-பக்தன்
இளமையிலேயே ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துடன் இணைந்து, தன் வாழ்வையே நாட்டிற்காக அர்ப்பணித்தவர் வீரத்துறவி இராம. கோபாலன் அவர்கள். இன்று அவரது நூற்றாண்டு தொடங்குகிறது. அவரைப் பற்றி சுருக்கமான ஓர் அறிமுகம்...

வீரத்துறவி இராம. கோபாலன்
(நூற்றாண்டு தொடக்கம்: 2026, செப்டம்பர் 19)
திரு. இராம.கோபாலன் 1927 செப்டம்பர் 19 அன்று சீர்காழியில் பிறந்தார். 1944 இல் சென்னையில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.
தனது 20 வது வயதில் பாரத பாகிஸ்தான் பிரிவினையைப் பார்த்து துடித்துப் போனார். பாகிஸ்தானிலிருந்து சென்னை, ஆவடிக்கு அகதிகளாக வந்த ஹிந்துக்களின் கொடுமையான அனுபவங்களைக் கேட்ட பிறகு, “எனது இந்த வாழ்க்கை இந்த நாட்டிற்காகவே, இந்த சமுதாயத்திற்காகவே” என முடிவு செய்தார்.
1948இல் மின்சாரத்துறையில் தான் வேலை செய்த பொறியாளர் வேலையை ராஜினாமா செய்துவிட்டு, 73 ஆண்டுகள் தான் ஏற்றுக்கொண்ட லட்சியத்திற்காகவே தனது வாழ்க்கையை ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மூலம் நாட்டிற்கு அர்ப்பணித்தார்.
1964 முதல் 1980 வரை ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தமிழ்நாடு மாநில அமைப்பாளராக இருந்தவர். 1980 முதல் 2020 வரை இந்து முன்னணி மாநில அமைப்பாளராகவும் இருந்து வழிகாட்டினார் .
காஞ்சி மடத்துடன் ஆழ்ந்த பற்றுக்கொண்டு இருந்தார். கோபால்ஜி மாநில அமைப்பாளராக இருந்தபோது, சென்னை, மயிலாப்பூரில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். பொது நிகழ்ச்சியில் காஞ்சி மகாபெரியவர் கலந்துகொண்டார். காவிக்கொடியான பகவத் த்வஜத்திற்கு முன்பு உட்கார்ந்து பேசுவது முறையல்ல என மகா சுவாமிகள் நின்று கொண்டு ஆசியுரை வழங்கினார்.
1975 நெருக்கடிநிலைக் காலத்தில் போராடியவர், பலரைப் போராட வைத்தவர். அதன் வரலாற்றை ‘நெருக்கடி நிலையை எதிர்த்து போராட்டம்’ என்ற பெயரில் நூலாகத் தொகுத்தவர்.
தனது வாழ்நாள் முழுவதும் லட்சக்கணக்கான ஊழியர்களை இதற்காக உருவாக்கினார்.
கன்னியாகுமரியில் விவேகானந்தர் நினைவுச் சின்னம் உருவாக்கிட, பல அரசு வேலையிலிருந்தும் கூட ராஜினாமா செய்ய வைத்து அந்த உயர்ந்த பணியில் ஈடுபட வைத்தார். விவேகானந்தர் கருத்துக்களை தமிழகமெங்கும் எடுத்துச் சென்றதில் இவரது பங்கு மிக முக்கியமானது.
தமிழ் இலக்கியங்களில் உள்ள தேசியத் தன்மையை, ஹிந்து தன்மையை தமிழ் உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியவர்.
அடிமை வரலாற்றை மட்டுமே படித்துக் கொண்டிருந்த தமிழக மாணவர்களுக்கு சத்ரபதி சிவாஜியின் வரலாற்றையும் தேசியத்திற்காக வாழ்ந்தவர்களின் வரலாற்றையும், சுதந்திரத்திற்காகப் பாடுபட்டவர்களின் வரலாற்றையும், தமிழக இளைஞர்களுக்கு அதிகமாகத் தந்தவர்.
மிகச் சிறந்த மொழிபெயர்ப்பாளர்.
மாணவர்களின் எதிர்கால வாழ்க்கை பலமாக இருக்க `ஞானமலர்’ என்ற புத்தகத்தை எழுதியவர்.
இயக்கத்தின் ஒவ்வொரு ஊழியர்களும் திறமையாக ஒழுக்கமாகச் செயல்பட `ஊழியர்களுக்கு துணைவன்’ என்ற நூல் மூலம் வழிகாட்டியவர்.
1980இல் இந்து முன்னணி பொறுப்பு ஏற்ற பிறகு, முதலில் 400 ஆண்டுகளாக சாமி இல்லாத கோயிலாக இருந்த வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயிலில் லிங்கப் பிரதிஷ்டை செய்ய வைத்தவர்.
பல ஆண்டுகள் ஓடாமல் இருந்த திருவாரூர் தேரை மக்கள் சக்தி மூலம் மீண்டும் ஒட வைத்தவர்.
தமிழகம் முழுவதும் ஹிந்து ஒற்றுமை மாநாடுகள் நடத்தி ஹிந்துக்களுக்கு நம்பிக்கை ஊட்டியவர்.
மீனாட்சிபுரம் மதமாற்றம் முதல் பல ஊர்களில் நடைபெற்ற மத மாற்றங்களைத் தடுத்தவர்.
குடிசைப் பகுதிகளுக்கு துறவிகளை அழைத்துச் சென்றவர்.
ஒவ்வொரு சாதாரண ஹிந்துவையும் ஹிந்து சமுதாயத்திற்காகப் போராட வைத்தவர்.
பெண்களை ஒருங்கிணைத்து ஹிந்து விழிப்புணர்வை ஏற்படுத்த, திருவிளக்கு பூஜை, கோ பூஜை, சுமங்கலி பூஜை என பல விதமான முறைகளைப் பயன்படுத்தி பெண்களை சமுதாயப் பணியில் ஈடுபடுத்தினார்.
தி.க.வின் பொய்ப் பிரசாரங்களை முறியடித்தவர்.
தேசவிரோத, பிரிவினைவாத பயங்கரவாதச் செயல்பாடுகளை மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் அடையாளம் காட்டியவர்.
சின்ன சின்ன புத்தகங்கள் மூலமாக பல நூறு வெளியீடுகளை வெளியிட்டு சாதாரண அடித்தட்டு மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியவர்.
சாதாரண குடிமக்கள் முதல் உயர் அரசு பொறுப்பில் இருக்கும் அதிகாரிகள் வரை விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
கோயில்களையும், கோயில் சொத்துக்களையும் பாதுகாக்கப் போராடியவர்; பலரை இன்றும் போராட வைத்து கொண்டிருப்பவர்.
மகாகவி பாரதிக்குப் பிறகு நூற்றுக்கணக்கான தேசபக்திப் பாடல்களை எழுதியவர்.
1983இல் இந்துக்களின் ஜனத்தொகை குறைவதைத் தடுக்க பத்து குழந்தைகள் பெற்ற தாயைப் பாராட்டி காஞ்சி பெரியவர் ஜெயேந்திரர் திருக்கரங்களால் ‘வீரத்தாய் விருது’ கொடுத்து பாராட்ட வைத்தவர் இராம கோபாலன்.
ஹிந்து சமுதாய ஒற்றுமைக்கு, எழுச்சிக்கு விநாயகர் சதுர்த்தியை வீதி விழாவாக மாற்றி தமிழகத்தில் ஆன்மிக ஹிந்து சமய எழுச்சிப் புரட்சியை ஏற்படுத்தியவர்.
1984இல் இராம கோபாலன் பயங்கரவாதியால் வெட்டப்பட்ட செய்தி அறிந்த காஞ்சி மகா சுவாமிகள் தியானத்தில் அமர்ந்தார். அவரது நல்லாசியால் மீண்டெழுந்தார் கோபால்ஜி.
பசுக்கொலையைத் தடுத்திட, கோபூஜை நடத்திட, கோசாலைகள் அமைத்திட ஊக்கமூட்டியவர்.
காஞ்சி மடத்தின் மீது திட்டமிட்டு வீண் பழி சுமத்தியபோது தயக்கமின்றி வீதியில் இறங்கிப் போராடியவர். சிலரது தவறான பிரசாரத்தால் மக்கள் மத்தியில் ஏற்பட்டிருந்த அவநம்பிக்கையைப் போக்கியவர். இது போன்று பல துறவிகளின் நலனுக்காகவும் போராடியவர்.
வீடுதோறும் இராமாயணம் படித்திட ஏற்பாடு செய்தவர்; ஒரு லட்சம் வீடுகளுக்கு இராமாயணம் கொண்டு சேர்த்தவர். ‘இராமாயண மஹோத்சவம்’ நடத்தி மக்களிடையே ஹிந்து தர்ம சிந்தனை ஏற்படுத்தியவர்; தனுஷ்கோடியில் ராமநாம ஜப வேள்வி நாத்தியவர்.
தமிழகத்தில் தேசியத்தையும் தெய்வீகத்தையும் மலர்ந்திட செய்வதற்காக 73 ஆண்டுகள் இடைவிடாது தமிழகத்தை வலம் வந்தவர். அனைத்துத் தரப்பு மக்களின் அன்பையும் மதிப்பையும் பெற்றவர்.
தனது இறுதி காலம் வரை எங்கிருந்தாலும் தினசரி குறைந்தது 1008 முறை காயத்ரீ மந்திரம் ஜபித்தவர்.
2020 செப்டம்பர் 20 அன்று தனது உடலை விட்டுப் பிரிந்தார். ஹிந்து சமுதாயத்திற்காக ஒரு பல்கலைக்கழகமாகவே செயல்பட்டார். அன்னாரது நூற்றாண்டை நாடு கொண்டாடுகிறது.
- குறிப்பு: திரு. பக்தன் (எ) பக்தவத்சலன் அவர்கள், ஹிந்து முன்னணியின் தமிழகம், கேரளம் மாநிலங்களின் அமைப்புச் செயலாளர்.
$$$