ஜென்ஸி எச்சரிக்கையும் நதிமூலமும்….

-பி.ஆர்.மகாதேவன்

நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்து வருகிறது. இது அரசு மீதும் ஜனநாயகம் மீதும் அவநம்பிக்கை கொள்ளச் செய்யும் சதிகாரர்களுக்கு உதவிகரமாக இருந்துவிடக் கூடாது என்கிறார் எழுத்தாளர் பி.ஆர்.மகாதேவன்…

நம் தேசம், மக்கள் தொகை மிகுதியானது. அதோடு கல்விக்கு முக்கியத்துவமும் அதிக வசதி வாய்ப்புகளும் தரும் தேசம். எனவே ஆண்டுதோறும் பட்டம் பெற்று வேலைச் சந்தைக்கு வந்து குவிபவர்களின் எண்ணிக்கை அதிகம். ஆனால், அந்த அளவுக்கு இந்தியாவில் வேலைகள் பெருகுவதில்லை. அதோடு இந்தியா பெருமளவுக்கு விவசாயம் நடைபெறும் தேசமும் கூட. எனவே அந்தத் தொழிலில் இருந்து விலகி வேறு வேலைகளுக்கு வந்து சேரும் நபர்களின் எண்ணிக்கையும் கணிசமாகவே இருக்கிறது.

அதாவது ஆண்டுதோறும் பல லட்சம் பேர் வேலைக்குத் தயாராகி வருகிறார்கள்; சில ஆயிரம் வேலைகளே புதிதாக உருவாகின்றன. அதிக பட்சம் நெகிழ்வாகக் கணக்கிட்டாலும் பத்தாயிரம் வேலைகளே புதிதாக உருவாகின்றன.

அரசு வேலையில் 100 இடங்களுக்கு லட்சம் பேர் போட்டி போடுகிறார்களென்றால், தனியார் வேலைகளையும் சேர்த்தால் (ஒப்பீட்டுக்கு) பத்தாயிரம் இடங்களுக்கு லட்சம் பேர் போட்டியிடுகிறார்கள்.

இப்படியான வெள்ளப் பெருக்கத்துக்கு தடுப்பணைகள் போட்டு கால்வாய் வழியே பாசனத்துக்கு அனுப்ப எந்த கரிகாலனாலும் முடியாது..

ஆனால், மலின, வல்லாதிக்க அரசியல் சக்திகள் எப்போதுமே இந்த வேலை இல்லா திண்டாட்டத்தைப் பெரிய அரசியல் போராட்ட ஆயுதமாகப் பயன்படுத்தவே பார்க்கும். ஜென்ஸி தலைமுறையின் கோபத்திலும் பொறுமையின்மையிலும் இருக்கும் நியாயம் என்று பேசுவதெல்லாம் இந்த வேலை வாய்ப்புக்கும் பட்டதாரிகளுக்குமான நிரப்ப முடியா இடைவெளியை வேண்டுமென்றே புறமொதுக்கிப் பேசும் அபாய தந்திரங்களே; அறியாமை நிறைந்த அசட்டுத்தனங்களே.

சீனாவிலும் இதுபோன்ற ஒரு நெருக்கடி உருவானது. அவர்கள் நம்மைவிட அதிக மக்கள் தொகை கொண்ட தேசம் அல்லவா? ஆனால், அவர்களுக்கு இரண்டு சாதகமான அம்சங்கள் இருந்தன.

முதலாவதாக அவர்களின் தேசம் நிலப்பரப்பு அளவிலும் நம்மைவிடப் பெரியது.

இரண்டாவதாக, அங்கு கம்யூனிஸ – மாவோயிஸ அரசு இருந்தது. அவர்கள் தொழிற்கல்வி மற்றும் உடலுழைப்பை உயர்வாக மதிப்பதாகச் சொல்லிக் கொள்பவர்கள். பாட்டாளிகளுடைய நலன் என்ற பெயரில் பொலிட்பீரோ சர்வாதிகாரமே அவர்களின் அரசியல் வழிமுறை. எனவே மக்கள் தொகை அதிகம் என்பதையும் உடல் உழைப்பின் மீதான போலிப் பெருமிதத்தையும் ஒன்றிணைத்து ஒரு கல்வித் திட்டத்தைக் கொண்டுவந்தார்கள்.

அதாவது, நம் ஊரில் பத்தாம் வகுப்பு போல அங்கு இருக்கும் படிப்பை முடித்துவிட்டு வருபவர்களில் 50 % பேர் மட்டுமே பொது கல்வி, உயர் கல்விக்குச் செல்லமுடியும். மீதி 50 % பேர் தொழில் கல்வி பெற்று ஃபிட்டர், பிளம்பர், எலக்ட்ரீஷியன், சர்வர் போன்ற தொழில்களுக்கு மட்டுமே செல்ல வேண்டும் என்று சட்டம் போட்டனர்.

தேசத்தில் இருக்கும் தொழிற்சாலைகள், உற்பத்தி நிறுவனங்கள் அனைத்தும் இவர்களுக்கு வேலை கொடுக்கும் வகையில் அந்தந்த நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்குள்ளேயே அவர்களே பள்ளி, மற்றும் பயிற்சியைத் தந்தனர்.

ஒரு தொழிற்சாலையின் பள்ளியில் படிப்பவர் அங்கேயே உடலுழைப்பு வேலைக்குச் சென்றுவிடுவார்.

இதுவும் அங்கிருக்கும் மக்கள் தொகைக்கு அதாவது இளைஞர்களுடைய எண்ணிக்கைக்குப் போதுமான வேலைகளைத் தந்துவிடவில்லை. அதாவது அங்கும் பத்தாயிரம் வேலைகள் – ஒரு லட்சம் தொழில் கல்வி பெற்ற இளைஞர்கள் என்பதாக இருந்தது. அங்குதான் சீனா இன்னொரு சாதனையைச் செய்தது.

உலகுக்கே பொருட்களை உற்பத்தி செய்து தரும் மையமாக சீனாவை மாற்றினார்கள்.

அப்படியாக, படித்துவரும் இளைய தலைமுறையில் பாதியை உடல் உழைப்புத் தொழிலுக்குத் திருப்பிவிட்டனர். அந்த வொர்க் ஃபோர்ஸுக்கு வேலை வாய்ப்பையும் உருவாக்கினர். உலகம் முழுவதிற்குமான உற்பத்தியென்றால், லட்சம் பேருக்கு எளிதில் வேலை கிடைத்துவிடுமே!

ஆக, சீனா இந்த மாவோயிஸ சாதனையைச் செய்ய முடிந்ததற்கு ஒரே காரணம் அங்கு அது சர்வாதிகார சித்தாந்தமாக இருந்தது. அதனால்தான்  ‘ஸ்வெட் ஜாப்’ என்று அழைக்கப்படும் நவீன கொத்தடிமைத் தொழில் முறையை பாட்டாளி மற்றும் உடல் உழைப்பை உயர்வாகப் பார்க்கும் சித்தாந்தத்தின் மூலம் செய்துகாட்டினர்.

மாவோயிஸ தேசம் என்பது  ‘கம்யூனிஸ கார்ப்பரேட் கார்ட்டெல்’ என்பதன் கெளரவப் பெயர் மட்டுமே. மெண்டல் நக்ஸல்கள் (திமாகி நக்ஸல்கள்) இந்த அசுர அபார உற்பத்தித் துறை வளர்ச்சியை மாபெரும் சாதனையாகவே இன்றும் போற்றுகிறார்கள்.

இவர்களின் இந்தச் சாதனையின் மூல வேர்கள், ஜார் மன்னர் ஆட்சியை ஒழித்துவிட்டு அதைவிடக் கொடிய பொலிட்பீரோ ஆட்சியை நடத்தியவர்கள் ஆரம்பித்த பாலி டெக்னிக் கல்வி முறையில்தான் இருக்கின்றன. அவர்களும் உடல் உழைப்பை உயர்வாகச் சொல்பவர்கள் அல்லவா? டாக்டருக்குப் படித்திருந்தாலும் இன்ஜினீயருக்குப் படித்திருந்தாலும், போய் சித்தாள், கையாள் வேலை செய் என்று உத்தரவிட்டு, உடல் உழைப்பின் அருமை பெருமையை உலகுக்கு உணர்த்தியவர்கள் அல்லவா? அதே தொழிற் கல்விதான் மக்கள் தொகை மிகுந்த சீனாவை உலகின் முன்னணி தேசமாக ஆக்கிக் காட்டியிருக்கிறது.

நம் நாட்டிலும் மக்கள் தொகை அதிகம். இளைய தலைமுறை வேலை இல்லாமல் பொறுமை இழந்து வருகிறது. சீன பாணியில் ஐம்பது சதம்விகிதம் பேர் பத்தாம் வகுப்பு முடித்ததும் பாலி டெக்னிக்கில் சேர்ந்தாக வேண்டும். ஐ.டி.ஐ. படித்து ஏதேனும் கார் தொழிற்சாலை அல்லது ரயில் தொழிற்சாலையில் ஃபிட்டர், வெல்டர், லிஃப்டர் என ஏதேனும் ஒரு வேலையில் சேர்ந்தாக வேண்டும் என்று சொல்லலாம்.

சமூக வலைதளங்களுக்கு சர்வாதிகாரக் கட்டுப்பாடு விதிக்கலாம். கருத்துரிமை, எழுத்துரிமை, கலை உரிமைகளுக்கு சீன சென்சார்ஷிப்பைக் கொண்டுவரலாம். ஆனால், நம் ஊர் மெண்டல் நக்ஸல்கள் அதை விரும்ப மாட்டார்கள்.

என்னதான் சீன எலும்புத்துண்டு கிடைத்தாலும், சர்வாதிகாரம் சர்வாதிகாரம் என்றா குரைக்க முடியும்?  ஜனநாயகம், இளைய தலைமுறை எழுச்சி, கோபத்தின் நியாயம், பொறுமையின்மையின் நேர்மை என்றுதான் முழங்க முடியும்.

ராஜாஜி இதுபோன்றதொரு தொழிற்கல்வியை  தன் புதிய கல்வித் திட்டத்தில் 1950களிலேயே முன்வைத்திருந்தார். அவர் உடல் உழைப்பை மட்டுமல்ல; கிராமப்புற கைவினைக் கலைஞர்களையுமே மதித்தார். அவர்களே ஆசிரியர்களாக இருக்கட்டும் என்றார்.

பள்ளியில் பாலி டெக்னிக் துறையை ஆரம்பிப்பதைவிட கிராமத்தையே பிரமாண்டமான பாலி டெக்னிக் ஆக ஆக்க விரும்புகிறேன் என்றார்.

பள்ளியில் நெசவு வகுப்பில் கைத்தறித் தொழில் கற்றுக் கொள்வதுபோல கிராமத்தில் நெசவுத் தெருவுக்குச் சென்று கற்றுக் கொள்வார்கள். இங்கு தச்சு வகுப்பில் மரம் இழைக்கக் கற்றுக் கொள்வதுபோல அங்கு ஆசாரிகளின் வீட்டில் சென்று கற்றுக் கொள்வார்கள். இங்கு விவசாய வகுப்பில் கற்றுக் கொள்வதுபோல வயல் வெளிக்குச் சென்று கற்றுக் கொள்வார்கள். ஒரு பிராமணப் பையன் செருப்பு தைக்கும் தொழிலாளியிடம் செருப்பு தைக்கக் கற்றுக் கொள்வார்.

ஒரே பள்ளி மைதானத்தில் அந்தக் கைவினைத் தொழில்களைக் கற்றுத் தருவதைவிட அந்த கைவினைத் தொழில் நடக்கும் இடத்திலேயே சென்று கற்றுக் கொள்ளலாம். மாதம் ஒருமுறை சோப்பு தயாரித்தல், பிஸ்கெட் தயாரித்தல் தொழிற்சாலைகளுக்கு ஃபீல்ட் விசிட் சென்று கற்றுக் கொள்வதுபோல தினமும் நெசவு, தச்சு வேலை, மண் பாண்டம், விவசாயம் என அனைத்தையும் அவரவர் விருப்பத்துக்கு ஏற்பக் கற்றுக் கொள்ளலாம் என்று சொன்னார்.

உண்மையில் அவருடைய நோக்கம் இந்தத் தொழிற்கல்வி அல்ல. நிதி நெருக்கடி மிகுதியாக இருந்ததால், அப்போது இருக்கும் பள்ளி, ஆசிரியர்கள், கரும்பலகைகள், பெஞ்சுகள் இவற்றைக் கொண்டு இரட்டிப்புக் குழந்தைகளுக்குப் பாடம் கற்றுத் தர ஒரு வழியைக் கண்டுபிடித்தார். பஸ்சில் நெரிசல் அதிகமாக இருப்பதாகச் சொன்னபோது சில அலுவலகங்களை காலை ஆறு மணிக்கும் சில அலுவலகங்களை 9 மணிக்கும் ஆரம்பிக்கலாம் என்று சொன்னார். அதே வழியில் புதிய ஷிஃப்ட் சிஸ்டத்தில் காலை, மதியம் என இரண்டு பேட்ச் மாணவர்கள் வந்து போகலாம் என்று சொன்னார்.

காலையில் பள்ளிக்கு வரும் குழந்தைகள் மதியம் என்ன செய்வார்கள் என்று கேட்டபோது பெற்றோருக்கு உதவியாக இருக்கலாம். அல்லது கிராம சபை ஏற்பாடு செய்து தரும் கைத் தொழில்களைக் கற்றுக் கொள்ளலாம் என்று சொன்னார்.

பெற்றோருக்கு உதவலாம் என்று சொன்னதை ‘குலக் கல்வித் திட்டம்’ என்று திரித்தனர்.

அர்ச்சகர், மன்னர், வணிகர், நிலப்பிரபு, விவசாயி, சிற்பி, ஆசாரி, மீனவர், மலை வாழ் மக்கள் என அத்தனை பேரும் குலத்தொழில் செய்து வாழ்வாங்கு வாழ்ந்திருந்த நிலையிலும், குலத் தொழில் என்று சொன்னாலே இழிவு என்பதாக அந்தக் குலத் தொழில் வழி வந்தவர்களே எதிர்த்தனர்.

குப்பை அள்ளுபவர் குப்பையே அள்ளவேண்டுமா என்று சட்டசபையில் கொதித்தார்கள். இதில் கொடுமை என்னவென்றால், இன்றும் அந்தக் குப்பை அள்ளும் தொழில் பெருமளவுக்கு குலத்தொழிலாகவே நீடிக்கிறது. ஆக யாரைச் சொல்லிக் காட்டி சமத்துவ வேடம் போட்டார்களோ, அவர்கள் இன்றும் மலக்குழி, சாக்கடைக்குழியில் விழுந்து இறந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.

ராஜாஜி ஒழிக… மனு ஒழிக… என்று சொன்னாலே சமத்துவம் வந்துவிடும் அல்லவா?

ராஜாஜி தன் புதிய கல்வித் திட்டத்தில் தொழிற்கல்விக்கு முக்கியத்துவம் தந்தபோது சீனா, ரஷ்யா, ஜெர்மனியைப் போலத்தான் செய்தார்.

இப்போது படித்தவர்களுக்கே வேலை தரமுடியவில்லை. இன்னும் நிறையபேர் வந்தால் வேலையில்லா திண்டாட்டம் அதிகரிக்குமே என்று கவலைப்பட்டார். அவருடைய கவலையே பின்னர் நிஜமானது. 1990 வரை வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்து ஆடியது. தாராளமயமாக்கல், உலகமயமாக்கல், தனியார் மயமாக்கல் ஆகியவை, ஓரளவுக்கு இதுவரை வேலையைத் தந்தன. இன்று அதுவும் போதாது என்ற நிலை வந்தாயிற்று.

இன்றும்கூட மோதியின் அரசு பல்வேறு கல்வியாளர்கள், பல்துறை நிபுணர்கள், மக்கள் என அனைத்துத் தரப்பின் ஆலோசனை பெற்றுக் கொண்டுவந்திருக்கும் புதிய கல்விக் கொள்கையில் அதே தொழிற்கல்விக்கு முக்கியத்துவம் தரச் சொல்லியிருக்கிறார்கள். அதையும் அதே  ‘குலத் தொழில்’ என்று சொல்லித்தான் எதிர்க்கிறார்கள்.

பக்கோடா செய்து விற்பவர் ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கிறார் என்று, எந்தத் தொழில் செய்தாலும் முன்னேறலாம் என்று உற்சாகப்படுத்தச் சொன்னால்,  “நாமெல்லாம் பக்கோடா போடணும்… அவாள்லாம் ஐ.ஐ.டி, அமெரிக்கான்னு போவா” என்று கிண்டலடிக்கிறார்கள்.

இதில் கொடுமை என்னவென்றால், திராவிட மாடல் ஆட்சி நடந்த ஐம்பது, அறுபது ஆண்டுகளில் அரசுப் பள்ளியில் படித்துவிட்டு வருபவர்கள் இன்றும் பக்கோடா போடுதல், ரோடு போடுதல், மூட்டை தூக்குதல் என்ற கடை நிலை வேலைகளில் தான் இருக்கிறார்கள்.

ஆனால், பாசிஸ பாஜக இளைய தலைமுறையைப் புறக்கணித்துவிட்டது என்று இவர்களே கிளப்பியும் விடுவார்கள்.

விஷயம் ரொம்ப சிம்பிள்: இந்தியா மிகப் பெரிய இளைய தலைமுறையைக் கொண்ட நாடாகியிருக்கிறது. இந்த உயிர்த் துடிப்பான சக்தியானது புதிய கண்டுபிடிப்புகள், தேச நலன், தர்ம சிந்தனை என்றெல்லாம் இயங்கினால் இந்தியா 2047-ல் மீண்டும் மகத்தான தேசமாகிவிடும்.

இதை முறியடிக்க வேண்டுமென்றால், சொற்ப ஜென்ஸியை அற்பத் தலைவன்கள் தலைமையில் தூண்டிவிட்டால் போதும்.

எந்தப் போராட்டத்துக்கும் ஒரு நியாயத்தைக் கற்பிக்க முடியும்.. எந்த வன்முறையையும் நியாயப்படுத்த முடியும். எந்த தேசத்தையும் புரட்டிப் போட முடியும்.

அந்நிய முதலீடுகள் இங்கு குவிந்துகொண்டே இருப்பதால் வேண்டுமானால், கொஞ்சம் இந்தக் கலகங்கள் தள்ளிப் போடப்படலாம்.

வக்ஃப் சொத்து 500 மடங்கு அதிகரித்திருக்கிறது. தொழில்கள், வியாபாரங்கள் எல்லாம் அவர்கள் கைக்குச் சென்று சேருகிறது என்பதால் வேண்டுமானால், கொஞ்சம் மாறுபட்ட வகையில் புரட்சி நடக்கலாம்.

ஒட்டக் கறந்த பின் கசாப்புக் கடைக்குத்தான் அனுப்பப்படும் எல்லா மாடுகளும். என்றாலும் வற்றா முலை கொண்ட காமதேனுவுக்கு இப்போதைக்குக் கவலைப்பட பெரிதாக எதுவும் இல்லைதான். ஆனால், யாதவனை ஓரங்கட்டிவிட்டு கசாப்புக் கடைக்காரனே காமதேனுவைக் கைப்பற்றிவிட்டால்?

$$$

Leave a comment