-மகாகவி பாரதி

(15 நவம்பர், 1920)
துருக்கிக்கும் நேசக் க்ஷியாருக்கும் நடந்த உடம்பாட்டைத் துருக்கி இன்னும் உறுதி செய்யவில்லை. மறுபடியும் ஒரு முறை தேசீயக் கக்ஷியாரால் துருக்கிக்குச் சற்றே ஸௌகர்யம் ஏற்படலாமென்று தோன்றுகிறது.
பால்கன் யுத்த முடிவில் துருக்கி தோற்றுப் போய்விட்டது. தேசீயக் கக்ஷிக்கு விரோதமான மனிதர் துருக்கியில் ஆட்சி செலுத்தி வந்தனர். அவர்களுடைய கொள்கை எப்படி யிருந்த தென்றால் :- உள்நாட்டில் தேசீயக் கக்ஷியாரின் சக்தியைக் குறைக்கும் பொருட்டு, அன்னியரின் உதவி பெற்று அதனால் அந்த அன்னியர்கள் நம்மைக் குதிரையேறக்கூடிய நிலைமை ஏற்பட்டாலும் பெரிதில்லை; நாட்டை அன்னியர் கொண்டு போனாலும் போகுக; ஆனால் தேசியக் கக்ஷியார் ஆளக் கூடாது. இங்ஙனம் கருதும் மனிதர் செய்துகொண்ட உடம்பாடு எப்படி யிருக்கும்!
மேலும், லண்டன் நகரத்தில் பால்கன் தேசத்தார்களுக்கும் துருக்கிக்கும் உடம்பாடு கையெழுத்திடப்பட்டது. அதில், மற்ற நிபந்தனைகளுடன், அட்ரியாநோபிள் ஜில்லாவைத் துருக்கி விட்டுவிட வேண்டுமென்ற நிபந்தனையும் சேர்ந்திருந்தது. அக்காலத்தில், அன்வர்பாஷா முதலிய தேசீயக் கக்ஷித் தலைவர்கள் துணிவாகவும் தைரியமாகவும் வேலை செய்தபடியால் துருக்கிக்கு அட்ரியா நோபிள் நஷ்டமாகாமல் மிஞ்சிற்று. திடீரென்று அன்வர்பாஷா முன்னிருந்த கோழை மந்திரிகளைத் தூக்கி எறிந்துவிட்டு, அதிகாரத்தைக் கைவசப் படுத்திக்கொண்டு, அட்ரியா நோபிளை இழக்கப் போவதில்லை யென்று தெரிவித்துவிட்டார். இதற்குள், பால்கன் தேசங்கள் ஒன்றுக்கொன்று போராடத் தொடங்கித் தங்கள் மனஸ்தாபங்களைத் தீர்ப்பதற்குப் பிறர் மத்யஸ்தத்தை வேண்டக் கூடிய நிலைமைக்கு வந்து விட்டபடியால் அவற்றால் துருக்கியை வற்புறுத்த முடியவில்லை.
ஆனால், “லண்டன் உடம்பாட்டை நாங்களன்றோ கூட இருந்து முடித்து வைத்தோம்? அப்படியிருக்க அவ்வுடம்பாட்டுக்கு மாறாக அட்ரியா நோபிள் துருக்கி வசத்திலிருப்பதை நாங்கள் அங்கீகாரம் செய்யமாட்டோம்” என்று ஆங்கில மந்திரிகள் சொன்னார்கள். அதற்கு அன்பர்பாஷா :– “தங்கள் இஷ்டப்படி என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். ஆனால் அட்ரியா நோபிளைக் கொடுக்க மாட்டேன்’’ என்று சொல்லிவிட்டார். ஒன்றும் நடக்கவில்லை. துருக்கிக்கு அட்ரியா நோபிள் மிஞ்சிற்று.
அதுபோல் இப்போது ஆசியா மைனரிலுள்ள அனடோலியாவின் ராஜதானியாகிய அங்கோரா நகரத்தில் கமால்பாஷா தேசீயக் கக்ஷிப் படைகளையும், தக்க உபபலங்களையும் வைத்துக்கொண்டு கான்ஸ்டாண்டிநோபிள் நகரத்திலுள்ள துருக்கிய அதிகாரிகளிடம் த்ரேஸ், ஸ்மர்னா மாகாணங்களை இழந்துவிடாமல் இருக்கும்படி வற்புறுத்தி வருகிறார். இப்போது ஸெவர் உடம்பாட்டை உறுதி செய்யுமாறு நேசக் கக்ஷியார் வற்புறுத்தியதற்குத் உத்திரமாகத் துருக்கி கவர்மெண்டார் அவ்விஷயம் இப்போது அத்தனை அவஸரமில்லையென்று கமால் பாஷாவின் கூட்டத்தாரை ஸமாதானப்படுத்தும் பொருட்டாக அதைச் சற்று மெதுவாகவே கவனிக்கும்படி நேர்கிறதென்றும் தெரிவித்திருக்கிறார்கள்.
நேசக் கக்ஷியாருக்குள்ளேயே ஸமாதான நிபந்தனைகளைப் பற்றிய பூர்ண மன வொற்றுமையில்லாம லிருப்பதை யறிந்தே துருக்கிய அதிகாரிகளுக்கு இங்ஙனம் சொல்ல தைர்யம் ஏற்பட்டிருக்கக் கூடுமென்று நினைக்கிறோம். ஜெர்மனி விஷயத்திலேயே பிரான்ஸுக்கும் இங்கிலாந்துக்கும் மேன்மேலும் அபிப்பிராய பேதங்கள் தோன்றி வருகின்றன. அமெரிக்காவோ சொல்ல வேண்டியதில்லை; “இங்கிலாந்தினிடம் எனக்கு விரோதம் கிடையாது’’ என்று அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக நியமனம் பெற்றிருக்கும் ஹார்டிங் என்பவர் சொல்லுகிறார். நம்முடைய பிராண ஸ்நேஹிதனாக உயிர்த்துணையாக இருந்த ஒருவன் இப்போது நமக்கும் தனக்கும் விரோதமில்லை யென்று சொல்ல நேர்ந்தால் முன் இருந்த ஸ்நேஹ நிலை எத்தனை தூரம் குறைந்து போய்விட்ட தென்பது சொல்லாமலே விளங்கும்.
இத்தாலியோ மிகவும் அபாயகரமான உள்நாட்டுக் குழப்பத்தில் அழுந்திக் கிடக்கிறது. இந்த நிலையில் தாமேன் தமது கழுத்திலே அவசரமாகச் சுருக்குப் போட்டுக் கொள்ள வேண்டும் என்று துருக்கி நினைத்தே இங்ஙனம் வாயிதா போடுகிற தென்று தோன்றுகிறது. ஆனால் இங்ஙனம் துருக்கி கொடுத்த உத்தரத்தில் நேசச் கக்ஷியாருக்கு கோபமுண்டாய் அவர்கள் இதுவரை துருக்கி ராஜாங்கப் பொக்கிஷத்துக்குச் செய்துகொண்டு வந்த பண உதவியைத் குறைத்துவிடப் போகிறார்களென்றும், அதன் மேலும் துருக்கி சரிப்பட்டு வராவிட்டால் இறுதிச் சீட்டுப் பிறப்பிக்க நேருமென்றும் நேற்று கிடைத்த ராய்ட்டர் தந்தியொன்று சொல்லுகிறது. இதினின்றும், துருக்கி மந்திரிகள் என்ன விதமான செய்கையை மேற்கொள்வார்களென்பது தெரியவில்லை.
ஆனால், நேசக் கக்ஷியாரின் இறுதிச் சீட்டு (எங்கள் வார்த்தையை அங்கீகாரம் செய்யாவிட்டால் யுத்தந் தொடங்குவோமென்ற சீட்டு) துருக்கியரை நடு நடுங்கச் செய்துவிடுமென்று தோன்றவில்லை.
- சுதேசமித்திரன் (15.11.1920)
$$$