-பத்மன்

(ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய ‘சிவானந்த லஹரீ’யின்
தமிழ் வடிவமும் விளக்கமும்)
*
65. பாதசேவையின் மகிமை
.
வக்ஷஸ்தாடன ச’ங்கயா விசலிதோ வைவஸ்வதோ நிர்ஜரா:
கோடீரோஜ்வல ரத்னதீபகலிகா நீராஜனம் குர்வதே/
த்ருஷ்ட்வா முக்திவதூஸ்தனோதி நிப்ருதாச்’லேஷம் பவானீபதே
யச்சேதஸ்தவ பாதபத்ம பஜனம் தஸ்யேஹ கிம் துர்லபம்//
.
மார்பில் உதைக்கஞ்சி மாய்ப்போனும் ஓடிடுவான்
மகுடத்தின் மணியொளியால் தேவருமா ராதிப்பர்
முக்தியாம் ஆரணங்கு கண்டதுமே தழுவிடுவாள்
பக்தியால்நின் பதமலரைப் பற்றிடுவோன் தன்னையே!
.
சிவபெருமானின் பாதங்களில் பக்தன் தன் மனத்தை காலணியாக காணிக்கையாக்க வேண்டும் என்பதை முந்தைய ஸ்லோகத்தில் வலியுறுத்திய ஸ்ரீ ஆதிசங்கரர், அவ்வாறு இறைவன் திருக்கமலப் பாதங்களில் காலணியாக இருப்பதால் பக்தனுக்குக் கிடைக்கும் பரமானந்தப் பலன்களை இந்த ஸ்லோகத்தில் பட்டியலிடுகிறார்.
சிவபெருமானின் திருப்பாதங்கள், மார்க்கண்டேயனைக் காப்பாற்றுவதற்காக, உயிர்களை மாய்க்கும் காலனை உதைத்துத் தள்ளிய பெருமை வாய்ந்தவை. ஆகையால் அவரது திருப்பாதங்களில் நமது மனது காலணியாக சேவை செய்யும்போது, சிவபெருமான் கொடுத்த உதையின் நினைவால் அஞ்சி நடுங்கி, எமனும் நம் அருகே வர பயந்து ஓடிவிடுவான். ஆகையால் நிறைவான முக்தியே நமக்குக் கிடைக்கும். அற்ப மரணம் சம்பவிக்காது.
.சிவபெருமானின் திருவடிகளை சகல தேவர்களும் பணிந்து வணங்குகின்றார்கள். அவ்வாறு வணங்கும்போது அவர்கள் தம்தலையில் அணிந்திருக்கும் மணிமகுடங்களின் பொன் மற்றும் ரத்தினக்கற்களின் ஒளிவீச்சு சிவபெருமானின் காலடியில் பாய்கிறது. அந்தப் பாதங்களில் நமது மனது காலணியாக சேவை செய்வதால், சிவபெருமானை வணங்கும்போது, பக்தனாகிய நம்மையும் சகல தேவர்களும் மணிமகுடங்களின் ஒளிவீச ஆராதிக்கின்றனர்.
.நற்பேறாகிய முக்தி, அதாவது பாவ புண்ணியச் சுமைகளால் ஏற்படும் பிறவித் தளையிலிருந்து, பிறவிச் சுழற்சியில் இருந்து விடுதலை பெறும் ஆன்ம விடுதலை என்கின்ற ஆரணங்கு, சிவபெருமானின் காலடியில் கிடக்கும் பக்தனை ஆரத் தழுவிக் கொள்கிறாள். ஆகையால், சிவபெருமானின் தாமரைத் திருவடிகளைப் பற்றிடும் பக்தர்களுக்கு இத்தனைப் பெருமையும் கிடைக்கின்றன.
$$$