திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றவில்லை: பக்தர்கள் ஏமாற்றம்

உயர் நீதிமன்றம் எச்சரித்தும் உச்ச நீதிமன்ற உத்தரவு மீறல்

மதுரை: உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்படவில்லை. வழக்கம் போல் உச்சிப் பிள்ளையார் கோயிலில் மட்டுமே தீபம் ஏற்றப்பட்டது. இதுதொடர்பாக, உச்ச நீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்துமாறு உயர் நீதிமன்றம் எச்சரித்தும், நீதிமன்ர உத்தரவுகள் மீறப்பட்டுள்ளன.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை உறுதியாக அமல்படுத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட போதிலும் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றவில்லை. இதனால் தீபத்தூணில் தீபம் ஏற்றுவதை தரிசிக்க அடிவாரத்தில் திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

மதுரை திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபத்திருநாளில் உச்சிப்பிள்ளையார் கோயில் அருகே மெகா தீபம் ஏற்றப்படுவது வழக்கம். மலை உச்சியில் உள்ள தீபத்தூணிலும் தீபம் ஏற்ற வேண்டும் என இந்து அமைப்பினர் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.

இந்த கோரிக்கைக்காக கடந்தாண்டு உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கில் உச்சிப்பிள்ளையார் கோயிலிலும், தீபத்தூணிலும் தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவு இரு நீதிபதிகள் அமர்வு உறுதி செய்தது. இதற்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம் இந்தாண்டு மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என நவ. 20-ல் உத்தரவிட்டது. மாவட்ட ஆட்சியரால் அங்கீகரிக்கப்பட்ட குழுவினர் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும். வேறு ஆட்களை மலையில் அனுமதிக்கக்கூடாது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும் திருப்பங்குன்றம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு 144 தடையாணை பிறப்பிக்கப்பட்டது. இதனால் தீபத்தூணில் தீபம் ஏற்றப்படுவதில் பெரும் குழப்பம் நிலவியது.

இந்நிலையில் மாவட்ட ஆட்சியரின் 144 தடை உத்தரவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் பலர் நேற்று அவசர மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற வேண்டும். தவறினால் உச்ச நீதிமன்றத்தின் கடுமையான நடவடிக்கைக்கு அதிகாரிகள் ஆளாக நேரிடும் என உத்தரவிட்டது.

இதையடுத்து தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவதை தரிசிக்க திருப்பரங்குன்றத்தில் லட்சக்ணக்கானோர் திரண்டனர். அடிவாரத்தில் நின்று தீபத்தூணை பார்த்தபடி வணங்கியவாறு காத்திருந்தனர். சரியாக 6 மணிக்கு வழக்கம் போல் உச்சிப் பிள்ளையார் கோயில் அருகே கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.

தொடர்ந்து தீபத்தூணில் தீபம் ஏற்றப்படும் என மக்கள் நினைத்தனர். ஆனால் தீபத்தூணில் தீபம் ஏற்றப்படவில்லை. தீபத்தை தரிசிக்க அடிவாரத்தில் காத்திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

  • ஆதாரம்: இந்து தமிழ் திசை

$$$

திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றப்படவில்லை!

மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அங்கு தீபம் ஏற்றப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்திருந்தது. ஆனால், இந்தத் தூணில் தீபம் ஏற்றப்படவில்லை. ஆனால், திருப்பரங்குன்றம் மலையில் வழக்கமாக உச்சிப் பிள்ளையார் கோயில் பகுதியில் வழக்கமான நடைமுறைப்படி மகாதீபம் ஏற்றப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றத்தில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட இடத்தில் தீபம் ஏற்றப்படும் என எதிர்நோக்கி காத்திருந்த ஹிந்து அமைப்பினர் கோயில் சன்னதி வீதியில் நின்று அரசுக்கு எதிராகவும் காவல்துறைக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர்.

தூண் பகுதியில் தீபம் ஏற்றுவதற்கான எந்த நடவடிக்கையும் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்படாத நிலையில், கோயில் வாசலில் காவல்துறை முன்னெச்சரிக்கையாகக் குவிக்கப்பட்டிருந்தது. தீபம் ஏற்றப்படாததால், கோயில் வாசலில் நின்றிருந்த ஹிந்து அமைப்பினர் கோஷங்கள் எழுப்பினர். அங்கிருந்தவர்களை காவல்துறையினர் வாகனங்களில் ஏற்றிச் சென்றனர்.

முன்னதாக, திருப்பரங்குன்றம் நோக்கி வந்த பல்வேறு ஹிந்து அமைப்பினரும், அரசியல் கட்சித் தலைவர்களும் முன்னெச்சரிக்கையாக கைது செய்யப்பட்டிருந்தனர். ஹிந்து அமைப்புகள் போராடக் கூடும் என காவல்துறை சந்தேகம் எழுந்ததால், கோயில் வாசல் பகுதியில் ஒரு பேருந்தும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. கிரிவல பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கோயில் வாசல் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தால் பரபரப்பு ஏற்பட்டிருந்தது.

உச்சநீதிமன்ற இடைக்கால உத்தரவுப்படி திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தூணில் செவ்வாய்க்கிழமை (நவ. 24) திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்படுவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் தமிழக அரசு வெளியிடவில்லை.

வழக்கு விவரம்:

திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தூணில் கார்த்திகை தீபத் திருநாளன்று சுப்பிரமணிய சுவாமி கோயில் சார்பில் தீபம் ஏற்ற வேண்டும் என மதுரையைச் சேர்ந்த ராம. ரவிகுமார் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் கடந்த ஆண்டு வழக்குத் தொடுத்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், மனுதாரரின் கோரிக்கையை கோயில் நிர்வாகம் நிறைவேற்ற வேண்டுமென கடந்த ஆண்டு டிச. 1-ஆம் தேதி உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து, மாவட்ட நிர்வாகம், கோயில் நிர்வாகம் சார்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மேல்முறையீட்டு மனுக்கள் நீதிபதிகள் ஜி. ஜெயசந்திரன், கே.கே. ராமகிருஷ்ணன் அமர்வில் விசாரிக்கப்பட்டது. விசாரணையின் நிறைவில், நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து, இரு நீதிபதிகள் அமர்வு கடந்த ஜன. 6-ஆம் தேதி உத்தரவிட்டது.

இதையடுத்து, இரு நீதிபதிகள் அமர்வின் உத்தரவை ரத்து செய்யக் கோரி, மதுரை மாவட்ட நிர்வாகம், திருப்பரங்குன்றம் கோயில் நிர்வாகம், திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்கா நிர்வாகம் உள்ளிட்டவை சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அரவிந்த்குமார், விபுல் எம். பஞ்சோலி அமர்வில் விசாரிக்கப்படுகிறது. இந்த நிலையில்,  “நிகழாண்டு கார்த்திகை தீப திருநாளன்று (நவ. 24) மட்டும் திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தூணில் கோயில் நிர்வாகம் சார்பில் தீபம் ஏற்ற வேண்டும்” என கடந்த வெள்ளிக்கிழமை நீதிபதிகள் இடைக்கால உத்தரவைப் பிறப்பித்தனர்.

மேலும், இந்த உத்தரவை நடைமுறைப்படுத்தியதற்கான அறிக்கையை மதுரை மாவட்ட ஆட்சியர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் அவர்கள் உத்தரவிட்டனர்.

உச்சநீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவை மறுபரிசீலனை செய்யக் கோரி, தமிழக அரசு சார்பில் இணையவழியில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஒரு வழக்கில் இடைக்கால உத்தரவைப் பிறப்பித்த அதே நீதிபதிகள் அமர்வில்தான் மறு ஆய்வு மனுவும் விசாரிக்கப்படுவது உச்சநீதிமன்ற மரபு என்ற நிலையில், நீதிபதிகள் அரவிந்த்குமார், விபுல் எம். பஞ்சோலி அமர்வு திங்கள்கிழமை பணிப் பட்டியலில் இல்லை. இதனால், தமிழக அரசின் மறு ஆய்வு மனு விசாரணைக்கு வரவில்லை. குருநானக் பிறந்த நாளையொட்டி (நவ. 24) உச்சநீதிமன்றத்துக்கு விடுமுறை என்பதால், அன்றும் விசாரிக்கப்படவில்லை.

இந்த நிலையில், தீப விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து எந்தத் தகவலையும் அரசு வெளியிடாமல் இருந்தது. எனவே, கார்த்திகை தீபம் திருப்பரங்குன்றம் மலை தூணில் ஏற்றப்படுமா அல்லது முந்தைய கால நடைமுறைகளே பின்பற்றப்படுமா என்பதில் குழப்பம் நீடித்தது. இந்த நிலையில், தூண் பகுதியில் தீபம் ஏற்றப்படவில்லை.

  • ஆதாரம்: தினமணி

$$$

One thought on “திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றவில்லை: பக்தர்கள் ஏமாற்றம்”

Leave a Reply