பாஞ்சாலி சபதம்- 1.1.6

-மகாகவி பாரதி

இந்திரப்பிரஸ்தத்தில்  (இன்றைய தில்லி) தனது தாயாதி சகோதரனான யுதிஷ்டிரன் நடத்திய ராஜசூய யாகம் அவனுக்கு சக்கரவர்த்தி பட்டத்தைப் பெற்றுத் தந்தது. அது அஸ்தினாபுரத்தை ஆண்ட துரியோதனனுக்கு அழுக்காறாமையை ஏற்படுத்தியது. அதையடுத்து, அவன் தனது நிழலாகக் கருதும் தனது தாய்மாமனிடம் பொறாமையுடன் உரைத்தவையே இங்கு மகாகவி பாரதியால் அழகிய கவிதைகளாக வடிவெடுத்திருக்கின்றன...

முதல் பாகம்

1.1. அழைப்புச் சருக்கம்

1.1.6. துரியோதனன் சகுனியிடம் சொல்வது


வேறு

”உலகு தொடங்கிய நாள்முத லாகநஞ் சாதியில்-புகழ்
      ஓங்கிநிற் றாரித் தருமனைப் போலெவர்?மாம னே!
இலகு புகழ்மனு வாதி முதுவர்க்கும். மாம னே!-பொருள்
      ஏற்றமும் மாட்சியும் இப்படி யுண்டுகொல்?-மாம னே!
கலைக ளுணர்ந்தநல் வேதியப் பாவலர் செய்தவாம்-பழங்
      கற்பனைப் காவியம் பற்பல கற்றனை-மாம னே!
பலகடல் நாட்டையும் இப்படி வென்றதை எங்கணும்- சொல்லப்
      பார்த்ததுண்டோ?கதை கேட்டதுண் டோ?புகல் மாமனே!       42

‘எதனை யுலகில் மறப்பினும்,யானினி,மாம னே!இவர்
      வேறுயாகத்தை என்றும் மறந்திட லென்பதொன் றேது காண்?
விதமுறச் சொன்ன பொருட்குவை யும்பெரி தில்லைகாண்; அந்த
      வேள்வியில் என்னை வெதுப்பின வேறு பலவுண் டே!
இதனை யெலாமவ் விழியற்ற தந்தையின் பாற்சென்றே- சொல்லி,
      இங்கிவர் மீதவ னும்பகை எய்திடச் செய்கு வாய்,
மிதமிகு மன்பவர் மீதுகொண் டானவன் கேட்கவே,-அந்த
      வேள்விகண் டென்னுயிர் புண்படுஞ் செய்தி விளம்பு வாய்.       43

‘கண்ணைப் பறிக்கும் அழகுடை யாரிள மங்கையர்-பல
      காமரு பொன்மணிப் பூண்க ளணிந்தவர் தம்மை யே
மண்ணைப் புரக்கும் புரவலர் தாமந்த வேள்வியில்-கொண்டு
      வாழ்த்தி யளித்தனர் பாண்டவர்க் கே,எங்கள்-மாமனே!
எண்ணைப் பழிக்குந் தொகையுடை யாரிள மஞ்சரைப்-பலர்
      ஈந்தனர் மன்ன ரிவர் தமக்குத் தொண் டியற்ற வே!
விண்ணைப் பிளக்குந் தொனியுடைச் சங்குகள் ஊதினார்;- தெய்வ
      வேதியர் மந்திரத் தோடுபல் வாழ்த்துக்கள் ஓதி னார்.       44

‘நாரதன் தானும் அவ்வேத வியாசனும் ஆங்ஙனே-பலர்
      நானிங் குரைத்தற் கரிய பெருமை முனிவரும்
மாரத வீரர்,அப் பாண்டவர் வேள்விக்கு வந்ததும்,வந்து
      மாமறை யாசிகள் கூறிப் பெரும்புகழ் தந்த தும்,
வீரர்தம் போரின் அரியநற் சாத்திர வாதங்கள்-பல
      விப்பிரர் தம்முள் விளைத்திட உண்மைகள் வீச வே,
சார மறிந்த யுதிட்டிரன் கேட்டு வியந்ததும்,-நல்ல
      தங்க மழை பொழிந் தாங்கவர்க்கே மகிழ் தந்த தும்.       45

‘விப்பிர ராதிய நால்வரு ணத்தவர் துய்ப்பவே-நல்
      விருந்து செயலில் அளவற்ற பொன்செல விட்ட தும்,
”இப்பிற விக்குள் இவையத்த வேள்வி விருந்துகள்-புவி
      எங்கணும் நான்கண்ட தில்லை”எனத் தொனி பட்டதும்,
தப்பின்றி யேநல் விருந்தினர் யாருக்குந் தகுதிகள்-கண்டு
      தக்கசன் மானம் அளித்து வரிசைகள் இட்ட தும்,
செல்புக நீயவ் விழியற்ற தந்தைக்கு;”நின்மகன்-இந்தச்
      செல்வம் பெறாவிடில் செத்திடு வான்”என்றும் செப்புவாய்.       46

‘அண்ணன் மைந்தன் அவனிக் குரியவன் யானன்றோ!-அவர்
      அடிய வராகி யெமைப்பற்றி நிற்றல் விதியன் றோ?
பண்ணும் வேள்வியில் யார்க்கு முதன்மை அவர் தந்தார்?- அந்தப்
      பாண்ட வர்நமைப் புல்லென எண்ணுதல் பார்த்தை யோ?
கண்ண னுக்கு முதல்உப சாரங்கள் காட்டினார்;-சென்று
      கண்ணி லாத்தந்தைக் கிச்செய லின்பொருள் காட்டு வாய்;
மண்ணில் வேந்தருள் கண்ணன் எவ்வாறு முதற்பட்டான்! என்றன்
      மாம னே!அவன் நம்மில் உயர்ந்த வகைசொல் வாய்!       47

‘சந்தி ரன்குலத் தேபிறந் தோர்தந் தலைவன்யான்-என்று
      சகமெ லாஞ்சொலும் வார்த்தைமெய்யோவெறுஞ்சாலமோ?
தந்தி ரத்தொழில் ஒன்றுண ரும்சிறு வேந்தனை-இவர்
      தரணி மன்னருள் முற்பட வைத்திடல் சாலு மோ?
மந்தி ரத்திலச் சேதியர் மன்னனை மாய்த்திட்டார்;-ஐய!
      மாம கத்தில் அதிதியைக் கொல்ல மரபுண் டோ?
இந்தி ரத்துவம் பெற்றிவர் வாழும் நெறிநன்றே!-இதை
      எண்ணி எண்ணி என்நெஞ்சு கொதிக்குது,மாமனே!       48

‘சதிசெய் தார்க்குச் சதிசெயல் வேண்டும்,என் மாம னே!- இவர்
      தாமென் அன்பன் சராசந் தனுக்குமுன் எவ்வகை
விதிசெய் தார்?அதை என்றும் என் உள்ளம் மறக்குமோ?- இந்த
      மேதினி யோர்கள் மறந்துவிட்டார், இதோர் விந்தையே!
நிதிசெய் தாரைப் பணிகுவர் மானிடர்,மாமனே!-எந்த
      நெறியி னாலது செய்யினும்,நாயென நீள்புவி
துதிசெய் தேயடி நக்குதல் கண்டனை,மாமனே!-வெறுஞ்
      சொல்லுக் கேயற நூல்கள் உரைக்கும் துணிவெ லாம்.       49

வேறு

‘பொற்றடந் தேரொன்று வாலிகன்
      கொண்டு விடுத்ததும்,-அதில்
பொற்கொடி சேதியர் கோமகன்
      வந்து தொடுத்ததும்
உற்றதோர் தம்பிக்குத் தென்னவன்
      மார்பணி தந்ததும்;-ஒளி
யோங்கிய மாலையம் மாகதன்
      தான்கொண்டு வந்த தும்,
பற்றல ரஞ்சும் பெரும்புக
      ழேக லவியனே-செம்பொற்
பாதுகை கொண்டு யுதிட்டிரன்
      தாளினில் ஆர்த்த தும்,
முற்றிடு மஞ்சனத் திற்குப் பல
      பல தீர்த்தங்கள் – மிகு
மொய்ம்புடை யானல் வவந்தியர்
      மன்னவன் சேர்தததும்.       50

‘மஞ்சன நீர்தவ வேத
      வியாசன் பொழிந்ததும்,-பல
வைதிகர் கூடிநன் மந்திர
      வாழ்த்து மொழிந்த தும்,
குஞ்சரச் சாத்தகி வெண்குடை
      தாங்கிட,வீமனும்-இளங்
கொற்றவ னும்பொற் சிவிறிகள்
      வீச,இரட்டை யர்
அஞ்சுவர் போலங்கு நின்று
      கவரி இரட்டவே-கடல்
ஆளுமொருவன் கொடுத்ததொர்
      தெய்விகச் சங்கி னில்
வஞ்சகன் கண்ணன் புனிதமுறுங்
      கங்கை நீர்கொண்டு-திரு
மஞ்சன மாட்டும்அப் போதில்
      எவரும் மகிழ்ந்த தும்,
முற்றிடு மஞ்சனத் திற்குப்பல
      பலதீர் த்தங்கள்-மிகு
மொய்ம்புடை யானன்அவ் அவந்தியர்
      மன்னவன் சேர்த்ததும்,       51

‘மூச்சை யடைத்த தடா!சபை
      தன்னில் விழுந்துநான்-அங்கு
மூர்ச்சை யடைந்தது கண்டனையே!
      என்றன் மாமனே!
ஏச்சையும் அங்கவர் கொண்ட
      நகைப்பையும் எண்ணுவாய்;-அந்த
ஏந்திழை யாளும் எனைச்சிரித்
      தாளிதை எண்ணு வாய்;
பேச்சை வளர்த்துப் பயனென்று
      மில்லை,என் மாமனே!-அவர்
பேற்றை அழிக்க உபாயஞ் சொல்வாய்.
      என்றன் மாமனே!
தீச்செயல் நற்செயல் ஏதெனினும்
      ஒன்று செய்து,நாம்-அவர்
செல்வங் கவர்ந்த வரைவிட
      வேண்டும் தெருவிலே.’       52

$$$

Leave a comment