நதிநீர் முழுதும் நாட்டின் உடமை!

-வ.மு.முரளி

தமிழகம் - கர்நாடகம் மாநிலங்களிடையே ஒவ்வோர் ஆண்டும் காவிரி நீர்ப் பங்கீடு பிரச்சினையாகி வருகிறது. இந்நிலையில், நதிநீர் எந்த ஒரு மாநிலத்திற்கும் சொந்தமானதல்ல, இந்த நாட்டு மக்கள் அனைவருக்கும் சொந்தமானது என்கிறது இக்கவிதை...

தட்சிண கங்கை என்பது நானே!
அட்சய பாத்திர அமுதும் நானே!
கன்னட நாட்டின் தலைக்காவிரியில்
என்னது அடிவேர் புறப்படுகிறது!
என்கரை எங்கும் லட்சுமி நடனம்!
என்னது மூலோர் அகத்திய முனிவர்!
பற்பல ஊர்கள், நற்பல நகரம்,
சிற்றெனக் கடந்து சீறிப் பாய்ந்தேன்!

செல்கிற பாதை எல்லாம் பசுமை
பல்கிட வளத்தைப் பெருக்கிடுகின்றேன்!
மண்ணைப் பொன்னாய் மாற்றியதாலே,
தண்ணீர் தானே எனக் கருதாமல்-
பொன்னி என்றே போற்றிடுகின்றீர்!
அன்னை என்றே அன்புடன் சொன்னீர்!
எல்லாம் அந்த ஈஸ்வரன் கிருபை!
வல்லான் அவனை வாழ்த்துகள் சேரும்!

பெண்களின் பருவம் மாறுதல் போலே,
என்னுடை நீரும் போக்குகள் மாறும்!
துள்ளிக் குதித்து, துந்துபி பாடி,
அள்ளித் தெளித்து அருவியுமாவேன்!
மெல்லப் பதிந்து நடந்திடு போதில்
எல்லை தெரியா ஏரிகள் ஆவேன்!
கண்ணாமூச்சி காட்டிடு வண்ணம்
நுண்ணிய நூலாய் மாறுவதுண்டு!

மடைகள் பலவும், அணைகள் பலவும்
தடைகள் செய்யத் தவழ்ந்திடுகின்றேன்!
யாத்திரைத் தலங்கள், ஈஸ்வரனுறைந்து
காத்தருள் செய்யும் ஆலயம் பலவும்
என்கரை தனிலே வீற்றிருப்பதனால்,
இன்னருள் வேண்டும் பற்பல மக்கள்
புண்ணிய நதியாய் வணங்கிடுகின்றார்!
எண்ணிய அனைத்தும் ஈடேறிடுக!

பாரத நாட்டின் பண்பாட்டைப் போல்
சீரிளம் அழகு சிலிர்த்திடப் பாய்வேன்!
இடையில் சிற்சில வாய்க்கால் ஆவேன்!
கடைசியில் வங்கக் கடலில் கரைவேன்!
பிறப்பது முதலாய், இறப்பது வரையில்
திறத்துடன் அமையும் மனிதரின் வாழ்க்கை-
என்பதுபோலே என்னது சரிதம்
என்பதைச் சொன்னேன்! என்கதை தொடரும்!

***

என்கதை இதுவே, என்னுயிர் மக்காள்!
நன்றொரு சொல்லை உம்மிடம் சொல்வேன்!
எல்லாச் சிறப்பும், எங்கும் அன்பும்,
நில்லாதொழியும் நிலை வரலாமா?
ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகளே என்
இருவிழிதானே குடகும் தமிழும்?
ஒருவிழி நோக, மறுவிழி காணும்
பிரிவைத் தரவா நதியென ஆனேன்?

வேண்டாம் துயரம்! சோதர மக்காள்!
வேண்டும் அன்பு, ஒற்றுமை எண்ணம்!
புண்ணிய நதியென் சொற்களைக் கேளீர்!
திண்ணிய ஈசன் திருவருள் புரிக!
ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து,
இருவரும் நன்றாய் வாழ்ந்திட வேண்டும்!
“நதிநீர் முழுதும் நாட்டின் உடமை”
விதியிது புதிதாய் விரைவினில் காண்பீர்!

$$$

Leave a comment