மகான்களின் பொன்மொழிகள் 1000 பாகம்1 – நூல் அறிமுகம்

இந்நூலில் மகான்கள் சொன்ன பொன்மொழிகள் 11  பகுதிகளில் 147 தலைப்புகளில் தொகுக்கப்பட்டிருக்கின்றன. இத்தனை மகான்கள், இத்தனை நூல்களிலிருந்து தொகுக்கப்பட்டிருக்கிறது என்பதைப் பார்க்கும்போதே மலைப்பு ஏற்படுகிறது. 

சதாசிவ பிரம்மேந்திரர் சொல்கிறார்: தயிரைக் கடைந்து வெண்ணெய் எடுத்து அதில் இருந்து நெய் பெறுவது ஒரு வழி. சிலர்  வெண்ணெயை கடையில் வாங்கி சாப்பிட்டு ஊட்டம் பெறுவதும் உண்டு. ‘நான் கடையவும் மாட்டேன், வாங்கவும் மாட்டேன். நெய்யே நீயே வா! ‘ என்றால் அது வராது. ஒருவேளை அப்படி வந்தால் அவர் முற்பிறவிகளில் அதற்காக பாடுபட்டவராக  இருப்பார் (467) என்கிறார். அப்படி வந்தது இந்த நூல்.

களங்கமற்ற புத்தியால் நன்றாக ஆராய்ந்து பார், ஆன்மிக உண்மைகளை நீயே அறிந்து கொள்வாய் (216) என்கிறது திரிபுர ரகசியம். ஆனால் அது நமக்கு கைவராமல் இருப்பது எதனால்? மனிதன் குரங்கை ஆட்டுவிப்பதைப் பார்த்திருக்கிறோம். ஆனால் கிழட்டு மனக்குரங்கோ  மனிதனை ஆட்டுவிப்பது கொஞ்சம் நஞ்சமன்று (620) என்கிறார் வள்ளலார் சுவாமி. 

அதன் பிடியில் இருந்து விடுபட என்ன வழி? நீங்கள் மனிதனாய்ப் பிறந்ததே ஜபம், தியானம் போன்ற ஆன்மிக சாதனைகளை செய்வதற்காகத்தான் (225) என்பதை புரிந்துகொள்ளச் சொல்கிறார் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர். அப்படிச் செய்தால் என்னவாகும்? பார்ப்பது – பார்க்கப்படுவது என்ற இரண்டும் வேறுபட்டவை. பார்ப்பது பிரம்மம், பார்க்கப்படுவது மாயை (210) என்பது புரியும். 

ஆச்சரியமாக, உருவமற்ற பிரம்மத்தைப் பற்றி போதித்த ஸ்ரீ ஆதிசங்கரர், அன்னையே என்னை கடைத்தேற்று (81) என்கிறார். சத்குண, சத்ரூப வழிபாட்டை வலியுறுத்திய ஆச்சாரியர் ஸ் ரீராமானுஜரின் பிரம்மம் பற்றிய வரையறுப்பு பிரம்மம் (பகுதி-2 தலைப்பு 23) என்ற தலைப்பில் இடம் பெற்றுள்ளது. ஆர்எஸ்எஸ் காரர்கள் வழக்கமாக சொல்லும் ஏகாத்மத மந்திரம் (184) இதில் உள்ளது. 

மணிரத்னத்தின் சினிமாவில் தாலியைத் தேடும் கதாநாயகி, அதைக் கழற்றி கண்ணாடியில் மாற்றி இருப்பதைக்  கண்டுபிடிப்பார். நாமும் அதைப் பார்த்து சிரித்தோம். ஆனால் திருமாங்கல்யத்தை சுமங்கலிப் பெண்கள் எக்காரணத்தைக் கொண்டும் எந்தத் தருணத்திலும் தங்கள் கழுத்தை விட்டு கழற்றக் கூடாது (580) என்கிறது தர்மசாஸ்திரம். பெண்கள் நெற்றிக்கு குங்குமம் இடாமல் ஒரு நிமிஷம் கூட இருக்கக் கூடாது (576) என்கிறது நீதி சாஸ்திரம். தொலைக்காட்சியில் வரும் எந்தப் பெண்ணும் பொட்டு வைத்திருப்பதில்லை. திலகமிட்டு வரும் மாணவிகளை சில பள்ளிகள் தண்டிக்கின்றன என்றும் தற்காலத்தில் படிக்கிறோம். 

நீங்கள் வாழும் இடத்தில் மாலையில் விளக்கு ஏற்றி வணங்குங்கள் (742), துளசிமாடம் வைத்து வணங்கு (846), பசுவை மதி, ஓங்காரம் சொல் (827) என்பன போன்ற எளிய வழிமுறைகளைச் சொல்லி ஹிந்துக்கள் ஹிந்துக்களாக வாழ வழி நடத்துகிறது இந்நூல்.

நூல் விவரம்:

மகான்களின் பொன்மொழிகள் 1000 பாகம் 1

தொகுப்பாசிரியர்: சுவாமி கமலாத்மானந்தர் 

வெளியீடு:

ராமகிருஷ்ண மடம்

மயிலாப்பூர், சென்னை.

விலை: ரூ. 200/- 

Leave a comment