-வ.மு.முரளி
சிறு வயதில் வறுமை காரணமாக படிக்கும் வாய்ப்பை இழந்த சிறுவன் தையல் கற்றுக்கொண்டு கிராமத்தில் தையல் கடை வைத்தார். தனது முயற்சியாலும் உழைப்பாலும் தற்போது திருப்பூரின் பின்னலாடை ஏற்றுமதியாளர்களுள் ஒருவராகி இருக்கும் கே.ஜி.கணேஷ் தான் அவர். நம்மைச் சிலிர்க்கச் செய்யும் அவரது வாழ்வனுபவம் இது…

தேனி மாவட்டம், கோபாலபுரத்தில் நான் பிறந்தேன். வசதியான குடும்பம் தான். ஆனால், எனது 3 வயதில், அனைத்தும் இல்லாமல் போய்விட்டது. அப்பா கோவிந்தராஜ் ஒரு அரசியல் கலகக்காரர். அம்மா கெங்கம்மாள் தான் என்னையும் எனது இரு சகோதரிகளையும் கஷ்டப்பட்டு வளர்த்தார்.
1984இல் தேனியில் கள்ளர் இலவச விடுதியில் தங்கிப் படித்து, எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்றேன். மறுநாளே கொய்யாப்பழ விற்பனையில் ஈடுபட்டேன். அதுதான் எனது முதல் வியாபாரம். பிறகு ஐ.டி.ஐ.யில் படிக்க விண்ணப்பித்தேன். ஆனால் அழைப்பு வரவில்லை. வராதது நல்லது என்று நினைத்தேன். ஏனென்றால் வீட்டில் வறுமை. படிக்கப் போனால் குடும்பம் பாதிக்கும் என்று நினைத்து, உள்ளூரில் ஒரு தையல்காரரிடம் உதவியாளராகச் சேர்ந்தேன். அங்கு ஓராண்டு வேலை செய்ததில் தனியாக கடை நடத்தும் அளவுக்கு தொழில் பழகிக் கொண்டேன்.
பிறகு பாட்டியிடம் ரூ. 1,000 கடன் வாங்கி, ஒரு தையல் இயந்திரம், ஒரு டேபிளுடன் 1986இல் கடையைத் தொடங்கினேன். புதிய டிசைன் பேன்ட், சட்டைகளைப் பார்த்தவுடன் அதேபோல தைக்கவும், அதற்கான பேட்டர்ன் உருவாக்கவும் இயல்பாகவே எனக்கு வந்தது. மிகவும் குறுகிய காலத்தில் நல்ல டெய்லர் என்று பெயர் எடுத்தேன். உள்ளூரில் இருந்த 2 கடைகளை விட அதிகமாக எனது கடைக்கு மக்கள் வரத் தொடங்கினர். மாதம் ஆயிரம் ரூபாய் வருவாய் ஈட்டினேன். அப்படி ஏழரை ஆண்டுகள் ஓடின.
1988இல் ஆர்.எஸ்.எஸ். அறிமுகம் கிடைத்தது. உள்ளூரில் ஷாகா நடத்தினேன். தொழிலில் ஆர்வத்துடன் ஈடுபட்டபடியே, சங்க வேலைகளிலும் ஈடுபட்டேன். எனது ஷாகாவுக்கு வந்துகொண்டிருந்த ஞானகுரு என்ற நண்பன் திடீரென திருப்பூருக்கு வேலைக்குச் சென்றுவிட்டான். அங்கிருந்து திரும்பிவந்து, திருப்பூரில் அவன் கண்ட காட்சிகளை விவரித்தான். “திருப்பூரில் டெய்லர்களுக்கும் பேட்டர்ன் மாஸ்டர்களுக்கும் பயங்கர கிராக்கி” என்றான். அப்போதே திருப்பூர் கிளம்புவது என்று முடிவெடுத்துவிட்டேன்.
அம்மா சொல்லியும் கேட்காமல், நடத்தி வந்த தையல் கடையை விற்றுவிட்டு, 1993 டிச. 25ஆம் தேதி திருப்பூர் வந்தேன். எங்கள் உறவினர் ஒருவர் கொங்குநகரில் இருந்தார். அவருடன் தங்கிக் கொண்டு, வேலை தேடினேன். காந்திநகரில் இருந்த ‘இடும்பன் அப்பேரல்ஸ்’ என்னை வரவேற்றது. டெய்லர் வேலை. மாதம் ரூ. 3,300 சம்பளம். கொங்குநகரில் இருந்து காந்திநகருக்கு (சுமார் 3 கிமீ.) நடந்தே செல்வேன். வேலை செய்த இடத்தில் வெகு சீக்கிரமே நல்ல பெயர் பெற்றேன். அப்போதுதான் பேட்டர்ன் மேக்கிங்கில் கவனம் திரும்பியது.
‘பேட்டர்ன்’ என்பது தைப்பதற்கு முன் துணியை வெட்டுவதற்கான மாதிரி அட்டையை வடிவமைக்கும் பணி. அதற்கு மாதச் சம்பளம் குறைவு (மாதம் ரூ. 2,650). என்றாலும், நான் அதையே விரும்பினேன். அதற்கு கம்பெனி மாற வேண்டும். வேறு கம்பெனியில் சேர யாராவது தொழில் தெரிந்தவர் சிபாரிசு செய்ய வேண்டும். அப்போதுதான் ஒரு சங்க விழாவில் பனியன் கம்பெனி முதலாளியாக இருந்த சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்களைச் சந்தித்தேன். அவர் என்னைப் பற்றி விசாரித்தார். அவர் கூறியபடி லீட்ஸ் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் பழனிசாமி அவர்களைச் சந்தித்தேன். 1995இல் பேட்டர்ன் மாஸ்டராகச் சேர்ந்தேன். அங்கு நல்ல அனுபவம் கிடைத்தது. இந்த இடைக்காலத்தில் 1988இல் எனது அக்காவுக்கும் 1995இல் தங்கைக்கும் திருமணம் செய்து வைத்தேன்.

1998இல் ஒரு நல்ல வாய்ப்பு வந்தது. பிரபலமான கே.பி.ஆர்.மில்லில் பேட்டர்ன் மாஸ்டராக சேர்ந்தேன். நல்ல சம்பளம். 1999இல் ஒரு திருப்புமுனை; கே.பி.ஆர். மில் உரிமையாளர் கே.பி. ராமசாமி அவர்களைச் சந்தித்தேன். அவருடனான சந்திப்பு எனது வாழ்க்கைப் பாதையையே மாற்றிவிட்டது. மனதில் பட்டதை நான் அவரிடம் வெளிப்படையாகப் பேசவே, அது காரசாரமான விவாதமாக மாறி, பிறகு கலகலப்பான விவாதமாக மாறியது. நல்ல நோக்கமும் உண்மையும் நமது பேச்சில் இருந்தால் அதை யாரிடமும் வெளிப்படுத்தலாம் என்று உணர்ந்துகொண்டேன். அவரும் முதலாளி என்ற எண்ணம் இல்லாமல் என்னுடன் பேசினார். மிகவும் தொலைநோக்கான சிந்தனைகளை அவரிடம் கண்டேன். விரைவில் அவரது நம்பிக்கையைப் பெற்றேன். அதன் விளைவாக ஓர் உற்பத்திப் பிரிவின் மேலாளர் ஆனேன்.
2002 முதல் 2012 வரை கே.பி.ஆர். துணை நிறுவனத்தில் மேலும் பல பொறுப்புகளில் பணிபுரிந்தேன். அங்கு எனது துறை மட்டுமல்லாது பிற பிரிவுகளில் நடப்பனவற்றையும் கூர்ந்து கவனிப்பேன். ஏற்றுமதி நிறுவனத்தின் அனைத்து நடைமுறைகளையும் புரிந்துகொண்டேன். அப்போதுதான், நாமே ஒரு ஏற்றுமதி நிறுவனத்தை நடத்தலாமே என்ற எண்ணம் தோன்றியது. என்னுடன் பணிபுரிந்த நண்பர் திருமலைசாமியுடன் இணைந்து வெளியே வந்தேன்.
இருவரும் ஆளுக்கு ரூ. 25 லட்சம் முதலீடு போட்டோம். 2012இல் ‘ஸ்வெல்நிட்’ நிறுவனம் தொடங்கியது. எங்கள் பணம் ஆரம்ப கட்டச் செலவிற்கே சரியாகி விட்டது. நிறுவனத்தை தொடர்ந்து நடத்துவதற்கான நடப்பு மூலதனம் எங்களிடம் இல்லை. இது முதல் சவாலாக இருந்தது. ஆரம்பித்த உடனேயே ரூ. 5.5 கோடி மதிப்புள்ள அளவிற்கு ஆர்டர்கள் கிடைத்தன. ஆனால் எங்களிடம் மூலப்பொருள் வாங்கவும் கூட பணமில்லை. ஆனால் வங்கியின் கடனுதவியும் , அள்ளிக் கொடுத்த நண்பர்களின் உதவியும் கிடைத்தன.
பல ஆண்டுகளாக சமூகத்தில் எவ்வாறு செயல்பட்டோமோ, அந்தச் செயல்களுக்கான நல்ல விளைவை அப்போது உணர்ந்தேன். தொழில் தொடங்க பணம் தேவையில்லை. நம்பிக்கை, சமுதாயத் தொடர்பு, தொழில் திறமை, நல்ல பழக்கங்கள் இருந்தால் போதும். எல்லாமே தேடிவரும் என்பதை எனது வாழ்வில் அனுபவித்தேன். முதல் ஆறு மாதங்களிலேயே, ரூ. 5.39 கோடி விற்றுமுதலுடன் சாதனை படைத்தோம். அடுத்த நிதியாண்டில் ரூ. 17 கோடிக்கு ஏற்றுமதி செய்தோம்.
திருப்பூர் பின்னலாடை தொழில் துறை பல சவால்களைக் கொண்டது. கவனம் பிசகினால் காலியாகி விடுவோம். ஏற்றுமதி நுணுக்கங்களில் பல சிக்கல்கள் உள்ளன. அதனால் திவால் ஆனவர்கள் பலருண்டு. எனவே அனுபவத்தின் அடிப்படையில் தான் அவற்றை லாகவமாகக் கையாள வேண்டும். எங்களுக்கும் பல சவால்கள் வந்தன.
கம்பெனி ஆரம்பித்தவுடன் இத்தாலி, அமெரிக்கா, ஜெர்மனி போன்ற நாடுகளில் இருந்து ஆர்டர்கள் எங்களுக்குக் கிடைத்தன. அவற்றில் 16வது ஆர்டர் அமெரிக்க ஆர்டர். திருப்பூரில் பலர் அந்த பையரிடம் (அமெரிக்க வர்த்தக முகவர்) ஆர்டர் எடுத்ததில் ஏதோ ஒரு உற்பத்தியாளரிடம் பிரச்சினை ஆகிவிட்டதால், அனைத்து ஆர்டர்களையும் ரத்து செய்துவிட்டார். ஆனால், அதற்காக நாங்கள் பெரும் செலவில் மூலப் பொருட்களை வாங்கி ஆடைகளை உற்பத்தி செய்யத் தொடங்கி இருந்தோம். ஆர்டர் ரத்தானதால் பல லட்சம் நஷ்டம் ஏற்படும் நிலைமை. ஆனால் நாங்கள் சோர்ந்து போகவில்லை. தொடர்ந்து அந்த பையரை தொடர்பு கொண்டு ‘நான் அவனில்லை’ என்று எடுத்துக் கூறி எங்கள் தயாரிப்பின் தரத்தை விளக்கி, ஏழு நிறங்களில் மாதிரிகளை அனுப்பினோம்; ஓராண்டு பொறுமையாகக் காத்திருந்தோம். பிறகு அவர்களின் நம்பிக்கையைப் பெற்று, ஏற்றுமதி ஆர்டரை திரும்பப் பெற்று, ரூ. 22 லட்சம் இழப்பைத் தவிர்த்தோம்.

அதேபோல எங்களுக்கு 3 ஆர்டர்களைக் கொடுத்திருந்த ஜெர்மனி நிறுவனம் அவர்களின் நாட்டில் திவாலாகிவிட்டது. ஆனால் அதற்கு நாங்கள் ரூ. 24 லட்சம் அதுவரை செலவழித்திருந்தோம். ஜெர்மனி வங்கி எங்களுக்கு உறுதி அளித்தது. ஆனாலும் இந்த மூன்று ஆர்டர்களைச் செய்ய வேண்டாம் என்று முடிவெடுத்தோம். நாங்கள் வாங்கியிருந்த துணியில் 60 சதவீதத்தை வேறு ஆர்டர்களுக்குப் பயன்படுத்தினோம். 40 சதவீத துணியை குறைந்த நஷ்டத்தில் விற்பனை செய்து சமாளித்தோம்.
இதுபோன்ற சவால்கள் வரும்போது, தொழில் அனுபவமும் நிதானமான அணுகுமுறையும் தேவை. அவசரப்பட்டு முடிவெடுத்தாலோ, பதறினாலோ பயன் விளையாது. அதேபோல, கடனுக்கு மூலப் பொருட்களை வாங்கக் கூடாது; எனது சார்பு நிறுவனங்கள் எவரும் அவர்களது நிலுவைத் தொகைக்காக போன் செய்து கேட்கும் நிலையை ஏற்படுத்தக் கூடாது. இந்த இரு விதிகளை கடுமையாகக் கடைபிடிக்கிறேன். மேலும் ஆண்டுதோறும் வரும் லாபத்தின் பெரும்பகுதியை தொழிலிலேயே முதலீடு செய்தால் நிறுவனத்தின் அடிப்படை மூலதனம் அதிகரிக்கும். அதில் கவனமாக இருக்கிறேன்.
நம்மிடம் பணி புரிபவர்களின் உழைப்பே நம்மை உயர்த்துகிறது என்பதில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உண்டு. அதை வெளிப்படுத்தும் விதமாக, நிறுவனத்தின் ஐந்தாண்டு நிறைவில் (2017), எனது நிறுவனத்தில் ஆரம்பத்தில் இருந்து பணியாற்றியோருக்கு 5 பவுன் தங்கக்காசுகளை வழங்கினேன். இன்று எனது நிறுவனத்தில் 300 பேர் நேரடியாக வேலைவாய்ப்பு பெற்றிருக்கிறார்கள். இந்த ஆண்டு விற்றுமுதல் ரூ. 29 கோடியை எட்டி இருக்கிறது.
திருப்பூர் தொழில் துறையில் உள்ள பெரும் சிக்கல், இங்கு துணைத் தொழில்களாக உள்ள நிட்டிங், டையிங், பிரின்டிங், காம்பேக்டிங் போன்ற 15க்கு மேற்பட்ட பிரிவுகளுக்கு பின்னலாடை பயணிக்க வேண்டியிருப்பது. இதனால் கால தாமதமும் செலவினமும் அதிகரிக்கிறது. வருங்காலத்தில் இவை அனைத்தும் ஒரே கூரையின் கீழ் கொண்டிருக்கும் நிறுவனங்களால் மட்டுமே தொழிலில் நீடிக்க முடியும் என்று கருதுகிறேன். எனவே, அதற்கான முயற்சியில், புதிய தொழிற்சாலையை கோபிசெட்டிபாளையம் அருகிலுள்ள கொளப்பலூரில் ரூ. 8 கோடி முதலீட்டில் தொடங்க இருக்கிறோம்.
திருப்பூர் தொழில் துறையின் மிக முக்கியமான பிரச்சினை தொழிலாளர் பற்றாக்குறை தான். உற்பத்திச் செலவில் தொழிலாளர் ஊதியம் பெரும் பங்கு வகிக்கிறது. எனவே ஊதியம் குறைந்த இடங்களை நோக்கி ஏற்றுமதி ஆர்டர்களும், ஏற்றுமதி நிறுவனங்களும் செல்வது இயல்பு. இந்த சவாலை திருப்பூர் எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்பதே எனது கவலை.

எனது தாய் தான் எனது முதல் வழிகாட்டி. அடுத்து நான் சார்ந்திருக்கும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு என்னை பல வகையில் மேம்படுத்தி இருக்கிறது. எனது நிறுவனத்தில் நான் கடைபிடிக்கும் ‘சிக்ஸ் சிக்மா’ கோட்பாடும் என்னை பாதுகாப்பாக வழிநடத்துகிறது. (சிக்ஸ் சிக்மா என்பது, வணிக நிறுவனங்களில் உற்பத்தி மற்றும் செயல்முறைத் தரத்தை மேம்படுத்தப் பயன்படும் ஒரு தரவு சார்ந்த மேலாண்மை உத்தியாகும். 1986இல் மோட்டோரோலா நிறுவனதால் இது உருவாக்கப்பட்டது). சி.பி.ராதாகிருஷ்ணன், கே.பி.ராமசாமி போன்ற பலரது உதவியால் தான் இந்த நிலைக்கு உயர்ந்திருக்கிறேன் என்பதையும் நன்றியுடன் நினைவு கூர்கிறேன்.
எனது சமூக பங்களிப்பாக, லகு உத்யோக் பாரதி அமைப்பில் 8 ஆண்டுகள் நிர்வாகியாக இருந்து பலருக்கு வழிகாட்டினேன். திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினராகவும் உள்ளேன். ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் மாவட்ட மக்கள் தொடர்பு செயலாளராகவும் இருக்கிறேன். சி.எஸ்.ஆர். தகுதி வரும்போது, நிறைய சேவைகளைச் செய்யக் காத்திருக்கிறேன். எங்கள் சொந்த ஊரில் கம்பப் பெருமாளுக்கு கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்ய உதவினேன். அந்தக் கோயிலுக்குதான் புரட்டாசி மாதங்களில் தாத்தா என்னை அழைத்துச் செல்வார். அது ஓர் ஆத்ம திருப்தி.
நான் இளைய தலைமுறைக்குச் சொல்வது வேறொன்றுமில்லை. நேர்மையாக உழையுங்கள். உங்கள் உள்ளுணர்வு சொல்வதைச் செய்யுங்கள். சவால்களை வாய்ப்புகளாக்குங்கள். நீங்கள் வெற்றி பெறுவீர்கள்!
- நன்றி: விஜயபாரதம் தீபாவளி மலர்- 2026
$$$