இன்றைய இந்தியாவின் முகங்கள் – 8

-திருநின்றவூர் ரவிகுமார்

8. ஸ்ரீகாந்த் பொல்லா 

அப்துல் கலாம் ஜனாதிபதியாக இருந்தபோது மாணவர்களுடன் கலந்துரையாடி, கேள்விகள் கேட்டு, அவர்களை ஊக்கப்படுத்தினார் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். அப்படி ஒரு முறை (2006இல்) ஆந்திராவில் ஒரு பள்ளியில் மாணவர்களிடையே ‘நீங்கள் என்னவாக விரும்புகிறீர்கள்?’ என்ற கேள்வியைக் கேட்டார். ஒரு மாணவர் எழுந்து நின்று ‘இந்தியாவின் முதல் பார்வையற்ற ஜனாதிபதியாக விரும்புகிறேன்’ என்று பதிலளித்தான். அவரது பெயர் ஸ்ரீகாந்த் பொல்லா. பிறவியிலேயே கண் பார்வையற்றவர்.

அவர் வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாது. காரணம் ஜனாதிபதி பதவிக்கான வயதுத் தகுதி குறைந்தபட்சம் 35. அவருக்கு வயது முப்பத்தொன்று தான். ஆனால் அதற்குள் உலகின் பார்வையைத் தன் பக்கம் திருப்பிவிட்டார்.

ஆந்திராவில் மசூலிப்பட்டணம் மாவட்டத்தில் சீதாராமபுரம் என்ற கிராமத்தில் 1991 ஜூலை மாதம் ஏழாம் தேதி பிறந்தார் ஸ்ரீகாந்த் பொல்லா. எளிய விவசாயக் குடும்பம். பார்வையற்ற குழந்தை குடும்பத்திற்கு ஆகாது என்பதால் கொன்றுவிடும்படி பலரும் அவரது பெற்றோரான தாமோதர ராவ்- வெங்கட்டம்மாவிடம் கூறினார்கள். ஆனால் அவர்கள் இந்த விஷயத்தில் செவிடர்களாக இருந்துவிட்டார்கள்.

பள்ளிக்கூடம் பத்து மைல் தூரத்தில். கடைசி வரிசையில்தான் அமர வேண்டும்.  சக மாணவர்கள் யாரும் பேசக்கூட மாட்டார்கள். ஆசிரியர்களுக்கோ வெறுப்பு. விதிவிலக்காக இருந்தது சுவர்ணலதா டீச்சர் மட்டுமே. அவரது பரிவினால் செய்த உதவிகளைக் கொண்டு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றார் ஸ்ரீகாந்த் பொல்லா. பொறியாளராக வேண்டும் என ஆசை. அதற்கு கணக்கு, அறிவியல் படிக்க வேண்டும். ஆந்திர மாநில கல்வி வாரியம் பார்வையற்றவர் அதைப் படிக்க முடியாது என்று அனுமதி மறுத்தது; வேறு பாடத்தைப் படிக்கும்படி கூறியது.

கல்வி வாரியத்தின் விதிகள் தவறு என்று, டீச்சரின் ஆலோசனைப்படி உயர் நீதிமன்றத்தில் வழக்குப் போட்டார் ஸ்ரீகாந்த். இதனிடையே ஹைதராபாத்தில் உள்ள சின்மயா வித்யாலயா என்ற தனியார் பள்ளி அவரைச் சேர்த்துக் கொண்டது. ஆறு மாதம் கழித்து உயர்நீதிமன்றம் கல்வி வாரியத்தின் விதியைத் திருத்த உத்தரவிட்டது. பிளஸ் 2-வில் கணிதம், அறிவியலில் 98 % மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றார். ஆனால் சோதனை தொடர்ந்தது.

ஐஐடி (இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி) யில் சேர விண்ணப்பித்த போதிலும் அவரை இந்தியாவில் உள்ள எந்த ஐஐடி-யும் ஏற்கவில்லை. அமெரிக்காவிலுள்ள மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கல்லூரி (மாசசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி- எம்.ஐ.டி.) யில் அவருக்கு அனுமதி கிடைத்தது. கம்ப்யூட்டர் துறையில் அவருக்கு ஆர்வம் இருந்த போதிலும் அவர் மேலாண்மை அறிவியல் (மேனேஜ்மென்ட் சயின்ஸ்) பட்டப்படிப்பில் சேர்ந்தார். பிறரிடம் வேலை செய்வதைவிட வேலை கொடுப்பவராக இருக்க வேண்டும் என்று அவர் விரும்பினார். எனவே அந்த பட்டப்படிப்பை தேர்வு செய்தார். எம்.ஐ.டி.யில் உலக அளவில் முதல் பார்வையற்ற மாணவர் அவர்தான். அவருக்கு நல்கை கிடைத்தது. பட்டம் பெற்ற பின், கொழுத்த சம்பளத்தில் அமெரிக்காவில் வேலையும் கிடைத்தது. ஆனால் அவர் அதை ஏற்க மறுத்து, இந்தியா முன்னேற எதையாவது செய்ய வேண்டும் என்ற ஆவலில் தாயகம் வந்தார்.

கலாம் ஆரம்பித்த ‘லீட் இந்தியா 2020’ என்ற தேசிய மாணவர் அமைப்பில் இணைந்தார். “நான் எல்லாக் கஷ்டங்களையும் எதிர்த்து போராடினேன். எல்லோராலும் அப்படிப் போராட முடியாது. எனவே நான் அவர்களுக்கு உதவ வேண்டும்” என்று கூறும் ஸ்ரீகாந்த் பெல்லா 2011இல் ‘சமன்வய மையம்’ என்ற அமைப்பைத் துவங்கினார்.

வறுமை, கல்வியறிவின்மை, வேலையில்லாத் திண்டாட்டம் ஆகியவை அனைவருக்கும் பொதுவாக இருந்தாலும் பார்வையற்றோருக்கு இதன் பாதிப்பு அதிகம். இதைப் போக்க முயற்சிப்பதே சமன்வய மையத்தின் நோக்கம். பல்வேறு வகையான உடல் ஊனமுற்ற பிள்ளைகளுக்கு படிப்பு, கணினி இயக்குவது, அதன்மூலம் வேலைவாய்ப்பை ஏற்படுத்தி வருகிறது ‘சமன்வய’. இந்த மையத்தின் மூலம், பார்வையற்றோர் படிப்பதற்கான பிரெய்லி முறையில் புத்தகங்கள் தயாரிக்க அச்சகமும் நடத்தப்பட்டு வருகிறது.

2012இல் ‘பொல்லான்ட் இண்டஸ்ட்ரிஸ்’ என்ற கம்பெனியை ஸ்ரீகாந்த் பொல்லா ஆரம்பித்தார். பாக்கு மட்டைத் தட்டுகள் செய்தது அந்த கம்பெனி. பிறகு நகராட்சிக் கழிவுகள், பேப்பர் கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள் ஆகியவற்றைக் கொண்டு பேக்கிங் செய்வதற்கான வசதியான கெட்டியான அட்டைகள் தயாரிக்கத் துவங்கியது. அந்த அட்டைகள் மறுசுழற்சி செய்யப்பட்ட பொருள்களிலிருந்து தயாரிக்கப்பட்டவை என்பது மட்டுமன்றி, இவற்றையும் மீண்டும் மறு சுழற்சி செய்து பயன்படுத்த முடியும் என்கிறார்கள். இந்த கம்பெனியில் பெரும்பாலோர் மாற்றுத் திறனாளிகள், மனநலக் குறைபாடு உள்ளவர்கள்.

ஸ்ரீகாந்தைப் பற்றி தொழிலதிபர் ரத்தன் டாடா கேள்விப்பட்டு, இவரது முயற்சிகளுக்கு ஆதரவாக டாடா நிறுவனத்தின் மூலம் பல கோடி ரூபாயை இவரது தொழில் முயற்சியில் முதலீடு செய்துள்ளார். இது டாடா நிறுவனம் செய்துள்ள முதல்- தொழில்நுட்பம் அல்லாத துறை முதலீடு (Non-Tech Investment) என்று கூறப்படுகிறது. 

உலக புகழ் பெற்ற போர்ப்ஸ் (Forbes)  பத்திரிகை 2017இல் இவரை ஆசியாவில் சிறந்த 30 பேரில் ஒருவராக தேர்வு செய்தது. 2021ல் உலக பொருளாதார மன்றம் (World Economic Fourm) இவருக்கு உலக இளம் தலைவர் (Young Global Leaders) விருதை வழங்கி கௌரவித்துள்ளது.

இவரது சாதனைகள் தொடர்கின்றன…

$$$

Leave a comment