காற்றிடைச் சாளரம் – 13

-கவிஞர் ஸ்ரீ.பக்தவத்சலம்

13. பிச்சைப் பிழைப்பு

இப்பிறப்பு யார், யாரோ கலந்ததால்

இவ்வறிவு யார், யாரோ கற்பித்ததால்

இம்மொழி யார், யாரோ செப்பியதால்

இக்கவிதை யார், யாரோவின் வார்த்தைகளால்

இவ்வோவியம் யார், யாரோவின் வண்ணங்களால்

இம்மதம் யார், யாரோ போதித்ததால்

இக்கடவுள் யார், யாரோ வணங்கியதால்

இச்சண்டை யார், யாரோ சினந்ததால்

இக்கருணை யார், யாரோ நெகிழ்ந்ததால்

இப்பசி யார், யாரோ மறுத்ததால்

இக்காமம் யார், யாரோ தூண்டியததால்

இப்பிழைப்பே யாரோயிட்ட சாலைகளில்தான்.

ச்சே…. இரந்துண்டே வாழும் எச்சில் பிழைப்பு!

.

இவ்விறப்பு…?

.

பிழைப்பு கடன் யாரோயிட்டது

இறப்பு சுயம் தன்வழி சேர்வது.

.

இறப்பிற்காகக் காத்திருக்கிறேன்

முதற்கலவிக் காலத்தில் கழற்றப்படும்

ஆடைகள் மீதான கவனத்துடன்.

கழற்றிக் கொண்டிருக்கிறது காலம்.

.

போதும்- இரவல் வார்த்தைகளால்

இறப்பை விளக்க விரும்பவில்லை

பிச்சையெடுத்தா பிண்டமிடுவது?

$$$

Leave a comment