கபட கேஸரி

– திருநின்றவூர் ரவிகுமார்

எந்த வகையிலும் தனக்கு மரணம் நேரக் கூடாதென்று, கடுந்தவமிருந்து கபடமாக வரம் வாங்கிவந்த அசுர வேந்தன் இரணியனை,  அதே கபட வேடம் கொண்டு சம்ஹரித்தார் நரசிம்மர். இதனை வேதாந்த தேசிகரின்  ‘காமாஸிகாஷ்டகம்’ சுலோகங்களைக் கொண்டு இங்கே விவரிக்கிறார் திருநின்றவூர் ரவிகுமார்...

ஸ்ரீமன் நாராயணன் பரமபதத்தில் இருக்கிறார். அதனால் மானிடரான நமக்கு என்ன பயன்? நாம் அங்கு போக முடியாது. பரமபதநாதனை சேவிக்க முடியாது. அதனால் பக்தர்கள் துன்பப்படுகிறார்கள். பக்தர்களின் துன்பத்தை சகிக்க மாட்டான் பகவான். ஏனெனில் அவன்  ‘உயர்வற உயர்நலம் உடையவன்’.

ஸ்ரீமன் நாராயணனின் கல்யாண குணங்கள் பத்தொன்பது என்று பட்டியலிட்டுள்ளார் பாஷ்யக்காரரான ஸ்ரீ ராமானுஜ ஆச்சாரியர் தாம் இயற்றிய  ‘சரணாகதி கத்ய’த்தில். அந்த கல்யாண குணங்களில் ஒன்று காருண்யம்; அதாவது பக்தர்களின் துன்பத்தைக் கண்டு இரக்கப்படும் குணம்.

தேவர்கள் மீதும் மானிடர்கள் மீதும் ஸ்ரீமன் நாராயணன் கொண்ட இரக்கத்தினால் அவன் எண்ணற்ற அவதாரங்களை மேற்கொண்டான். இனியும் மேற்கொள்ள இருக்கிறான் என்று ரிஷிகளும் மகான்களும் சொல்லியுள்ளார்கள். அதில் சிறப்பாகப் போற்றப்படுபவை பத்து அவதாரங்கள். அதில் ஒன்று – கல்கி – இனிதான் ஏற்பட வேண்டும். இதுவரை ஏற்பட்டுள்ளவை ஒன்பது அவதாரங்கள்.

அந்த ஒன்பது அவதாரங்களிலும் தேவர்களும் பக்தர்களும் துன்பப்பட்டு பகவானை பிரார்த்திக்க, அவர்களைக் காக்க தானே வருவதாகக் கூறி வந்த அவதாரங்கள். ஆனால் நரசிம்ம அவதாரம் அப்படிப்பட்டது மட்டுமல்ல.  ‘பக்த ராஜா’  பிரகலாதனின் வாக்கை மெய்ப்பிப்பதற்காகவும் வந்தது. அந்தப் பின்னணி சுவாரஸ்யமானது.

அரக்கர் குல அரசன் இரணியன் எண்ணற்ற கடும் தவங்கள் புரிந்து, எந்த உயிர் வர்க்கத்தினாலும் தான் கொல்லப்பட முடியாதவன் ஆனான். மூவுலகையும் தன் ஆற்றலால் வென்றான். தன்னையே இறைவன் என்று அறிவித்துக் கொண்டான். எல்லோரும் தன்னையே வணங்க வேண்டும், துதிக்க வேண்டும் என்று கட்டளையிட்டான். அதனை எல்லோரும் ஏற்றுக் கொண்டனர், அவன் மகன் பிரகலாதனைத் தவிர. வணங்குதற்கும் துதிப்பதற்கும் உரியவர் ஸ்ரீமன் நாராயணன் மட்டுமே என்றான் பிரகலாதன்.

யார் அந்த நாரணன், எங்குள்ளான் என்று அரக்கர்குல அரசன் கேட்க,  எங்கும் உள்ளான்; நீ சொன்ன சொல்லிலும் உள்ளான் என்றான் மைந்தன். அருகில் இருந்த தூணிலும் உள்ளானா என்று கேட்டபடி அதைக் காலால் உதைக்க தூணைப் பிளந்து நரசிங்கமாய் வெளிப்பட்டார் பரமபதநாதர்.

அந்த உருவம் உலக இயற்கைக்கு மாறானது. எப்போதும் இல்லாதது. அப்போது மட்டுமே தோன்றி அவதார நோக்கம் நிறைவேறியதும் மறைந்தது. அரக்க அரசன் வாங்கிய வரங்கள் கபடமானவை. அதை மீறி அவனை வீழ்த்த செஞ்சீயமாக வெளிப்பட்டவனை  ‘கபட கேஸரி’ என்கிறார் வேதாந்த தேசிகர்.

காஞ்சிபுரத்தில் வேகவதி நதிக்கரையில் உள்ள வேளுக்கை (வேள் – விருப்பம், இருக்கை – வீற்றிருக்கை. வேளிருக்கை என்ற பெயர் வேளுக்கை என மருவியது) தலத்தில் எழுந்தருளி உள்ள ஸ்ரீ முகுந்தன் எனப்படும் அழகிய சிங்கர் பற்றி எட்டு ஸ்லோகங்கள் (+1 பலஸ்ருதி) கொண்ட  ‘காமாஸிகாஷ்டகம்’ என்ற துதியை தேசிகர் வடமொழியில் இயற்றியுள்ளார் .

அதில் முதல் ஸ்லோகத்திலேயே ‘காமா ததிவஸந் ஜீயாத் கச்சி தத்புத கேஸரீ’  என்று, தானே விருப்பப்பட்டு ஒப்பற்ற அற்புதமான ஆள்அரி வடிவில் எழுந்தருளி இருக்கின்றார் என்று கூறுகிறார். வேளுக்கை என்ற இந்த ஸ்தலத்தின் பெயர் இதில் நிறுவப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு அருள, தானே விருப்பப்பட்டு வந்தார் என்பது சரி. ஆனால் வந்தவர் வைகுண்டவாசனா என்ற கேள்வி எழலாம்.

அதற்கு, இந்த ஸ்தலத்திலே எழுந்தருளி உள்ள பெருமாள் வைகுந்தநாதன்தான் என்று மூன்றாவது ஸ்லோகத்தில்

 ‘விமுக்த வைகுண்ட்ட பஹுமதி முபாஸே’ என்ற சொற்றொடரில் அறுதியிட்டிருக்கிறார். வைகுண்டத்தை விடுத்து இங்கு விரும்பி வந்து வீற்றிருக்கிறார்.

பெருமாள் பக்தர்களின் துன்பத்தைக் போக்குகிறார். மானிடர்களுக்கு வரும் துன்பங்கள் மூன்று வகைப்பட்டவை. 1. ஆத்யாத்மிகம் – தலைவலி, ஜலதோஷம், கோபம், காமம், பயம் போன்றவை. 2. ஆதிபௌதிகம் – விலங்குகள், பறவைகள், மனிதர்கள் ஆகியோர்களால் ஏற்படும் துன்பம். 3. ஆதிதைவிகம் – குளிர், வெப்பம், மழை, புயல், நிலநடுக்கம் போன்றவற்றால் வரும் துன்பங்கள்.

இந்த மூன்றையும் இந்த ஸ்தலத்திலே உள்ள பெருமாள் போக்குகிறார் என்று ஸ்ரீ தேசிகர் இரண்டாவது ஸ்லோகத்தில் கூறுகிறார்.

‘தபநேந்த் வக்நி நயந: தாபா நபசிநோது ந:’  என்று, சூரியன் சந்திரன் அக்னி ஆகிய மூன்றையும் மூன்று கண்களாகக் கொண்ட இந்த காமாஸிகா நரசிம்மர் நம்முடைய மூன்று விதமான தாபங்களை, துன்பங்களைப் போக்குகிறார் என்று கூறுகிறார்.

பெரும்பாலான நரசிம்ம மூர்த்தியின் விக்கிரகங்கள் மற்றும் சிலா ரூபங்கள் யோக நரசிம்மராக, யோக ஆசனத்தில் அமர்ந்திருப்பது வழக்கம். யோகீஸ்வரன் அவன், சந்தேகமில்லை. அந்த யோக நிலைக்கு ‘பர்யங்க பந்தம்’ என்று பெயர். யோகத்தில் அமர்ந்து எதை தியானிக்கிறார்? வேறெதை,  அடியார்களின் துன்பத்தை எப்படியெல்லாம் போக்கலாம், அவர்களுக்கு துன்பம் வராமல் எப்படி காக்கலாம் என்பதைத் தான். நான்காவது ஸ்லோகத்தில்,

‘பந்துர பர்யங்க பந்த ரமணியம்
விஷம விலோசந மீடே’

என்ற வரிகளில் கோளரி வீற்றிருக்கும் ‘பர்யங்க பந்தம்’ என்ற யோக நிலை குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் ‘ விஷம விலோசநம்’ என்ற சொல்லும் வருகிறது.

விஷம விலோசனம் என்ற வார்த்தைக்கு ஒற்றைப்படையான, அதாவது மூன்று கண்கள் என்று பொருள். அதைத்தான் மூன்றாவது ஸ்லோகத்தில் சொல்லிவிட்டாரே என்று நாம் சிந்தித்தால் அதற்கு வேறொரு பொருளும் இருப்பதைத் தெரிந்து கொள்கிறோம். விஷம விலோசனம் என்ற வார்த்தைக்கு ஒன்றுக்கொன்று மாறுபட்ட செயல்களைப் புரியும் கண்கள் என்றும் அர்த்தம் உள்ளது.

அது என்ன, ஒன்றுக்கொன்று மாறுபட்ட செயல்களைப் புரியும் கண்கள், என்றால், பின்னால் வரும் ஏழாவது ஸ்லோகத்திற்கு இங்கு அச்சாரம் இடப்பட்டுள்ளதைக் காண்கிறோம்.

‘பர்யங்க பந்தம்’ என்பது ஒரு யோக நிலை. அந்த யோகாசனத்தை பயின்றால் உடலில் உள்ள ஐந்து வகையான வாயுக்கள், ஐந்து ஞானேந்திரியங்கள், ஐந்து கர்மேந்திரியங்கள் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தி சீரான நிலையில் வைத்திருக்க முடியும். இதைச் செய்ய வேண்டிய அவசியம் ஸ்ரீ முகுந்தனுக்கு இல்லை. தேசிகர் சொல்கிறார் – ப்ராயேண சிக்ஷயந் – நான் செய்கிறேன் இதை பார்த்து நீங்களும் செய்யுங்கள் என்று தன் அடியார்களுக்கு சொல்லிக் கொடுக்கிறான் போலும் என்கிறார் தேசிகர்.

பாரத பிரதமர் நரேந்திர மோடி தேசிகர் துதியைப் படித்தாரா என்று தெரியவில்லை. ஆனால் அவர் தொடர்ந்து யோகாசனம் பயில்வது மட்டுமின்றி, மற்றவர்களையும் செய்யும்படித் தூண்டுகிறார். அவரது முயற்சியால் உலகமெங்கும் யோகாசனம் பரவியுள்ளது. இஸ்லாமிய, கிறிஸ்துவ நாடுகள் கூட யோகாசனத்தைக் கற்றுக்கொள்ள ஆரம்பித்துள்ளன.   ஐ.நா.சபையில் பிரதமர் மோடியின் முயற்சியால் ஜூன் 21 உலக யோகா தினம் கொண்டாடப்படுவதும் இங்கு நினைவு கூரத்தக்கது.

ஒவ்வொரு வாயுவுக்கும் ஞானேந்திரியங்களுக்கும் கர்மேந்திரியங்களுக்கும் ஒவ்வொரு தேவதை அதிபதியாக விளங்குகின்றன. பகவான் அவற்றைக் கட்டுப்படுத்தியும் அவர்கள் தத்தம் செயலைச் சீராக செய்ய சக்தி கொடுக்கிறான் என்று பர்யங்க பந்ததிற்கும் நம் சமயாச்சாரியர்கள் விளக்கம் கொடுக்கிறார்கள்.

பர்யங்க பந்த ரமணியம், அவர் யோகாசனத்தில் அமர்ந்திருப்பது ரமணியமாக, அழகாக இருக்கிறது. அடியார் படும் துயரை அடியோடு போக்க சிந்திப்பதும் நன்றே. ஆனால் செயல்பட வேண்டாமா? அவர் செயல்படுவதை அழகாகவும் அழுத்தமாகவும் சொல்கிறார் அடுத்து வரும் ஆறாவது ஸ்லோகத்தில்.

‘விகஸ்வர நக ஸ்வருக்ஷத’ …. என்று துவங்கும் அந்த ஸ்லோகம்  ‘அஹம் ப்ரதமிகா மித:’  என்று ஆரம்பிக்கும் நான்காவது வரியுடன்  ‘பாஹவ:’ என்று முடியும். விகஸ்வர என்றால் விரிந்த; நக – நகம் ; ஸ்வரு என்றால் வஜ்ஜிராயுதம்; பாஹவ –  திருக்கரங்கள்.   பக்த ராஜா வான பிரகலாதனுக்கு துன்பம் இழைத்த அரக்கர் குல அரசனின் மார்பை தேவர்களின் தலைவனான இந்திரனின் வலிமையான ஆயுதமான வஜ்ராயுதம் போன்ற தனது விரிந்த நகங்களால் பிளந்தான்.

இரணியனின் மார்பிலிருந்து பெருகிய ரத்தத்தால் நரசிம்ம மூர்த்தியின் கரங்கள் சிவந்து விட்டன. மாலையில் சூரியன் மறையும் போது அந்தி வானம் சிவந்த இருப்பதைப் போல் பகவானின் கரங்கள் சிவந்து காணப்பட்டன. அந்த திருக்கரங்கள் தம் பக்தர்களுக்கு துன்பம் இழைக்கும் எதிரிகளை அழிப்பதில் – அஹம் ப்ரதமிகா மித –  ‘நான் முன்னே நான் முன்னே’ – என்று போட்டியிடுகின்றன என்று பகவானின் திருக்கரங்களின் செயல் வேகத்தையும் திறத்தையும் திறம்பட வெளிப்படுத்தியுள்ளார் வேதாந்த தேசிகர்.

இரணியன் கடுந்தவம் புரிந்து பல தேவர்கள், பிரம்மதேவர், சிவபெருமான் போன்ற தெய்வங்களிடமிருந்து பெற்ற வரங்கள் வலுவானவை. அவற்றை மறுப்பது அந்த தெய்வங்களை அவமதிப்பதாகும். எனவே ஸ்ரீமன் நாராயணன் நரசிம்ம அவதாரம் எடுத்தபோது அந்த வரங்கள் எதையும் மறுக்கவோ மீறவோ செய்யவில்லை. மாறாக அந்த வரங்களுக்கு மதிப்பளித்து அவற்றிற்கு உட்படாத, கட்டுப்படாத ஒரு புதிய வடிவை எடுத்தார். இது சாதாரண கேஸரி – சிங்கம் – அல்ல.

‘மிகை செய்வார் வினைக்கெல்லாம்
மேற்செயும் வினையம் வல்லான்’

என்கிறார் கம்ப நாட்டாழ்வார்.

பக்த ராஜாவான பிரகலாதனை விஷப் பாம்புகளிடம் விடுத்தது, யானை காலால் இடறச் செய்தது, தீயில் தூக்கி போட்டது, அரக்கர்களைக் கொண்டு துன்புறுத்தியது என சொல்லொணாத் துன்பங்களை, அநியாயங்களை இழைத்தவன் இரணியன். இதை நினைத்தவுடன் கோளரியின் கண்கள் கோபத்தால் சிவந்து கொடுரமாகப் பார்த்தார் இரணியனை. அதேவேளையில் அருகில் நின்றிருந்த அடியவனாம் சிறுவனை முலைப்பால் ஊட்டும் தாய் தன் மதலையை பரிவுடன் பார்ப்பது போல, தன் குளிர்ந்த தாமரை கண்களால் பரிவுடன் நோக்கியதாம் ஸ்ரீ முகுந்தனின் திருக்கண்கள்.

திருப்புகழில்  ‘கன்றா முகுந்தன் மருகோனே’ என்று வருகிறது. கன்று + ஆ + முகுந்தன். கன்றுக்கு ஆ- தாய் பசு – போல பக்தர்களுக்கு அடைக்கலம் தருபவன். அதாவது முகுந்தன் என்றால் வீடு பேறு அளிப்பவர் என்று பொருள்.

திரைப்படத்தில் வில்லன் ஆணவமாய்ச் சிரிக்க கதாநாயகி பதறுவாள். கதாநாயகன் எந்தப் பதட்டமும் இல்லாமல் அமைதியாய் மெதுவாய் அடியெடுத்து வருவான். காமிரா மாறி மாறிக் காட்ட இருவேறு விதமாய் இசை அதிரும்.

அது போலவே ஸ்ரீ தேசிகரும் இந்த ஸ்லோகத்தில்,  ‘ஸப்புரத் க்ருதி பரிஸ்ப்புடத் ப்ருகுடிகே’ –  கோபம் மூண்டதாய் புருவங்கள் துடிக்க – இரணியனைப் பார்த்தார் அக்னி லோசனர். அதேவேளையில் அருகில் இருந்த சிறுவனை, பக்தராஜா பிரகலாதனை,  ‘தநுஜ டிம்ப தத்த ஸ்தநா ஸரோஜ ஸத்ருசா த்ருசா’  – முலையூட்டும் தாய் தன் குழந்தையைப் பார்ப்பது போல தன் குளிர்ந்த தாமரை கண்களால் பார்த்தார் –  என்று கூறுகிறார்.

விஷம விலோசனம் என்ற வார்த்தைக்கு –  நாம் ஏற்கனவே பார்த்தது – இங்கு விளக்கம் தருகிறார் வேதாந்த தேசிகர்.  ‘வ்யதிபிஷஜ்ய தே வ்யஜ்யதே’  என்றால் மாறுபட்ட சிகிச்சை செய்து வெளிப்படுகிறது. ஒரே நேரத்தில் ஒருவருக்கு கொடிய கனலாகவும் மற்றொருவருக்கு அமுத மழையாகவும் இருக்கிறது.

இரணியன் வாங்கிய வரங்களுக்கு மதிப்பளித்து, அவற்றிற்கு உட்படாத நரசிம்மம் என்ற கபடத்தனமான வடிவை மேற்கொண்டதால் கபட கேஸரி. ஒரே நேரத்தில் இருவேறு செயல்களைச் செய்யும் கண்களை – விஷம விலோசனம் – கொண்டதால் இது விஷமத்தனமான, கபடத்தனமான கோளரி.

நவீன காலத்திற்கும் இதிலொரு பாடம் இருப்பதாகத் தெரிகிறது. சட்டம், நீதி, தார்மிகம் ஆகியவற்றை மதிக்காமல், மனித உயிர்களைத் துச்சமாக மிதித்து கொத்துக்கொத்தாக படுகொலை செய்யும் பயங்கரவாதிகளை சட்டம், நீதிகளை கொண்டு தண்டிக்கவோ, திருத்தவோ முடியாது. அராஜகவாதிகளை அநீதியான வழியில் ஒடுக்குவதுதான் வழி என்றும் புரிந்து கொள்ளலாம்.

சிவாஜி மகாராஜாவும் அப்சல் கானும் தனித்த கூடாரத்தில் ஆயுதங்கள் இல்லாமல் சந்திக்க வேண்டும் என்பது ஏற்பாடு. அப்சல் கானின் நோக்கம் சத்ரபதி சிவாஜியைக் கொல்வது. சிவாஜியும் அதைப் புரிந்துகொண்டு தான் வருகிறார். புலி நக ஆயுதத்தால் நரசிம்மனைப் போல அப்சல் கானின் குடலை உருவி வெளியே போட்டார்.

நம் நாட்டில் பயங்கரவாதச் செயல்களுக்காக கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை, அவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை, வழக்காடு மன்றங்களில் தண்டனை பெற்றவர்களின் எண்ணிக்கை, அப்படி தண்டனை பெற்றவர்களில் அதே தண்டனை நிறைவேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆகியவற்றின் விகிதாச்சாரத்தைப் பாருங்கள்.

சிவாஜி மகாராஜாவை மறைத்தார்கள், மறந்தோம். நரசிம்மனைக் கற்கவில்லை;  கற்சிலையாக்கி வணங்குகிறோம் வெறுமனே. தன்னை அறிந்த, உணர்வுள்ள சமுதாயத்தை யாராலும் அழிக்க முடியாது. உணர்வற்ற சமுதாயத்தை யாராலும் காப்பாற்ற முடியாது. இதை வேறுவிதமாகச் சொல்கிறார் எட்டாவது ஸ்லோகத்தில் ஸ்ரீ தேசிகர்.

‘த்வயி ரக்ஷதி ரக்ஷகை: கிமந்யை:
த்வயி சாரக்ஷதி ரக்ஷகை கிமந்யை:’

பெருமானே! நீ என்னைக் காக்க வேண்டும் என்று முடிவெடுத்தால் மற்ற தெய்வங்கள் எனக்குத் தேவையில்லை. நீ என்னைக் காக்க மாட்டேன் என்று சொன்னால் மற்ற தெய்வங்கள் என்னுடன் இருந்தாலும் அவர்களால் எனக்கு எந்தப் பயனும் இல்லை. இந்த உறுதியான எண்ணத்துடன் உன்னிடம் நான் சரணாகதி செய்கிறேன் – என்கிறார் வேதாந்த தேசிகர்.

நாளை என்பதில்லை நரசிம்மன் சன்னிதியில்.

$$$

காமாஸிகாஷ்டகம்

-வேதாந்த தேசிகர்

.

ஶ்ருதீநாமுத்தரம் பா⁴க³ம் வேக³வத்யாஶ்ச த³க்ஷிணம் ।

காமாத³தி⁴வஸந் ஜீயாத்கஶ்சித³த்³பு⁴தகேஸரீ ॥ 1॥

.

தபநேந்த்³வக்³நிநயந: தாபாநபசிநோது ந: ।

தாபநீயரஹஸ்யாநாம் ஸார: காமாஸிகாஹரி: ॥ 2॥

ஆகண்ட²மாதி³புருஷம் கண்டீ²ரவமுபரி குண்டி²தாராதிம் ।

வேகோ³பகண்ட²ஸங்கா³த்³விமுக்தவைகுண்ட²ப³ஹுமதிமுபாஸே ॥ 3॥

.

ப³ந்து⁴மகி²லஸ்ய ஜந்தோர்ப³ந்து⁴ரபர்யங்கப³ந்த⁴ரமணீயம் ।

விஷமவிலோசநமீடே³ வேக³வதீபுலிநகேலிநரஸிம்ஹம் ॥ 4॥

.

ஸ்வஸ்தா²நேஷு மருத்³க³ணாந் நியமயந் ஸ்வாதீ⁴நஸர்வேந்த்³ரிய:

பர்யங்கஸ்தி²ரதா⁴ரணாப்ரகடிதப்ரத்யங்முகா²வஸ்தி²தி: ।

ப்ராயேண ப்ரணிபேது³ஷ: ப்ரபு⁴ரஸௌ யோக³ம் நிஜம் ஶிக்ஷயந்

காமாநாதநுதாத³ஶேஷ ஜக³தாம் காமாஸிகா கேஸரீ ॥ 5॥

.

விகஸ்வரநக²ஸ்வருக்ஷதஹிரண்யவக்ஷ:ஸ்த²லீ

நிரர்க³லவிநிர்க³லத்³ருதி⁴ரஸிந்து⁴ஸந்த்⁴யாயிதா: ।

அவந்து மத³நாஸிகா மநுஜபஞ்சவக்த்ரஸ்ய மாம்

அஹம்ப்ரத²மிகா மித:² ப்ரகடிதாஹவா பா³ஹவ: ॥ 6॥

.

ஸடாபடலபீ⁴ஷணே ஸரப⁴ஸாட்டஹாஸோத்³ப⁴டே

ஸ்பு²ரத்க்ருதி⁴பரிஸ்பு²டப்⁴ருகுடிகேঽபி வக்த்ரே க்ருʼதே ।

க்ருʼபாகபடகேஸரிந் த³நுஜடி³ம்ப⁴த³த்தஸ்தநா

ஸரோஜஸத்³ருʼஶா த்³ருʼஶா வ்யதிவிஷஜ்ய தே வ்யஜ்யதே ॥ 7॥

.

த்வயி ரக்ஷதி ரக்ஷகை: கிமந்யைஸ்த்வயி சாரக்ஷதி ரக்ஷகை: கிமந்யை: ।

இதி நிஶ்சிததீ:⁴ ஶ்ரயாமி நித்யம் ந்ருʼஹரே வேக³வதீதடாஶ்ரயம் த்வாம் ॥ 8॥

.

இத்த²ம் ஸ்துத: ஸக்ருʼதி³ஹாஷ்டபி⁴ரேஷ பத்³யை:

ஶ்ரீவேங்கடேஶரசிதைஸ்த்ரித³ஶேந்த்³ரவந்த்³ய: ।

து³ர்தா³ந்தகோ⁴ரது³ரிதத்³விரதே³ந்த்³ரபே⁴தீ³

காமாஸிகாநரஹரிர்விதநோது காமாந் ॥ 9॥

.

இதி ஶ்ரீவேதா³ந்ததே³ஶிக்ருʼதம் காமாஸிகாஷ்டகம் ஸம்பூர்ணம் ।

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s