-ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன்
திரு. ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன், ஆன்மிக நாட்டம் கொண்ட எழுத்தாளர், கவிஞர். அன்னாரது சுவாமி விவேகானந்தர் மீதான வெண்பாக்கள் இவை….

வியனுலகு தான்மகிழ வாய்த்தவே தாந்தன்
செயம்பெறுக கண்டகனா சீர்கொள் – புயலாகிப்
புன்மை கடிந்தான் பொருள்தந்தான் வாழ்விற்கே
என்னுக் கடவோ மியாம்.
1
யாமம் கடந்ததுவால் ஈரிருளும் இற்றதுவால்
ஓமத்தீ யென்றிங்கே உண்மை யெழுந்ததுவால்
பூமடந்தை தன்பொறையும் பலித்ததுவால் புண்ணியனும்
சேமக்காப் பானா னிவண்.
2
வண்புகழ் நாரணனார் வாழ்வளிக்க வந்திட்டார்
கண்திறந்த காசிநாதர் காக்கவந்தார் – எண்ணரிய
யோகநிலை ஆழும் இருடியிவ ரென்றென்றே
ஆகமகிழ் ராமகிருஷ் ணர்.
3
ஆமென் றுளதாய் அகிலமெலாம் உள்நின்று
ஓமென்ற ஒன்றாய் நிலவுவதே – நாமென்று
உண்மை இயல்பினில் ஓங்கும் உலகென்றான்
தண்மைச் சுடர்மொழியே காப்பு.
4
கல்லூரி கற்கும்நாள் கற்றவர் தாம்வியப்ப
நல்லூற்றம் தான்கொண்டு நாடினான் – அல்லொத்த
காளியருள் காதல் கருணை அவதாரன்
தாளிணையே தான்புகலாய்க் கொண்டு.
5
கொண்டொளித்த காலந்தான் மீண்டுதவ வந்தனனோ
விண்டொளிரும் வான்கருத்தே ஈந்தனனால் – எண்கடந்த
ஐயனாதி சங்கரனார் அத்வைத போதத்தை
உய்வகையாய்த் தந்தா னுவந்து.
6
உவந்து வழிநடந்தே ஊரெல்லாம் சுற்றி
அவஙகள் மலிய ஆற்றான் – பவங்கடந்த
முக்திநிலை தான்துறந்தான் மக்கள் நிலையுயர
பக்தி அதுவானான் பற்று.
7
பற்றினான் பற்றற்றான் பார்மக்கள் நன்மையே
முற்றினான் மாயமிலான் மூதறிவில் – எற்றுக்காய்
இன்புதுன்பில் எற்றுண் டிவணுலகில் உற்றுழல்வாய்
அன்பவன்பால் வைத்திடு நீ.
8
நீள்துயிலும் போயிற்று நில்லா உலகிதனில்
ஆள்வார்கள் ஆண்டவரும் போயொழிந்தார் – மாளாத
ஞானத்தால் மாநிலத்தில் ஞாயிறென நம்நாடு
ஊனமின்றி ஓங்கும் உயிர்த்து.
9
உயிர்கள் உலவும் அரியென்றே கண்டு
பயிலும் பலதொண்டே பக்தி – மயர்வகற்றி
மாதவனார் சந்நிதியாய் மாநிலத்தைக் கண்டக்கால்
போதமெழும் ஆங்கே உணர்.
10
உணர்வெழுந் துள்ளக் கமல மலர்ந்து
தணவா தெழுபரிதி தானணைந்து – குண்டலினி
நாகமென தான்வளைய நிட்டையுற்ற அன்னத்தை
வேகமுறு வேலை தொழும்.
11
தொழப்போம் பொழுதில் தனதுயர் எண்ணான்
விழப்போம் மனிதகுல வீறாய் -எழுமினென்றான்
தீரமே ஆன்றவழி திண்மைவிவே காநந்தன்
சாரமொழி சிந்தைசெய் வாம்.
12
வாம்பரித்தேர் தாம்செலுத்தும் தாமோ தரனார்
ஆம்பரிசாய் அன்றளித்தார் கீதையே – நாமறிய
நானில மெங்கெங்கும் நாரா யணநரனாய்
ஆனார் இராம கிருஷ்ணர்.
13
குமரியன்னை நோக்கக் கடுந்தவத்தில் ஆழ்ந்தான்
அமரிக்கர் அவைநடுவண் ஆன்மிகத்தூ தானான்
தமதுள்ளப் போதேறித் தூயன்வீற் றானால்
நமதுள்ளம் வீற்றா ரவர்.
14
நின்றான் நிலவுலக நல்லோர் அவைக்கணத்தே
பொன்றாப் புகழ்ப்புலரி பூவிரிய – வென்றான்தன்
ஆன்மிகத்தால் மன்பதையை ஆண்டான்தன் அன்பினால்
ஊனமற உண்மையால் அன்று.
15
அன்றிவ் வுலக மளந்தான்கொல் அன்புடனே
சென்றிவ் வுலகம் நடந்தான்கொல் – கன்றுடனே
தீங்குழலும் தெய்வத்தண் கீதையும் சொற்றான்கொல்
ஈங்கிவன் பேசியநல் மாண்பு.
16
பூத்துக் குலுங்குக பாரதம் புன்மையை
நீத்துக் குலுங்குக நன்னெறி – ஆத்தும
ஞானத்தில் ஒன்றும் மனிதரின் ஞாலமிங்கு
வானத்தை நேர்கொண்ட தால்.
17
ஆல்கீழ் அமர்ந்தான் இலைஆல் துயின்றானால்
நால்வர்க் குணர்த்தியகைக் காட்டுகொல் – வாலறிவன்
போந்தான்கொல் பொங்கொளி வீசும் புதுமொழியில்
ஓம்தான் உலவிய தால்.
18
உலகமோர் ஆரஞ் சுறுரசச் சொட்டும்
விலகாமல் வேட்பனென்றார் இங்கர்சால் – ஞாலப்
பழத்தினைநீர் என்வழியால் பூரணமாய்த் துய்ப்பீர்
அழகாக வென்றார் நரேன்.
19
வேத விளக்கம் பரமஹம்சர் வாழ்வாகும்
நாதனவன் நீண்டயுக பாரதத்தின் சாரனவன்
சாரதா தேவியருட் சத்தியத்தால் பெண்குலமே
பூரணமாய் போதமெழும் பார்.
20
பார்த்தான் பரவசத்தான் பங்கயத்தாள் பாரிப்பப்
பேர்த்தான் பெருங்கலியைப் பாரினின்றும் – ஆர்த்தார்
அநவரதம் ஆன்றோர்கள் ஆன்மிகத்தால் சீர்த்த
மனமுடைய ராகிச் சிறந்து.
21
முனிவனும் கண்மலர்ந்தான் முத்திமுகிழ் சேயும்
கனிந்தொரு சொல்மலரப் பூத்தான் – புனிதனவன்
புன்னகையே பொன்யுகத்தின் அச்சாரம் ஆயிற்றால்
உன்னதமே எய்தும் மனம்.
22
மனமாசு நீங்கும் மதிவிளங்கும் உண்மை
அனவரத மாகத்தி லோங்கும் – வனமறைகள்
உள்ளம் விளங்கும் உயர்விவே கானந்தன்
விள்ளமுதப் பேருரைத்தக் கால்.
23
மனிதனெனச் சொல்வர் அறியாதார் மற்று
மனிதனென நிற்பதுவோ தெய்வம் – மனிதனந்த
தெய்வத்தின் தொண்டர்யாம் ஆலயமோ இவ்வுலகம்
பொய்க்காத பூசை நெறி.
24
நெறியாகத் தொண்டறத்தைத் தூய துறவை
நெறிதந்தான் நன்மடம் என்றே – அறிவார்தம்
முக்தியும் மாநிலத்தின் நன்மையும் சேவையெனும்
பக்தியால் உண்டாகு மாறு.
25
அத்வைதம் நல்கவிதை ஆன்ற அறம்புராணம்
மெத்தமயல் யோகம் உளவியலாய் – ஒத்திசைய
கோதுநீக்கிக் கொள்ளற் கெளிதாய் எளியோர்க்கும்
தோதுபட ஆக்கல் செயல்.
26
செயல்முறை வேதாந்தம் செய்தளித்தான் சேவை
முயற்றித் தொழும்நெறி மாட்சி – உயப்போம்
உணர்வினர் உள்ளம் களிப்ப உலகோர்
வணங்கிடும் வாய்மைத் ததே.
27
தெய்வம் தொழுமடங்கள் வேண்டிய பல்கிநிற்ப
மெய்யுணர் வாகிநிற்கும் அத்வைத – முய்வகை
ஒன்றிற்கே ஓர்மடம் நல்லிமயத் தாக்கினான்
மன்பதை மாண்புற் றதால்.
28
ஏழைகளின் நல்லுழைப்பால் கல்விகற்று சீர்பெற்று
வாழ்வின்றி அன்னார் கவலுங்கால் — ஊழென்று
சொல்லி உதவாமல் உற்றசுகம் பேணிடுவார்
பொல்லார் துரோகி யவர்.
29
பெண்களின் முன்னேற்றம் கல்வியால் போதரும்
கண்ணதைத் தந்துவிட்டு எட்டிநில் – எண்ணற்க
அன்னார் உரிமைகள் உன்னா லென;பெண்தான்
தன்னாலே தானுயரும் தான்.
30
பாமரர் தம்மையே புன்மையாய் எண்ணியதால்
நாமிந்த ஈனமுற்றோம் நீண்டகாலம் – ஆம்வழியும்
மக்கள் உயர்வில் மனம்வைத்தே தொண்டாற்ற
புக்க யுகமாகும் பொன்.
31
ஜீவதயை என்றார் பரமஹம்ஸர் என்றலுமே
ஜீவசேவை என்றே திருத்திதம்முள் – மேவியன்று
சொல்லிய வாக்கின் திறமறிந்தார் சீடரவர்
நல்வகையால் நாட்டினார் வாழ்ச்சி.
32
பெண்ணுயர ஆவன செய்தலே சக்திபூஜை
மண்ணுயரும் மானம் உயருமே – எண்ணரிய
நன்மையெலாம் உண்டாகும் நங்கையவள் தானுயர்ந்து
தன்னுளம் தான்குளிர்ந்தக் கால்.
33
இன்னுமொரு நூற்றாண்டும் இந்நாடு நுந்தமக்கே
மன்னும் கடவுளென ஆகட்டும் – என்றுரைத்தான்
சென்னையில் அன்றந்தச் செந்துறவி செப்புமொழி
இன்னுமொரு நூற்றாண் டிரும்.
34
இருங்கடல் சூழ்வையம் வாழ இனித்தான்
வருகின்ற மானிடரும் ஓங்க – வருத்தமெலாம்
நீங்கி நிலைத்தநன்மை நிச்சலும் பல்கிடவே
ஆங்குறுதி ஆமவன் சொல்.
35
சொல்லில் சுடர்விடுக்கும் சொன்னவண்ணம் செய்தக்கால்
அல்லகன்றே ஆன்மவொளி ஆக்கும் – பல்கலையும்
பாங்குறவே பொன்றாப் பொருளில் பொருந்திவரும்
ஓங்குவிவே கானந்த மோதின்.
36
ஒன்றே மதமதில் ஓர்ந்திடுவார் தன்மையினால்
சென்றே பலவாகும் நன்னெறிகள் – என்றாலும்
செல்லும் வழியெல்லாம் சேர்கின்ற உண்மையதாய்ப்
பல்கும் பரம்பொருளே தான்.
37
உள்ளிருக்கும் தெய்விகத்தை உற்றதாம் வாழ்விதனில்
தெள்ள வெளிப்படுத்தல் தீர்மானம் – உள்ளவழி
அத்தனையும் உற்றசெயல் அன்பறிவு யோகத்தால்
வித்தகமாய் ஆற்றல் விறல்.
38
வீறுகொண் டேற்றம் விளங்கவே வேதாந்த
ஆறெமக் கீந்தான்நல் ஆன்மிகத்தால் – ஏறுபுகழ்
நாடேற அன்றாட வேதாந்த நன்னெறியால்
ஈடேற வைத்தான் எமை.
39
புதியதவம் தந்தான் பரமனருள் கூர
யதிவிவே கானந்தன் யாத்தான் – அதிசுலபம்
ஐயே அவனிமாந்தர் சேவையினில் துய்யபெரும்
மெய்ஞானம் தானே வரும்.
40
.
$$$