நேர்காணல்: வில்லியம் டால்ரிம்பிள்
தமிழில்: திருநின்றவூர் ரவிகுமார்
‘பட்டுப் பாதை’ என்று பள்ளி பாடநூல்களில் படித்திருக்கிறோம். அது சீனா உலகத்துடன் வர்த்தகம் செய்ய ஏற்படுத்திய தரைவழிப் பாதை என்று கூறப்படுகிறது. இது ஒரு பொய் என்கிறார் வில்லியம் டால்ரிம்பிள். இவர் பிரிட்டிஷ் வரலாற்றாளர். பல நூல்களை எழுதி உள்ளார். பட்டுப்பாதை என்ற பொய்க்கு மாறாக இந்தியாவின் கடல்வழி உலக வர்த்தகப் பாதை ஒன்று இருந்தது. ‘தங்கத் தடம்’ என்று அதற்குப் பெயரிட்டுள்ளார் வில்லியம் டால்ரிம்பிள். இந்த உண்மைக்கு (இந்தியாவின் கடல்வழிப் பாதைக்கு) ஆதாரங்கள் உலகமெங்கும் கிடைத்து வருகின்றன. அதைப்பற்றிப் பேசுகிறது இவரது அண்மை (செப்டம்பர் 2024-இல் வெளிவந்த) நூலான ‘தங்கத்தடம்’ (Golden Road) . அதை ஒட்டி அவரது நேர்காணல் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் (நேர்காணல்: தேவ்யானி ஒனியல்) வெளிவந்தது. அதன் தமிழாக்கம் இது.

கேள்வி: அண்மையில் வெளிவந்த ‘தங்கத் தடம்: பண்டைய இந்தியா உலகை மாற்றிய விதம்’ (The Golden Road : How Ancient India Transformed the World) என்ற உங்கள் நூலின் சாராம்சமாக இருப்பது கடல்வழி பயணப் பாதை. அதைப் பற்றி சொல்லுங்களேன்?
பதில்: தங்கத் தடம் என்பது நான் இட்ட பெயர். சாதனையென பெருமையாக முன்னிறுத்தப்படும் பட்டுப்பாதையை (Silk Road) விட மிக முக்கியமானதாக இதை நான் கருதுகிறேன்.
பட்டுப்பாதை என்ற சொல்லாடல் பண்டைய காலத்திலோ அல்லது வரலாற்றின் இடைக்காலத்திலும் இருந்ததில்லை என்பதை பலரும் அறிந்திருக்க மாட்டார்கள். இந்தச் சொல்லாடல் முதன்முதலில் 1877இல் பரோன் வான் ரிச்தோபென் (Ferdinand Von Richthofen – 5 மே 1833 – 6 அக்டோபர் 1905) என்பவர் எழுதிய நூலில் பயன்படுத்தப்பட்டது.

இடுப்பு ஒட்டியாணம் போல ஆசியாவின் இந்தக் கடலில் இருந்து மறுபுறம் உள்ள கடற்கரை வரை தரைவழிப்பாதை இருந்தது என்ற கருத்தே பொய்யானது. அது மட்டுமன்றி, உண்மையில் இருந்த ஒரு பிரதானமான வழித்தடத்தை இருட்டடிப்பு செய்வதாக உள்ளது இது.
உண்மையில் இருந்த வழித்தடத்திற்கான சான்றுகள் கடந்த இருபது ஆண்டு காலமாக வெளிப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. எகிப்தின் செங்கடல் ஓரமாக உள்ள பெரெனிக் நகரம் முதலில் கேரளத்தில் (மலபார்) உள்ள முசிறி பட்டினம் என்ற கடற்கரை நகரம் வரையில் நடத்தப்பட்ட பல அகழ்வாராய்ச்சிகளின் வழியே இந்த உண்மை வெளிப்பட்டு வருகிறது.
எனவே, பட்டுப்பாதைக்கு என்னுடைய பதில் தங்கத் தடம். பட்டுப்பாதை என்று இட்டுக் கட்டப்பட்ட வார்த்தைக்கு பதிலடியாக உருவாக்கப்பட்டதே தங்கத் தடம். ஆனால், இது உண்மையில் இருந்தது என்பது அகழ்வாராய்ச்சிகள் மூலமாகவும் பொருளியல் வரலாறு மூலமாகவும் உறுதியாக தெரிகிறது.
பண்டைய காலத்தில் வர்த்தகம் செய்ய இந்தியாவுக்கு சாதகமான புவியியல் அமைப்பும் வானிலையும் இருந்தது என்பதை நாம் வசதியாக மறந்து விடுகிறோம். சீனர்கள் பட்டுப்பாதை என்ற கருத்தை சிறப்பாக முன்னிறுத்தி, அதன் அடிப்படையில் இப்போது ‘பெல்ட் அண்ட் ரோடு’ திட்டத்தை முன்னெடுத்து வருகிறார்கள்.
கேள்வி: சீனர்கள் தங்கள் கதையை சிறப்பாகச் சொல்வதாக நீங்கள் நினைக்கிறீர்கள்? இந்தியா தன்னுடைய கதையை சொல்லாமல் தடுத்தது எது?
பதில்: இரண்டு விஷயங்களை அவர்கள் (சீனர்கள்) செய்தார்கள். அவர்களது வரலாற்றுக் கதையை வெகு ஜனங்கள் இடையே சுலபமாகக் கிடைக்கும்படி பரப்பினார்கள். கற்பனையும் சாகசமும் மிகுந்த அந்த கதையை இயல்பாகவே மக்களை கவர்ந்தது.
ஆனால் அவர்கள் அதைப் பயன்படுத்தியதுதான் வெகு சாமர்த்தியமானது. 18 மற்றும் 19ஆம் நூற்றாண்டில் படை பலத்தினால் விரிவடைந்த ஐரோப்பியத்திற்கு மாறாக அமைதியான வர்த்தகம் மூலம் தாங்கள் வளர்ந்ததாக சித்தரித்தார்கள். அதேபோல்தான் என்று, இப்பொழுது, பெல்ட் அண்ட் ரோடு திட்டத்தை முன் வைக்கிறார்கள்.
ஏற்கனவே ‘பருத்திப் பாதை’ என்றும், ‘நறுமண வழித்தடம்’ என்றும், அண்மையில் ஜி20 கூட்டமைப்பில் ‘இந்தியா – மத்திய கிழக்கு – ஐரோப்பிய பொருளாதாரம் கூட்டமைப்பு பெருவழி’ என்றும் பல பல முன்னெடுப்புகள் பற்றி பேசப்பட்டன. எல்லாம் காசா மோதலில் அமுங்கி விட்டன.
இந்தியா இந்த விஷயங்களில் மெத்தனமாக இருப்பது ஏன்? இந்தக் கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை. நீங்கள் அரசிடம்தான் கேட்க வேண்டும்.
கேள்வி: இந்தியா தன்னுடைய கதையை முனைப்புடன் உலகத்தின் முன் வைக்கவில்லை என்கிறீர்கள். ஆனால், இந்தியர்கள் தங்களுக்குள் இந்தக் கதையை மிகவும் உற்சாகத்துடன் பேசிக் கொண்டிருக்கிறார்கள், குறிப்பாக வாட்ஸ்ஆப் மூலமாக. இதுபற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? விமானங்கள், முக அழகு சிகிச்சை, ஏவுகணைகள், ட்ரோன்கள் எல்லாம் அந்தக் காலத்தில் இருந்ததாக புராணங்களில் சொல்லப்பட்டிருக்கிறது என்று கூறுகிறார்கள். இது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
பதில்: என்னுடைய அச்சமே, ஐம்பதுகளில் தொடங்கி அண்மைக் காலம் வரை மிக நீண்ட காலமாக கல்வியியலாளர்கள் தங்களுக்குள் மட்டுமே பேசிக் கொண்டு இருப்பதும், உள்ளூர் மொழியில் மிகவும் சிக்கலான நடையில் பேசிக் கொண்டிருப்பதும் தான்.
இதன் விளைவாக, ‘வாட்ஸ்ஆப் வரலாறு’களும் ‘வாட்ஸ்ஆப் பல்கலைக்கழக’ங்களும் பெருகிவிட்டன. இது கல்வியியலாளர்களின் தோல்வி. அவர்கள் வெகு ஜனங்களிடையே சென்றடையவில்லை.
இது இப்போது மாறத் தொடங்கி இருக்கிறது. ஆனால் நாற்பது ஆண்டுகால இடைவெளி ‘வாட்ஸ்ஆப் வரலாறு’ வளர வழிவகுத்து விட்டது. அழகு சிகிச்சை, மகாபாரதத்தில் அணுகுண்டு, ராமாயணத்தில் ஹெலிகாப்டர் அல்லது விமானம், இன்னும் இது போன்ற பல விஷயங்கள் வளமாக வளர வழி வகுத்தது.
இதெல்லாம் இந்த நாட்டு மக்களிடம் நிலவும் அதிருப்தி அல்லது விரக்தியின் வெளிப்பாடு. இங்கு மிக உயர்ந்த நாகரிகம் இருந்தது என்பதை அனைவரும் அறிவார்கள். ஆனால் அது பற்றிய விவரங்கள் புகைமூட்டமாக மறைந்து உள்ளன. ஏனெனில் யாரும் இதைப்பற்றி தெளிவாக விவரங்களுடன் எழுதவில்லை.
இந்தியா உலகிற்கு அளித்தது என்ன? இந்தியாவில் இருந்து வெளிப்பட்டு உலக நாடுகளின் மீது தாக்கத்தை ஏற்படுத்தியது என்ன? எது? என்னுடைய இந்த நூல் மிகுந்த ஆய்வுக்குப் பிறகு அந்த கேள்விக்கு பதில் அளிக்க முனைகிறது.

கேள்வி: அறிஞர்களின் ஆழமான அமைதியை பற்றி சொன்னீர்கள். தங்கத் தடத்தில் நீங்கள் வெளிப்படுத்தி உள்ளவை திட்டமிட்டு மறைக்கப்பட்டன என்று சொல்கிறீர்களா?
பதில்: இல்லை. அது என் நோக்கமும் அல்ல. இவை வெவ்வேறு சிந்தனைப் பள்ளிகளிடமிருந்து கற்றவை. இதுவரை ஒற்றைக் கதையாடலாக தொகுக்கப் படவில்லை. இங்கு அறிவார்ந்த ஆய்வுகள் பல மேற்கொள்ளப்பட்டுள்ளன. இங்கு, குறிப்பாக தில்லியில், பல அறிஞர்கள் சிறப்பாகப் பணியாற்றி சீரிய விஷயங்களை வெளிக்கொணந்துள்ளனர். ஆனால் மிக நீண்ட காலமாக இது போன்ற விஷயங்கள் இங்கு நடக்கவில்லை என்று நான் கருதுகிறேன்.
கேள்வி: இந்த நூலின் மையக் கருத்தை சார்ந்து, நீங்கள் ஹிந்துத்துவக் கருத்துகளை முன்னெடுப்பதாக குற்றச்சாட்டு நிச்சயம் எழுந்திருக்கும். இதை எழுதிய போது உங்களின் நோக்கம் என்னவாக இருந்தது?
பதில்: இந்த நாட்டில் ஒரு வினோதமான கருத்து நிலவுகிறது. மொகலாயர்களின் வரலாற்றை எழுதினால் மார்க்சிஸ்ட். பண்டைய இந்தியாவைப் பற்றி எழுதினால் அவர் ஆர்எஸ்எஸ் என்கிறார்கள். நான் இரண்டும் அல்ல.
மார்க்சிஸ்ட்டாக இல்லாமலேயே நீங்கள் மொகலாயர்கள் பற்றி எழுதக் கூடும். அதேபோல் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினராக இல்லாமலேயே நீங்கள் பண்டைய இந்தியா பற்றி பேசவும் எழுதவும் முடியும். இரண்டைப் பற்றியும் வெளியில் இருந்து பார்ப்பவராக, தரவுகளைக் கொண்டு மட்டுமே அணுகுபவராக இருக்க முடியும்.
இது இந்தியாவின் வரலாற்றைப் பற்றிய நூல் அல்ல. இந்தியாவிலிருந்து வெளிப்பட்ட இந்தியக் கருத்துக்களைப் பற்றியது.
ஆரம்ப காலத்தில் இந்தியாவிலிருந்து வெளிப்பட்ட வெற்றிகரமான இந்தியக் கருத்துகள் புத்த சமயக் கருத்துக்கள் என்பது அனைவரும் அறிந்த விஷயம். அது சைபீரியா, மங்கோலியா வரையில் சென்றது. அதற்கு இடைப்பட்ட நாடுகளில் பரவியது. இந்த நூலில் மூன்றில் ஒரு பகுதி புத்த மதம் பற்றியது.
தென்கிழக்கு ஆசியாவில் பரவிய சமஸ்கிருத, ஹிந்து பண்பாட்டைப் பற்றிய அற்புதமான கதையாடல் இந்த நூலில் உள்ளது. இங்குள்ள வலதுசாரிகளுக்கு உவப்பாக இருக்கிறது என்ற காரணத்தினாலேயே இவ்விஷயங்களைப் பற்றி நாம் அவமானப்படவோ, ஆச்சரியப்படவோ அல்லது கமுக்கமாக கடந்து செல்லவோ வேண்டியதில்லை.
கேள்வி: கருத்தியல் பரிமாற்றம் பற்றி, குறிப்பாக புத்த மடங்கள் சார்ந்த பல்கலைக்கழகங்கள், சீனா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளைச் சேர்ந்த பயணியர்கள் மூலம் நடந்த வளமான கருத்துப் பரிமாற்றங்கள் பற்றி நீங்கள் வெளிச்சம் பாய்ச்சி இருக்கிறீர்கள். துரதிஷ்டவசமாக, விஜயநகர ஹிந்து அரசுகள் மூலம் உலக அரங்கில் ஏற்பட்ட வீச்சு பற்றிப் பேசும்போது புத்த சமயம் ஏற்படுத்திய தாக்கங்கள் கீழ் அழுத்தப் பட்டன. சீனா இந்த கலாச்சார கருவியை தங்களுடைய ராஜதந்திர ஆயுதமாக பயன்படுத்துகிறது. இந்த கலாச்சார அபகரிப்பை எப்படி தடுப்பது?
பதில்: புத்த வரலாறும் ஹிந்து வரலாறும் ஒன்றுதான் என்று வலதுசாரிகள் கருதுவது தான் பிரச்னை. இருந்தாலும், இந்த வரலாற்றில் புத்தம் மிக மிக முக்கியமான பங்கு வகிக்கிறது.
இந்த மாதம் (அக்டோபர்) லண்டனில் பட்டுப்பாதை பற்றி இரண்டு பெரிய காட்சிகள் நடத்தப்பட்டன. ஒன்று பிரிட்டிஷ் நூலகத்தில் நடந்தது. டங்பூவாங் பற்றிய ‘பட்டுப்பாதையில் பசுஞ்சோலை’ என்ற தலைப்பில் நடந்தது. மற்றொரு நிகழ்வு பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் ‘பட்டுப்பாதைகள்’ என்ற தலைப்பில் நடந்தது.
இரண்டும் மிக நன்றாக இருந்தன. ஆனால் அவை இரண்டிலும் இந்தியா முற்றிலுமாகத் தவிர்க்கப்பட்டிருந்தது. இது மேற்கத்திய அறிஞர்களின் தவறு என்று நான் எப்பொழுதும் கருதி வருகிறேன். இருந்தாலும், அந்தக் கதையாடல் இங்கிருந்து முன்னெடுக்கப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.
என்றாலும், இன்றும் நீங்கள் புத்த கயாவுக்குப் போனால் அங்கு சீன துறவியான யுவாங்ஜாங்- கின் அற்புதமான சிலையைக் காணலாம். இந்திய – சீன நட்புறவு அங்கு நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இப்பொழுது இரண்டு பக்கங்களில் இருந்தும் பெரிய அளவில் சமரச பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. இந்தச் சூழலில் இது பற்றி இரண்டு நாடுகளும் உணர்வுபூர்வமாக பேசலாம்.
கேள்வி: இந்த நூலை எழுதுவதில் உங்களுக்கு என்னென்ன சவால்கள் ஏற்பட்டன? உங்களுடைய இதர நூல்களில் உள்ள மனிதக் கதைகள் இதில் இல்லாமல் இருப்பது பற்றி என்ன சொல்கிறீர்கள்?
பதில்: பதினெட்டாம் நூற்றாண்டை ஆய்வு செய்கின்ற வரலாற்றாளர்களுக்கு ஏராளமான சான்றுகள், ஆவணங்கள், ஆதாரங்கள் என திகட்டத் திகட்ட கிடைக்கின்றன. அகழ்வாராய்ச்சி சான்றுகள், கல்வெட்டு சான்றுகள், ஓவிய சிற்ப சான்றுகளென கலைச் சான்றுகளும் ஏராளமாக உள்ளன. அவற்றைக் கற்பது மிகவும் மகிழ்ச்சி தரும் விஷயமாகும். இவற்றோடு ஒப்பிடும்போது சரித சான்றுகள் (தனிமனித வரலாறுகள்) வெகு குறைவுதான்.
சரித சான்றுகள் வறண்ட பாலைவனமாக இருந்தாலும் சில மனித பாத்திரங்கள் பற்றி சிறப்பான பதிவுகள், அவர்களின் ஆளுமை விவரங்கள் இதில் உள்ளன. மொத்தத்தில் சுவாரஸ்யமாகப் படிக்க போதுமான அளவுக்கு மனித ஆளுமை பற்றிய தகவல்கள் இதில் இணைத்துள்ளதாகவே நான் கருதுகிறேன்.
கேள்வி: இங்கு கடல் கடந்து செல்வதும் கடற் பயணங்களும் தாழ்வாக,கீழானதாகக் கருதப்பட்டன. புத்த மதம் இங்கிருந்து ஏற்றுமதியானதற்கு இதுவும் ஒரு காரணமா?
பதில்: இதுபற்றி அறிஞர்களிடையே பெரிய விவாதம் நடந்து வருகிறது. கடற் பயணங்களை மேற்கொள்ளக் கூடாதென புத்த சமயத்தினர் தடை விதிக்கவில்லை என்பது உண்மைதான். ஆனால் அப்போதும் அதற்கு முன்பும் ஹிந்து வணிகர்கள் கடல் கடந்து சென்றுள்ளனர். கம்போடியாவின் மையப் பகுதியில் உள்ள மீகாங்கிற்கு நீங்கள் சென்றால் அன்னியமாக உணர மாட்டீர்கள். பரந்த இந்தியாவின் ஒரு பகுதியில் இருப்பதாகவே உங்களுக்கு தோன்றும்.
பல்வேறு புராணங்களிலும் மனு ஸ்மிருதி நூலிலும் கடல் கடந்து செல்ல தடை இருப்பதைக் காணலாம். ஆனால் ஏராளமானோர் அப்பொழுதும் கடல் கடந்து இப்புறமும் அப்புறமும் போய் வந்து கொண்டிருந்தனர்.
கேள்வி: காசா மோதல் பற்றி நீங்கள் கடந்த ஆண்டு நிறைய பேசியுள்ளீர்கள். இதுபோன்ற நேரத்தில் பேச வேண்டிய கடமை வரலாற்றாளர்களுக்கு இருக்கிறது என்று நினைக்கிறீர்களா?
பதில்: ‘புனித மலையில் இருந்து’ என்பது என்னுடைய நூல்களில் ஒன்று. இதை எழுத நான் ஐந்தாண்டு காலம் மத்திய கிழக்கு பகுதியில் செலவிட்டேன். குறிப்பாக மத்திய கிழக்கில் உள்ள கிறிஸ்தவ சமூகங்கள் இடையே. பாலஸ்தீனிய கிறிஸ்துவ சமுதாயமும் அதில் அடங்கும்.
பாலஸ்தீனியர்கள் யார்? அந்த பகுதியின் வரலாறு என்ன? இருபதாம் நூற்றாண்டுக்கு முன்பு அந்தப் பகுதி எப்படி இருந்தது? இது பற்றி எல்லாம் இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் பெருத்த அறியாமை நிலவுகிறது என்பதை நான் உறுதியாக சொல்வேன்.
நீங்கள் கேட்டது சரிதான், மறந்து போன அந்த உண்மையை வெளிக்கொணர வேண்டிய பொறுப்பு எனக்கு இருப்பதாக நினைக்கிறேன். அதற்காக முயற்சிக்கிறேன்.
கேள்வி: கல்வித் துறைக்கு வெளியே உள்ள வரலாற்றிலிருந்து அல்லது வெகுஜன வரலாற்றில் இருந்து இந்தியர்களாகிய எங்களுக்கு ஒரு புரிதல் உண்டாகி இருக்கிறது. எதைப் படிக்க வேண்டும், எது பற்றி ஆய்வு செய்ய வேண்டும் என்பதையெல்லாம் அரசே முடிவு செய்கிறது. வரலாற்றைக் கற்பது பற்றி அரசும் அதன் கொள்கை முடிவுகளுமே தீர்மானிப்பது ஒரு பிரச்னை என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
பதில்: இது தவிர்க்க முடியாதது என்றே நினைக்கிறேன். பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தை தீர்மானிக்காத அரசு என்பது உலகில் எங்குமே இல்லை.
நீங்கள் முரண்பட்ட வரலாற்றைக் கொண்ட இடங்களை, காசா, இஸ்ரேல் – பாலஸ்தீனம், இலங்கை, இந்தியா போன்ற போட்டியிடும் வரலாற்றைக் கொண்ட பகுதிகளை பார்க்கலாம்.
இஸ்ரேலில் உள்ள பள்ளி பாடத்திட்டம் மேற்குக்கரை பகுதியில் உள்ள பாடத் திட்டத்திலிருந்து வேறுபட்டு இருப்பதைக் காணலாம். இரண்டுமே பக்கச்சாய்வு கொண்டவை. இந்தியப் பள்ளிகளில் சொல்லிக் கொடுக்கப் படுபவையும் பாகிஸ்தான் பள்ளிகளில் சொல்லிக் கொடுக்கப் படுபவையும் வெவ்வேறாக இருக்கும்.
எல்லா அரசுகளும் கல்வித் திட்டத்தைத் தீர்மானிக்கின்றன. உண்மையைச் சொல்வதென்றால், இதற்கு மாற்று என்ன என்பது எனக்குத் தெரியாது.
கேள்வி: நான் கல்வித் திட்டத்தைப் பற்றி மட்டுமே சொல்வதாக நினைக்க வேண்டாம். எல்லாவிதமான ஆய்வுகளையும் கூட அரசே தீர்மானிக்கிறது. அரசு நிதியுதவியுடன் நடத்தப்படுவது இந்திய தொல்லியல் துறை. அது நன்றாக பணி செய்கிறது. ஆனால் அதன் பணிகளுக்கு அரசியல் தலைமையிடம் இருந்து அனுமதி பெற்றாக வேண்டும். எங்களுடைய பல்கலைக்கழகங்களுக்கு நூல் ஆய்வு செய்யவே பணமில்லை. தொல்லியல் துறை போன்ற ஆய்வுகளை செய்ய நிதி வசதி இல்லை அல்லது அவ்வாறான ஆய்வுகளை மேற்கொள்ள ஆர்வம் இல்லை.
பதில்: தொல்லியல் துறைக்கு மிகக் குறைவாகவே நிதி ஒதுக்கீடு செய்யப்படுவது குற்றமென்றே நான் உறுதியாக சொல்வேன்.
இந்த கோடைக்காலத்தில் கிழக்கு துருக்கி பகுதியில் நீண்ட பயணம் மேற்கொண்டேன். அங்குள்ள விடுதிகள் இந்தியாவுடன் ஒப்பிடுகையில் இருபது- முப்பது ஆண்டுகள் பின்னால் உள்ளன. ஆனால் அங்குள்ள அருங்காட்சியகங்கள் இந்தியாவை விட இருபது முப்பதாண்டுகள் முன்னேறியுள்ளன.
இந்தியா தன் கடந்த காலத்தை வெளிக்கொணர மேலும் முதலீடு செய்ய வேண்டும் என்றே நான் நினைக்கிறேன். குறைந்தபட்சம், சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் காரணத்திற்காகவாவது.
கேள்வி: தென்கிழக்கு ஆசிய நாட்டு வரலாற்றாளர்கள் கலாச்சாரப் பரிவர்த்தனை எப்படி பார்க்கிறார்கள்? நீங்கள் அறிவுக் களத்தில் பரிவர்த்தனை பற்றி நிறையப் பேசினீர்கள். ஆனால் சமுதாயத்தில் ஜாதி முறைமை, குற்றம் இழைக்கும் பண்பு ஆகியவை எல்லாம் இருக்கின்றன. தென்கிழக்கில் இது போன்ற விஷயங்கள் உள்ளனவா?
பதில்: முப்பது நாற்பதுகளில் ஆர்.சி.மஜும்தார் போன்ற தேசிய சிந்தனை கொண்ட வரலாற்றாளர்கள் அதிக எழுச்சியுடன் வந்தனர். அவர்கள் தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் இந்தியாவுக்கு இருந்த தொடர்பை ‘ஹிந்து குடியேற்றங்களாக’ சித்தரித்தனர். உயர்ந்த இந்திய நாகரிகம் எப்படி தாழ்வான தென்கிழக்கு ஆசிய நாடுகளை வாள்முனையில் வென்றது என்பது பற்றி நிறைய எழுதப்பட்டன.
இது தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒரு எதிர்ப்பலையை உருவாக்கியது என்பது புரிந்துகொள்ளத் தக்கதே. எனவே தென்கிழக்கு ஆசிய நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் இந்தியா, இந்திய மயமாதல் என்பது வெறுப்பூட்டும் சொல்லாகிவிட்டது. இதை தவறான புரிதல் என்று கூற முடியாது. ஏனெனில் அப்படியான வெற்றியை இந்தியா அங்கு நிலை நாட்டியது.
படைபலம் கொண்ட வலுவான, மகத்தான இந்தியா என்ற கருத்து தென்கிழக்கு ஆசியாவில் ஒரு விதமான ஒவ்வாமையுடன் நீண்ட காலம் நிலவியது. அதற்குக் காரணம் முப்பது- நாற்பதுகளில் எழுதப்பட்ட வரலாற்று எழுத்துக்கள். இந்தியாவின் தாக்கம் எவ்வளவு ஆழமாக, எவ்வளவு விரிவாக இருந்தது என்பது பற்றி அங்கு அறிவார்ந்த விவாதங்கள் நடந்துள்ளன.
ஏனெனில், உங்களது இரண்டாவது கேள்வியான தென்கிழக்கு ஆசியாவில் ஹிந்துயிஸம் என்பது முற்றிலும் வேறான கேள்வி. தாகூர் இதைப் பற்றி அழகாகச் சொல்லி உள்ளார். அவர் அங்கோர் நகருக்குச் சென்றார். ‘நான் இங்கு எல்லா இடத்திலும் இந்தியாவைப் பார்க்கிறேன். ஆனால் அவளை (இந்தியாவை) என்னால் அடையாளம் காண முடியவில்லை’ என்றார்.
அதுதான் உங்கள் கேள்விக்கு சரியான பதில். அதுதான் இந்தியா. ஆனால் அது கச்சிதமான இந்தியா அல்ல.
கேள்வி: நீங்கள் வரலாற்றை தெளிவாக விவாதிக்கிறீர்கள். கதையை எப்படி கையாளுகிறீர்கள்?
பதில்: மக்கள் (மக்களைப் பற்றிய விவரங்கள்) இல்லாமலே வரலாற்று நூலை இயற்றுவது இந்தியாவுக்கே உரிய விஷயம். பல்கலைக்கழகங்களில் மார்க்சிய சிந்தனையின் தாக்கத்தால்தான் இப்படி உள்ளது என்று நினைக்கிறேன்.
மார்க்சியப் பார்வை, பொருளியலை மையப்படுத்தி மட்டுமே வரலாற்றில் எல்லா விஷயங்களையும் அணுகுவதாகவும், வரலாற்றை நடத்துகின்ற சமூக சக்திகளை கண்ணுக்குத் தெரியாமல் காணடிப்பதாகவும், ஆளுமை சரிதங்களை முற்றிலும் மறுப்பதாகவும் உள்ளது.
இன்று உங்களை சுற்றி நடப்பதைப் பாருங்கள். உதாரணத்துக்கு இந்த நாட்டுப் பிரதமரையே எடுத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு அவரைப் பிடிக்கலாம், அல்லது பிடிக்காமல் போகலாம். ஆனால் இன்று இந்த தேசம் பயணிக்கின்ற திசையை, விசையை தீர்மானிப்பதில் அவருடைய தாக்கம் இல்லையென யாராலும் சொல்ல முடியாது.
அமித் ஷா, மோடி இணை இந்த நாட்டின் முகத்தையே மாற்றி உள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது. இந்தக் காலகட்டத்தை எழுதும் ஒரு வரலாற்றாளர் இவர்களைத் தவிர்க்க முடியாது. நான் எழுதுவதாக இருந்தால் அதன் மையமாக அவர்கள் இருப்பார்கள்.
ஆனால், தனி ஆளுமைகள் வரலாற்றின் போக்கை மாற்றக்கூடும் என்று எந்த வரலாற்றாளராவது சொன்னால் மார்க்சிய வரலாற்றாளர்கள் அவரை அவமதித்துப் புறந்தள்ளுவார்கள்.
கேள்வி: கிறிஸ்துவம் மேற்கத்திய மதமாகப் பார்க்கப்படுகிறது. ஆனால், புனித தோமையர் இந்தியாவுக்கு வந்துள்ளார். எனவே இதை ஆசிய மதம் என்று கூறலாம் அல்லவா?
பதில்: இப்பொழுது, பெரெனிக் அகழ்வாராய்ச்சியின் விளைவாக, ஹிந்து கடவுள்களை எகிப்தில் வழிபட்டுள்ளார்கள் என்பது சான்றுகளுடன் உறுதிபட்த் தெரிய வருகிறது. அதேபோல எகிப்தில் புத்தர் வழிபடப்பட்டுள்ளார் என்பதும் தெரிய வந்துள்ளது.
எனவே, இந்த காலகட்டத்தில் யூத மதமும் கிறிஸ்தவமும் இதர ரோமானிய இறை வடிவங்களும் இந்திய கரைக்கு வந்திருக்கலாம். அதற்கு வாய்ப்புகள் அதிகம்.
தேவாலயங்களில் எழுதி வைக்கப்பட்டுள்ள விவரங்கள் இப்போது உங்களுக்குக் கிடைக்கின்றன. மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த யூசிபியஸ் என்ற பாதிரியார், இந்திய கிறிஸ்தவர்கள் அலெக்ஸாண்டிரியாவுக்கு வந்தார்கள். தங்களுக்கு விவரம் தெரிந்த பாதிரி தேவையெனவும், கிறிஸ்தவ மதம் தொடர்பான ஆவணங்களையும் புனிதப் பொருள்களைத் தேடியும் அவர்கள் வந்தார்கள் என்றும் எழுதி வைத்துள்ளார். இதிலிருந்து இந்திய கிறிஸ்தவ சமுதாயம் அந்தக் காலத்தில் இருந்ததெனத் தெரிகிறது.
எனவே, மதங்கள் இரண்டு பக்கமும் பயணித்துள்ளன என்பது கேள்விக்கு இடமில்லாதபடி தெரிகிறது. புனித தோமையர் என்று ஒருவர் உண்மையில் இருந்தாரா என்பது நமக்கு தெரியாது. அப்படி இருந்திருந்தால் அவர் கேரளாவுக்குப் போயிருக்கிறார். ஆனால் கிறிஸ்தவம் அவருக்கும் முன்னாலேயே இங்கு வந்து விட்டது. யூத மதமும் அப்படித்தான்.
- நன்றி: தி இந்தியன் எக்ஸ்பிரஸ் (04.11.2024)
$$$