புணர்வு அடைய வேண்டும்.
சுவாமி விவேகானந்தர் தன்னை ஒரு சோஷலிசவாதி என்று ஜனரஞ்சகமான பொருளில் கூறிக் கொண்டதால், சோஷலிஸ்டுகளும் கம்யூனிஸ்டுகளும் சுவாமி விவேகானந்தரின் பாரம்பரியத்தின் மீது சொந்தம் கொண்டாட முயற்சித்தனர். ஆனால் சுவாமிஜி என்றும் இறுக்கமான கட்டமைப்புடைய சோஷலிசத்திற்கு முற்றிலும் எதிரானவர். அதேபோல அவரை ஒரு மதச்சார்பின்மைவாதி என்று அடையாளப்படுத்த முனையும் ஒரு சாராருக்கும் இந்த வாதம் பொருந்தும். அவரின் பொருளாதாரச் சித்தாந்தத்திற்கு ‘வேதாந்த சோஷலிசம்’ என்று பெயர் புனையலாம்.
சுவாமிஜி தன் பொருளாதாரத் தத்துவத்தை வலியுறுத்த கர்ம யோகத்தின் துணையை நாடுகிறார். சமுதாயம் நீண்ட நாள் நிலைத்து இருப்பதற்கு மனிதனுக்கு பணம் ஈட்டவும், தன் துறையில் சிறப்புறவும் வாய்ப்புகள் அளிக்கப்பட வேண்டும் என்பதை சுவாமி உணர்ந்து கொண்டார். இதைத் தான் இந்நாளில் ‘மெரிட்டோகரசி’ என்று சொல்கிறோம். வளர்ந்த நாடுகளில் இதற்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்ததே அவர்களின் பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு காரணமாகும்.
சுவாமிஜி சொல்வது:
“கிரகஸ்தன் தான் எல்லாவற்றிற்கும் அடிப்படையானவர். முழுச் சமுதாயத்திற்கே ஆதாரமாக விளங்குபவன். அவனே முதன்மையான வருமானக்காரன். ஏழைகள், வலுவற்றோர், பெண்கள், மற்றும் குழந்தைகள் என வேலை செய்யாதோர் யாவரும் கிரகஸ்தனைச் சார்ந்தே இருக்கின்றனர். ஆக அவனுக்கென்று சில கடமைகள் இருக்கின்றன. அவற்றை செய்ய அவன் தன் பலத்தை உணரவேண்டும் அவன் கடினமாக உழைத்து முதலில் அறிவையும் பின்னர் செல்வத்தையும் சேர்க்க வேண்டும்.
(இதைத்தான் நாம் இன்று தொழில் முனைவு அல்லது Entreprenership என்று சொல்கிறோம்).
செல்வம் ஈட்ட விழையாத ஒரு கிரகஸ்தன் பண்புநலன் அற்றவன், அவன் சோம்பேறித்தனமாய் வாழலாகாது. அவனிடம் பணம் இருக்குமாயின் நூற்றுக் கணக்கானோர் ஆதரவு பெற முடியும். நகரங்களில் நூற்றுக் கணக்கானோர் பணக்காரனாக முயற்சிக்காமல், செல்வம் சேர்க்காமல் இருந்திருந்தால், இந்த நாகரிகம், தான- தர்ம க்ஷேத்திரங்கள் எல்லாம் எங்கே இருந்திருக்கும்? ஆகவே செல்வம் தேடிப் போவது மோசமல்ல. செல்வம் பகிர்ந்தளிப்பதற்கே.
(இதை நவீன பொருளாதார வல்லுநர்கள் கூறும் Trickle down effectக்கு ஒப்பிட்டுக் கூறலாம்).
கிரகஸ்தனே வாழ்க்கை மற்றும் சமுதாயத்தின் மையமாக இருப்பவன். செல்வம் ஈட்டி அதை நற்காரியங்களுக்கு செலவிடுவது அவனுக்கு ஒரு பிரார்த்தனையாகும். கிரகஸ்தனின் இச்செயல், குகையில் அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டு இருக்கும் தபஸ்வியின் செயலுக்கு ஈடானது. இச்செயலே அவனை மோட்சத்திற்கு இட்டுச் செல்லும்”.
மிக முக்கியமாக, சுவாமி விவேகானந்தர் சமச்சீர் கோட்பாட்டை பெரிதும் ஆதரிப்பவர் அல்ல. அதைப் பற்றிய அதிகம் சந்தேகங்கள் கொண்டிருந்தார். ஆயினும் சமமற்ற தன்மைகளை கட்டுக்குள் வைத்திட சமச்சீர் சக்திகளும் தேவை தான் என்ற நோக்கும் அவருக்கு இருந்தது.
சுவாமி சொல்கிறார்:
“சமநிலை அல்லது சமச்சீர் என்ற கருத்தை பல சமயங்கள் போதிக்கின்றன. கிறிஸ்தவம் அதில் ஒன்று. அடிமை வாழ்வு இல்லை, உண்ணவும் குடிக்கவும் ஏராளமாகக் கிடைக்கும் என்ற கிறிஸ்தவ போதனையை நம்பிய கிரேக்க, ரோமானிய அடிமைகள், கிறிஸ்தவத்தைத் தழுவினர். நவீன காலத்தில் இதையே சுதந்திரம், சமதர்மம், மற்றும் சகோதரத்துவம் (Freedom, Equality and Fraternity - பிரெஞ்சு புரட்சியின் போது உருவான கோட்பாடுகள்) என்று புனைந்து புதிய வடிவ சமதர்மத்தை பிரசாரம் செய்கின்றனர். இதுவும் ஒரு வகை வெறிச்செயலே”.
சுவாமி தொடர்ந்து சொல்கையில், “உண்மையான சமதர்மம் என்பது பூமியில் இருந்ததே கிடையாது, வர முடியாது. எங்கே எல்லோரும் எப்படி சமமாக இருக்க முடியும்? இதுபோன்ற சமச்சீர் முழு அழிவைக் குறிக்கின்றது. உலகை அது எப்படியிருக்கின்றதோ அதன்படி இருக்க வைத்திருப்பது எது? அதுவே யதார்த்தத்தில் நிலவும் சமச்சீரின்மை” என்கிறார்.
(இந்த அறிவு தான் ஐக்கிய சோவியத் ரஷ்யாவில் ‘கிளாஸ்நாஸ்ட்’ மற்றும் ‘பெரிஸ்த்ரோய்கா’ என சோவியத் யூனியனைத் துண்டாக்கியது; கிழக்கு ஐரோப்பாவில் இரும்புத்திரையை விலக்கியது; பெர்லின் சுவரை வீழ்த்தியது).
சுவாமி விவேகானந்தர், “பிரபஞ்சத்தின் மூல வடிவில் முழுமையான சமச்சீர் நிலை இருந்தது. அதன் பின்னால் உருவாக்கும் சக்திகள் எவ்வாறு வந்தன? போராட்டங்கள், போட்டிகள் மற்றும் சண்டையின் காரணமாக வந்தன. விஞ்ஞானமும் சமச்சீர் கோட்பாட்டிற்குத் துணை போகாது. பிரபஞ்சத்தின் எல்லா நிகழ்வுகளும், பொருட்களும் முழுமையான சமச்சீர் நிலையை அடையப் போராடிக் கொண்டு இருக்கின்றன. அப்படி ஒரு நிலை ஏற்பட வாய்ப்பு வருமாயின் வேறு ஒரு இடர் வந்து அதைச் சீர்கெடுக்கும். மறுபடியும் ஒன்று சேர்தல் மற்றும் உருவாக்கம் தொடரும். ஆக சமமின்மை சிருஷ்டியின் அடிப்படையாகும்” என்கிறார்.
(ஷெகல், அவர்தம் வழிவந்த காரல் மார்க்ஸ் என கம்யூனிச கோட்பாடுகள் எல்லாவற்றிற்கும் பதில் அளிக்கின்றார் சுவாமி)
மேற்கத்திய நாடுகளுடனான மோதல் மற்றும் இந்தியாவின் எழுச்சியைப் பற்றி நூறாண்டுகளுக்கு முன்னரே சுவாமி விவேகானந்தர் தீர்க்க தரிசனமாய்க் கூறியது:
“இந்தியா மற்ற நாடுகளுடனான உரசல்கள் காரணமாக மெதுவாக விழித்துக்கொள்ளத் தொடங்கியுள்ளது. இதனால் சிறிது சுதந்திரமான மற்றும் சுயமான சிந்தனைகள் நவீன இந்தியாவில் தோன்றுவது போல் இருக்கிறது. ஒருபுறம் மேற்கத்திய விஞ்ஞானம் அதன் பேரொளியால் கண்ணைப் பறிக்கின்றது. அதேசமயம் மறு பக்கத்தில் பாரதத்தின் பழங்காலத்திய நம்பிக்கையூட்டும் ஆற்றல் அளிக்கும் நம் முன்னோர்களின் பாரம்பரியங்கள் இருக்கின்றன. தொடர்ந்து பல நூற்றாண்டுகளாய் இந்த தேசத்தின் ஞானிகளின் வழியாக நமக்குக் கிடைக்கப்பெற்ற பாரம்பரியம் உலகளாவிய அன்பு, வெல்வதற்கல்லாத வீரம், மனித சக்தியைத் தாண்டிய அறிவுத் திறம், அதீத ஆன்மிகம் ஆகியவை எல்லாம் நம்பிக்கையூட்டுகின்றன. மறுபுறத்தில் முழுமொத்த பொருள் முதல்வாதம், அளப்பரிய வளங்கள், அசுர அதிகாரக் குவிப்பு மற்றும் தீவிர புலன் சார்ந்த தேடல்கள் இவையெல்லாமே மிக அதிகமான கிளர்ச்சியைத் தோற்றுவித்துள்ளன. மேற்கத்திய உலகம் அறிமுகப்படுத்தும் பல்வேறு விசித்திரமான ஆடம்பரங்கள் இந்தியாவின் முன் அணிவகுத்து நிற்கின்றன. தேவலோகப் பானங்கள், நேர்த்தியாக பரிமாறப்படும் விலை உயர்ந்த உணவு வகைகள், மிகச் சிறப்பான உடைகள், மாட மாளிகைகள், புதிய போக்குவரத்துச் சாதனங்கள், புதிய பண்புகள், பாணிகள் மற்றும் நவநாகரீகமாய் உடையணிந்து வெட்கமின்றி சுதந்திரமாய் திரியும் படித்த பெண்கள் இவை எல்லாமே உணரப்படாத ஆசைகளைத் தூண்டி விடுகின்றன”
-என்கிறார்.
(தற்காலத்து கட்டற்ற நுகர்வுத் தன்மை, வரையறுக்கப்படாத சமூக இயல்புகள் ஆகியவை நம் நினைவிற்கு வருகிறது)
சுவாமிஜி தொடர்கிறார்:
“மறுபடியும் காட்சி மாறுகிறது. இந்த இடத்தில் கடுமையான சமயக் கட்டுப்பாடுகளோடும், விரதங்களோடும் சீதா, சாவித்திரி ஆகியோர் தோன்றுகின்றனர். மேலும் வனவாசம், சடைமுடி தரித்து காவியணிந்த சன்யாசிகள் மற்றும் சுயத்தை தேடிப் போகுதல் எல்லாம் வருகின்றன. ஒருபுறம் சுயநலத்தின் அடிப்படையிலான மேற்கத்திய சமுதாயங்களின் சுதந்திரம். மறுபுறம் ஆரிய சமுதாயத்தின் அதீத தியாகம். இந்த வன்மையான போராட்டத்தில் இந்தியச் சமுதாயம் அல்லல்படுவது ஒரு விசித்திரமா? மேற்கின் இலக்கு தனிமனித சுதந்திரம், அதன் மொழி பணம், சம்பாதிக்க வழி கோலும் கல்வி, அதற்கான வழிமுறை அரசியல். இந்தியாவைப் பொறுத்த வரையில் அதன் இலக்கு முக்தி, அதன் மொழி வேதமாகும். வழிமுறை பற்றுவிடல் அல்லது துறத்தல்”.
நவீன இந்தியாவின் சிந்தனை என்னவென்றால் ‘நிச்சயமற்ற ஆன்மிக எதிர்பார்ப்பின் பொருட்டு என் நடைமுறை உலகாயத வாழ்க்கையை ஏன் கெடுத்துக் கொண்டு இருக்கிறேன்?’ என்பதாகும். இந்தக் கேள்வியை எழுப்பி, அதற்கு பதிலும் கூறுகிறார் விவேகானந்தர்: ‘இறப்பும் மாற்றமும் கொண்ட இந்த உலகில், ஓ மனிதா! எங்கே உன் மகிழ்ச்சி?’
மேற்கத்திய மற்றும் இந்திய முன்னுரிமைகளை தெள்ளத் தெளிவாய் முன்வைக்கிறார் சுவாமிஜி. சுமார் 130 வருடங்கள் கழித்து இவை இன்றைய பொருளாதாரத்தின் விவாதப் பொருளாய் இருப்பது கண்டு சுவாமிஜியின் தீர்க்க தரிசனம் ஆச்சரியத்தை அளிக்கின்றது.
மாபெரும் மனிதர்களான மகாத்மா காந்தி, லியோ டால்ஸ்டாய், ரவீந்தரநாத் தாகூர், சுபாஷ் சந்திரபோஸ், அரவிந்தர், ராஜாஜி ஆகியோருக்கு முன்னுதாரணமாகவும், ஊக்கம் அளித்தவராகவும் இருக்கின்றார் சுவாமி விவேகானந்தர். விவேகானந்தர் இந்திய இளைஞர்களின் அடிப்படைச் சின்னமாக போற்றப்படுகிறார்.
மிதமிஞ்சிய துன்பங்கள் ஏற்பட்டாலும் நிம்மதியிழக்காமல் வாழ…
சுவாமி விவேகானந்தரின் பத்து கட்டளைகள்:
1. தாராளமாய்க் கொடுக்கவும்.
2. அக நிறைவிற்காக வேலை செய்யவும்.
3. நற்பண்புகளுக்காக வேலை செய்யவும்.
4. செல்வத்திற்காக மட்டுமல்லாமல் உயரிய சிந்தனைகளுக்காகவும் வேலை செய்யவும்.
5. வேலையை அதன் மகிழ்ச்சிக்காக செய்யவும்.
6. அச்சத்தை மேற்கொள்ள வேலை செய்யவும்.
7. எதிர்மறை குணங்களைத் தவிர்க்க வேலை செய்யவும்.
8. ஒருமைக்காக வேலை செய்யவும்.
9. சத்தியத்திற்காக வேலை செய்யவும்.
10. சுதந்திரத்திற்காக வேலை செய்யவும்.
நடைமுறை பொருளாதாரம் என்பது தேசிய வளங்களைக் கணக்கிடுவது. அவற்றை சமமாகப் பங்கிட்டு அளிப்பதும் தேசிய சொத்துக்களை நிர்வகிப்பதிலும் மட்டுமல்ல, மனித வாழ்க்கையோடு ஒன்றுகலந்து மனிதனின் அவல நிலையை லௌகீக ரீதியாக மட்டுமல்லாமல் ஆன்மிக ரீதியாகவும் மேல் எழச் செய்வதே உண்மையான பொருளாதாரச் சித்தாந்தமாகும். பொருளாதாரப் பெரும் புயலின் தாக்கத்தினால் துன்பப்படுவோருக்கு சுவாமி விவேகானந்தரின் நம்பிக்கையளிக்கும் வார்த்தைகள் இவை.
எளிய வாழ்க்கை வாழ்ந்து, அக நிம்மதி என்ற ஒரே குறிக்கோளாக இருந்தால் பேரிடர்க் காலங்களில் கூட அமைதியாகவும் சமச்சீரான மனநிலையுடனும் இருக்க முடியும்.
பொருளாதாரப் போராட்டக் காலங்களுக்கு இந்தக் கூற்றை பொருத்திப் பார்க்கும்போது சுவாமி விவேகானந்தர் சொல்வது என்னவென்றால்,
“தேவைகளும் கவலைகளுமே எல்லா விதமான இன்ப துன்பங்களுக்கும் காரணமாய் இருக்கின்றது. தேவைகள் அதிகமாகின்றனவா அல்லது குறைகின்றனவா? வாழ்க்கை எளிதாகிக் கொண்டு இருக்கிறதா அல்லது மேலும் சிக்கலாகிக் கொண்டு இருக்கிறதா? நிச்சயமாக சிக்கலாகிக் கொண்டு வருகிறது! தேவைகள் பன்மடங்காகிக் கொண்டு வருகிறது. உங்களின் பாட்டனார், பூட்டனாருக்கு உங்களுக்குத் தேவையான அளவு பணமோ உடையோ வேண்டியிருக்கவில்லை. அவர்கள் காலத்தில் கார்களோ ரயில்களோ இல்லை. ஆனால் அவர்களுக்கு தேவை குறைவாக இருந்தது. இவையெல்லாம் வந்த பிறகு தேவைகளும் அதிகமாகி விட்டது. நீங்கள் இன்னும் கடினமாக உழைக்க வேண்டியுள்ளது. மேலும் மேலும் கவலைகளும், போட்டிகளும் தான் அதிகமாகியுள்ளன”.
ஆக ஒரு மகிழ்ச்சியான, ஆதர்ஸ சமுதாயம் உருவாவதற்கு கட்டற்ற பொருள் தேடலும், ஈட்டலும் முட்டுக்கட்டைகள் என்று விவேகானந்தர் சொல்வதை நாம் பொருள்படுத்திக் கொள்ளலாம்.
சுவாமி விவேகானந்தரின் உலகத்திற்கான பொருளாதாரச் சித்தாந்தத்தை ரத்தினச் சுருக்கமாய் சொல்ல வேண்டுமென்றால், “மனிதன் மேலும் மேலும் சுயநலத்தோடு இருந்தால் அவன் மேலும் நற்பண்புகள் இல்லாமல் போவான். இதுவே ஒரு இனத்திற்கும் பொருந்தும். தனக்கென மட்டுமே என்று வரையறுத்துக் கொண்ட ஒரு இனம் உலகிலேயே மிகவும் கொடூரமான மற்றும் கொடுமை வாய்ந்த ஒன்றாக இருந்து இருக்கிறது”.
உலகின் மற்ற நாடுகளை பொருளாதார ரீதியாக ஆதிக்கம் செலுத்தி, உலகை மனித நேயமற்ற சந்தையாகவும், உலக மக்களை வெறும் நுகர்வோராக நோக்கும் மேற்கத்திய பொருளாதார ஏதேச்சதிகாரத்தை சுட்டிக் காட்டுவது போலுள்ளன சுவாமி விவேகானந்தரின் வார்த்தைகள்.
- நன்றி: சுதேசி செய்தி (ஜனவரி 2013)
$$$