வங்கமே வாழிய!

-மகாகவி பாரதி

14-9-1905-இல் சென்னைக் கடற்கரைப் பொதுக்கூட்டத்தில் மகாகவி பாரதி பாடிய பாடல் இது; மறுநாள்  ‘சுதேசமித்திரன்’ நாளிதழில் வெளியாகி உள்ளது.

வங்க வாழ்த்துக் கவிகள்

அங்கமே தளர் வெய்திய காலையும்

   அங்கொர் புன்னரி தந்திடு மூனுணாச்

சிங்கமே யென வாழ்தல் சிறப்பெனாச்

   செம்மை கூறிநந் தாய்ப் பெருந் தேயத்தைப்

பங்கமே பெறு மிந்நிலை நின்றுயா

   பண்டை மாண்பிடைக் கொண்டினி துய்த்திடும்

வங்கமே யென வந்தனை வாழிநீ

   வங்கமே நனி வாழிய வாழிய 1

.

கற்பகத் தருப் போலெது கேட்பினும்

   கடிது நல்கிடும் பாரத நாட்டினிற்

பொற்புறப் பிறந்தோம், நமக்கோர் விதப்

   பொருளு மன்னியரீதல் பொறுக்கிலேம்

அற்பர் போலப் பிறர்கரம் நோக்கியோ

   மவனி வாழ்தலா காதென நன்கிதை

வற்புறுத்திடத் தோன்றிய தெய்வமே

   வங்கமே நனி வாழிய வாழிய 2

.

கண்ணினீர் துடைப்பாய் புன்னகை கொள்வாய்

   கவினுறும் பர தப்பெருந் தேவியே

உண்ணிகழிந்திடும் துன்பம் களைதியால்

   உன்றன் மைந்தர்கள் மேனெறி யுற்றனர்

பெண்ணி னெஞ்சிற் கிதமென லாவது

   பெற்ற பிள்ளைகள் பீடுறவே யன்றோ?

மண்ணினீ புகழ் மேவிட வாழ்த்திய

   வங்கமே நனி வாழிய வாழிய 3

.

சுதேசமித்திரன் (15-9-1905)
ஆதாரம்: பாரதி தமிழ் - பக்கம் 1-2

$$$

Leave a comment