பாஞ்சாலி சபதம்- 1.1.9

-மகாகவி பாரதி

சகுனியின் தீய சொற்களைக் கேட்டு வெகுண்ட திருதராஷ்டிரன், அவனை கடுமொழி கூறி எச்சரிக்கிறார். தனது பிள்ளையை நாசம் செய்ய வந்த பேயென சகுனியை இகழ்கிறார் மன்னர். அவர் இயல்பில் நடுநிலை தவறாதவர் என்பதை இப்பாடல்களில் காட்டுகிறார் மகாகவி பாரதி.

முதல் பாகம்

1.1. அழைப்புச் சருக்கம்

1.1. 9. திரிதராட்டிரன் பதில் கூறுதல்

கள்ளச்சகுனியும் இங்ஙனே- பல
      கற்பனை சொல்லித்தன் உள்ளத்தின்-பொருள்
கொள்ளப் பகட்டுதல் கேட்டபின்-பெருங்
      கோபத்தோ டேதிரி தாட்டிரன்,’அட;
பிள்ளையை நாசம் புரியவே-ஒரு
      பேயென நீவந்து தோன்றினாய்;-பெரு
வெள்ளத்தைப் புல்லொன் றெதிர்க்குமோ?-இள
      வேந்தரை நாம்வெல்ல லாகுமோ?       71

‘சோதரர் தம்முட் பகையுண்டோ?-ஒரு
      சுற்றத்தி லேபெருஞ் செற்றமோ?-நம்மில்
ஆதரங் கொண்டவ ரல்லரோ?-முன்னர்
      ஆயிரம் சூழ்ச்சி இவன்செய் தும்-அந்தச்
சீதரன் தண்ணரு ளாலுமோர்-பெருஞ்
      சீலத்தி னாலும் புயவலி-கொண்டும்
யாதொரு தீங்கும் இலாமலே-பிழைத்
      தெண்ணருங் கீர்த்திபெற் றாரன்றோ?       72

‘பிள்ளைப் பருவந் தொடங்கியே-இந்தப்
      பிச்சன் அவர்க்குப் பெரும்பகை-செய்து
கொள்ளப் படாத பெரும்பழி-யன்றிக்
      கொண்டதொர் நன்மை சிறிதுண்டோ?-நெஞ்சில்
எள்ளத் தகுந்த பகைமையோ?-அவர்
      யார்க்கும் இளைத்த வகையுண்டோ?-வெறும்
நொள்ளைக் கதைகள் கதைக்கிறாய்,-பழ
      நூலின் பொருளைச் சிதைக்கிறாய்.       73

‘மன்னவர் நீதி சொலவந்தாய்;-பகை
      மாமலை யைச்சிறு மட்குடம்-கொள்ளச்
சொன்னதொர் நூல்சற்றுக் காட்டுவாய்!-விண்ணில்
      சூரியன் போல்நிக ரின்றியே-புகழ்
துன்னப் புவிச் சக்க ராதிபம்-உடற்
      சோதரர் தாங்கொண் டிருப்பவும்,-தந்தை
என்னக் கருதி,அவரெனைப்-பணிந்து
      என்சொற் கடங்கி நடப்பவும்,       74

‘முன்னை இவன் செய்த தீதெலாம்-அவர்
      முற்றும் மறந்தவ ராகியே-தன்னைத்
தின்ன வருமொர் தவளையைக்-கண்டு
      சிங்கஞ் சிரித்தருள் செய்தல்போல்-துணை
யென்ன இவனை மதிப்பவும்-அவர்
      ஏற்றத்தைக் கண்டும் அஞ்சாமலே-(நின்றன்
சின்ன மதியினை என்சொல்வேன்)-பகை
      செய்திட எண்ணிப் பிதற்றினாய்.       75

‘ஒப்பில் வலிமை யுடையதாந்-துணை
      யோடு பகைத்தல் உறுதியோ?-நம்மைத்
தப்பிழைத் தாரந்த வேள்வியில்-என்று
      சாலம் எவரிடஞ் செய்கிறாய்,-மயல்
அப்பி விழிதடு மாறியே-இவன்
      அங்கு மிங்கும்விழுந் தாடல் கண்டு-அந்தத்
துப்பிதழ் மைத்துனி தான்சிரித்-திடில்
      தோஷ மிதில்மிக வந்ததோ?       76

‘தவறி விழுபவர் தம்மையே-பெற்ற
      தாயுஞ் சிரித்தல் மரபன் றோ!-எனில்
இவனைத் துணைவர் சிரித்ததோர்-செயல்
      எண்ணரும் பாதக மாகுமோ?-மனக்
கவலை வளர்த்திடல் வேண்டுவோர்-ஒரு
      காரணங் காணுதல் கஷ்டமோ!-வெறும்
அவல மொழிகள் அளப்பதேன்!-தொழில்
      ஆயிர முண்டவை செய்குவீர்.       77

‘சின்னஞ் சிறிய வயதிலே-இவன்
      தீமை அவர்க்குத் தொடங்கினான்-அவர்
என்னரும் புத்திரன் என்றெண்ணித்-தங்கள்
      யாகத் திவனைத் தலைக்கொண்டு பசும்
பொன்னை நிறைத்ததொர் பையினை-”மனம்
      போலச் செலவிடு வாய்”என்றே-தந்து
மன்னவர் காண இவனுக்கே-தம்முள்
      மாண்பு கொடுத்தன ரல்லரோ?       78

‘கண்ணனுக் கேமுதல் அர்க்கியம்-அவர்
      காட்டினர் என்று பழித்தனை!-எனில்
நண்ணும் விருந்தினர்க் கன்றியே-நம்முள்
      நாமுப சாரங்கள் செய்வதோ?-உறவு
அண்ணனும் தம்பியும் ஆதலால்-அவர்
      அன்னிய மாநமைக் கொண்டிலர்;-முகில்
வண்ணன் அதிதியர் தம்முளே-முதல்
      மாண்புடை யானெனக் கொண்டனர்.       79

‘கண்ணனுக் கேயது சாலுமென்று-உயர்
      கங்கை மகன்சொலச் செய்தனர்:-இதைப்
பண்ணரும் பாவமென் றெண்ணினால்-அதன்
      பார மவர்தமைச் சாருமோ?-பின்னும்,
கண்ணனை ஏதனக் கொண்டனை?-”அவன்
      காலிற் சிறிதுக ளொப்பவர்-நிலத்
தெண்ணரும் மன்னவர் தம்முளே-பிறர்
      யாரு மிலை”யெனல் காணுவாய்.       80

‘ஆதிப் பரம்பொருள் நாரணன்;-தெளி
      வாகிய பொற்கடல் மீதி லே-நல்ல
சோதிப் பணாமுடி யாயிரம் கொண்ட
      தொல்லறி வென்னுமொர் பாம்பின்மேல்-ஒரு
போதத் துயில்கொளும் நாயகன்,-கலை
      போந்து புவிமிசைத் தோன்றினான்-இந்தச்
சீதக் குவளை விழியினான்”-என்று
      செப்புவார் உண்மை தெளிந்தவர்.       81

‘நானெனும் ஆணவந் தள்ளலும்-இந்த
      ஞாலத்தைத் தானெனக் கொள்ளலும்-பர
மோன நிலையின் நடத்தலும்-ஒரு
      மூவகைக் காலங் கடத்தலும்-நடு
வான கருமங்கள் செய்தலும்-உயிர்
      யாவிற்கும் நல்லருள் பெய்தலும்-பிறர்
ஊனைச் சிதைத்திடும் போதினும்-தனது
      உள்ளம் அருளின் நெகுதலும்,       82

‘ஆயிரங் கால முயற்சியால்-பெற
      லாவர் இப்பேறுகள் ஞானியர்;-இவை
தாயின் வயிற்றில் பிறந்தன்றே-தமைச்
      சார்ந்து விளங்கப் பெறுவரேல்,-இந்த
மாயிரு ஞாலம் அவர்தமைத்-தெய்வ
      மாண்புடை யாரென்று போற்றுங்காண்!-ஒரு
பேயினை வேதம் உணர்த்தல்போல்,-கண்ணன்
      பெற்றி உனக்கெவர் பேசுவார்?’       83

$$$

Leave a comment