சிவகளிப் பேரலை – 54

-பத்மன்

(ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய ‘சிவானந்த லஹரீ’யின்

தமிழ் வடிவமும் விளக்கமும்)

*

54. மாலை நடன மகிமை

.

ஸந்த்யார்ம தினாத்யயோ ஹரிகராகாத ப்ரபூதானக-

த்வானோ வாரிதகர்ஜிதம் திவிஷதாம் த்ருஷ்டிச்டா சஞ்சலா/

க்தானாம் பரிதோஷ பாஷ்ப விததிர்வ்ருஷ்டிர் மயூரி சி’வா

யஸ்மின்னுஜ்வல தாண்வம் விஜயதே தம் நீலகண்ம் பஜே//

.

மாலையோ மழைப்பொழுதாம் மால்கையொலி இடிமுழக்கம்

வானோர்தம் விழிவீச்சு மின்னல்களாம் பக்தர்தம்

கண்பெருக்கு மழைப்பொழிவாம் பெண்மயிலாள் இணைசூழ

களிநடம் புரிந்திடும் நீலகண்டம் நினைமனமே!

.

     முந்தைய ஸ்லோகத்தில் மயிலுக்கும் மகேஸ்வரனுக்கும் சிலேடை அமைத்துப் பாடிய ஸ்ரீஆதிசங்கரர், இந்த ஸ்லோகத்தில் இடி, மின்னலுடன் மழை பொழிகின்ற மேகத்தைப் பார்த்ததும் பெண் மயிலுக்கு முன்பாக ஆண் மயில் தோகை விரித்து ஆனந்தமாக நடனமிடுவதுபோல், சந்தியாகாலத்திலே சிவபெருமான் ஆனந்தத் தாண்டவம் ஆடுவதாக ஒப்புமைப்படுத்திக் கூறுகிறார். (இந்தச் செய்யுளை ‘எடுத்துக்காட்டு உவமையணி’ என்று கூறலாம்.) பிரதோஷக் காலத்தில் சிவபெருமான் ஆடும் ஆனந்தத் தாண்டவத்துக்கு இந்த ஸ்லோகம்  மிகவும் பொருத்தமாக அமைகிறது.

     அந்திப் பொழுதாகிய மாலையில் பகலின் சூடு தணிகிறது. அதுவே பிரதோஷக் காலமாக அமைகிறது. பிரதோஷக் காலத்தில் திருமாலே, நந்தி யெம்பெருமானாகி மிருதங்கம் வாசிக்கிறார். ஆகையால் அவர் மிருதங்கத்தில் தமது கரங்களால் எழுப்பும் ஒலியே இடி முழக்கமாக அமைகிறது. இந்த ஆனந்தத் திரு நடனக்காட்சியைக் காணும் தேவர்களின் பார்வையாகிய விழி வீச்சுகளே மின்னல்களாக அமைகின்றன. இவற்றையெல்லாம் மனக்கண் முன் பார்க்கும் பக்தர்களின் கண்களில் இருந்து பெருகும் ஆனந்தக் கண்ணீரே மழைப் பொழிவாக அமைகிறது. இத்தகு சூழலிலே, பெண் மயிலாளாகிய பார்வதியுடன் இணைந்து நீலக் கழுத்தை உடைய ஆண் மயிலாகிய பரமேஸ்வரன் களி நடனம் புரிகிறார். அப்பேர்ப்பட்ட சிறப்புடைய நீலகண்டனாகிய மயிலை, மனமே நீ நினைப்பாயாக!         

$$$

Leave a comment