தராசு கட்டுரைகள்- 10

-மகாகவி பாரதி

10. சுதேசமித்திரன் 27.10.1916

இன்று நமது கடைக்கு ஒரு தமிழ்க் கவிராயர் வந்தார்; கைக்கோள் ஜாதி; ஒட்டக்கூத்தப் புலவர்கூட அந்தக் குலந்தானென்று நினைக்கிறேன்.

இவருக்கு இங்கிலீஷ் தெரியாது. தம்முடைய பெயரை வெளிப்படுத்தக் கூடாதென்று சொன்னார். ஆதலால் வெளிப்படுத்தவில்லை.

தராசு முகமலர்ச்சியுடன் சிரித்தது. “இப்படி ஒரு கவிராயன் வந்தால் எனக்கு சந்தோஷம். எப்போதும் வீண் வம்பு பேசுவோரே வந்தால் என்ன செய்வேன்?” என்றது. “கவிராயரே, என்ன விஷயம் கேட்க வந்தீர்?” என்று தராசு கேட்டது.

“எனக்குக் கவிராயர் என்பது பரம்பரையாக வந்த பட்டம். என்னுடைய தகுதியால் ஏற்படவில்லை. அத்தகுதி பெற முயற்சி செய்து வருகிறேன். அந்த விஷயமாகச் சில வார்த்தைகள் கேட்க வந்தேன்” என்று கவிராயர் சொன்னார். “இதுவரை பாடின பாட்டுண்டானால் சொல்லும்” என்று தராசு கேட்டது. “இதுவரை நாற்பது அல்லது ஐம்பது அடிகளுக்கு மேல் பாடியது கிடையாது. இப்போதுதான் ஆரம்பம். அது அத்தனை ரசமில்லை” என்று சொல்லிக் கவிராயர் விழித்தார்.

“மாதிரி சொல்லும்” என்றது தராசு.

புலவர் பாடத் தொடங்கினார். தொண்டை நல்ல தொண்டை.

“காளை யொருவன் கவிச்சுவையைக்-கரை 
    காண நினைத்த முழு நினைப்பில்-அம்மை 
தோளசைத் தங்கு நடம் புரிவாள்-இவன் 
   தொல்லறி வாளர் திறம் பெறுவான்- ஆ! 

எங்கெங்கு காணினும் சக்தியடா!-தம்பி 
   ஏழு கடலவள் மேனியடா!
தங்கும் வெளியினிற் கோடியண்டம்-எங்கள் 
   தாயின் கைப் பந்தென வோடுமடா! 
கங்குலில் ஏழு முகிலினமும்-வந்து 
   கர்ச்சனை செய்தது கேட்டதுண்டோ? 
மங்கை நகைத்த ஒலியதுவாம்-அவள் 
   வாயிற் குறுநகை மின்னலடா!”

தராசு கேட்டது:- புலவரே, தமிழ் யாரிடம் படித்தீர்?

கவிராயர்:- இன்னும் படிக்கவில்லை; இப்போதுதான் ஆரம்பம் செய்கிறேன்.

தராசு:- சரிதான், ஆரம்பம் குற்றமில்லை. விடாமுயற்சியும் தெய்வபக்தியும் அறிவிலே விடுதலையும் ஏறினால், கவிதையிலே வலிமையேறும்.

இங்ஙனம் வார்த்தை சொல்லிக் கொண்டிருக்கையில் சீட்டிக் கடை சேட் வந்தார்.

“சாமியாரே, தீபாவளி சமீபத்திலிருக்கிறது. ஏதேனும் சீட்டித்துணி செலவுண்டா?” என்று சேட் கேட்டார்.

“இல்லை” என்று சொன்னேன்.

அப்போது சேட் சொல்லுகிறார்: “நான் அதற்கு மாத்திரம் வரவில்லை. வேறு சங்கதி கேட்கவும் வந்தேன். தராசு நடக்கப் போவதை அறிந்து சொல்லுமோ?”

சொல்லாது என்று தராசே சொல்லிற்று.

“சொல்ல சம்மதமிருந்தால் சொல்லும். இல்லாவிட்டால் சொல்லாது. எதற்கும், நீர் கேட்க வந்த விஷயமென்ன? அதை வெளியிடும்” என்று நான் சொல்லப் போனேன்.

தராசு என்னிடம்,  “காளிதாஸா, அ” என்றது.

இந்த  ‘அ’காரத்துக்கு அடக்கு என்றர்த்தம். அதாவது என்னுடைய கருத்துக்கு  விரோதமாக வார்த்தை சொல்லாதே என்றர்த்தம்.

தராசு அ என்றவுடனே நான் வருத்தத்துடனே தலை குனிந்து கொண்டேன்.

சேட்:- “தீபாவளி சமயத்தில் எங்கள் கடைக்குப் பத்து நூறாகவும், நூறு ஆயிரமாகவும், லாபம் வரும்படி தராசு தன் வாயினால் வாழ்த்த வேண்டும். அப்படி வாழ்த்துவதற்கு ஏதேனும் கூலி வேண்டுமானாலும் கொடுத்து விடுகிறேன்” என்றார்.

தராசு:- “கூலி வேண்டாம், சேட்ஜீ; இனாமாகவே ஆசீர்வாதம் பண்ணிவிடுகிறேன். உமக்கு மேன்மேலும் லாபம் பெருகும். நாட்டுத் துணி வாங்கி விற்றால்” என்றது. சேட் விடை பெற்றுக் கொண்டு போனார்.

கவிராயர் தராசை நோக்கி, “நம்முடைய சம்பாஷைணைக்கு நடுவிலே கொஞ்சம் இடையூறுண்டாகிறது” என்றார்.

தராசு சொல்லுகிறது:- “உமக்கும் அதுதான் காணும் வார்த்தை. நெசவிலே நாட்டு நெசவு மேல். விலைக்கு நெய்வதைக் காட்டிலும் புகழுக்கு நெய்வதே மேல். பணம் நல்லது; ஆனால் பணத்தைக் காட்டிலும் தொழிலருமை மேல். காசிப்பட்டுப் போலே பாட்டு நெய்ய வேண்டும். அல்லது உறுதியான, உழவனுக்கு வேண்டிய, கச்சை வேஷ்டி போலே நெய்ய வேண்டும். ‘மல்’ நெசவு கூடாது. ‘மஸ்லின்’ நீடித்து நிற்காது. பாட்டிலே வலிமை, தெளிவு, மேன்மை, ஆழம், நேர்மை இத்தனையுமிருக்க வேண்டும். இதற்கு மேலே நல்ல வர்ணஞ் சேர்த்தால் குற்றமில்லை. சேராமலிருந்தால் விசேஷம்.”

அப்போது புலவர் தராசை நோக்கி:- “நீயே எனது குரு” என்று சொல்லி நமஸ்காரம் பண்ணினார்.

தராசு:- “எழுக! நீ புலவன்!” என்றது.

  • சுதேசமித்திரன் 27.10.1916

$$$

Leave a comment