தீபம் ஏற்றுவதற்குத் தடையில்லை?

சென்னை: தமிழக அரசின் சீராய்வு மனு மீது விசாரணை நடைபெறாததால், திருப்பரங்குன்றத்தில் நவ. 24இல் தீபம் ஏற்ற அனுமதி அளிக்கப்படுமா என்ற பரபரப்பான சூழ்நிலை எழுந்துள்ளது. இந்நிலையில், தமிழக டிஜிபி, அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆகியோருடன் தலைமை செயலகத்தில் முதல்வர் விஜய் 23ஆம் தேதி அவசரமாக ஆலோசனை நடத்தினார்.
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. ஆண்டுதோறும் கார்த்திகை தீப நாளன்று சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உள்ள தீப மண்டபத்தில் தீபம் ஏற்றப்பட்டு வந்தது. ஆனால், மலை உச்சியில் உள்ள கல்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று இந்து அமைப்புகள் கோரி வந்தன. இந்த பிரச்சினை பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது.
இந்நிலையில், இதுதொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அரவிந்த் குமார், விபுல் எம்.பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த 20ஆம் தேதி தீர்ப்பு அளித்தது. அந்த தீர்ப்பில், ‘‘இந்த ஆண்டு கார்த்திகை தீபம் திருநாளில் மட்டும் ஒருமுறை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள கல்தூணில் தீபம் ஏற்ற அனுமதி அளித்தது. அதேபோன்று கார்த்திகை தீபம் திருவிழா நடந்து முடிந்த அடுத்த மூன்று நாட்களுக்குள் விரிவான அறிக்கையை மதுரை மாவட்ட ஆட்சியர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.
இதுபோன்ற நிலையில், உச்ச நீதிமன்றத்தின் முந்தைய இடைக்கால தடை உத்தரவுக்கு எதிராக நவ. 22இல் தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், ‘‘உச்ச நீதிமன்றம் 20ஆம் தேதி அளித்த உத்தரவின் 12வது பத்தியில் பிறப்பிக்கப்பட்டுள்ள தடை உத்தரவின் விளைவு, தடை செய்யப்பட்ட தீர்ப்புக்கு முன்னர் நிலவிய நிலையை தொடர்ந்து பாதுகாப்பதாகும். அதன்படி, வழக்கத்தின்படி, உச்சிப்பிள்ளையார் கோயிலுக்கு அருகிலுள்ள பாரம்பரிய இடமான தீப மண்டபத்திலேயே ஏற்றப்பட்டிருக்கும். ஆனால், 13 முதல் 20 வரையிலான பத்திகள் இந்த நிலையை மாற்றியமைக்கின்றன. ரிட் மனுதாரர்கள் உயர் நீதிமன்றத்திலிருந்து பெற்றிருந்த, தற்போது சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள அதே நிவாரணத்தை அவர்களுக்கு இந்த ஆண்டில் வழங்குகின்றன. இதனால், உயர் நீதிமன்ற தீர்ப்பு வெளிப்படையாக தடை செய்யப்பட்டிருந்தாலும், அதன் சாராம்சம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக, நீதிமன்றம் எந்தவொரு உரிமை குறித்தும் முதற்கட்ட கருத்தையே பதிவு செய்யாத நிலையிலேயே இது நிகழ்ந்துள்ளது.
இந்நிலையில், கார்த்திகை தீபம் நவ.24இல் கொண்டாடப்பட உள்ளது. அதே நேரத்தில் உச்ச நீதிமன்றம் வழங்கிய உத்தரவை அடிப்படையாகக் கொண்டு திருப்பரங்குன்றத்தில் இருக்கும் கல்தூணில் தீபம் ஏற்றுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. இதுபோன்ற நிலையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மறு சீராய்வு மனுவை அவசர வழக்காக பட்டியலிட்டு ஒரே தினத்தில் அதாவது நேற்றே விசாரித்து உத்தரவிட வேண்டும்” என்று தமிழக அரசு முறையிட்டிருந்தது.
ஆனால் திருப்பரங்குன்றம் வழக்கை விசாரித்த வழக்கமான நீதிபதிகளான அரவிந்த் குமார் மற்றும் விபுல்.எம்.பஞ்சோலி அமர்வு நவ. 23இல் விசாரணைக்காக அமரவில்லை. அதை விடுத்து புதிய அமர்வாக நீதிபதிகள் பிரசாந்த் குமார் மிஸ்ரா மற்றும் ஸ்ரீ சந்திரசேகர் ஆகியோர் பட்டியலிடப்பட்டு இருந்த அனைத்து வழக்குகளையும் விசாரணை நடத்தினர். இதனால் இந்த விவகாரம் தொடர்பாக முறையீடு செய்ய தமிழக அரசுக்கு சிக்கலாக அமைந்தது.
வழக்கமான நீதிபதிகள் அமர்வு இல்லை என்றவுடன், உடனடியாக இந்த விவகாரம் தொடர்பாக தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வில் தமிழக அரசுத் தரப்பில் அவசர முறையீட்டை முன்வைத்து இருக்க வேண்டும். ஆனால் அதனை தமிழக வழக்கறிஞர்கள் செய்யவில்லை. நவ. 24குருநானக் ஜெயந்தி விழா என்பதால் உச்ச நீதிமன்றத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதனால் சீராய்வு மனு செவ்வாய்க் கிழமையும் விசாரிக்கப்பட வாய்ப்பு கிடையாது. எனவே திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் முன்னதாக, அதாவது கடந்த 20ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட இடைக்கால உத்தரவின்படியே தீபம் ஏற்றப்பட வேண்டியுள்ளது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் 23ஆம் தேதி காலை முதல்வர் விஜய்யை தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் சந்தித்து அவசர ஆலோசனை நடத்தினார். அப்போது, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மறுசீராய்வு மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாத நிலையில், திருப்பரங்குன்றத்தில் தீபம் எந்த இடத்தில் ஏற்றப்பட வேண்டும் என்பது தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து தமிழக டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் முதல்வர் விஜய்யை தலைமைச் செயலகத்தில் சந்தித்து பேசினார். இந்தச் சந்திப்பின்போது, திருப்பரங்குன்றத்தில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி அளிக்கலாமா, அனுமதி அளித்தால் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் சமாளிப்பது எப்படி, பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டதாக தலைமை செயலக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், கோயில் நிர்வாகம் தரப்பில் வழக்கமாக தீபம் ஏற்றப்படும் உச்சிப்பிள்ளையார் கோயில் மண்டபத்தில் வண்ணம் பூசப்பட்டு, சாரம் கட்டப்பட்டு கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு தயார் நிலையில் உள்ளது. அதே நேரம் மலை உச்சியில் உள்ள தூணிலும் தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்து வருவதாக தெரிகிறது.
எனவே, உச்ச நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற மலை உச்சியிலும், மற்றவர்களை திருப்திப்படுத்த வழக்கமாக தீபம் ஏற்றப்படும் உச்சிப்பிள்ளையார் கோயில் மண்டபத்திலும் தீபம் ஏற்றலாம் என தவெக அரசின் ஆலோசகர்களும் ஜோதிடர்களும் ஆலோசனை வழங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனிடையே, திருப்பரங்குன்றம் நகர் மற்றும் மலைக்கு செல்லும் பாதைகளான பழனியாண்டவர் கோயில் பாதை, கிரிவலப்பாதையில் உள்ள மலைக்கு செல்லும் படிக்கட்டு உள்பட மலை முழுவதும் 70க்கும் மேற்பட்ட இடங்களில் நவீன ஏஐ தொழில்நுட்பத்துடன் கூடிய பேஸ் டிடெக்சன் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த போலீசார், திருப்பரங்குன்றம் மலை, கிரிவலப் பாதை, கோயில் வாசல், 16 கால் மண்டபம், ஆர்ச், சரவணப்பொய்கை உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அறநிலையத்துறை ஆணையர் வினய், ஞாயிற்றுக் கிழமை (நவ. 22) திருப்பரங்குன்றம் தீப விவகாரம் தொடர்பாக மதுரை கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணாவுடன் மதுரையில் ஆலோசனையில் ஈடுபட்டார். இதில் பல்வேறு துறை உயரதிகாரிகள் பங்கேற்றனர்.
*
ஆட்சியருக்கு நோட்டீஸ்:
உச்ச நீதிமன்ற வழக்கில் ஒரு தரப்பான இந்து தர்ம பரிஷத் அமைப்பைச் சேர்ந்த கே.கே.ரமேஷ், மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த குறைதீர் முகாமில் டிஆர்ஓ ஜெயபிரபாவிடம் அளித்த சட்ட நோட்டீஸ்:
‘‘சீராய்வு மனுவுக்கு தனி உத்தரவு எதுவும் பிறப்பிக்காத நிலையில், இடைக்கால உத்தரவின்படியே மாவட்ட நிர்வாகம் செயல்பட வேண்டும். மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகளை உறுதி செய்ய வேண்டும். உச்ச நீதிமன்றம் அனுமதித்த வரம்பிற்குள் விழா அமைதியாக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும். உச்ச நீதிமன்ற இடைக்கால உத்தரவை நிறைவேற்றாவிட்டால், உரிய ஆதாரங்களுடன் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும்’’ என கூறியுள்ளார்.
மதுரை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு:
மதுரை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு:
திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றும் நிகழ்வை முன்னிட்டு, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி சட்டம், ஒழுங்கைப் பராமரிக்கவும், பாதுகாப்பு மற்றும் பொதுமக்களின் நடமாட்டத்தை முறைப்படுத்தவும் காவல்துறை சார்பில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதனால் இன்று திருப்பரங்குன்றம் மலை உச்சி உள்ளிட்ட மலைப்பகுதி முழுவதும், கிரிவலப் பாதைகள், நுழைவு வளைவு முதல் 16 கால் மண்டபம் வரையிலான சாலை மற்றும் கிரிவலப்பாதைக்கும் மலை அடிவாரப் பகுதிக்கும் இடைப்பட்ட பகுதிகள் ஆகியவை டிரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கத் தடை செய்யப்பட்டு சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளன. உரிய அனுமதியின்றி டிரோன்களை இயக்குவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்களின் பாதுகாப்பு, பொது அமைதி மற்றும் பொது சொத்துக்களைப் பாதுகாக்கும் வகையில் மதுரை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. மதுரை மாவட்ட எல்லைக்குள் பொதுக் கூட்டம், ஊர்வலம், ஆர்ப்பாட்டம், போராட்டம் அல்லது பொதுமக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்படுகிறது. இந்த உத்தரவு நவ. 23 இரவு 9 மணி முதல் நவ. 25ஆம் தேதி காலை 10 மணி வரை நடைமுறையில் இருக்கும்.
இவ்வாறு மதுரை மாவட்ட ஆட்சியர் ர் நிஷாந்த் கிருஷ்ணா அறிவித்துள்ளார்.
- ஆதாரம்: பத்திரிகை செய்திகள்
$$$