எனது முற்றத்தில் – 28

-எஸ்.எஸ்.மகாதேவன்

காசி: தேசிய ஒருமைப்பாட்டின் ஊற்றுக்கண்

அரை நூற்றாண்டுக்கும் மேலாக தமிழகத்தில் தேசிய சிந்தனையாளர்கள் ஒன்றுகூடும்போது ஒலிக்கும் ஒரு தேசபக்திப் பாடலில் ஒரு வரி  “காசியும் கயிலையும் ராமேஸ்வரமும் நம்முடை ஒருமை உணர்த்திடுது” என்பதாகும்.

காசியும் ராமேஸ்வரமும் பரஸ்பரம் வடக்கையும் தெற்கையும் இணைக்கிறது என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறோம். அதென்ன கயிலை?

ஆம். கயிலை சிவபெருமானின் இமாலய இல்லமான கைலாசம் தான். இமயச் சாரலில் நீண்டு கிடக்கும் நேபாளம் காசிக்கு நன்றிக்கடன் பட்டுள்ளது. அதனால் இங்கே  கயிலை இடம்பெறுகிறது என்று தோன்றுகிறது.  எப்படி நன்றிக்கடன் பட்டது? 

பானுபக்தர்

சரியாக 209 ஆண்டுகளுக்கு முன்பு நேபாளத்தில் பிறந்த பானுபக்த ஆச்சாரியா என்பவர்தான் நேபாளி மொழியில் ராமாயணத்தை இயற்றியவர்.  அவர் காசி மாநகர் வந்து சமஸ்கிருதமும் ராமாயணமும் பயின்று சென்றதாக அவருடைய வாழ்க்கை வரலாறு இயம்புகிறது. பானு பக்தர் இளைஞராக இருந்தபோது ஏதாவது ஒரு சாதனை நிகழ்த்த வேண்டும் என்ற துடிப்பில் இருந்தார்.  அவர் கண்ணில் பட்டார் ஒரு முதிய தோட்டக்காரர்.  வாழ்நாளெல்லாம் தோட்டத்தை கண்ணும் கருத்துமாக அந்தத் தோட்டக்காரர் கவனித்து  வந்தது பானுபக்தரின் கருத்தில் பதிந்தது.  வசதியான குடும்பத்தைச் சேர்ந்த அவர்  ஞானம் சம்பாதிக்க காசிமாநகர் நோக்கி பயணம் தொடங்கினார்.  தென்கோடி ராமேஸ்வரம்  போலவே,  வடகோடி நேபாளமும் காசியின் ஞானதானத்தை மதித்துப் போற்றுகிறது.

ராம் சாஸ்திரி பிரபுணே

தெற்கும் வடக்கும் சரி, மேற்கின் கதை என்ன?  மகாராஷ்டிர மாநிலம், புணே நகரில் பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பேஷ்வாக்கள் ஆட்சி நடந்தது. அந்த அரசில் 30 ஆண்டுக் காலம் நீதிநெறி  காத்து நடுநிலைமை தவறாமல் தலைமை நீதியரசராகச் செயல்பட்டவர் ராம் சாஸ்திரி பிரபுணே. தன்னுடைய நேர்மை காரணமாக முன்னுதாரணமாக விளங்கினார். ஆனால்  இளமையில் ஏழ்மையால் சிறுமையை அனுபவித்தவர். வேலையாளான சிறுவன்  ராம் தன் எஜமானரின் விலையுயர்ந்த முத்துமாலை ஒன்றை ஆசையுடன் பார்த்தான்.  தகுதிக்கு மீறி ஆசைப்பட்டதற்காக எஜமானரின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளானான்.  அவமானம் அவனை காசி மாநகருக்கு  நடத்திச் சென்றது. அங்கே வேதமும் சாஸ்திரங்களும் பயின்று சாஸ்திரி ஆகி புணே திரும்பினார்  ராம் சாஸ்திரி. இது  அவருடைய வாழ்க்கை வரலாறு தெரிவிக்கிற சேதி.

முன்னதாக சத்ரபதி சிவாஜி மகாராஜாவுக்கு முடிசூட்டு விழா நடத்திக் கொடுத்தவர் காசி மாநகர பண்டிதர் காக பட்டர். அவர்போல வாழையடி வாழையாக வேதம் அறிந்த பெரியோர்கள் ஏராளமானவர்கள் காசி மாநகருக்கு  ‘ஞானக் களஞ்சியம்’ என்ற நற்பெயர் பெற்றுக் கொடுத்தார்கள்.  வீடு தேடி வரும் பிள்ளைகளுக்கு சாஸ்திரம் கற்றுக் கொடுத்துவந்த இவர்களுடைய  வாழ்வாதாரம் சிறக்க சிவாஜி மகாராஜா தாராளமான மானியங்கள் வழங்கியிருந்தார் என்றால், காசி  தேசத்தின் ஞானபீடமாக விளங்கியதே காரணம். 

சஞ்சீவ் சன்யால் 2015-இல் வெளியிட்ட  The Incredible History Of India’s Geography என்ற நூல் தரும் தகவல் சுவாரஸ்யமானது: பாரதத்தில் தென் வடலாகச் செல்லும் பாதையும் கிழக்கு மேற்காகச் செல்லும் பாதையும் காசியில் சந்திக்கின்றன, அதாவது பாரதிய ஞானத்திற்கு மையமாக காசி விளங்குவது போல, பூகோள ரீதியிலும் காசி தேசத்தின் மையம் என்பதுதான் அந்தத் தகவல். அயோத்யா, மதுரா, மாயா, காசி, காஞ்சி, அவந்திகா, புரீ – இவை ஏழும் மோட்சபுரிகள் என்று ஹிந்துக்கள் பரப்புகிறார்கள் இந்தப் பட்டியலிலும் நடுநாயகமாக காசி விளங்குவது தற்செயல் அல்ல என்று தோன்றுகிறது.

காசியைப் பற்றிய சகஜமான ஆர்வம் படிப்பாளிகளுக்கு  மட்டுமல்ல, சாமானியர்களுக்கு, அதுவும் இந்த தலைமுறை இளைஞர்களுக்கு உண்டு. நமது மூதாதையர்கள் போல நடைபயணமாக காசி – ராமேஸ்வரம் யாத்திரை  செய்தால் எப்படி இருக்கும் என்பதை யாத்திரை செய்தே பார்த்துவிட தீர்மானித்தார்கள் நகரத்தார் சமூக இளைஞர்கள் ஐந்தாறு பேர். இது நடந்தது சில ஆண்டுகளுக்கு முன். ஒரு சைக்கிள் ரிக்ஷா நிறைய உணவு, மாற்றுடை, அத்தியாவசியப் பொருள்கள் ஏற்றிக்கொண்டு ரிக்‌ஷாவைத் தள்ளிக்கொண்டே நடைபயணம் போனார்கள்.  இரவு நேரங்களில் மட்டும் காவல் நிலையத்திலோ சத்திரத்திலோ தங்குவார்கள். மத்திய பிரதேசத்தில் இதுபோல ஒரு காவல் நிலையத்தில் இரவு நேரம் தங்கினார்கள்.  உறங்குவதற்கு முன் பயணத் திட்டம் பற்றி தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள் அடிக்கடி ராமேஸ்வரம் என்ற சொல் அவர்கள் பேச்சில் அடிபட்டது.  அப்போது காவல் நிலைய லாக்கப்பிற்குள்ளிருந்து  ஒருவர் இரண்டு ரூபாய் தாள் ஒன்றை நீட்டினார். தணிந்த குரலில்  ஹிந்தியில்  “ராமேஸ்வர் கே லியே” (ராமநாத ஸ்வாமிக்காக) என்று சொன்னார். பாரத பூமியில் பக்தி, சிரத்தை என்றால் திருடன் உள்பட யாருக்கும் விதிவிலக்கு கிடையாது என்பதை நமது   அந்தக் கணத்தில் உணர்ந்தோம் என்று, அந்த இளைஞர்களில் ஒருவர் பின்னர் என்னிடம் தெரிவித்தார் (மற்ற மாநிலங்களில் உள்ளவர்களுக்கு ராமேஸ்வரம்  அவ்வளவு புனிதம்). 

காஞ்சிபுரம் மாவட்டம், மானாம்பதி ஊராட்சியை அடுத்த குக்கிராமம் பெருநகரம். நெடுஞ்சாலையின் ஒருபுறம் குடியிருப்புகள். எதிர்ப்புறம் சுடுகாடு. பாடை கொண்டு போகும்போது வழக்கம்போல பறையடித்துச் செல்வார்கள்.   பாடை நெடுஞ்சாலையைக் கடக்கும்போது மட்டும் நாகஸ்வரம் வாசிக்கப்படுகிறது.  சாலையைக் கடந்ததும் மறுபடியும்  சாக்கொட்டு. அந்த நெடுஞ்சாலை காசி – ராமேஸ்வரம் சாலை என்பதால், அங்கு மட்டும்  மங்கல வாத்தியம் வசிப்பதாக பெருநகரம் மக்கள் சொல்கிறார்கள். மானாம்பதி பற்றிய ஒரு சிறு நூலில் இந்தத் தகவல் இடம்பெற்றுள்ளது.  இந்தியா டுடே-யில் அந்த நூலை விமர்சனம் செய்த வல்லிக்கண்ணன், காசி – ராமேஸ்வர பாரம்பரியம் குறித்து குக்கிராம மக்களுக்கும் என்ன ஒரு பிடிப்பு என்று வியந்து கொண்டார். 

காசியால் செழித்த தமிழ் 

  • தென்கோடி எட்டயபுரத்தில் இருந்து காசி மாநகரம் சென்று கல்வி பயின்ற பாரதியாருக்கு 11 மொழிகள் தெரிந்திருந்தது. ஆனால் அவர் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தது, தமிழ்க் கவிஞராக. “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்” என்று தன் தாய்மொழிப் பற்றை அழுத்தம் திருத்தமாக அவர் பிரகடனம் செய்தது ஒருபுறம்; மறுபுறம்  “காசி நகர்ப்புலவர் பேசு மொழிதான் காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம்” என்ற பாரதியின் இன்னொரு வரி, காசியின் ஞானமேன்மையை நமக்கு நினைவூட்டுகிறது.
  • தேசத்தின் எல்லாப் பகுதிகளையும் போலவே தமிழகமும் தொன்றுதொட்டு காசி மாநகருடன் கனிவான உறவு  கொண்டுள்ளது. பாரதியாருக்கு முன்னதாகவே, நகரத்தார் காசியில் யாத்ரீகர்களுக்குத் தொண்டாற்றி முத்திரை பதித்திருக்கிறார்கள்.  17ஆம் நூற்றாண்டில்  குமரகுருபரர் காசி யாத்திரை  செய்தார். அத்திருத்தலத்தில் தமிழ்ப் பாரம்பரியப்படி மடம் அமைப்பதற்குத் தீர்மானித்தார். அப்போது காசி, தில்லியிலிருந்து ஆண்டுவந்த மொகலாய மன்னர்களுடையதாக இருந்தது. இஸ்லாமிய ஆட்சியாளரைச் சந்தித்துப் பேசுவதற்காக, ஹிந்துஸ்தானி மொழி வல்லமையைத் தந்தருள வேண்டுமென, கல்வித் தெய்வமான சரஸ்வதியை வேண்டி அவர் பாடியதே, இன்றும் தமிழ்ச்  சிறுவர் சிறுமியர் நாவில் நடம் புரியும்   ’சகலகலாவல்லி மாலை’. அதன்மூலம் பெற்ற மொழியறிவு கொண்டு, அந்த ஆட்சியாளருடன் பேசி, காசியில் மடம் அமைப்பதற்கு இடம் கோரினார். அவரது புலமை கண்டு வியந்த இஸ்லாமிய ஆட்சியாளர் அவரது கோரிக்கைக்கு இணங்கினர். காசியில் தமிழ் மடம் தோன்றியது. குமரகுருபரர் காசியில் தோற்றுவித்த மடத்தின் கிளை, திருப்பனந்தாளிலும் அமையப்பெற்றது.
  • திருவாவடுதுறை ஆதீனம் சுப்பிரமணிய தம்பிரான் சுவாமிகள் ஆணைப்படி மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள்   ‘காசி ரகசியம்’ என்ற பெயரில் ஒரு நூல் இயற்றினார்; அதன் மூலமும் உரையும் 1881-இல் நூலாக வெளிவந்தது. காசி யாத்திரை செய்த தமிழர்கள் எத்தனையோ பேர் தங்கள் அனுபவத்தை இதுபோல நூல்களாக பதிப்பித்திருக்கிறார்கள். யாத்திரைப் பாதை நெடுக உள்ள திருத்தலங்களை இந்த நூல்கள் பட்டியலிட்டு தமிழனை பாரத தரிசனம் செய்ய வைத்து காசி யாத்திரையை பூர்த்திசெய்ய ஊக்குவித்தன என்பது குறிப்பிடத்தக்கது. 
  • சி.ஏ.பார்க்கர்ஸ்டு என்ற ஐரோப்பியர் ‘காசி மாநகரம்’  என்ற நூலை மாக்மில்லன் கம்பெனி வாயிலாகப் பதிப்பித்தார். நூலின் துணைத் தலைப்பு  ‘ஆரம்ப வகுப்புக்களின் பரந்த படிப்பிற்குரியது’ என்று காணப்படுகிறது. பள்ளி மாணவர்கள் காசி பற்றி துணைப் பாடநூல் வழி அறிந்துகொள்ள வேண்டும் என்கிறது 1948-இல் வெளியான இந்த தமிழ்ப் புத்தகம். 

$$$

காசி தமிழ் சங்கமம் 2022

பாரத அரசின் கல்வி அமைச்சக அங்கமான பாரதிய பாஷா சமிதியின் முன்னெடுப்பில் நவம்பர் 16 முதல் டிசம்பர் 20 வரை  ‘காசி தமிழ் சங்கமம் 2022’  நிகழ்ச்சி தொடங்க இருக்கிறது. சென்னை ஐஐடி,  காசியில் உள்ள பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகம் ஆகியவற்றுடன் இணைந்து இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. தமிழகத்தில்  12 இடங்களில் இருந்து கலை, இலக்கியம், ஆன்மிகம், கல்வி ஆகிய துறைகளைச் சேர்ந்தவர்களை  காசி மாநகருக்கு விருந்தினராக எட்டு நாள் பயணமாக அழைத்துச் செல்லத் திட்டமிட்டிருக்கிறார்கள். காசி, அயோத்தி ஆகிய தலங்களை தரிசிப்பதுடன் கங்கையில் படகுப் பயணமும் நிகழ்ச்சியில் உள்ளது. போக்குவரத்து, தங்குமிடம்  இலவசம். விருந்தினராகச் செல்ல விருப்பமுள்ளவர்கள் பின்வரும் இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம். 

$$$

கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிடப்பட்ட அந்த தேசபக்திப் பாடல் முழுமையாக: 

ஹிந்து ராஷ்ட்ரமிது ஹிந்து மைந்தர் நாம்
என்று முழக்கம் செய்திடுவோம்!
உலகமனைத்தும் எதிர்த்து வரினும்
சத்திய மிதனை நாட்டிடுவோம்! 

                            (ஹிந்து)

அலைஅலையாய் பல அன்னியர் வரினும்
நிலை குலையா மாவீரர் நாம்!
உலகம் உய்ந்திட ஞானச் செல்வம்
வாரிவழங்கிய வள்ளல் நாம்!
உலகப் பேரரசாட்சி நடத்தினும்
மண்வெறியில்லா மாண்பினர் நாம்!
தியாகமும் தவமும் நேர்மை ஒழுக்கமும்
வாய்ந்த பரம்பரைத் தோன்றல் நாம்!
ஹிந்துவை உலகம் பாடிப் புகழ்ந்தே
வாழ்த்தித் துதித்து வணங்குகையில்,
சொந்த சமயமும் அறமும் மறந்தே
முந்தையர் பாதையை விடுப்போமோ?  

                           (ஹிந்து)

ஹிந்து சிற்பியர் உழைப்பினாலே
எழுந்த கோயில் பாரதமே!
ஹிந்து மேதையர் பேணி வளர்த்த
கலைக் களஞ்சியம் பாரதமே!
ஹிந்து முனிவர்தம் மாதவத்தாலே
உதித்த பேரொளி பாரதமே!
ஹிந்து வீரர்தம் உதிரத்தாலே
விளைந்த நற்பயிர் பாரதமே!
ஹிந்து ஹிந்துவென பாரத நாட்டின்
அணு அணுதோறும் முழங்குகையில்,
அஞ்சிக்கெஞ்சி மனவாட்டம் கொண்டே
தலைகுனிந்தினி நிற்போமோ?    

                          (ஹிந்து)

காசியும் கயிலையும் ராமேஸ்வரமும்
நம்முடை ஒருமை உணர்த்திடுது!
ராம, கிருஷ்ணர் தம் பக்தி யிழையிலே
நம்முடை உள்ளம் இணைந்திடுது!
செப்பும் மொழி பதினெட் டிடையேயும்
சிந்தனை ஒன்றே வாழ்ந்திடுது!
காடும் மலையும் கடந்துடைத்து நம்
ஒற்றுமை அருவி பாய்ந்திடுது!
ஒன்று ஒன்று என பாரத நாட்டின்
வரலாறெல்லாம் பேசுகையில்,
ஒருமை மறந்தே வலிவுகுன்றி நாம்
தன்னுணர் விழந்து வீழ்வோமோ? 

                         (ஹிந்து)

ஹிந்து மைந்தர் தம் உள்ளந்தோறும்
தன்மானத் தீ மூட்டிடுவோம்!
அன்பு இழையினால் பாரதநாட்டை
ஒன்று பிணைத்து நிறுத்திடுவோம்!
கோடிகோடி கரம் பாரதத் தாயின்
தொண்டில் உயர்ந்திடச் செய்திடுவோம்!
கோடிகோடி குரல் பாரதத் தாயின்
பண்ணிசைத்திடக் கண்டிடுவோம்!
பாரத நாட்டின் வீடுகள் தோறும்
சங்க மந்திரம் முழக்கிடுவோம்!
வீறு கொள்ளுவோம், வெற்றி காணுவோம்!
நவயுகத்தினை நிறுவிடுவோம்!  

                        (ஹிந்து)

$$$

Leave a comment