-பேரா.தெ.ஞானசுந்தரம்
பேராசிரியர் ஸ்ரீ முனைவர் தெ.ஞானசுந்தரம், சென்னை பச்சையப்பன் கல்லூரியின் மேனாள் தமிழ்த்துறைத் தலைவர்; ராமாயணம், சங்க இலக்கியம், திருக்குறள், வைணவ பக்தி இலக்கியங்களில் தோய்ந்தவர். சுவாமி விவேகானந்தர் குறித்த இவரது கட்டுரை இங்கே...

இன்று பெரும்பாலான துறவிகள் கேலிக்குரிய பொருளாக நிலைதாழ்ந்து விட்டார்கள். ஆனால் துறவிகள் ஒரு சிலரை நினைத்தால் எழுந்து நின்று வணங்கத் தோன்றுகிறது. அப்படிப்பட்ட துறவியருள் ஒருவரே சுவாமி விவேகானந்தர். மேலைநாடுகளில் வேதாந்தத்தின் மேன்மையை நிலைநாட்டிய அந்த மேதை உலவிய மண்ணில் பிறக்கும் பேறு பெற்றோமே என்று நினைக்கும்போது உச்சிதனில் கருவம் ஓங்கி வளர்கிறது.
சிங்கத்தின் மேனாணிப்பு (பெருமிதம்) அதன் உருவத்தில் இருக்கிறது. விவேகானந்தரின் மேனாணிப்பு அவரது உள்ளத்தில் இருந்தது. அவரே மேலைநாட்டிற்குச் சென்று திரும்பிய முதல் இந்தியத் துறவி. அவரிடம் எதிர்மறைச் சிந்தனைகள் இல்லை. உடன்பாட்டுச் சிந்தனைகளே இருந்தன.
ஒவ்வொரு சமயமும் இறைவனை அடையும் ஒவ்வொரு வழி என்பது அவரது முடிபு. துவைதம், விசிட்டாத்துவைதம், அத்வைதம் என்பவை ஒருநெறியின் வளர்ச்சிப் படிநிலைகள் என்னும் புதுச்சிந்தனையைப் பரப்பி ஒற்றுமைக்குப் பாடுபட்டார்.
அவர் அமெரிக்காவில் சுகமாக வாழ்ந்துவிடவில்லை. எத்தனையோ தொல்லைகளை எதிர்கொள்ள வேண்டி நேரிட்டது. அவருக்குப் பிரம்ம ஞான சபையினர் (தியாசபிகல் சொசைட்டி) எதிராகச் செயல்பட்டனர். அவர் பணமின்றித் தொல்லைப்பட்டதை அறிந்த அக் கூட்டத்தைச் சேர்ந்த ஒருவர், “அந்தப் பிசாசு ஒழியப் போகிறது. நமக்கு இறைவன் அருள்புரிந்துவிட்டார்” என்று எழுதினாராம். அனைத்துச் சமய மாநாட்டில் அவர் கலந்து கொள்வதையே அவர்கள் விரும்பவில்லை. “தேவர்கள் கூடும் இடத்தில் இந்தப் புழுவிற்கு என்ன வேலை?” என்று வினவுவதுபோல அமைந்தது அவர்கள் பார்வை. அவர் எந்த அமைப்பின் சார்பாகவுமின்றித் தாமே வந்துள்ளார் என்றும் தடை எழுப்பினார்கள்.
அவருக்கு எதிராகப் பழமைவாதக் கிறித்தவ குருமார்கள் (பாதிரிகள்) வரிந்து கட்டிக்கொண்டு அவதூறுகளைப் பரப்பினார்கள். அவருக்கு அமெரிக்காவில் பல மனைவிகளும் பல குழந்தைகளும் இருப்பதாகப் பொய்யான தகவல்களை இதழ்களில் எழுதினார்கள். வங்காளியான மஜூம்தார் விவேகானந்தர் மீது கொண்ட பொறாமையால் அவரைப் போக்கிலி என்றும் மோசக்காரன் என்றும் பழித்துப் பேசினார். கொல்கத்தாவில், அவர் அமெரிக்காவில் ஒழுக்கக்கேடாக வாழ்ந்து வருவதாக வாய்கூசாமல் பேசிவந்தார். அவருடைய சொற்பொழிவுகளுக்கு ஏற்பாடு செய்துவந்த ஒரு சொற்பொழிவு அமைப்புச் சங்கம் அவரை ஏமாற்றியது. இதழ்கள் சில அவருடைய சொற்பொழிகளை எல்லாம் அரசியல் சொற்பொழிவுகளைப் போலத் திரித்து வெளியிட்டு அவரை இந்திய அரசியல்வாதியாகக் காட்டும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டது.
இவற்றால் எல்லாம் விவேகானந்தர் மனம் துவண்டுவிடவில்லை. ஒவ்வோர் அடியிலும் அவர்களோடு தன்னந்தனியாகப் போராடிக் காலம் தள்ள வேண்டி நேர்ந்தது. அவர் பட்ட துன்பங்களை எல்லாம் பச்சையப்பன் உயிர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியராகப் பல்லாண்டுகளும் பச்சையப்பன் கல்லூரியில் இயற்பியல் பேராசிரியராக இறுதியில் ஓராண்டும் பணியாற்றிய தம் முதன்மைச் சீடர் அளசிங்கருக்கு அவர் எழுதிய 43 கடிதங்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவில் தொடக்கத்தில் தமக்குப் பணநெருக்கடி ஏற்பட்டபோது அளசிங்கருக்கு எழுதினார். அளசிங்கர் தம் மனைவி ரங்கம்மாளின் நகைகளை விற்றும் வியாபாரி ஒருவரிடம் கடன் வாங்கியும் தந்தி மணியார்டரில் 1,100 ரூபாய் அனுப்பினார்.
அவருக்கு எழுதிய கடிதம் ஒன்றில், தம் லட்சியத்தைக் குறித்து, “நான் எப்போதும் இறைவனையே நம்பி இருக்கிறேன். பகலின் பிரகாசம் போல் விரிந்து நிற்கின்ற சத்தியத்தையே நம்பியிருக்கிறேன். பெயரும் புகழும் தேடிக் கொள்வதற்காகவோ, ஏன் பொது நன்மைக்காகவோகூட நான் போலியாக வாழ்ந்தேன் என்ற கறைகொண்ட மனச்சான்றுடன் இறக்க விரும்பவில்லை. ஒழுக்கக்கேடு என்ற மூச்சுக்காற்று கூட வீசக் கூடாது; செயல்முறைக் கொள்கையில் மாசின் நிழல் கூடப் படியக் கூடாது” என்று தெளிவாகத் தெரிவித்துள்ளார்.
விவேகானந்தர் இந்துமதத்தைத் தீவிரமாகக் காதலித்த துறவி. ஆனால் இல்லறத்தை வெறுத்த துறவி. ஆற்றல் மிக்க இளைஞர்கள் திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் மூழ்கிவிடுவதை வெறுத்தார். அவர்கள் ஆன்மிகத்துக்கும் நாட்டுக்கும் பணியாற்ற வேண்டும் என்பது அவரது விழைவு. .அவர் உள்ளத்தில் காமத்திற்கு இம்மியும் இடம் இருக்கவில்லை.
அவர் இந்து உணவை அமெரிக்காவில் உண்ணாமல், அங்கு கிடைத்தவற்றையே உண்டு வாழ்ந்ததாகக் குறைகூறி எழுதினார்கள். பொருள் நெருக்கடியால் அப்படி வாழ்ந்ததாகத் தெரிவித்துவிட்டு, தாம் காமத்தாலோ பணத்தாசையாலோ எப்பொழுதாவது தவறியிருப்பதாக நிரூபிக்க முடியுமா? என்று சூளுரைத்தார். தம்முடைய தூய வாழ்க்கையைப் பற்றிய பெருமிதம் அவருக்கு இருந்தது. ‘அன்புக்குரிய அமெரிக்கச் சகோதரிகளே, சகோதரர்களே!’ என்று தாம் விளித்துப் பேசியபோது அவையிலிருந்தவர்கள் தம்மிடம் இருந்த அதிசய ஆற்றலால் மயங்கினார்கள் என்றும், அவ்வாற்றல் தமக்குக் காம எண்ணத்திற்குச் சிறிதும் இடங்கொடுக்காத உள்ளத்தூய்மையால் கிடைத்தது என்றும் மகிழ்ச்சியோடு அவரே தெரிவித்துள்ளார்.
இளமையிலேயே தந்தையை இழந்து அவரும் அவருடைய தாயும் சகோதரர்களும் உணவின்றிப் பசியால் வாடினார்கள். அவரது வறுமைநிலையைப் பயன்படுத்தி அவரை அடைய நினைத்த பணக்காரப் பெண்ணொருத்தி, தன் உடைமைகளை எல்லாம் எடுத்துக்கொண்டு தன்னை ஏற்றுக்கொண்டு வறுமைக்கு முடிவுகட்டுமாறு வேண்டினாள். அவள் கருத்தினை ஏற்காமல் வெறுத்தொதுக்கினார். மற்றொருத்தி அவரை மயக்கிக் கவர்வதற்குப் பல முயற்சிகளை மேற்கொண்டாள். அழியும் உடலின் மீது ஆசை வைக்க வேண்டா என்றும், சாவினை எதிர்கொள்ள இறைவனை வழிபடுவதே உகந்த வழி என்றும் அறிவுரை கூறி அவளிடமிருந்தும் ஒதுங்கினார்.
அவர் அமெரிக்கப் பெண்மணிகள் பலரின் நன்மதிப்பையும் விருந்தோம்பலையும் பெற்றவர். சிகாகோவிற்கு அனைத்துச் சமயப் பேரவை தொடங்குவதற்குச் சில மாதங்கள் முன்பே வந்துவிட்டார். அப்பொழுது சிக்கனமாக இருப்பதற்காக பாஸ்டனில் ஒரு மூதாட்டியின் விருந்தினராகத் தங்கியுள்ளார். அதன் பின்பு டெட்ராய்டில் திருமதி பாக்லி, சிகாகோவில் ஜி. டபிள்யூ. ஹேல் ஆகியோர் வீடுகளில் தங்கியிருந்துள்ளார். திருமதி ஹேலை ‘அம்மா’ என்று அவர் அழைக்க அவர்தம பெண்பிள்ளைகள் அவரை ‘அண்ணா’ என்று அழைத்து அன்போடு பழகியுள்ளார்கள். லண்டனில் ஒரு சிறுவீட்டில் செல்வி கெல்லவுட், துறவி சாரதானந்தர், இன்னும் நண்பர்கள் சிலரோடு தங்கியுள்ளார். செல்வி ஹென்றிட்டா முல்லர் வீட்டில் சில வாரங்கள் உறைந்துள்ளார். 1899-ல் இரண்டாம் முறையாக அமெரிக்கா சென்றபோது லெக்கட் தம்பதியர் வீட்டில் தங்கி ஓய்வெடுத்துள்ளார்.

திருமதி ஷெர்மன் பல பொருள்களை அவருக்குப் பரிசாக வற்புறுத்தி அளித்துள்ளார். சிகாகோவைச் சேர்ந்த திருமதி பிராடு 500 டாலர் தர முன்வந்தபோது அதனை அன்போடு ஏற்க மறுத்துள்ளார். செல்வி கார்பின் தன் வீட்டில் அவருடைய வகுப்புகள் நடைபெற வேண்டும் என்று விரும்பினார். அமெரிக்கப் பெண்மணி செல்வி ஜோசபைன் பாரிஸ் நகரத்தை ஒரு மாத காலம் அவருடனிருந்து சுற்றிக் காட்டியுள்ளார். கலிபோர்னியாவிலிருந்து நியூயார்க் வரை செல்வதற்கான பயணச் சீட்டினை ஒரு பெண்மணி வாங்கி அளித்திருக்கிறார்.
மார்கரெட் நோபில் என்னும் பெண்மணி அவருக்குச் சீடராகித் துறவு மேற்கொண்டு சகோதரி நிவேதிதையாகி இந்தியாவுக்கு வந்துள்ளார். அது ஒரு தனி தியாக சரித்திரம்.
இந்தப் பெருமை எல்லாம், நேர்மையில்லாத ஒரு துறவிக்குக் கிடைக்கக் கூடியவையா? இந்த உதவிகளே அவர் அப்பழுக்கற்றவர் என்பதற்குச் சான்றுகளாகும். துறவிகள் பலருக்குக் காவி கட்டியதால் பெருமை சேர்ந்திருக்கிறது. ஆனால் விவேகானந்தர் காவி கட்டியதால் காவிக்குப் பெருமை சேர்ந்திருக்கிறது. அவரை ‘காவி கட்டிய கண்ணியம்’ என்று எவ்விதத் தயக்கமும் இன்றிக் கூறலாம்.
$$$