-கருவாபுரிச் சிறுவன்

தென்காசி மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர்- திருநெல்வேலி நெடுஞ்சாலையில், ராஜபாளையத்துக்குத் தெற்கில் சுமார் 30 கி.மீ. தொலைவிலும், திருநெல்வேலியில் இருந்து வடக்கே சுமார் 60 கி.மீ. தொலைவிலும் உள்ளது சங்கரன்கோவில். மதுரை – விருதுநகர் – ராஜபாளையம் ரயில் மார்க்கமாகவும் சங்கரன்கோவில் வரலாம்.
சங்கரநயினார் கோயில் என்று பெயர் பெற்ற இத்தலமே சங்கரன்கோவில் என்று அழைக்கப்படுகிறது. இது தென்காசி மாவட்ட நிர்வாகத்திற்கு உட்பட்டது.
மூர்த்தி, தலம், தீர்த்தம் என்னும் முச்சிறப்புகளை உடைய தலம்; தென்காசி, விருதுநகர் மாவட்ட பஞ்சபூதத் தலங்களில் மண்ணுக்குரிய தலம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான கோயில் இது.
பாரத தேசத்திலுள்ள 108 சக்தி பீட தலங்களில் இது எட்டாவது தலம்; தென் தமிழக சக்தி தலங்களில் இக்கோயில் முக்கிய இடம் பெறுகிறது.
64 மூர்த்தங்களில் ஒன்றான அரியர்த்தர் கோலமாகிய சங்கரநாராயணர் வடிவில் சிவபெருமான் அருள் பாலிக்கும் தலம்.
தேவார மூவரால் பாடப் பெறாவிட்டாலும், தேவாரத்தில் இடம் பெறும் செய்யுள்களில் இத்தலத்தினுடைய சங்கரன் என்ற திருநாமம் இயல்பாகவே இடம் பெறும் சிறப்பினைப் பெற்ற தலம். அப்பர் சுவாமிகளால் பாடப் பெற்ற தேவாரத்தின் அடிப்படையில் இது வைப்புத்தலம்.
பக்தர்களின் மனக்குறை, உடற்குறை தீர்க்கும் தலம் இது. காலசர்ப்ப தோஷம், ராகு கேது தோஷம், களத்திர தோஷம்,திருமணத்தடை நீக்கும் தலம் இது. தமிழகம் மட்டும் அல்லாது லட்சோப லட்ச மக்களின் நெஞ்சில் நிறைந்த ஒப்பற்ற திருத்தலம் இது.
இத்தலத்தின் வேறு பெயர்கள்: பூகைலாயம், புன்னைவனம், சீராசபுரம், சீராசை, வாராசைபுரம், கூழைநகர். சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்கள், ஆவுடையாள் கோயில், கோமதி கோயில், பெரிய கோயில் என்ற பெயர்களால் அழைக்கின்றனர்.
இக்கோயிலின் கிழக்கு வாசலில் 125 அடி உயரமுள்ள 9 நிலை கொண்ட ராஜகோபுரம் சங்கரலிங்கப் பெருமான் மூலஸ்தானத்திற்கு முன்புள்ள தலைவாசலில் அமைந்துள்ளது. இக்கோபுரம் கட்டப்பட்டு ஆயிரமாவது ஆண்டு 2022இல் நிறைவு பெற்றது.
திருக்கோயில் விவரம்: மாவட்டம்: தென்காசி கோயில்: சங்கரநயினார் கோயில் (சங்கரன்கோவில்) விநாயகர்: ஆதி விநாயகர் முருகர்: சண்முகர் மூலவர்: சங்கரலிங்கநாதர் அம்பாள்: கோமதியம்பிகை சிறப்பு சன்னிதி: சங்கர நாராயணர் தீர்த்தம்: நாகசுனை தலவிருட்சம்: புன்னை மரம் ஆகமம்: காமிகா ஆகமம் முக்கிய விழாக்கள்: சித்திரை பெருந்திருவிழா, ஆடித் தவசு திருவிழா, ஐப்பசி திருக்கல்யாணம், மார்கழி திருவாதிரை.

புராண வரலாறு:
சங்கன், பத்மன் என்ற நாகராஜாக்கள் வழிபட்ட சிவலிங்கத்தை காலப்போக்கில் புற்று மூடி விட்டது. மணிக்ரீவன் என்ற தேவன் பார்வதி தேவியின் சாபத்தால் பூவுலகில் பிறந்து புன்னைவனக் காவலனாக பணி செய்தான். அவன் காப்பறையன் என்றும், காவற்பறையன் என்றும் பெயர் பெற்றவன்.
கரிவலம்வந்தநல்லூர் பால்வண்ண நாதருக்கு புன்னைவனத்திலே ஒரு பூந்தோட்டம் இருந்தது. அதற்கும் அவனே காவலன். தோட்டத்தின் ஒரு பக்கம் புற்றொன்று வளர்ந்தது. அதை ஒரு நாள் அவன் வெட்ட அதிலிருந்த நாகமும் அதன் வாலும் வெட்டுப் பட்டது. அப்போது அவன் புற்றினுள் சிவலிங்கம் இருப்பதையும் கண்டான். உக்கிரபாண்டிய மன்னர் அந்த வழியாக மதுரை சென்று மீனாட்சியம்பிகையையும், சொக்கநாதப் பெருமானையும் வழிபட்டு வருவது வழக்கம். காவற்பறையன் புற்றை வெட்டிச் சிவலிங்கத்தை கண்ட அன்று, உக்கிர பாண்டிய மன்னனின் யானை கொம்பினால் தரையை குத்தி கீழே விழுந்து புரண்டது. அப்போது காவற்பறையன் ஓடிவந்து அவரிடம் செய்தியைத் தெரிவித்தான்.
உக்கிரபாண்டியர் அங்கு சென்றதும் சிவபெருமான் அசரீரியாக ஆணை தர, பாண்டியன் காட்டை நாடாக்கி சங்கரநயினார் கோயிலையும் ஊரையும் தோற்றுவித்தார். கோயிலில் கோபுரத்தை அடுத்து நிர்வாக அலுவலக இடப்புறத் தூணில் காவற்பறையனின் திருவுருவம் அமைந்திருப்பதையும், அவர் இன்றும் பக்தியோடு பூஜிக்கப்பெற்று வருவதையும் காணலாம்.

சங்கரலிங்கர்:
இக்கோயிலில் சங்கரலிங்க சுவாமி என்னும் பெயரில் சிவபெருமான் அருள் பாலிக்கிறார். இவருக்கு சங்கரலிங்கப்பிரபு, வான்மிக நாதர், கூழைநாதர், கூழையாண்டி என்னும் சிறப்புப் பெயர்கள் உண்டு.
தேவேந்திரனின் மகன் சயந்தன். இவன், சீதாதேவியின் மேல் காதல் கொண்டு, காக்கை வடிவில், அவள் மேனியில் அலகால் கொத்தித் துன்புறுத்தினான். ஸ்ரீ ராம பிரான் தர்ப்பைப் புல்லை எடுத்து சயந்தன் மீது ஏவினார். இதனால் ஒரு கண்ணில் பார்வை இழந்த சயந்தன், காக்கை உருவை நீக்க முடியாமலும் வருந்தினான். பிறகு, தன் தந்தையின் ஆலோசனைப்படி, அவர் கொடுத்த முத்துமாலையுடன் இந்தத் தலத்துக்கு வந்து, சங்கரலிங்கப் பெருமானுக்கு அந்த மாலையை அணிவித்து வழிபட்டு, சுயரூபம் பெற்றான்.
உறையூர்ச் சோழன் வீரசேனன், தன் மகளுக்கு முடிசூட்டிய பின் இந்தத் தலத்துக்கு வந்து, சிவசன்மன் என்ற அடியார் மூலம் ஐந்தெழுத்து மந்திரம் உபதேசிக்கப் பெற்று சிவ பூஜையின் மூலம் சங்கரனாரின் திருவருளைப் பெற்றான்.
எலி பிடிக்கச் சென்றபோது கிடைத்த புதையலைக் கொண்டு தீய வழியில் பாவத்தைச் சேர்த்த வேடன் ஒருவன், இந்தத் தலத்துக்கு வந்து நாகசுனைக் கரையில் வீழ்ந்து இறந்ததனால், பாவம் நீங்கி சங்கரனாரின் திருவருளைப் பெற்றான்.
சேற்றூர் என்ற தலத்தின் அருகே ஓடும் தேவியாற்றங்கரையில் வசித்தவர் சிவராத முனிவர். இவரின் மகன் கன்மாடன். இவன், பசுவைக் கொன்றதனால் உண்டான தனது பாவம் தீர, சங்கரன்கோவிலுக்கு வந்து நாகசுனையில் மூழ்கி மூன்றே நாட்களில் சங்கரனாரின் திருவருளைப் பெற்று நற்கதி அடைந்தான் என்பர்.
சங்கரலிங்க சுவாமியை கோமதியம்பிகை மட்டுமின்றி, இந்திரன், பைரவர், சூரியன், அக்னி ஆகிய தேவர்களும் அகத்தியர், பத்திசாரர் ஆகிய முனிவர்களும் வழிபட்ட தலம் இது
திருநெல்வேலி மானுார் அருகே உள்ள உக்கிரன்கோட்டையை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்த உக்கிரபாண்டிய மன்னரும், அவரது அமைச்சரான உமாபதி சிவாசாரிய சுவாமிகளும் சங்கரலிங்க சுவாமியின் மகத்துவத்தைஅறிந்து இந்க் கோயிலையும் நகரையும் உருவாக்கி நித்திய பூஜைகளை காமிக ஆகம முறைப்படி நடைபெற வழிவகுத்துள்ளனர். இவர்கள் இருவருக்கும் சுவாமி சன்னிதிக்கு நேர் எதிரே சன்னிதியின் உள்சுற்றுப் பிரகாரத்தில் இருவருக்கும் ஆளுயரச் சிலை உள்ளது.
சங்கரலிங்க சுவாமியை வணங்கி பிறகு உள்சுற்று தெற்கு பிரகாரத்தில் அறுபத்துமூவர், சமயக்குரவர்கள், சந்தானக்குரவர்கள், சப்தமாதர்கள் ஆகியோரின் சன்னிதியைத் தரிசிக்கலாம்.
சர்ப்ப விநாயகர் சன்னிதியில் ராகு, கேதுவின் அருளை வேண்டுவோர் விநாயகர் அகவல் பாடி அருளைப் பெறலாம்.
சிவபெருமான் கோயில்களில் மூலஸ்தான சுற்றுச்சுவரின் பின்புறத்தில் லிங்கோத்பவர் அல்லது விஷ்ணு பகவான் காட்சி தருவார். ஆனார் இங்கு யோக நரசிம்மர் இருக்கிறார். இவரை வழிபட, நானே பெரியவன் என்ற மமதை நீங்கும்.
இங்கு தல விநாயகர் ‘அனுக்ஞை விநாயகர்’ எனப்படுகிறார். கோயில் நுழைவாயிலில் அதிகார நந்தி, தன் மனைவியுடன் காட்சி தருகிறார். சிவன் எதிரேயுள்ள நந்தி ருத்ராட்சப் பந்தலின் கீழ் இருக்கிறார்.
பொதுவாக, கோயில்களில் வடக்கு நோக்கி காட்சி அருளும் துர்கையம்மன் இங்கே தெற்கு திசை நோக்கி காட்சியளிப்பது சிறப்பு.

கோமதியம்பிகை:
மூலஸ்தானத்தில் கோமதியம்பிகை அழகே உருவானவளாக, பிரம்மாசனத்தின் மேல் வலது இடை நெளிந்து, வலது கையில் மலர்பாணம், பூச்செண்டு ஏந்தியவளாக, இடது கையை பூமியை நோக்கி தளரவிட்டவளாக இளமங்கைக் கோலத்தில் புன்னகை பூத்த முகத்துடன் சர்வாலங்கார நாயகியாகவும், தன் வலக்காலை முன்னெடுத்து வைத்து பக்தர்களின் வேண்டுதல்களை உடனுக்குடன் நிறைவேற்றும் சர்வதேவியாகவும் காட்சி தருகிறாள்.
சந்திரன் (மதி) போல பொலிவான முகம் கொண்ட அம்பிகை, இங்கு தவம் புரிய வந்தபோது, தேவலோகப் பெண்கள் பசுக்கள் வடிவில் அவளுடன் வந்தனர். எனவே இவள் ‘கோமதி’ என்று பெயர் பெற்றாள். ஆவுடையம்பிகை என்றும் இவளுக்கு பெயர் உண்டு. ‘ஆ’ என்றாலும் ‘பசு’ தான். ‘பசுக்களை உடையவள்’ என்று பொருளுண்டு.
அம்மனுக்கு சங்கரி, கோமதி, மனோண்மணி, வாலைகுமாரி, ஆவுடையம்பிகை, ஆவுடைத்தாய், ஆவுடையாள் என்னும் சிறப்பு பெயர்கள் உண்டு.
சன்னிதிக்கு எதிரே வேலப்ப தேசிக சுவாமிகளால் அமைக்கப்பட்ட எந்திர ஆசன பீடம் பக்தரின் நோய்க்கு அருமருந்தாக அமைந்துள்ளது.
அம்பிகையின் அனுக்கிரகத்தைப் பெற்றவர்கள் கோமதியை ‘பேசும் தெய்வம்’ எனக் கொண்டாடுகின்றனர்.

சங்கரநாராயணர்:
சுவாமி, அம்பாள் சன்னிதிக்கு நடுவே உள்ளது சங்கரநாராயணர் சன்னிதி. இச்சன்னிதியில் ஒருபாகம் சிவபெருமானாகவும், மற்றொரு பாகத்தில் மகாவிஷ்ணுவாகவும் சேர்ந்து காட்சி தரும் திருமேனி, தரிசிக்கத்தக்கது.
சங்கரநாராயணர் எப்போதும் அலங்காரத்துடன் காட்சி தருகிறார். இவருக்கு அபிஷேகம் கிடையாது. இச்சன்னிதியில் ஸ்படிக லிங்கமாக காட்சி தரும் சந்திரமவுலீஸ்வரருக்கே அபிஷேகம் நடக்கும்.
‘சிவனும் விஷ்ணுவும் சமம்’ என்னும் கருத்துடன், அன்பு, தியாகத்தால் மட்டுமே இருவரையும் காண முடியும் என்ற தத்துவத்தையும் கோமதியம்பிகை தவத்தின் மூலம் நாகராஜாக்களுக்கு உணர்த்தினார் வியாழ பகவான்.
ஆதலால் இக்கோயில் சுவாமி அம்பாளை தரிசிப்பதன் மூலம் நமக்குள் இருக்கும் சந்தேகம் தீரும்; பயம் விலகும்; உண்மை தெரியும்;குருவருள் கிடைக்கும்.
ஆடித்தபசு:
‘தபஸ்’ என்றால் ‘தவம்’ அல்லது ‘காட்சி’ என்று பொருள். அம்பாள், சிவ, விஷ்ணுவை சங்கர நாராயணராக காட்சி தர வேண்டி தவமிருந்து அவரது காட்சியைப் பெற்ற நாளே ‘ஆடித்தபசு’ திருநாள்.
அதைப் போலவே, பாம்பரசர்களான சங்கன், பதுமன் ஆகியோருக்கு ஹரிஹரனாக காட்சி கொடுத்ததன் நினைவாக, ஆண்டுதோறும் ஆடி மாதம் பௌர்ணமியுடன் கூடிய உத்திராட நட்சத்திரத்தில் கோமதியம்பிகை தபசுத் திருவிழா நடைபெறும். மாலையில் நடக்கும் முதற்காட்சியில் சங்கர நாராயணராகவும், இரவில் நடக்கும் இரண்டாம் காட்சியில் சங்கரலிங்க சுவாமியாகவும் காட்சி தரும் வைபவம் மிகவும் பிரசித்தி பெற்றது.
இவ்விழா, 12 நாட்கள் நடக்கும். அம்பாளுக்கான பிரதான விழா என்பதால், அம்பாள் மட்டுமே தேரில் எழுந்தருளுவாள். கடைசி நாளில் அம்பிகை தபசு மண்டபம் சென்று, கையில் விபூதிப்பையுடன் ஒரு கால் ஊன்றி தவம் இருப்பாள். மாலையில் சங்கரநாராயணர் இவளுக்கு காட்சி தருகிறார். அதன்பின் சங்கரலிங்க சுவாமி, யானை வாகனத்தில் சென்று அம்பாளுடன் இணைந்து வலம் வருவார்.



அடியார்கள்:
இக்கோயிலின் முக்கிய தீர்த்தமாக கருதப்படுவது ‘நாகசுனை’. இது கோயிலின் ராஜ கோபுர அடிதளத்தின் அருகில் உள்ளது.
திருவாவடுதுறை ஆதினத்தின் 10வது பட்டத்தலைவர் வேலப்ப தேசிகரின் ஜீவசமாதி சன்னிதி இக்கோயிலுக்கு பின்புறம் மேற்கு ரத வீதியிலும், அம்பிகையின் பக்தரான பாம்பாட்டி சித்தர் சன்னிதி இக்கோயிலுக்கு மேற்கே அமைந்துள்ளது.
வேலப்ப தேசிகரின் பக்தரான, சுதந்திரப் போராட்ட வீரர் புலித்தேவர் தன் உடல் ஆங்கிலேயருக்கு கிடைக்கக் கூடாது என சுவாமி அம்பாளிடம் வேண்டினார். அதன்படியே, ‘தன் பூத உடலோடு இக்கோயிலுக்குள் வந்தவர் மறைந்தார்’ என்கிறது ஆங்கிலேயரின் ஆவணம். அதன் நினைவாக, அவருக்கு சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த ஓர் அறை இக்கோயிலில் முன்னோர்களால் நிறுவப்பட்டுள்ளது.
பெரிய மருத்துவச்சி:
சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு இக்கோயில் வயனம் காக்கும் விரத வழிபாடு மிகவும் பிரசித்தி பெற்றதாக இருந்துள்ளது. கொடிய நோய்க்கு உட்பட்டவர்கள், சிக்கலான பிரச்சினையில் உள்ளவர்கள் 48 நாட்கள் இக்கோயில் வந்து தங்கியிருந்து, பாம்பரசர்கள் உருவாக்கிய நாகசுனையில் நீராடி சுவாமி அம்மனை முறையாக தரிசித்து கோயிலில் கிடைக்கும் பிரசாதத்தைச் சாப்பிட்டு நலம் பெறலாம். இன்றும் இன்றைய நடைமுறைக்குத் தக்கவாறு வயனம் காக்கும் பக்தர்கள் அருள் பெறுகின்றனர். எனவே, அம்பிகையை மருத்துவர்களுக்கு தலைவி என்றும், ‘பெரிய மருத்துவச்சி’ என்றும் பக்தர்கள் கோமதி அம்பிகையைப் போற்றுகின்றனர்.
இங்கு அம்பிகை சன்னிதியில் கிடைக்கும் புற்றுமண் மிகவும் விசேஷம். இப் புற்று மண்ணை சிறிது எடுத்து வீட்டு பூஜையறையில் வைத்து பூசிப்பவர்களுக்கு, கண்கோளறு, திருஷ்டி, போன்றவை அண்டாது; நோய் நெருங்காது.
பக்தர்களின் வேண்டுதலுக்காக, அம்பிகையின் தவக்காலங்களில் பிரகாரங்களை 108 முறை சுற்றும் ‘ஆடிச்சுற்று’ மிகவும் பிரபலம்.

இலக்கியங்கள்:
சுமார் 30 க்கும் மேற்பட்ட சிற்றிலக்கியங்கள் இக்கோயிலுக்குரியவை. சிவஞானயோகிகளின் சீடர் காஞ்சிபுரம் சிதம்பர முனிவர், வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள், முகவூர் அருணாச்சலக் கவிராயர், வைத்தியலிங்கபுரம் உமையொருபாகன் போன்ற புலவர்கள் பாடி, தரிசித்த புண்ணியத்தலம். தமிழறிஞரான உ.வே. சாமிநாதய்யருக்கு மிகவும் பிரியமான தலம்.
இப்பகுதியை சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சிசெய்தவர் சீவலமாற பாண்டியர். தமிழ்ப் புலவரும், சிவபக்தருமான இவர் வடமொழியில் இருந்த சங்கரன்கோயில் தலபுராணத்தை தமிழில் மொழி பெயர்த்து ஓலைச்சுவடியில் எழுதி வைத்தார்.
ஊற்றுமலை ஜமீன், தங்கள் குல தெய்வமாக விளங்கிய கோமதியம்பிகையின் கோயில் தல புராணத்தை பாதுகாத்து வந்தனர். பின்னாளில் ஜமீனை நிர்வகித்த ராணி நாச்சியார் அவர்கள் சிதிலமைந்த ஆறு சருக்கங்களை முழுமைப்படுத்தி முடிவு செய்தார்.
கோமதியம்பிகையின் திருவருளைப் பெற்ற புளியங்குடி முத்துவீரப்பக் கவிராயரிடம் அச்சருக்கங்களை எழுதச் செய்து தலபுராணத்தை பூர்த்தி செய்தார். அதன் பயனாக, நமக்கு கோயில் தல புராணம் கிடைத்தது. இதனை அன்பர்கள் தன் சுயமுயற்சியில் அச்சிட்டுவெளியீடு செய்துள்ளனர்.
முத்துவீரப்பக் கவிராயர், கோமதியம்பிகை மீது பிள்ளைத்தமிழ் ஒன்றும் இயற்றியுள்ளார். இதைப் படிப்பவர்களுக்கு சைவத்தமிழ், இலக்கிய பக்தி ரசனையை உண்டு பண்ணும்.
சங்கர நயினார் கோயில் தல புராணம், கோமதியம்பிகை பிள்ளைத்தமிழ் என்ற இருநூற்களுக்கும் வயலி அம்பிகைதாசன் என்பவர் எளியவுரை எழுதி இருப்பது குறிப்பிடத்தக்கது.
காவடிச்சிந்து புகழ் சென்னிகுளம் அண்ணாமலைக் கவிராயர் கோமதியம்பிகை மீது திரிபந்தாதியில் இயற்றிய நூல் ஒன்று 45 பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளது. இந்நூலுக்கு இவ்வூரைச் சார்ந்த தலைமையாசிரியர் கி. சுப்பையா அவர்கள் மிகவும் அழகிய முறையில் செம்பாகமாக உரை எழுதியுள்ளார்கள். மேலும் அப்பாடல்களை ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடி புதியம்புத்தூரைச் சார்ந்த திருவண்ணநாதக் கவிராயர் கோமதியம்பிகையின் மீது கலித்துறையில் அந்தாதி ஒன்றை இயற்றியுள்ளனர்.
திருக்கமலப் புலவர் என்பவர் ‘சங்கரநாராயணர் கோயில் கோமதியம்பிகை சதகம்’ என்னும் நுாறு பாடல்களை கொண்ட நூல் சங்கரனாரின் பெருமைகளை பறை சாற்றுகிறது.
திருநெல்வேலி, தச்சநல்லுாரை சார்ந்த அழகிய சொக்கநாத பிள்ளை இயற்றிய ‘சங்கர சதாசிவமாலை’யை தவசு மண்டபத்திற்குச் செல்லும் அம்பிகையின் தங்கச் சப்பரத்திற்கு பின்னே இவ்வூர் அன்பர்கள் இன்றும் பக்திப் பெருக்கோடு பாடி வருகின்றனர்.
‘சங்கரலிங்க உலா’ என்னும் நூலை எழுதிய ஆசிரியரின் பெயர் கிடைக்கப்பெறவில்லை. சிவபக்தரான இவர் இந்நூலில், இக்கோயிலுக்கு வடமலையப்ப பிள்ளை, ஊற்றுமலை மன்னர்கள் செய்த திருப்பணி பற்றிய செய்திகள் பல உள்ளன.
இவ்வூரில் வாழ்ந்த பேட்டை ஆ. ஈஸ்வரமூர்த்திப் பிள்ளை பாடிய ‘சதரத்ன மாலை’ 100 பாடல்கள் யாவும் கோமதியம்பிகையின் அற்புதங்களைப் பேசுகின்றன.
சங்கர கோமதியை தரிசித்த மகாகவி சுப்பிரமணிய பாரதியார் இயற்றிய பாடல்கள் முழுமையாக கிடைக்கவில்லை.
துர்கைச் சித்தர் பாடியருளிய ‘கோமதி பஞ்சகம்’ அம்பிகையின் சன்னிதியில் பாடி மகிழத்தக்கது.

திருக்கோயில் விழாக்கள்:
சித்திரை பெருந்திருவிழா, ஆடிதவசு திருவிழா, ஐப்பசி திருக்கல்யாணம், மார்கழி திருவாதிரை போன்ற விழாக்களில் கொடியேற்றி, சுவாமி அம்பாள் ராஜவீதியில் உலா வலம் வரும்.
வைகாசி வசந்தோற்சவம், புரட்டாசி நவராத்திரி போன்ற வைபவங்கள் யாவும் கோயில் உள் வீதிகளுக்குள் சுவாமி அம்பாள் வீதிவலம் வருவர்.
சிவன் கோயில்களில் ஐப்பசி பௌர்ணமி அன்று அன்னாபிஷேகம் நடைபெறும். ஆனால் இங்கு மட்டும், சித்திரை, ஐப்பசி மாதப்பிறப்பன்று அன்னாபிஷேகம் செய்கின்றனர். தமிழ் வருடத்தின் தொடக்கம் என்பதால், புதிய வருடத்தில் உணவிற்கு பஞ்சமில்லாத நிலை வேண்டும் என்பதற்காக சித்திரையிலும், ஐப்பசி புண்ணிய காலத் தொடக்கம் என்பதால் அம்மாதத்தின் முதல் நாளிலும் இந்த அன்னாபிஷேகம் நடைபெறுகிறது.
ஐப்பசி கந்தசஷ்டியில் ஆறு நாட்களும் உச்சிக்காலத்தில் முருகப்பெருமானுக்கு நடக்கும் சண்முகார்ச்சனை சிறப்புடையது. ஏழாவது நாள் வள்ளி தெய்வானையம்மையுடன் திருக்கல்யாணம் நடைபெறும்.
பெருமாள் கோயில்களில் மார்கழி வைகுண்ட ஏகாதசி வைபவம் நடப்பதுபோல, இங்கும் வடக்கு பிரகார வாசலில் சொர்க்கவாசல் திறப்பு நடைபெறுகிறது.
தை மாதம் மாதாந்திர வெள்ளியன்று தெப்ப உற்சவம் 3 நாள் வைபவமாக நடைபெறும்
உத்தராயண, தட்சிணாயண காலங்களில் ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 21, 22, 23, செப்டம்பர் 21, 22, 23 ஆகிய நாட்களில் சங்கரலிங்க சுவாமியின் மீது சூரிய பகவான் தன் கதிர்களைப் பரப்பி வழிபடுவதை நாம் தரிசிக்கலாம்.
வேண்டுதல்களும் நம்பிக்கைகளும்:
கோமதியம்பிகை சன்னிதியில் இங்கு செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் அதிக அளவில் கூடி மாவிளக்கு எடுப்பர். இந்த மாவிளக்கு வழிபாடு செய்வதற்காக, முறைப்படி விரதம் இருந்து பச்சை அரிசி அல்லது திணையை இடித்து மாவாக்கி அதனுடன் வெல்லம் கலந்து மாவிளக்கு தயார் செய்வர்.
வீடுகளில் பூச்சி, பல்லி, பாம்புத் தொல்லை இருந்தால், சங்கரலிங்க சுவாமிக்கு வேண்டிக் கொண்டு, அதன் உருவங்களை வாங்கி காணிக்கையாக அளித்தால் தொல்லை நீங்கும் என்பது இப்பகுதி மக்களின் நீண்டகால நம்பிக்கை.
நடை திறக்கும் நேரம்: அதிகாலை 5.00 மணி – 12.30 மணி, மாலை 4.00 மணி – இரவு 9.00 மணி வரை.
$$$