முகவரி தந்த முதல்வர்

-பேரா. அ.அறிவொளி

‘ஆய்வுரைத்திலகம்’ என்று போற்றப்படும் அமரர் பேராசிரியர் அ.அறிவொளி, நாவன்மையால் தமிழ்ப் பட்டிமண்டபங்களை ருசிகரமாக்கியவர். சைவத்திலும் கம்பன்  காவியத்திலும் தோய்ந்தவர். பல நூல்களை எழுதி இருக்கிறார். சுவாமி விவேகானந்தர் குறித்த அவரது இனிய கட்டுரை இங்கே…

இந்தியாவுக்கும் இந்தியருக்கும் உலக அரங்கில் முகவரி தந்த முதல்வர் சுவாமி விவேகானந்தர்.

1835-ம் ஆண்டு இங்கிலாந்து பாராளுமன்றத்தில் மெக்காலே பிரபு பேசியது மிகவும் குறிப்பிடத் தக்க வேண்டியதாகும்.

இந்தியாவை ஆங்கிலேயருக்கு அடிமை செய்யும் பொறுப்பை மேற்கொண்டவர் மெக்காலே.  அவர் கூறியது இது தான்:

“நான் இந்தியாவை வடக்கிலிருந்து தெற்காகவும் கிழக்கிலிருந்து மேற்காகவும் பலமுறை பயணம் செய்துள்ளேன்.  ஆனால் எங்கேயும் ஒரு பிச்சைக்காரனையோ திருடனையோ நான் தெருவில் பார்க்கவில்லை…

ஆகவே இந்தியர்களை அடிமையாக்குவது மிகவும் கடினம். அவர்களின் பண்பாட்டையும் ஆன்மிகத்தையும் ஆங்கிலக் கல்வியால் மாற்றிவிட்டால் தான் அவர்களை அடிமையாக்குவது எளிது”.

இந்திய சமூகத்தின் சிறப்பை இந்தப் பேச்சு நமக்கு விளங்கவைக்கிறது.

இதற்குப் பின் 28 ஆண்டுகள் கடந்த பிறகே சுவாமி விவேகானந்தர் தோன்றினார்.  மெக்காலேயின் பேச்சை அவர் கேட்டிருக்க நியாயமில்லை.

ஆனால், இந்தச் சிந்தனையில், மெக்காலேவுக்கு நேரெதிர் கண்ணோட்டத்தில் சுவாமி விவேகானந்தர் தனது  ஆன்மிகப் பயணத்தைத் துவங்கினார்.

இந்திய ஆன்மிகத்தையும் இந்தியப் பாரம்பரியமான பண்பாட்டையும் காப்பதே தன் கடமையென்று பலமுறை சுவாமிஜி கூறியுள்ளார்.

ஆங்கிலேயர் முயன்று அழிக்க நினைத்த நம் பாரம்பரிய உணர்வுகளை சுவாமி விவேகானந்தர் தனது ஒவ்வொரு செய்கையாலும் நிலைநாட்டினார்.

அவரால் தான் விடுதலைப்போரின் திசை உணர்வானதாக மாறியது. பெண்கள் உயர்வை அவர் உருவாக்கினார். இளைஞர்கள் விழிப்புணர்வையும்,  ஒரு தனி மனிதராக இருந்து தூண்டினார்.

பலரும் இந்திய அடிமைகளுக்கு வழிகாட்டியபோது, அவர் ஒருவர் மட்டுமே தனியொருவராக அடிமைத்தனத்தைப் போக்கினார்.

பேரா. அ.அறிவொளி

மகான் ராமகிருஷ்ண பரமஹம்சர் தம் தவக்கோலத்தால் தாமே செய்ய முடியாது மனதில் எண்ணியதை எல்லாம், அவரது பிரதம சீடரான சுவாமி விவேகானந்தர் செய்துகாட்டினார்.

சிகாகோவில் அவர் ஒருநாள் பேசிய பேச்சிலும், பலமுறை மேலைநாடுகளில் செய்த பேச்சுகளிலும், மேற்குலகின் கண்கள் திறந்தன;  இந்தியாவை அதற்குரிய சிறப்புகளோடு பார்க்கச் செய்தன.

இந்த நாட்டின் ஞானிகள் செய்த தவமே சுவாமி விவேகானந்தராக ஓர் அவதாரமாக நமக்குக் கிடைத்தது.  அவர் இல்லாமல் இந்திய வரலாறு முழுமை பெறாது.

அவர் நமக்கு செய்தியாகத் தந்தவை வேதாந்த வழியில் நம்மை உருமாற்றிவிட்டன.

அவர் குமரி முனையில் தான் மேற்குலகிற்கு பயணம் செய்வது குறித்து முடிவு செய்தார்; சென்னை இளைஞர்களே தலைக்கு ஒரு ரூபாய் அளித்து அவரை அமெரிக்காவுக்கு அனுப்பியும் வைத்தனர்.

அதன் காரணமாக சுவாமி விவேகானந்தரின் வரலாற்றில் தமிழகம் தனித்த இடம் பெறுகிறது. அது நமக்கு பேருவகை அளிப்பதாகும். முகவரி தந்த முதல்வருக்கு, முகவரி தந்த மாநிலம் அல்லவா நாம்?

$$$

Leave a comment