கோமதி அந்தாதி உரை விளக்கம்: நூல் அறிமுகம்

-கருவாபுரிச் சிறுவன் 

தொல்லை இரும்பிறவி அல்லல் அறுத்திட
எல்லை யிலாயருட் கோமதி அன்னையாள் 
மன்னும் மதில் சூழ் திருக்கோயில் சென்றோது
கோமதி அந்தாதிப் பா. 

    -உரையாசிரியர் 

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் வட்டத்திற்கு உட்பட்ட  கரிவலம் வந்த நல்லுார் அருகே உள்ள சென்னிகுளத்தைச் சார்ந்த அண்ணாமலைக் கவிராயர்  ‘சிந்து கவிப்பேரரசு’ என்று சைவத்தமிழ் இலக்கிய உலகில் போற்றப்படக் கூடியவர்.

திருநெல்வேலி மாவட்டம், ஊற்றுமலை ஜமின்தார் அவையில் ஆஸ்தானப் புலவராக பணியாற்றிய இவர், கழுகுமலை முருகன் பெருமான் மீது காவடிச்சிந்தும், சங்கரன் கோயில் கோமதியம்பிகை மீது கோமதியந்தாதியும், ஊற்றுமலை நவநீதகிருஷ்ண சுவாமி மீது  வீரையந்தாதி, வெண்பா மற்றும் பல தனிப்பாடல்களும் சீட்டுக்கவிகளும்  பாடியுள்ளார். இந்நூற்களுக்கு கற்றறிந்த அறிவார்ந்த பெருமக்கள் பலரும் பதிப்பித்து, உரையாக்கம் செய்து தமிழ் இலக்கிய உலகிற்கு வழங்கியுள்ளார்கள்.  சங்கரன்கோவில் தலைமையாசிரியர் கி. சுப்பையா  அவர்கள் கோமதியந்தாதி நூலுக்குச் செய்த உரை அவற்றில் இருந்து தனித்துவமானது. அதிலுள்ள சிறப்புகள் சில…

சங்கரன்கோவில் சைவசித்தாந்த பேரவை ஆசிரியர் த. வேல்மணி அவர்கள் வழங்கிய அணிந்துரை நூலிற்கு பெருமை சேர்க்கிறது, சிந்திக்கத்தக்கது.

முன்னவர்கள் உரையில் இருந்து மாறுபட்டுள்ளேன் என்ற உரையாசிரியரின் துணிபு அடியேனைப் போன்ற அன்பர்களுக்குப் படிப்பினை. 

முதலில் செய்யுள், சொற்பிரிப்பு, சொற்றொடற்பொருள், செய்யுளுக்குரிய பொருள், கருத்து, குறிப்பு என ஏழு பிரிவுகளாக ஒரு செய்யுளை இப்படியும் புரியும்படியாகச் செய்யலாம் என்கிறது அவரது புதுமை நோக்கு தமிழ் இலக்கிய உலகிற்கு கலங்கரை விளக்கு.  

கோமதியந்தாதி ஆசிரியர் அண்ணாமலைக் கவிராயரின் வரலாற்றை,  உரையாசிரியர் முதன்முதலாக மரபுக் கவிதை வடிவில் பாடி அவரது புகழுக்கு  மேலும், ஒரு மகுடத்தைச் சூட்டியுள்ளார் என்றால் அது மிகையல்ல.

புராணங்கள் எல்லாம் புரட்டு என்று சொல்லுவார்க்கு மத்தியில் அவர்களுக்குப் புரியும் படியாக, கோமதியந்தாதியில் இடம் பெற்ற புராணச்செய்திகளைத் தொகுத்து பதித்தமை போற்றலுக்குரியது. 

கோமதி அந்தாதி செய்யுள்களை ஆங்கில மொழியாக்கம் செய்து ஏற்றம் பெறச் செய்திருப்பது, வெளிநாட்டில் வாழும் கோமதியம்பிகை பக்தர்களுக்கு ஒரு அரிய வரப்பிரசாதம். 

நிறைவாக, உரையாசிரியரின் வாழ்க்கைக் குறிப்பு இடம் பெற்றிருப்பது கூடுதல் செய்தி. 

செய்யுள் முதற்குறிப்பகராதி கொடுத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். பரவாயில்லை. 

அனைவரும் ஆசிரியராகத் திகழலாம். ஆனால், நல்லாசிரியராகத் திகழ வேண்டும் என விரும்புவர்கள், கோமதி அந்தாதி உரையாசிரியரிடம் வந்து சிரத்தையோடு  பாடம் பயில வேண்டும் . 

அழகிய முறையிலும் மிகவும் உயர்தரமான தாளிலும் அச்சிட்டு, விலை ரூ. 100க்கு வழங்குவது அவர்களது பெருந்தன்மைக்கு சான்று. 

இந்நூலை வாங்கிப் பயிலும் அன்பர்களுக்கு நன்னூலார் காட்டும் ஆசிரியரின் மாண்பு கண்முன்னே நிழலாடும். என்பதை நினைவூட்டி மகிழ்கிறோம். ஆய்வு செய்யும் பேராசிரியர்கள், ஆய்வு மாணவர்கள், இசை ஆர்வலர்கள் கரங்களில் தவழ வேண்டிய நூல் இது.   

கோமதி அம்பிகை அந்தாதி பாடலுக்கு
தாமதி யாதுபுத் துரை செய்தான் 
சங்கர னருள்பெற்ற சுப்பையா புகழ் 
மங்காது இப்பாரில் நிற்கும் நிசம்.

நூல் விபரம்:

கோமதி அந்தாதி – உரையும் விளக்கமும்
ஆசிரியர்: சென்னிகுளம் அண்ணாமலைக் கவிராயர்
உரையாசிரியர்: கி.சுப்பையா
வெளியீடு: இறை திருமகள் நிலையம். சங்கரன் கோவில். 
பக்கம் 176; விலை: ரூ. 100- 
தொடர்புக்கு: 94435 07702, 72008 18278

$$$

Leave a comment